சர்வதேசம்

விமானம் விழுந்து நொருங்கியதில் 71 பயணிகள் பலி

ரஸ்யாவின் மொஸ்கோவில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் விழுந்து நொருங்கியதில் 71 பேர் பலியாகியுள்ளனர்.

மொஸ்கோவின் டோமிடிடோவோ விமான நிலையத்தில் இருந்து ரசாடோவ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான 'தி அனடோனோவ் அன்-148' என்ற விமானம் ஒர்க் மாநிலத்தில் உள்ள உரல் நகரை நோக்கி நேற்றையதினம் புறப்பட்டது.

குறித்த விமானத்தில் 6 ஊழியர்களும், 65 பயணிகளும் என மொத்தம் 71 பேர் பயணித்த நிலையில் விமானம் புறப்பட்ட 2 நிமிடங்களில் அது ராடரின் கட்டுப்பாட்டை விட்டு விலகியது.

அந்த விமானம், மொஸ்கோ நகரின் புறநகர் கிராமமான ராமன்ஸ்கி மாவட்டத்தில் உள்ள அர்குனோவாவில் விழுந்து நொறுங்கியமை அதிகாரிகளால் கண்டறியப்பட்டது.  

விமானம் கீழே விழுந்து நொருங்கியதை தாம் பார்வையிட்டதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளதுடன் விமானம் விழுந்த இடத்தில் அதன் பாகங்கள் சிதைத்து எரிந்து கிடப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த தகவல் கிடைத்ததை அடுத்து, மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர், பொலிஸார் அங்கு விரைந்துள்ளதுடன், ஏறக்குறைய 150க்கும் மேற்பட்டோர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய மீட்புப்படை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

ரஷ்யாவில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவும், எதிரில் வருபவர் தெரியாத அளவுக்கு பனிமூட்டமும் நிலவுகிறது. இதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். இந்த விமான விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட சரடோவ் ஏர்லைன்ஸ் விமானம் 7 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

Comment (0) Hits: 209

மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்த தயாராகும் வடகொரியா

வடகொரியா இதுவரை 6 முறை அணு ஆயுத சோதனை நடத்தியுள்ளது. இந்த சோதனைகள் அனைத்தும் அந்த நாட்டின் மேன்டப் மலைப்பகுதியில் நடந்துள்ளது.

இந்நிலையில் புதிதாக அணு ஆயுத சோதனை நடத்த மேன்டப் மலையின் புங்கி-ரி பகுதியில் புதிதாக சுரங்கம் தோண்டப்படுகிறது என்று அமெரிக்காவின் வாஷிங்டனை சேர்ந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கு ஆதாரமாக செயற்கைக்கோள் புகைப்படங்களையும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

இதனிடையே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அளித்த பேட்டியில், ‘‘வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடனும் நல்ல உறவு முறையில் இருக்கிறேன். நான் கிம்முடன் பேசினேனா, இல்லையா என்பது குறித்து எதுவும் கூற முடியாது’’ என்று தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களாக ட்ரம்பும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னும் கடும் சொற்களால் பரஸ்பரம் விமர்சித்து வந்தனர். இதில் திடீர் திருப்பமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், வடகொரியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 180

கிராமமொன்றை தத்தெடுக்கப் போவதாக கமல் அறிவிப்பு

தமிழகத்தின் கிராமங்களில் இருந்து அரசியல் மாற்றத்தை உருவாக்க விரும்புவதாக, நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய கமல்ஹாசன், தன்னிறைவு பெற்ற சுயச் சார்புடைய கிராமம் உருவானால், இந்தியா தானாக முன்னேறும் என்று மகாத்மா காந்தி கூறியுள்ளதாக குறிப்பிட்டார்.

காந்தியின் சிந்தனைப்படி, தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தை தத்தெடுத்து, அதை உலகின் மிகச் சிறந்த கிராமமாக வளர்த்தெடுப்பேன் என்று தெரிவித்தார். முதலில் ஒரே ஒரு கிராமத்தில் தொடங்கி பின்னர் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஒரு கிராமத்தை தத்தெடுப்பேன் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

எதிர்வரும் 21 ஆம் திகதி, அரசியல் பயணத்தை தொடங்கும் நாளில், கிராம தத்தெடுப்பு பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் அவர் கூறினார்.

மக்களின் முன்னேற்றத்துக்காக, உலகமெங்கும் வாழும் தமிழ் சமூகம், தனக்கு ஆலோசனைகளையும் பங்களிப்பையும் வழங்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டார்.

அரசின் நடவடிக்கைகளை விமர்சிப்பதில் தனக்கு சலிப்பு உண்டாகிவிட்டதாகவும், எனினும்இ நல்லாட்சியை வலியுறுத்துவது தனது உரிமை, இதை தவறாக கருதக் கூடாது என்றும் கமல்ஹாசன் தனது உரையில் குறிப்பிட்டார்.

தமிழ் மன்னர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், மொழிப்பற்று, நிர்வாகத் திறன், சர்வதேச வர்த்தகம் ஆகியவற்றில் சிறந்து விளங்கியதாக குறிப்பிட்ட கமல், கற்றுக்கொள்வதற்கு அவர்கள் சிறந்த யோசனைகளை விட்டுச் சென்றிருக்கிறார்கள் என்றும் கூறினார்.

தமிழகத்தை சீர்படுத்தும் தனது முயற்சியில் அனைவரும் பங்களிப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட கமல்ஹாசன், தனது இலக்கு நிறைவேறும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

Comment (0) Hits: 191

ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கையில் சர்ச்சை

அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கை பற்றி சர்ச்சை எழுந்துள்ளது.

ஹார்வர்டு தமிழ் இருக்கை மோசடி என்று அமெரிக்க வாழ் தமிழர் டாக்டர் சிவா கட்டுரை எழுதியுள்ளார்.

தங்களை வளப்படுத்திக் கொள்ளவே ஹார்வர்டு பல்கலைக்கழகம் நிதி வசூலிக்கிறது என்று அவர் கூறியுள்ளார். தமிழ் வளர்ச்சிக்கு ஹார்வர்டு பல்கலைக்கழகமே நிதி உதவி தரலாமே என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உலகத் தரவரிசையில் முதலிடத்தில் 350 ஆண்டுகள் பழமையான ஹார்வர்டு பல்கலைக்கழகம் இருக்கிறது . இதில் 2,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த தமிழ் மொழிக்கு இருக்கை அமைக்கும் முயற்சி கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வருகிறது. தமிழ் இருக்கை அமைக்க தமிழக அரசும் ரூ.10 கோடி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 176

இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்தது சீனா

மாலைதீவு விவகாரத்தில் இந்தியா இராணுவ ரீதியாக தலையிடக் கூடாது என சீன வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாலைதீவில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு சதி செய்வதாக கூறி, தமது கட்சியைச் சேர்ந்த 12 பேரை ஜனாதிபதி அப்துல்லா யாமீன் திடீரென தகுதி நீக்கம் செய்தார். ஆனால் இதனை அந்நாட்டு உச்சநீதிமன்றம் இரத்துச் செய்த நிலையில், அதன் தலைமை நீதிபதி அப்துல்லா சையத் உள்ளிட்ட 2 நீதிபதிகள் கைதுசெய்யப்பட்டனர்.

அத்துடன் மாலைதீவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இதனால் அங்கு உச்சக்கட்ட அரசியல் குழப்பம் நீடிக்கின்றது. இந்நிலையில், மாலைதீவு பிரச்சனையில் இந்திய இராணுவம் தலையிட வேண்டும் என, முன்னாள் அதிபர் முகமது நஷீத் கோரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து இந்தியா தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில், மாலைதீவு விவகாரத்தில் இந்தியா இராணுவ ரீதியாக தலையிடக் கூடாது என சீனா கூறியுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கெங் ஷாங், இன்று பீஜிங்கில் செய்தியாளர்களுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.

இந்தியா இராணுவ ரீதியாக தலையிட்டால் பிரச்சனை அதிகரிக்கும் என்றும் மாலைதீவின் இறையாண்மை பாதிக்காத வகையில் சர்வதேச சமூகம் ஆக்கபூர்வ பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியப் பெருங்கடலில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக விளங்கும் மாலைதீவுக்கு, இந்தியா பெருமளவு உதவிகளை வழங்கி வரும் நிலையில், சீனா இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comment (0) Hits: 243

கலிபோர்னியாவில் கடும் மழை; 15 பேர் பலி

அமெரிக்காவின் தென் கலிபோர்னியா பிராந்தியத்தில் கடும் மழையுடன் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 24 பேர் காயமடைந்துள்ளனர்.

அத்துடன் 100க்கும் அதிகமான வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மண்சரிவு ஏற்பட்ட பிரதேசங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கலிபோர்னியா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலை காரணமாக அங்கு வாழும் இலங்கையர்களை அவதானமாக இருக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனினும் அங்கு ஏற்பட்டுள்ள அனர்த்தம் காரணமாக இலங்கையர்கள் எவருக்கும் இதுவரை பாதிப்பு ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

Comment (0) Hits: 177

விஜய் மல்லையாவின் கடன் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்

இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா வாங்கிய கடன் தொடர்பாக எந்த ஆவணங்களும் இல்லை என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த ராஜீவ் குமார் காரே என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், விஜய் மல்லையாவுக்கு வங்கிகள் சார்பில் வழங்கப்பட்ட கடன்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள நிதி அமைச்சகம், விஜய் மல்லையாவுக்கு வங்கிகள் சார்பில் வழங்கப்பட்ட கடன் அளவு குறித்த எந்த ஆவணங்களும் தங்களிடம் இல்லை என தெரிவித்துள்ளது.

அத்துடன் மல்லையாவுக்கு கடன் வழங்கிய வங்கிகள் எவை? யார் அவரது கடனுக்காக உத்தரவாதம் வழங்கியுள்ளனர் என்பன உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 247

திரையரங்குகளில் தேசிய கீதம் ஒளிப்பரப்புவது கட்டாயமில்லை

திரையரங்குகளில் தேசிய கீதம் ஒளிப்பரப்புவது கட்டாயமில்லை என உச்சநீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது.

விருப்பப்பட்டால் திரையரங்குகளில் தேசிய கீதம் பாடலாம் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில் மத்திய அரசின் கோரிக்கை ஏற்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

தேசிய கீதத்தை எங்கெங்கு ஒளிபரப்பலாம் என்பதை மத்திய அரசு வரையறுக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

மத்திய அரசு அமைத்துள்ள குழு தேசியகீதம் ஒளிபரப்புவது தொடர்பாக முடிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் திரைப்படக் காட்சிகளை ஒளிப்பரப்புவதற்கு முன்பு தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆணையிட்டது.

அப்போது திரையில் தேசியக்கொடி காட்டப்பட வேண்டும் என்றும் தேசிய கீதம் ஒளிபரப்பப்படும்போது போது மக்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு இதிலிருந்து விலக்கும் அளிக்கப்பட்டது.

தேசிய கீதம் இசைப்பது தொடர்பான வழிமுறைகளை அமைச்சரவை குழு உருவாக்கும் வரை இந்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் நேற்று மத்திய அரசு மனு தாக்கல் செய்தது.

அந்த மனு மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

தேசிய கீதம் தொடர்பான வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதிலளித்துள்ளது.

1971 ஆம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து திரையரங்குகளில் தேசிய கீதம் ஒளிப்பரப்புவது கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

Comment (0) Hits: 196

மாலைதீவில் வன்முறை; அவசரகால சட்டம் பிரகடனம்

அதிகரித்துவரும் வன்முறைகளால் மாலைதீவு அரசாங்கம் 15 நாட்களுக்கு அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளது.

இந்த தகவலை ஜனாதிபதி அப்துல்லா ஜமீன் தெரிவித்ததாக அவரது உதவியாளர் அஸீமா சுக்கூர் அரச தொலைக்காட்சியின் ஊடாக அறிவித்திருந்தார்.

இந்த வன்முறையானது அரசியல் கைதிகளை ஜனாதிபதி விடுவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படுவதாகவும், இது ஏற்கனவே நிலவிவரும் அரசியல் சிக்கல்களுக்கு மத்தியில் இடம்பெற்றுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அவசரகால சட்டத்தின் மூலம் சந்தேக நபர்களைக் கைதுசெய்யவும் தடுத்துவைக்கவும் ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம் - த ஹிந்துஸ்தான் ரைம்ஸ்

Comment (0) Hits: 195

ஓரின சேர்க்கையாளர்களுக்கு எதிரான தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமா உச்சநீதிமன்றம்?

ஓரின சேர்க்கையாளர்களுக்கு எதிரான தீர்ப்பை மறுபரிசீலனை செய்வது குறித்த வழக்கை விசாரிப்பதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

2013ஆம் ஆண்டு ஓரின சேர்க்கையை குற்றமாக அறிவித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இத்தீர்ப்பை மறுபரிசீலனை செய்வதற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பான வழக்கை விரிவுபடுத்தப்பட்ட அமர்வுக்கு மாற்றியும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஓரினச் சேர்க்கையை குற்றமாக அறிவித்து காலணிய ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத்தினை அங்கீகரிக்கும் 377 ஆவது பிரிவை நீக்கும் முடிவு குறித்து விரிவுபடுத்தப்பட்ட அமர்வு பரிசீலித்து தீர்ப்பளிக்கும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

அத்துடன் இத்தீர்ப்பு ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவரின் உரிமைக்காக போராடுபவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

அவுஸ்திரேலியா, மோல்டா, ஜேர்மனி, பின்லாந்து, கொலம்பியா, அயர்லாந்து, அமெரிக்கா, கிரீன்லாந்து, ஸ்கொட்லாந்து, லக்சம்பேர்க், இங்கிலாந்து, பிரேசில், பிரான்ஸ், நியூசிலாந்து, உருகுவே, டென்மார்க், ஆர்ஜென்டீனா, போர்த்துக்கல், ஐஸ்லாந்து, சுவீடன், நோர்வே, தென்னாரிக்கா, ஸ்பெயின், கனடா, பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய 26 நாடுகள் ஏற்கனவே ஓரினச்சேர்க்கையை சட்டப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 174

பிடல் கஸ்ட்ரோவின் மூத்த புதல்வர் தற்கொலை

கியூப புரட்சியாளர் பிடல் கஸ்ட்ரோவின் 68 வயதான மூத்த மகன் பிடல் ஏஞ்சல் கஸ்ட்ரோ டியாஸ் பலார்ட் தற்கொலை செய்துகொண்டார்.

மன அழுத்தத்துக்காக பல மாதங்களாக சிகிச்சை பெற்றுவந்த அவர் அண்மையில்தான் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியிருக்கிறார்.

இந்நிலையில் இன்று காலை அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Comment (0) Hits: 185

சிக்கிம் மாநில விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்

சிக்கிம் மாநிலத்தின் விளம்பரத் தூதராக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த ‘ஆஸ்கார் நாயகன்’ இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், வடகிழக்கும் மாநிலமான சிக்கிம்மின் அதிகாரப்பூர்வ விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கேங்டாக்கில் நடைபெற்ற ரெட் பாண்டா விண்டர் கார்னிவலின் துவக்கவிழாவில் பேசிய சிக்கிம் முதலமைச்சர் பவன் குமார் சாம்லிங், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிக்கிம்மின் அதிகாரப்பூர்வ விளம்பரத் தூதராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

சிக்கிம்மிற்கு சுற்றுலா கீதம் உருவாக்கப்போகும் ரஹ்மான், விழாவிற்கு பாரம்பரிமான உடை அணிந்து வந்து, குத்துவிளக்கேற்றி விழாவைத் துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஹ்மான், சிக்கிம்மின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளது, மிகவும் பெருமை வாய்ந்த ஒன்று எனவும், சகிப்புத்தன்மை, ஒருமைப்பாடு, இரக்கம், சமாதானம் முதலியவற்றிற்கு, சிக்கிம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு எனவும் கூறினார்.

மேலும், இந்த அழகிற்கு நன்றி செலுத்துவதும் இதனை பாதுகாப்பதும் நம்முடைய கடமை என்றும் கூறினார். ஏ.ஆர்.ரஹ்மானின் குழு, மார்ச் மாதம் சிக்கிம்மில் ஒரு கச்சேரி நிகழ்த்துவதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிக்கிம் மாநிலத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு 7.5 லட்சம் ஆக இருந்த சுற்றுலா பயணிகளின் வருகை, 20176 12 லட்சமாக அதிகரித்தது. ஏ.ஆர்.ரஹ்மானை விளம்பரத்தூதராக நியமித்திருப்பதன் மூலம் இந்த எண்ணிக்கை கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comment (0) Hits: 169

மலேசிய விமானத்தை தேடும் பணி மீண்டும் ஆரம்பம்

2014ஆம் ஆண்டு காணாமற்போன விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.

அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் ‘கண்டுபிடித்தால் பணம் இல்லாவிட்டால் சேவை இலவசம்’ என்னும் ஒப்பந்த அடிப்படையில் இந்திய பெருங்கடல் பகுதியில் மாயமான அந்த விமானத்தை தேட முன்வந்து விருப்பம் தெரிவித்தது.

இந்த பணிக்கென ‘ஓசியன் இன்பினிட்டி’ என்னும் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான அதிநவீன கப்பல் தென்னாப்பிரிக்காவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன நாட்டின் தலைநகரான பீஜிங் நகருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதி 227 பயணிகள் மற்றும் விமானிகள் உள்ளிட்ட 12 பணியாளுடன் பயணத்தை ஆரம்பித்த மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 ரக விமானம் (MH370) இடை நடுவில் காணாமற்போனது.

இதையடுத்து, அந்த விமானத்தை தேடும் பணியில் விமானங்கள், கப்பல்கள் மற்றும் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன.

அவுஸ்திரேலியக் கடற்படை கப்பல் ‘ஓஷன் ஷீல்ட்’ மற்றும் எச்.எம்.எஸ் ‘எக்கோ’ என்ற இரண்டு கப்பல்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இதுதவிர மேலும் பல தனியார் நிறுவனங்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.

எனினும் மூன்று வருடங்கள் தொடர்ந்து நடைபெற்ற தேடுதல் வேட்டையில் விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. தேடும் பணியை நிறுத்தி கொள்வதாக மலேசியா, சீனா மற்றும் அவுஸ்திரேலிய அரசுகள் கடந்த ஆண்டு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 190

சான்சி கப்பல் வெடிக்கும் அபாயம்

எண்ணெய்க் கப்பல் விபத்துக்குள்ளாகி இரண்டு நாட்கள் கடந்துள்ள போதிலும் எண்ணெய்க் கசிவு தொடர்வதால், கிழக்கு சீன கடலில் சுற்றுச்சூழல் பேரழிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரான் நாட்டு எண்ணெயை ஏற்றிவந்த சான்சி கப்பலில் ஏற்பட்ட தீ இதுவரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை.

இந்த தீ விபத்தில் சிக்கி காணாமல் போயுள்ள 32 பேரில் 30 பேர் ஈரானியர்கள் எனவும் 2 பேர் பங்களாதேஸ் நாட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிபத்தினால் கடற்பரப்பில் எண்ணெய் படர்ந்துள்ளதையடுத்து பாதிக்கப்பட்டுள்ள சீனாவிற்கு உதவும் நோக்கில் அமெரிக்கா கடற்படை இராணுவ விமானத்தை அனுப்பியுள்ளது.

எண்ணெயை விட லேசான படிமத்தைக் கொண்டிருக்கக்கூடிய ஆவி மாதிரியான இந்த திரவம், கடற்பரப்பில் கலக்கும்போது, கச்சா எண்ணெயை விட சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

இந்த திரவம் நீராவியாகி, தண்ணீரில் கலக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று ஜே.டீ.டி எரிசக்தி சேவையின் ஜான் ட்ரிஸ்கோல் சர்வதேச ஊடகமொன்றுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

நிறமோ அல்லது நறுமணமோ இந்த திரவத்திற்கு இல்லை என்பதால், இதனைக் கடலில் கண்டுபிடித்து சுத்தப்படுத்துவது மிக சிரமமானது எனவும் அவர் கூறியுள்ளார்.

1,36,000 தொன் அளவிலான ஈரான் நாட்டு எண்ணெயை ஏற்றிவந்த சான்சி கப்பல், ஷாங்காயிலிருந்து 160 மைல்கல் தூரத்தில் சீன சரக்கு கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதனையடுத்து சீன சரக்கு கப்பலில் இருந்த 21 பேர் மீட்கப்பட்டதுடன் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளை மேற்கொள்ள, பல கப்பல்களை சீனா அனுப்பியுள்ள நிலையில், தென் கொரியாவும் கடலோர காவல் கப்பல் மற்றும் ஹெலிகொப்டர் ஒன்றை இதற்காக அனுப்பியுள்ளது.

Comment (0) Hits: 183

​பேரறிவாளனை விடுதலை செய்ய மத்திய அரசு எதிர்ப்பு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜுவ்காந்தி கொலை வழக்கில், பேரறிவாளனை விடுதலை செய்வதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் உள்ள சதியை முழுமையாக விசாரிக்கக் கோரியும், தன்னை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இது தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் - பானுமதி அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

இதன்போது, தான் கொடுத்ததாக கூறப்படும் பேட்டரி மூலம் தான் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த குண்டு தயாரிக்கப்பட்டதை இதுவரை உறுதி செய்யவில்லை என்று பேரறிவாளன் தரப்பில் வாதிடப்பட்டது.

அத்துடன் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், கூட்டு சதிக்கும் பேரறிவாளனுக்கும் சம்மந்தம் இல்லை என மத்திய குற்றப்புலனாய்வு விசாரணை அதிகாரியாக இருந்த தியாகராஜன் தெரிவித்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை அதிகாரியாக இருந்த ஒருவரே தன்னைக் குற்றவாளியாக கருத முடியாது எனக் கூறி இருப்பதால், 1999ல் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை திரும்பப் பெற வேண்டும் என பேரறிவாளன் தரப்பில் வாதிடப்பட்டது.

ராஜீவ் கொலைக்கு ஆதாரமான குண்டு எங்கு தயாரிக்கப்பட்டது என்பது குறித்து இலங்கையிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டும் இதுவரை பதில் அளிக்கவில்லை என மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக பெப்ரவரி 21 ஆம் திகதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், இந்த வழக்கைத் தொடர்ந்து விசாரிப்பதற்கு பேரறிவாளன் தரப்பு விரும்பினால் விசாரிக்க தயாராக இருப்பதாகவும், இல்லை என்றால் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதற்கு பரிந்துரை செய்ய தயாராக உள்ளதாகவும் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் அமர்வு உத்தரவிட்டது.

Comment (0) Hits: 199

அமெரிக்காவுக்கு எதிராக ஈரானில் பேரணி

ஈரான் அரசுக்கு ஆதரவாகவும் அமெரிக்காவுக்கு எதிராகவும் ஈரானில் பேரணிகள் நடைபெற்றன.

ஈரான் அரசுக்கு எதிராக கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடைபெற்றன.

இந்த போராட்டங்களை ஈரான் அரசு ஒடுக்குவதாகவும் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் குறிவைக்கப்படுவதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியது.

இதுகுறித்து ஐ.நா. பாதுகாப்பு அவையில் விவாதம் நடத்தப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்காவுக்கு எதிராகவும், ஈரான் அரசுக்கு ஆதரவாகவும், ஈரான் தலைநகர் உட்பட பல்வேறு நகரங்களில் இன்று பேரணி நடைபெற்றது.

இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Comment (0) Hits: 183

காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாதிகள் 6 பேர் சுட்டுக் கொலை!

ஜம்மு காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாதிகள் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானை அண்மித்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப் பகுதியில் ஸ்ரீநகரில் இருந்து 100 கிமீ தொலைவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

யூரி இராணுவ எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றபோது, அவர்களுக்கு எதிராக இராணுவம், துணை இராணுவம், ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை அடங்கிய கூட்டுப்படை தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இத்தகவலை ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை தலைவர் Shesh Paul Vaid  தெரிவித்துள்ளார். சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் 6 பேரில் மூவர் ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பின் தற்கொலைப் படைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

ஊடுருவல் முயற்சியைத் தொடர்ந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையை இராணுவம் முடுக்கிவிட்டுள்ளது.

Comment (0) Hits: 181

திரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி அமைக்கும்

இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் இந்த ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி அமையும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தலைநகர் அகர்தலாவில் நேற்றைய தினம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய அவர்,

திரிபுரா மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று, மார்ச் மாதம் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியமைக்கும் என குறிப்பிட்டார்.

37 இலட்சம் மக்கள் தொகை கொண்ட திரிபுராவின் மக்கள் தொகையில், 7 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலையின்றி தவிப்பதாக சுட்டிக்காட்டிய அவர், கடந்த 25 ஆண்டுகளாக சி.பி.எம் ஆட்சியில் திரிபுரா மிகவும் பின் தங்கிவிட்டதாகக் குற்றம்சாட்டினார்.

60 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் சி.பி.எம்மிற்கு 50 சட்டசபை உறுப்பினர்கள் உள்ளதுடன் 7 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பாரதிய ஜனதா முக்கிய எதிர்க்கட்சியாக விளங்கி வருகின்றது.

Comment (0) Hits: 172

Page 5 of 6