சர்வதேசம்

Dr.ஷாபியினால் கருத்தடை சிகிச்சை செய்ததாக கூறப்பட்ட பெண் கர்ப்பம்!

குருநாகல் போதனா வைத்தியசாலையின் மருத்துவர் மொஹமட் சிஹாப்தீன் ஷாபி நான்காயிரம் சிங்கள பெண்களுக்கு கருத்தடை சத்திர சிகிச்சைகளை செய்துள்ளதாக கூறி, கடந்த காலங்களில் இனவாத நாடகத்தை அரங்கேற்றிய பேராசிரியர் சன்ன ஜயசுமண, அத்துரலியே ரதன தேரர் ஆகியோர் தற்போது அமைதியாக இருந்து வருகின்றனர்.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், ராஜபக்ஷவினரின் அச்சுறுத்தல் மற்றும் கண்டிப்புகள் காரணமாக சஹ்ரான் மற்றும் ஷாபி போன்றோர் பற்றி பேசாமல் அமைதியாக இருப்பதாக சன்ன ஜயசுமண தெரிவித்திருந்தார்.

சிங்கள மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள, முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தை பரப்பிய ராஜபக்ஷவினர் மற்றும் அவர்களின் முகாமைச் சேர்ந்த ஜயசுமண மற்றும் ரதன தேரர் போன்றவர்கள், சுயவிருப்பில் அல்லது ராஜபக்ஷவினரின் அச்சுறுத்தல் காரணமாகவோ அமைதியாக இருந்து வருகின்றனர்.

சன்ன ஜயசுமண, பொதுஜன பெரமுன மற்றும் வியத் மக மேடைகளில் முன்வரிசையை பெற்றுக்கொள்ளவும், எப்படியாவது நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காகவும் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், அவர்களால் ஷாபி மற்றும் சஹ்ரான்கள் பற்றி பேச நேரமில்லை.

மருத்துவர் ஷாபி நான்காயிரம் சிங்கள பெண்களுக்கு கருத்தடை சத்திர சிகிச்சை செய்துள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்ததுடன், அது குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை நடத்தியது.

மருத்துவர் ஷாபி, கருத்தடை சத்திர சிகிச்சையை செய்துள்ளாரா? என்பதை மருத்துவ ரீதியில் உறுதிப்படுத்த அந்த பெண்களை மருத்துவப் பரிசோதனைக்கு வருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதுடன், அந்த பெண்கள் எவரும் பரிசோதனைக்கு முன்வரவில்லை.

இந்த நிலையில், கருத்தடை சத்திர சிகிச்சைக்கு உள்ளடக்கப்பட்டதாக முறைப்பாடு செய்த பெண்களில் ஒருவர் கர்ப்பமடைந்துள்ளார். இந்த பெண் மருத்துவப் பரிசோதனை மூலம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இது சம்பந்தமான பரிசோதனை அறிக்கைகளின் பிரதிகள், குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் சன்ன ஜயசுமண மற்றும் ரதன தேரர் ஆகியோர் இந்த பெண்கள் கருத்தடை சத்திர சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என அடித்து கூறி வந்ததுடன், அதனை உறுதிப்படுத்த மருத்துவப் பரிசோதனை அவசியமில்லை எனவும் வாதிட்டனர்.

எனினும், கருத்தடை சத்திர சிகிச்சைக்கு உள்ளடக்கப்பட்டதாக கூறப்பட்ட பெண் கர்ப்பமடைந்துள்ளதால், உண்மைகள் வெளியாக ஆரம்பித்துள்ளன.

இதனால், ஜயசுமண மற்றும் ரதன தேரர் ஆகியோர் கூறியது போல், அந்த பெண்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் அவசியமில்லை. இந்த பெண்கள் மூலமே கருத்தடை சத்திர சிகிச்சை என்ற கதை பச்சை பொய் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜயசுமண மற்றும் ரதன தேரர் உள்ளிட்டோர் இந்த இனவாத நாடகத்தை எதற்காக அரங்கேற்றினர்? என்பது தொடர்பான விசாரணைகளை நடத்த வேண்டும் எனவும், இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதை கண்டறிய வேண்டும் எனவும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

625.0.560.320.160.600.053.800.700.160.90

 

625.0.560.320.160.600.053.800.700.160.90 1

 

625.0.560.320.160.600.053.800.700.160.90 2

 

Comment (0) Hits: 2334

பெண்கள் வாகனம் ஓட்ட இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.!

சவூதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்ட இருந்த தடை நேற்றுடன் நீக்கப்பட்ட நிலையில் பல பெண்களும் வீதிகளுக்கு வாகனங்களை எடுத்து வந்து தடை தளர்த்தப்பட்டதை கொண்டாடியுள்ளனர்.

 

மன்னர் சல்மானின் மகனான முடிக்குரிய இளவரசர் முஹமது பின் சல்மானின் சீர்திருத்த நடவடிக்கையாக கடந்த செப்டெம்பரில் இந்த தடையை தளர்த்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

கிழக்கு நகரான கோமாரிலும் பெண்கள் வாகனத்தை வீதிகளில் செலுத்தியதோடு பொலிஸார் அவர்களை வரவேற்றனர்.

உலகில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்ட ஒரே நாடாக விளங்கிய சவூதி அரேபியாவில், பெண்கள் வெளியே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டால் தனியார் ஓட்டுனர்களை நியமிப்பதே ஒரே வழியாக இருந்தது. இந்த தடைக்கு பல ஆண்டுகளாக சர்வதேச கண்டனங்கள் இருந்து வந்த நிலையிலேயே அது தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.

 

“நாட்டின் எந்த ஒரு இடத்திற்கும் வாகனத்தை ஓட்டிச் செல்ல தற்போது அனைத்து பெண்களுக்கும் உரிமை உள்ளது” என்று சவூதி போக்குவரத்து அதிகாரசபையின் பேச்சாளர் கர்னல் சமி பின் முஹமது அந்நாட்டு அரச தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.

 

பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ள நாடுகளில் ஒன்றான சவூதியில் இம்மாத ஆரம்பத்தில் பெண்களுக்கு முதல் முறை வாகன ஓட்டுனர் அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டது.

 

இந்நிலையில் வாகனம் ஓட்ட தயாராகும் பெண்களுக்கு விழிப்புணர்வை ஊட்டுவதற்காக கடந்த வியாழக்கிழமை தொடக்கம் சவூதியில் ‘இறைவன் மீது நம்பிக்கை வைத்து ஓட்டுங்கள்’ என்ற பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.

 

இந்த தடை தளர்த்தப்பட்டிருப்பதை வரவேற்றிருக்கும் செயற்பாட்டாளர்கள் பெண்கள் இன்னும் பல முட்டுக்கட்டைகளை தாண்ட வேண்டி இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

Comment (0) Hits: 438

படகு மூழ்கியதில் 100 அகதிகள் வரை பலி!

லிபியா அருகே அகதிகள் சென்ற படகு மூழ்கியதில் 100 அகதிகள் வரை உயிரிழந்திருக்கலாம் என அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் பலர் உள்நாட்டு போர் மற்றும் பஞ்சத்தால் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

 

இந்நிலையில் பெரிய படகு ஒன்றில் ஏராளமான அகதிகள் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார்கள்.

 

அப்போது படகின் என்ஜின் பகுதி வெடித்துச் சிதறியதாகக் கூறப்படுகிறது.

 

இதைத் தொடர்ந்து படகு நீரில் மூழ்கியது. இந்த விபத்தில் உயிரிழந்து சடலமாக மிதந்த 3 குழந்தைகளின் உடல்களை மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர்.

 

விபத்து காரணமாக 100 அகதிகள் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

 

மேலும் நீரில் தத்தளித்த 350க்கும் மேற்பட்டவர்கள் லிபிய கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

 

குறித்த படகில் தோராயமாக 120 பேர் பயணம் செய்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

 

Comment (0) Hits: 458

தமிழக மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!

தமிழக மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள், குளச்சல் முதல் கோடியக்கரை வரை உள்ள கடல் பகுதி மற்றும் அந்தமான் கடற்பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதிலாலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை நிலைமயம் தெரிவித்துள்ளது.

 

 

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை தெரிவித்துள்ளது.

Comment (0) Hits: 399

தனியார் செய்தி நிறுவனத்தில்  துப்பாக்கிச்சூடு 5 பேர் பலி பலர் காயம்!

அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் உள்ள ‘தி கெப்பிட்டல்’ எனப்படும் தனியார் செய்தி நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட  துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் மேரிலேண்ட் மாகாணத்தின் அன்னாபோலிஸ் பகுதியில் ‘தி கெப்பிட்டல்’ எனப்படும் தனியார் செய்தி நிறுவனத்தின் அலுவலகம் இயங்கி வருகிறது.

 

இந்நிலையில், நேற்று மதியம் அப்பகுதிக்கு சென்ற இனந்தெரியாத நபரொருவர் அலுவலத்திற்குள் நுழைந்து அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

இதில் 5 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

ஆனால் அவர் யார்?, எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தினார்? என இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. 

அனாபோலிஸில் உள்ள `கேபிடல் கேசட்` செய்தியறையின் கண்ணாடி வழியாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

 

சமீப காலத்தில் அந்த செய்தித்தாள் நிறுவனத்துக்கு சமூக ஊடகங்களில் ’வன்முறை அச்சுறுத்தல்கள்’ வந்ததாக தெரிவித்த போலிஸார், இது செய்தி நிறுவனம் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்று தெரிவித்துள்ளனர்.

 

மேரிலாண்டில் வசிக்கும் 30 வயதுக்கு மேல் உடைய வெள்ளை நிற மனிதர் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

அதிகாரிகளுடன் விசாரணைக்கு ஒத்துழைக்க, சந்தேக நபர் மறுப்பதாக கூறப்படுகிறது.

 

அவர் அடையாளத்தை கண்டுபிடிக்க முடியாத வகையில் விரல் ரேகைகளை அழித்துவிட்டதாகவும் தெரிகிறது.

 

போலி கிரனேட் குண்டுகளையும் கண்ணீர் புகை குண்டுகளையும் தனது பையில் அவர் வைத்திருந்ததாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் அவர் "பெரிய துப்பாக்கியை" பயன்படுத்தியதாக தெரிவித்த அவர்கள் மேற்கொண்டு எந்தவித தகவல்களையும் அளிக்கவில்லை.

 

வெடிகுண்டாக இருக்கலாம் என கருதிய பொருளை செயலிழக்கச் செய்ததாக போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடைபெற்ற கட்டடத்திலிருந்து 170 பேர் பாதுகாப்பாக வெளியே கொண்டு வரப்பட்டதாக போலிஸார் தெரிவித்தன.

எச்சரிக்கை நடவடிக்கையாக நியூயார்க் நகரில் அமைந்துள்ள செய்தி நிறுவனங்களுக்கு பயங்கரவாத தடுப்பு குழுக்களை நிறுத்தியுள்ளதாக நியூயார்க் நகர போலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த நிகழ்வு குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.

 

செய்தி நிறுவனத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 539

பதவியில் இருக்கும்போது பிரசவத்திற்கு செல்லும் இரண்டாவது உலகத் தலைவர்

நியூசிலந்துப் பிரதமர் ஜசிந்தா ஆர்டன் பிரசவத்துக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இவர் ஆறு வார மகப்பேற்று விடுமுறையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர், அவர் தமது பொறுப்புகளைத் துணைப் பிரதமரிடம் ஒப்படைத்தார்.

 

37 வயதுடைய  நியூசிலந்துப் பிரதமர் ஜசிந்தா ஆர்டன், சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் நியூசிலந்தின் பிரதமராகப் பொறுப்பேற்றார்

பதவியில் இருக்கும்போது பிரசவத்திற்கு செல்லும் இரண்டாவது உலகத் தலைவர் அவர்.

 

இதற்கு முன்னர் 1990-ஆம் ஆண்டு, பாக்கிஸ்தானின் பிரதமராகப் பொறுப்புவகித்த பெனஸிர் புட்டோ பதவியில் இருந்தபோது குழந்தையைப் பெற்றெடுத்தார்.

Comment (0) Hits: 387

சென்னையில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் 85 வீடுகள் சேதம்!

சென்னை பட்டினப்பாக்கத்தில் நேற்று இரண்டாவது நாளாக ஏற்பட்ட கடல் சீற்றத்தால் மேலும் 50 வீடுகள் சேதமடைந்துள்ளன.சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள சீனிவாசபுரத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

 

தொடா் சீற்றத்தால் 35 வீடுகள் இடிந்து விழுந்தது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளில் வைத்திருந்த பணம், நகை, சான்றிதழ்கள் கடலில் அழித்துச் செல்லப்பட்டது.

 

அந்த பகுதியில் மொத்தம் 500க்கும் மேற்பட்ட மீனவக்குடியிருப்புகள் உள்ளன. 

செவ்வாயன்று ஏற்பட்ட கடல் சீற்றத்தால் 35 வீடுகள் இடிந்து விழுந்ததாக கூறப்பட்ட நிலையில், இரண்டாவது நாளாக நேற்றும் சீற்றம் தணியவில்லை.

 

இதன் காரணமாக மேலும் 50 வீடுகள் சேதமடைந்தது. இருக்க இடம் இல்லாமல், தற்போது சொந்த ஊரிலே பட்டின்பாக்கம் மக்கள் அகதிகளாகி உள்ளனர்.

 

இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியள்ளனர்.

 

Comment (0) Hits: 449

அசாம், திரிபுரா மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 20 பேர் பலி!

இந்தியாவில் பெய்து வரும் பருவ மழை காரணமாக அசாம் மாநிலத்தின் ஹைலகெண்டி மாவட்டத்தில் 3 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக துணை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

 

அசாம், திரிபுரா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பெய்த  கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 20 பேர் பலியாகியுள்ளதோடு, சுமார் 8 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

 

நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக மாநில அனர்த்த நிவாரணப் படை மற்றும் தேசிய அனர்த்த முகாமைத்துவப் படை என சுமார் 10 குழுக்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடும் மழை காரணமாக அமெரிக்காவின் டெக்சாஸ் வளைகுடா மற்றும் அமெரிக்காவின் மத்திய மேற்கு பகுதிகளிலுள்ள ஆறுகள் நிரம்பியுள்ளதால் குறித்த பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

 

அத்தோடு, தெற்கு டெக்சாஸ் பகுதியில் இரண்டு வெள்ள அபாய எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதுடன், குறித்த பகுதியில் இந்த வாரத்தில் மட்டும் சுமார் 15 செ.மீ. க்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

 

டெக்சாஸை விட மெர்செட்ஸில் கூடுதலான மழை பெய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மீட்புப் பணிகளில் பல குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

 

வெள்ளம் காரணமாக பல வீதிகள் மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Comment (0) Hits: 363

லஸ்தீனில் இடம்பெயர்ந்துள்ளவர்களுக்கு உதவ இந்தியா இணக்கம் !

பலஸ்தீனில் இடம்பெயர்ந்துள்ளவர்களுக்கு உதவ இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.

 

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் வேலைத்திட்டத்தினூடாக இந்தியா உதவ முன்வந்துள்ளது.

 

இதற்காக 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.

 

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக ஐக்கிய நாடுகள் சபை புதிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

 

அதற்கு ஒத்துழைப்பு வழங்க 20 நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.

 

பலஸ்தீனில் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டு மக்கள் பல்வேறு பிரச்சினைகளக்கு முகங்கொடுத்துள்ளனர்.

 

காசா மீது இஸ்ரேல் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்துகிறது.

 

இதனால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

 

பலஸ்தீன மக்களுக்கு உதவும் திட்டத்திற்காக 125 மில்லியன் அமெரிக்க டொலரை சேகரிக்கவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

Comment (0) Hits: 430

மிஸ் இந்தியாவாக சென்னை மாணவி!

மிஸ் இந்தியாவாக சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி அனுக்ரீத்தி வாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2018 ம் ஆண்டிற்கான பெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டி மும்பையில் நடந்தது.

 

29 மாநிலங்களைச் சேர்ந்த இளம்பெண்கள் இதில் பங்கேற்று பல்வேறு கட்ட போட்டிகளில் தகுதி பெற்றனர்.

 

 

நேற்றிரவு நடைபெற்ற வண்ணமயமான இறுதிச் சுற்றுப் போட்டியில், கடந்த ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட மானுஷி சில்லர், நடிகைகள் கரீனா கபூர், ஜாக்குலின் பெர்னாண்டஸ், மாதுரி தீக்ஷித் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

 

இதில், சென்னையை சேர்ந்த 19 வயது கல்லுாரி மாணவி அனுக்ரீத்தி வாஸ் என்பவர் மிஸ் இந்தியா 2018 பட்டம் வென்றார்.சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ., பிரெஞ்ச் பயிலும் அனுக்ரீத்திக்கு, மானுஷி சில்லர் மகுடம் சூட்டினார்.

 

 

ஹரியானாவை சேர்ந்த மீனாட்சி சவுத்ரி, ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரேயா ராவ் ஆகியோர் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திற்கு தேர்வுசெய்யப்பட்டனர்.

Comment (0) Hits: 436

எந்த பட்டியலில் இந்தியா முதலிடம் தெரியுமா?

பெண்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்து நிறைந்த பட்டியலில் இந்தியா முதலிடத்திலிருப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

 

 

ரொய்டஸ் நிறுவனம் மேற்கொண்ட புதிய கணிப்பீட்டின் மூலமே இத்தகவல் தெரிய வந்துள்ளது.

 

உலக அளவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில் அடிமைகளாக உழைப்பை பெறும் நிலை அதிகரித்து காணப்படுவதாகவும் மேற்கொள்ளப்பட்ட புதிய கணிப்பீட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

 

 

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் சிறியா ஆகியன 2 ஆம் 3 ஆம் இடங்களில் காணப்படுகின்றது.

 

மேற்குலக நாடுகளில் அமெரிக்காவும் இவ்வறிக்கையில் 10 ஆம் இடத்தில் உள்ளது. பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்து 550 வல்லுனர்கள் ஈடுபடுத்தப்பட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

 

வீட்டு வேலை, ஆள்கடத்தல், பலவந்தமாக திருமணங்களை செய்து வைத்தல், சிறுவர் திருமணங்கள், பாலியல் கொடுமைகள் உள்ளிட்ட பல காரணங்கள் காரணமாக இந்தியா பெண்களுக்கு வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான நாடாக காணப்படுவதாக இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அத்துடன் பெண்களுக்கு அச்சுறுத்தல்களை விடுக்கும் கலாசார சம்பிரதாயங்கள் கொண்ட ஆபத்தான நாடாகவும் இந்தியா காணப்படுகின்றது.

 

இற்றைக்கு 7 வருடங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது, இந்தியா 4 ஆம் இடத்தில் காணப்பட்டது. கடந்த காலங்களில் இந்தியாவில் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

Comment (0) Hits: 460

பலத்த காற்று காரணமாக 10ஆயிரம் மீன்பிடி தொழிலாளர்கள் பாதிப்பு!

ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களை மீன்பிடிக்கச்செல்ல அரசு தடை விதித்துள்ளமையால் 10ஆயிரம் மீன்பிடி தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

 

மணிக்கு 45 முதல் 55கி.மி வேகத்தில் பலத்த காற்று வீசிவருவதால் ராமேஸ்வரம் பாம்பன் மண்டபம் கீழக்கரை தொண்டி உள்ளிட்ட மாவட்டங்கள் முழுவதுமுள்ள துறைமுகங்களில் விசைப்படகுகள் மற்றும் நாட்டுபடகு மீனவர்கள் மீன்பிடிக்கச்செல்ல மீன் துறை தடைவிதித்துள்ளது.

 

இதனால் சுமார் ஆயிரத்து 750 விசைப்படகுகளும் சுமார் மூன்று ஆயிரம் நாட்டுப்படகுகளும் நங்கூரமிடப்பட்டுள்ளது.

 

இதன் காரணமாக சுமார் 10ஆயிரம் மீன்பிடி தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதுடன் நாள் ஒன்றுக்கு ரூ.ஐந்துகோடி வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

Comment (0) Hits: 408

டிரம்ப்பின் பயணத்தடை உத்தரவு சரியே -உச்ச நீதிமன்றம்

சில முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் தமது நாட்டுக்குள் நுழைய அமெரிக்க ஜனாதிபதி  டிரம்ப் விதித்திருந்த தடை உத்தரவுக்கு  அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது.

 

சிரியா, ஈரான், சோமாலியா, யெமன், லிபியா, சூடான், ஈராக் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழையக் கூடாதென அமெரிக்க ஜனாதிபதி  டிரம்ப் ஏற்கனவே தடை விதித்திருந்தார். 

 

நாட்டின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும்  அவர் தெரிவித்திருந்தார்.

 

இதனையடுத்து அமெரிக்க ஜனாதிபதி  டிரம்பின் இத்தடை  உத்தரவுக்கு எதிராக அந்நாட்டின் பல மாகாண நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டதால், டிரம்பின் பயணத்தடை அறிவிப்புக்கு இடைக்கால தடை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

 

பின்னர், இப்பட்டியலில் இருந்து சூடான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகள் விலக்கப்பட்டு அந்த நாடுகளில் இருந்து வருபவர்களை, கூடுதல் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டால் மாத்திரம் போதுமானது எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

 

உச்ச நீதிமன்றின் இந்த தீர்ப்புக்கு எதிராக பல அமைப்புகள் சார்பில் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் பயணத்தடை உத்தரவு சரியே என்று நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

அந்த நாட்டின் தலைமை நீதிபதி உட்பட 5 நீதிபதிகள் கொண்ட குழுவில், நான்கு நீதிபதிகள் டிரம்பின் அறிவிப்புக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.  

Comment (0) Hits: 425

சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்காவே காரணம்!

சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்காவே காரணம் என ஈராக் குற்றஞ்சாட்டியுள்ளது.

 

சிரியாவின் கிழக்கு பகுதியிலுள்ள சிரிய – ஈராக்கிய எல்லை அருகேயுள்ள அல்-ஹரி எனும் இடத்தில் நேற்று முன்தினம் இரவு வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.

 

இதில், சிரிய நாட்டினர் அல்லாத சிரிய அரசின் ஆதரவு பெற்ற வெளிநாட்டு படை வீரர்கள் 22 பேர் உயிரிழந்துள்ளதாக சிரியாவுக்கான மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் தெரிவித்திருந்தார்.

 

இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் பலரும் உயிரிழந்துள்ளதாகவும் அமெரிக்கக் கூட்டுப்படைகள் தான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் சிரிய ஊடகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

 

இதில், ஈராக்கிய இராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளதாக சிரிய போர் கண்காணிப்பகம் அறிவித்திருந்தது.

 

இந்நிலையில், குறித்த தாக்குதலுக்கு அமெரிக்காவின் கூட்டுப்படைகளே காரணம் என ஈராக் குற்றஞ்சாட்டியுள்ளது.

 

சிரியாவின் கிழக்கு பகுதியிலுள்ள சிறிய மாகாணமான டேய்ர் எஸ்ஸோர் பகுதி ஐ.எஸ். பயங்கர வாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதுடன், இங்கு அமெரிக்கக் கூட்டுப்படைகளும் சிரியாவுக்கு ஆதரவாக மோதலில் ஈடுபடும் ரஷ்ய படைகளும் ஐ.எஸ். பயங்கரவாதிகளை எதிர்த்து தனித் தனியே போரிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 390

சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள்:புகழேந்திக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்திக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

குறித்த சம்மனில் எதிர்வரும்  29 ஆம் திகதிஇ முன்னிலையாகி கர்நாடக சிறையில் உள்ள சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்குவதற்காக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக  தொடரப்பட்ட வழக்கு தொடர்பில் விளக்கம் அளிக்க  வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் குற்றம்சாட்டப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய  சிறையில் சசிகலா தடுத்துவைக்கப்பட்டுள்ளார். 

இதையடுத்து சசிகலாவிற்கு கூடுதல் அறை வசதிகள், சிறப்பு சமையல், மருத்துவம், உதவியாளர்கள் உள்ளிட்ட சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டி, இரண்டு கோடி ரூபாய் வரை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்கு பதியப்பட்டது. 

இதில், சிறைத்துறை டிஜிபியான சத்தியநாராயணா மீது டி.ஐ.ஜி-யாக இருந்த அதிகாரி ரூபா லஞ்ச புகார் கூறினார்.

இந்நிலையில் இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதையடுத்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கர்நாடக மாநில செயலாளரும், டிடிவி தினகரனின் ஆதரவாளருமான புகழேந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Comment (0) Hits: 452

மோடி வெளியிட்ட வீடியோ...?

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

சமீபத்தில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்வர்தன் சிங் ராத்தோர் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டார்.

 

அதில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி, ரித்திக் ரோஷன் மற்றும் சாய்னா நேவால் ஆகியோரை டேக் செய்து அவர்களுக்கு 'பிட்னஸ் சவால்' விடுத்தார்.

 

அவரின் சவாலை ஏற்றுக்கொண்ட விராட் கோலி தன் உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டுஇ தன் மனைவி அனுஷ்கா சர்மா, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஆகியோருக்கு சவால் விடுத்திருந்தார்.

அதற்கமைய கோலியின் சவாலை தான் ஏற்றுக்கொள்வதாக  பிரதமர் மோடி சமீபத்தில் தனது ட்விட்டரில் அறிவித்திருந்தார்.

 

இந் நிலையில் தற்போது அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

Comment (0) Hits: 386

விவசாயிகளுக்கும் இடையர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 86 பேர் பலி!

நைஜீரியாவில் விவசாயிகளுக்கும் இடையர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 86 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த வியாழக்கிழமை, புலானி இடையர்களின் மீது பெரோம் விவசாயிகள் மீது தாக்கியபோதே அவர்களுக்கு இடையே மோதல் ஆரம்பித்ததாக சில தகவல்கள் வௌியாகியுள்ளன.

 

இந்த சம்பவத்துடன் தொடர்புடையாக நேற்று முன்தினம் ஏற்பட்ட மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர்.

 

இந்த மோதல் சம்பவங்களின் பின்னர் மாநிலத்தின் மூன்று பகுதிகளில் ஊடரங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

குறித்த மோதல்களில் 50 வீடுகள் தீக்கிரையாகியுள்ளதோடு 15 மோட்டார்சைக்கிள்கள் மற்றும் 2 வாகனங்களும் எரிந்துள்ளதாக 

 

ரியோம், பரிகின்லேடி, ஜோஸ் ஆகிய பகுதிகளில் உள்நாட்டு நேரப்படி காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை ஊடரங்கு அமுல்படுத்தப்படும் என பிளேடியூ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Comment (0) Hits: 505

மண்சரிவில் சிக்கி 14 பேர் பலி..!

வங்காளதேசத்தில் கன மழை,காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

வங்காளதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கன மழை காரணமாக மியான்மர் எல்லையில் அமைந்துள்ள காக்ஸ் பஜார், ரங்கமாதி ஆகிய மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

இந்த மழையின் காரணமாக இஸ்லாம்பூர், புரிகாட், அம்டோலி, ஹத்திமாரா, போரோகுல்பாரா, சாரைபாரா பகுதிகளிலும் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

 

கன மழை காரணமாக மியான்மரில் இருந்து அகதிகளாக வந்துள்ள ஆயிரக்கணக்கான ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

 

இந்நிலையில் கோக்ஸ் பஜார் பகுதியில் மண் சுவரொன்று இடிந்து விழுந்ததில் பெண்னொருவரும், அவரது 2½ வயதான ஆண் குழந்தையும் சிக்கிக்கொண்டனர்.

 

 

இதில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்ததோடு. குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

அத்தோடு குறித்த மண்சரிவு மற்றும் மழையில் சிக்கி மொத்தம் 14 பேர் பலியாகி உள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளதோடு பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என தெரிவிக்கப்படடுள்ளது..

Comment (0) Hits: 388

Page 1 of 6