செய்திகள்

பிரதமர் தலையிட்டு சந்தேகத்தைத் தீர்த்து வைத்தார் : டெலோ, ப்ளொட் அமைப்புக்கள் சஜித்துக்கு ஆதரவு!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் (TNA)  பிரதான கூட்டணிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவை வழங்கத் தீர்மானித்ததன் பின்னர் அக்கூட்டமைப்பின் ஏனைய இரண்டு கூட்டணிக் கட்சிகளான டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ப்ளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்தன் ஆகியோரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்தித்து நடாத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் அவர்களும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதற்குத் தீர்மானித்துள்ளனர்.

ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு இவ்விரு அமைப்புக்களினதும் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே இச்சந்திப்பு பிரதமரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தேசிய பிரச்சினைக்குரிய தீர்வு தொடர்பில் ஐ.தே.கட்சியின் பிரதி தலைவரான சஜித் பிரேமதாசாவின் வேலைத்திட்டம் தொடர்பில் இங்கு பேசப்பட்டுள்ளதோடு, சஜித் பிரேமதாசாவினால் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம் விரிவான முறையில் பிரதமரினால் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.  இந்தச் சந்திப்பின் பின்னர் குறித்த இரண்டு அமைப்புக்களின் தலைவர்களும் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவை வழங்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிய வருவதோடு, இத்தீர்மானத்தை அடுத்த இரண்டு தினங்களுக்குள் உத்தியோகபூர்வமாக அறிவிப்பதாக டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

அனேக தமிழ் அரசியல்வாதிகளுக்கு  பிரச்சினைக்குரிய விடயமாக இருப்பது சஜித் பிரேமதாசாவின் அரசியல் நிலைப்பாடு தொடர்பில் அவர்களுக்குள் இருக்கும் தெளிவின்மையே என்றும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலையீட்டினால் அந்த சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதற்காக தற்போது பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக அலரி மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Comment (0) Hits: 131

"தயாசிறியையே முதலில் விரட்டியடிப்போம்" - குமார வெல்கம!

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சிறந்த தீர்வு கிடைக்கப் பெற்றால் தயாசிறியையே முதலில் விரட்டியடிப்போம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் கொழும்பு - சுகததாச உள்ளக அரங்கில் இன்று (05) நடைபெற்ற சுதந்திர கட்சியை பாதுகாக்கும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சம்மேளனத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

சந்திரிகா குமாரதுங்கவுக்கு பின்னர் நானே ஸ்ரீலங்கா சுதந்திர பற்றி பேசுவதற்கு தகுதியுள்ள சிரேஷ்ட உறுப்பினராவேன். சிறிமாவோ பண்டாரநாயக்க எனக்கு அகவத்தை தொகுதியை வழங்கி 38 வருடங்களை நிறைவடைந்துள்ளன. 

மிக நீண்ட காலம் நான் சுதந்திர கட்சியின் அமைப்பளராக இருந்திருக்கிறேன். முன்னாள் பிரதமர் எஸ்.டபில்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க 1951 ஆம் ஆண்டு சுதந்திர கட்சியை கட்டியெழுப்பினார். 

டீ.எஸ்.சேனாநாயக்க உயிழந்ததன் பின்னர் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினராக செயற்பட்ட பண்டாரநாயக்கவுக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை என்பதாலேயே அவர் ஐ.தே.கவிலிருந்து பிரிந்து சு.கவை ஸ்தாபித்தார். 

கட்சி உருவாக்கப்பட்டு முதலாவது தேர்தலில் 8 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன. 1957 ஆம் ஆண்டு மீண்டும் பாரிய வெற்றி கிடைக்கப்பெற்றது. மிகக் குறுகிய காலத்தில் அவர் பல நன்மைகளை செய்திருக்கிறார். 1959 ஆம் ஆண்டு அவர் கொல்லப்பட்டதன் பின்னர் சிறிமாவோ பண்டாரநாயக்கவே கட்சியை முன்னோக்கி கொண்டு சென்றார். 

நான் இன்று அரசியலில் வெற்றி பெற்றிருப்பதற்கும் அவரே காரணமாவார். நான் மாத்திமரல்ல. மஹிந்த ராஸபக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரையும் அவரே உருவாக்கினார். 

சிரேஷ்ட தலைவியாக எமக்கு முறையான அரசியலைக் கற்றுக்கொடுத்தார். தனது குடியுரிமை நீக்கப்பட்ட போதிலும் கட்சியை வெற்றிப் பாதையில் கொண்டு சென்றார். எனவே சுதந்திர கட்சியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கிறது. 

ஆனால் தற்போது அவ்வாறல்ல. வெவ்வேறு கட்சிகளிலிருந்து சுதந்திர கட்சியில் இணைந்தவர்கள் தற்போது கட்சியின் வரலாறு பற்றி பேசுகிறார்கள். அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. நாமே சுதந்திர கட்சியை பாதுகாப்போம். 

அத்துடன் இந்த சம்மேளனத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்களின் பதவிகள் அல்லது உறுப்புரிமை நீக்கப்படும் என்று யாரும் அச்சமடையத் தேவையில்லை. சந்திரிகா குமாரதுங்கவுடன் நானும் இணைந்து முன்னின்று அனைவரையும் பாதுகாப்போம்.அச்சமின்றி அனைவரும் எம்முடன் ஒன்றிணையுங்கள். இதுவே எமக்கு கிடைக்கப் பெற்றுள்ள இறுதி வாய்ப்பாகும். 

ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாகக் கூறும் கட்சி செயலாளருக்கு எதுவும் செய்ய முடியாது. இவ்வாறானவர்கள் எத்தனை கட்சிகளுக்கு தாவியிருக்கிறார்கள் ? அவர்களால் சந்திரிகா குமாரதுங்கவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியுமா ? தந்தையும் தாயும் கட்டியெழுப்பிய இந்த கட்சியிலிருந்து சந்திரிகா குமாரதுங்க நீக்கப்படுவார் என்று தயாசிறி ஜயசேகர கூறுகிறார். ' இந்த தேர்தலில் சிறந்த தீர்வு எமக்கு கிடைக்கப் பெற்றால் காதைப் பிடித்து நாமே உங்களை கட்சியிலிருந்து அப்புறுப்படுத்துவோம் ' என்பதை தயாசிறிக்கு தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் இதன்போது கூறினார்.

Comment (0) Hits: 446

தமிழ் சிறைக் கைதிகள் தொடர்பில் சஜித் மற்றும் கோட்டாபய ஆகியோரின் கொள்கைகள் இதோ!

கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய ஜனாதிபதி வேட்பாளர்களின் வரலாறு மற்றும் அவர்கள் முன்வைத்துள்ள கொள்கைப் பிரகடணம் என்பவற்றை ஒப்பிட்டுப் பார்த்த பின்னரே தமது கட்சி ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தீர்மானத்தைவெளியிட்டதாக இலங்கை தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான தரப்பான இலங்கை தமிழரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேதமதாசாவுக்கு ஆதரவை வழங்குவதாக நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை அறிவித்தது. இது தொடா்பில் பீபீசி சிங்கள சேவைக்கு அக்கடசியின் பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமேந்திரன் கருத்து தெரிவித்த போது, சஜித் பிரேமதாசாவுக்கு தாம் ஆதரவளிப்பதற்காக எவ்வித நிபந்தனைகளையும் முன்வைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

“நாம் இந்த இரண்டு வேட்பாளர்களின் வரலாற்றினை ஆராய்ந்து பார்த்தோம். ஜனநாயகத்திற்கு யார் மதிப்பளிக்கின்றார்கள்?, சட்டத்தின் ஆட்சிக்கு யார் மதிப்பளிக்கின்றார்கள்? என்பவற்றை ஆராய்ந்து பார்த்தோம். எனினும் எமது ஆதரவை வழங்குவதற்கு நாம் எவ்வித நிபந்தனைகளையும் முன்வைக்கவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சி, டெலோ மற்றும் ப்ளொட் அமைப்பு ஆகியன இணைந்தே தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் செயற்படுகின்றார்.

இதே வேளை ப்ளொட் அமைப்பும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவை வழங்க முன்வந்துள்ளதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்தன் பீபீசி சிங்கள சேவைக்குத்  தெரிவித்துள்ளார்.

Comment (0) Hits: 189

ஜனாதிபதித் தேர்தல்; சித்தார்த்தன் தலைமையிலான புளொட் சஜித்துகு அதரவு!

புதிய ஜனநாயக முன்னணியின்  ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசவை ஆதரிக்க தமிழீழ மக்கள் விடுதலை கழகம்( புளொட்) தீர்மானம் எடுத்துள்ளதுடன் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ ) தீர்மானம் நாளை அறிவிக்கப்படும்.

தமிழரசு கட்சி தனித்து தீர்மானத்தை அறிவிக்காது கூட்டமைப்பாக இணைந்து தீர்மானத்தை அறிவித்திருந்தால் ஆரோக்கியமாக இருந்திருக்கும் என்கிறார் தர்மலிங்கம் சித்தார்த்தன். 

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான கட்சியான இலங்கை தமிழரசு கட்சி தீர்மானம் எடுத்துள்ள நிலையில் ஏனைய இரண்டு பங்காளிக் கட்சிகளான ரெலோ, புளொட் கட்சிகளின் நிலைப்பாடுகள் இன்னமும் அறிவிக்கப்படாது உள்ள நிலையில் அவர்களின் நிலைப்பாடுகள் குறித்து வினவியபோதே அவர்கள் இதனை கூறினார்கள்.

இது குறித்தி  தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ )தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கூறுகையில், 

நாம் கட்சியாக இன்னமும் தீர்மானம் ஒன்றினை எடுக்கவில்லை. நாளைய தினம் எமது கட்சியின் உறுப்பினர்கள் கூடி எமது நிலைப்பாடுகள் குறித்து ஆராயவுள்ளோம். 

இலங்கை தமிழரசு கட்சியின் தீர்மானம் குறித்து நாம் சிந்திக்க வேண்டும். அதேபோல் வெறுமனே ஒரு வேட்பாளரை வீழ்த்த இன்னொரு வேட்பாளருக்கு அர்த்தமற்ற ஆதரவை வழங்கவும் முடியாது. நாம் ஒரு ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்றால் எமது மக்கள் சார் விடயங்களில்  முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 

அவ்வாறு இல்லாது ஒரு வேட்பாளரை வெற்றிபெற செய்ய எமது மக்களை ஏமாற்ற முடியாது. சில தீர்மானங்களில் நாம் உறுதியாக உள்ளோம். எமது நிலைப்பாடுகள் குறித்து நாம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் பேசுவோம். எம்முடன் பேசவும் அவர் தயாராக உள்ளார். நாளைய தினம் நாம் எமது தீர்மானத்தை அறிவிப்போம் என்றார்.

எனினும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ ) உறுப்பினர்கள் இடையில் தொடர்ந்தும் இரு வேறுபட்ட நிலைப்பாடுகள் கானப்படுகின்றதாக அறிய முடிகின்றது. தாம் எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்காது மக்களின் விருப்பில் வாக்களிக்க வேண்டும்  என்பதை அறிவிப்போம் என்ற கருத்தும் கட்சிக்குள் நிலவுகின்றது. 

தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) தலைவர் சித்தார்த்தன் இது குறித்து கூறுகையில், "நாம் ஏற்கனவே ஒரு தீர்மானத்தை எடுத்து அதில் உறுதியாக உள்ளோம். இது ஒரு மாதத்துக்கும் முன்னமே எடுக்கப்பட்ட தீர்மானம். அதாவது நாம் இரண்டு பிரதான வேட்பாளர்களில் ஒருவரை  ஆதரிப்பது, அதில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதே சரியான தெரிவு என்பதை நாம் கூறிவிட்டோம். இப்போதும் நாம் அந்த தீர்மானத்தில் உறுதியாக உள்ளோம்.

எமது நோக்கம் என்னவெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பாக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு வேட்பாளருடன் நிற்க வேண்டும் என்பதே. அதில் எமது தலைமைகள் தனித்தனி தீர்மானம் எடுக்க வேண்டியதில்லை. கூட்டமைப்பாக ஒரு தீர்மானத்தை வெளிப்படுத்தியிருந்தால் இன்னமும் ஆரோக்கியமானதாக இருந்திருக்கும். எவ்வாறு இருப்பினும் இப்போதும் நாம் ஒற்றுமையாக தமிழ் மக்களின் நலன்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே எமது உறுதியான நிலைப்பாடு. 

ஆதரவு விடயத்தில் பிரதமர் என்னை தொலைபேசியில் அழைத்து பேசினார்.எமது ஆதரவு குறித்து வினவினார். நாம் ஏற்கனவே எடுத்த தீர்மானம் குறித்து அவருக்கு கூறினேன். செல்வம் அடைக்கலநாதன் எம்.பியின் நிலைப்பாடு குறித்து அவருடன் பேசுவதாக கூறினார்.

எவ்வாறு இருப்பினும் எமது முழுமையான ஆதரவை சஜித் பிரேமதாசவின் வெற்றுக்காக வழங்க வேண்டும், அவ்வாறு உங்களின் ஆதரவு எமக்கு கிடைக்கும் என தான் நம்புவதாக என்னிடம் கூறினார்" என்றார்.

Comment (0) Hits: 150

'MCC ஒப்பந்தம் நன்மை தரக்கூடியதே' - பொருளாதார நிபுணர்கள்!

மில்லேணியம் செலேன்ஜ் ஒப்பந்தத்திற்கு (MCC) அனுமதியை வழங்கியதன் ஊடாக இலங்கைக்கு கிடைக்கவுள்ள 480 மில்லியன் டொலர் நிதி இந்நாட்டிற்கு பாதகமானது எனத் தெரிவிப்பது ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் சந்தர்ப்பத்தில், தமது தரப்புக்கு அரசியல் இலாபத்தைப் பெற்றுக் கொள்வதற்கே என்றும், இது இலங்கைக்கு கிடைக்கப் போகும் முதலாவது சந்தர்ப்பம் அல்ல என்றும், சந்திரிகா பண்டாரநாயக்கா அரசாங்க சமயத்திலும் விவசாய சந்தை போட்டித்தன்மையினை அதிகரித்துக் கொள்வதற்காக (பொருளாதார நிலையங்களை அமைப்பதற்காகா) இது உதவியாக அமைந்நததாகவும் முன்னாள் மத்திய வங்கியின்  பிரதி ஆளுநர் கலாநிதி டப்ளிவ். ஏ. விஜேவர்தன தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இது தொடர்பில் மக்களுக்கு விளங்கக் கூடிய சிங்களத்தில் விடயங்களைத் தெளிவு படுத்துவதற்கு தற்போதைய அரசாங்க அரசியல்வாதிகள் தவறியுள்ளதன் காரணமாக இந்த வழங்கள் தொடர்பில் தவறான கருத்துக்கள் தோன்றியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தான் இந்த ஒப்பந்தத்திற்கு போக்குவரத்து பிரிவுக்கான திட்டத்தைத் தயாரிப்பதன் ஊடாக இணைந்து கொண்டதாகவும், இதன் ஊடாக என்ன செய்ய வேண்டும்?, யாருக்காக? போன்ற எந்த நிபந்தனைகளுக்கு தமக்கு முகங்கொடுக்க நேரிடவில்லை என்றும், “சஹசர” என்ற திட்டத்தின் ஊடாக இதன் மூலம் இலங்கையின் போக்குவரத்து அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுப்பதற்கு 330 மில்லியன் டொலர் கிடைத்துள்ளதாகவும், மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் போக்குவரத்து மற்றும் திட்டமிடல் பிரிவின் பிரதானி பேராசிரியர் அமல் குமாரகே தெரிவித்துள்ளார்.

MCC வழங்கள் வறுமையினை ஒழிப்பது தொடர்பான அமெரிக்காவில் அமைக்கப்பட்டுள்ள நிறுவனத்தின் ஊடாக கிடைப்பதோடு,  இது இலங்கையினால் விண்ணப்பிக்கப்பட்டு அதில் தெரிவு செய்யப்பட்டுள்ளதால் கிடைக்கப்பெற்ற வழங்களாகும் என்பதோடு,  இதன் ஊடாக நாம் செயற்பட வேண்டிய திட்டங்கள் கூட எமது நாட்டு நிபுணர்களால் தயாரிக்கப்பட்டவை என்பதால் அதன் மூலம் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எந்தப் பாதிப்புக்களும் இடம்பெறப் போவதில்லை என்றும் பேராசிரியர் சிரிமல் அபேவர்தன் கூறினார்.

இந்த ஒப்பந்தத்துடன் தொடர்புடைய ஆவணங்களை தான் மிக ஆழமாக ஆய்வு செய்ததாகவும், இதனால் இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கு எந்தவித பாதிப்புக்களும் இடம்பெறப் போவதில்லை என தன்னால் உறுதியாகக் கூற முடியும் என்றும், நாடு பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் இவ்வாறான சந்தர்ப்பத்தில் இவ்வாறாக வழங்களைப் புறந்தள்ளிவிடாது அதனை நாட்டு மக்களின்  முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இலங்கை முதலீட்டுச் சபையின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

(ராவய - விந்தியா கமகே)

Comment (0) Hits: 191

கோட்டாவின் பண்டுவஸ்நுவர கூட்டத்தில் தயாசிரி இல்லை!

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து குருநாகல் மாவட்டத்தின் பண்டுவஸ்நுவர தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், அந்தத் தொகுதியின் ஸ்ரீ.ல.சு.கட்சியின் அமைப்பாளர் தயசிறி ஜயசேகர கலந்துகொள்ளவில்லை.

மொட்டுக் கட்சியினரின் மேடையில் ஏறும் ஸ்ரீ.ல.சு.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை இலக்கு வைத்து, மொட்டுவின் பிரதேச அரசியல்வாதிகள் திட்டமிட்ட வகையில் தொடர்ச்சியாக “ஹூ” கோஷம் போடுவதே இதற்குக் காரணமாகும். 

இதேவேளை, சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயசிறி ஜயசேகரவினால், நவம்பர் 8 ஆம் திகதி ஹெட்டிபொயில் கோத்தாபய ராஜபக்ஷ பங்கேற்கும் ஸ்ரீ.ல.சு.கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றை நடாத்துவதற்கு ஏற்பாடு செயப்பட்டுள்ளது..

மாவட்டத்தின் அனைத்து ஸ்ரீ.ல.சு.க அமைப்பாளர்களுக்கும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 தயாசிரி ஹெட்டிபொலவில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 213

கொழும்பு சங்கிரி-லா நட்சத்திர ஹோட்டலில் முன்னெடுக்கப்படும் கோட்டாவின் தேர்தல் பணிகள்!

கொழும்பு சங்கிரி-லா நட்சத்திர விடுதியில் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிலவரம் செய்திப் பிரிவிற்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

கோட்டாபய ராஜபக்ஷவின் 'வியத்மக' கருத்தரங்கு, தேர்தல் பிரசார விளக்கமளிப்பு கூட்டங்கள் உள்ளிட்ட பல நிகழ்வுகள் இங்கு நடைபெற்று வருகின்றன. இதற்கான ஏற்பாடுகளை சங்கிரி-லா பணிப்பாளர் சபை உறுப்பினர் சஜாத் மௌசூக் முன்னெடுத்து வருகிறார்

குறிப்பாக, கொழும்பு சங்கிரி-லா நட்சத்திர விடுதியின் 45ஆவது மாடியில் அதி சொகுசு சூட்ஸ் (Specialty Suites) இந்தப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதென, சங்கிரி-லா நட்சத்திர விடுதியின் அதிகாரியொருவர் மூலம் தெரியவந்தது.

இதனைத் தவிர, பிரபல முஸ்லிம் வர்த்தகர்களிடம் சுமார் 600 மில்லியன் ரூபா பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மெலிபன் டெக்ஸ்ட் டைல், பிரண்டிக்ஸ் உள்ளிட்ட பிரபல எட்டு வர்த்தகர்கள் இந்த பெருமளவு பணத்தை வசூலித்துள்ளனர்.

இதனைத்தவிர, மேல் மாகாண ஆளுநர் முஸம்மில், சிங்கள - முஸ்லிம் வர்த்தகர்களை அழைத்துப் பேசி, பணம் வசூலிப்பில் ஈடுபட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பணிகள் இவ்வாறு முன்னெடுக்கப்படும் நிலையில், சஜித் பிரேமதாசவின் தேர்தல் பணிகளை முன்னெடுத்து வரும் அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும், சஜாத் மௌசூக் நெருக்கமாக செயற்பட்டுள்ளார்.

இதற்காக சஜித் பிரேமசதாச சட்டத்தரணிகள் 1500 பேரை அண்மையில் சந்தித்தபோது, அவர்களுக்கு இரவு நேர விருந்துபசாரத்தையும் சஜாத் மௌசூக் வழங்கியுள்ளார்.

சங்கிரி-லா ஹோட்டலில் மொட்டுக் கட்சியின் தேர்தல் பணிகளை சஜாத் மௌசூக் முன்னெடுத்தாலும், மங்கள சமரவீரவிற்கும் அவர் நெருக்கமாக செயற்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

இதேவேளை, ராஜபக்ஷ தரப்பினரின் வழிகாட்டல்களில், சஜித் பிரேமதாசவிற்கு எதிரான சேறுபூசும் தேர்தல் பிரசாரமொன்றை பிரண்டிக்ஸ் உரிமையாளர் அஸ்ரப் ஒமர் முன்னெடுத்து வருவதாக தெரியவந்துள்ளது. கொழும்பில் உள்ள மற்றுமொரு நட்சத்திர ஹோட்டலில் மிக இரகசியமாக இந்தப் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குறித்த இடம் மற்றும் பணிகள் தொடர்பிலான தகவல்களை எமது செய்தியாளர்கள் சேகரித்து வரும் நிலையில், இதுகுறித்த மேலதிக தகவல்களை நிலவரம் வெளியிட எதிர்பார்த்துள்ளது.

Comment (0) Hits: 1118

"வித்தியாசம் இதோ; தேசிய கொடியை ஏற்றிய சம்பந்தன் சஜித்துடன். ஈழக் கொடியை ஏற்றிய வரதராஜா, கோட்டாவுடன்" - மங்கள! (VIDEO)

(VIDEO)

இலங்கையின் அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டுள்ள, இலங்கையின் தேசிய கொடியை மதிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆர். சம்பந்தன் போன்றோர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவை வழங்கும் போது, கோட்டாபயவுக்கு ஆதரவை வழங்குவது 1990ம் ஆண்டில் திருகோணமலை நகரில் தனியான ஈழ நாட்டைப் பிரகடணப்படுத்தி, இலங்கை வரலாற்றில் முதல் தடவையாகவும், ஒரே தடவையும் ஈழக் கொடியை பகிரங்கமாகவே ஏற்றிய வரதராஜா பெருமாள் போன்றோரே என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மாத்தரை நகரில் ஞாயிற்றுக்கிழமை (03) இடம்பெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சம்பந்தன் போன்றோர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பணியாற்றுவது ஒன்றும் புதிய விடயமல்ல என்றும், அவர் 2013ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மே தினக் கூட்ட மேடையில் ஏறி இலங்கை தேசியக் கொடியை ஏற்றிய, இலங்கை தேசிய கொடியை மக்களிடத்தில் பிரபலப்படுத்திய ஒரு அரசியல்வாதி என்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.  அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய நிதி அமைச்சர் மேலும் கூறியதாவது,

“இது ஒன்றும் புதிய விடயமல்ல. தமழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் எம்மோடு இணைந்தே பணியாற்றுகின்றது. எம்மோடு பாரியளவிலானோர் தற்போது இணைந்து கொண்டிருக்கின்றார்கள். தற்போது தெரண டீவியும்  நிவ்ஸ் அலார்ட் ஒன்றை போட்டுள்ளதை நான் கண்டேன்.  இது நாம் நினைத்த விடயங்களேயாகும். அவர்கள் இப்போது டீஎன்ஏ கட்சியும் சஜித் பிரேமதாசாவுக்கு உத்தியோகபூர்வமாக ஆதரவை வழங்குவதாகக் கூறியுள்ளதாக கூறுகின்றனர்.  இனி அவர் இதோ புலிகளும் சஜித்துடன் சேர்ந்துவிட்டார்கள் எனக் கூறுவார்கள்” என்றார்.

Comment (0) Hits: 205

'அபி ஸ்ரீலங்கா' மாநாடு இன்று - மூன்றாவது தடைவையாக சுதந்திரக் கட்சியை மீட்க சந்திரிகா களத்தில்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவியும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவவின் தலைமையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாக்கும் "அபி ஸ்ரீலங்கா" அமைப்பின் மாநாடு, இன்று (05) கொழும்பு, சுகததாச உள்ளரங்கில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு, கட்சி அமைப்பாளர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம அழைப்பு விடுத்திருந்தார். இதில் பெருமளவிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் மட்ட பிரதிநிதிகள், ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க சுதந்திரக் கட்சி முடிவு செய்துள்ள நிலையில், அந்த முடிவினால் அதிருப்தியடைந்துள்ள, கட்சித் தலைவர்கள், பிரதிநிதிகள் இந்த மாநாட்டைக் கூட்டியுள்ளனர். இதில்,சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்த மாநாடு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கட்சி உறுப்பினர்கள், பிரதிநிதிகளை இந்த மாநாட்டில் பங்கேற்காமல் தடுக்கும் வகையில், எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர். சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் நோக்கிலேயே இந்த மாநாடு கூட்டப்பட்டுள்ளது என்றும், இதில் பங்கேற்கும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள், பிரதிநிதிகளுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொதுஜன பெரமுன வேட்பாளருக்கு ஆதரவளிக்க ஒருமனதாகவே கட்சி முடிவெடுத்தது என்றும், அதுபற்றி கட்சி அமைப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்பது கட்சியின் ஒழுக்கத்தை மீறுகின்ற செயல் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 'அபி ஸ்ரீலங்கா' என்ற பெயரில் சந்திரிகா ஆரம்பித்துள்ள அமைப்பு ஏற்கனவே, சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும், ஜனநாயக தேசிய முன்னணியுடன் புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 180

ரவிக்கும் டேய்சி ஆச்சி உத்வேகம் தருகிறாள்! - லங்காதீப பத்திரிகையின் செய்தி பொய்யானதா?

நிதி மோசடிப் பிரிவின் (FCID) முன்னாள் பணிப்பாளர் ரவி வித்தியாலங்காரவின் மனைவி பெசிலிகா வித்யாலங்கார மற்றும் மகன் அசேல ஜயம்பதி ராஜசுந்தர வித்யாலங்கார  ஆகியோரை நிதி மோசடிப் பிரிவுக்கு அழைப்பதை ஜனாதிபதி தேர்தலின் பின்னர் மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிலிருந்து இதுவரையில் அப்படியான கோரிக்கை எதுவும் கிடைக்கவில்லை என பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறினார்.

ரவி வித்யாலங்காரவின் மகனால் தேர்தல்கள் ஆணைக்குழுவில் செய்த முறைப்பாட்டிற்கு உடனடியாக செயற்பட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு நிதி மோசடிப் பிரிவின் செயற்பாடுகளுக்கு அழுத்தங்களைச் செய்துள்ளதாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் வினவிய போதே அவ்வதிகாரி இதனைத் தெரிவித்தார்.
PHOTO 2019 11 02 14 10 44

நிதி மோசடிப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரும் ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபருமான ரவி வித்யாலங்காரவின் மகன் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்து, தனக்கும் தனது தாய்க்கும் இம்மாதம் 04 மற்றும் 05ம் திகதிகளில் நிதி மோசடிப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு அறிவித்துள்ளதாகவும், தானும், தனது தாயும் இத்தினங்களில் நிதி மோசடிப் பிரிவுக்குச் சென்று வாக்கு மூலம் வழங்குவது தொடர்பில் ஊடகங்களில் பெரும் பிரசாரங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் ஒருவருக்கு பெரும் சாதகமான நிலை ஏற்படும் என்றும் அறிவித்துள்ளதாக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0a12a68bcbf4fc8bad8bd33b06ec38ae L

அவ்வாறு முறைப்பாடு செய்துள்ள அசேல வித்யாலங்கார, தனக்கும், தாய்க்கும் நிதி மோசடிப் பிரிவில் ஆஜராவதை ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின்னர் மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடத்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அவ்வாறான அதிகாரங்கள் இல்லை!


பொலிஸ் நிதி மோசடிப் பிரவின் முன்னாள் பணிப்பாளர் ரவி வித்யாலங்காரவின் மனைவி மற்றும் மகன் ஆகியோரை நிதி மோசடிப் பிரிவுக்கு அழைத்து வாக்கு மூலம் பெறுவதை ஜனாதிபதி தேர்தலின் பின்னர் மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளதா? என அறிந்து கொள்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவை தொலைபேசியில் தொடர்பு கொள்வதற்கு நாம் எடுத்த முயற்சிகள் பயனிக்கவில்லை.  எவ்வாறாயினும் எமது கேள்விக்கு பதில் வழங்கிய மேலே குறிப்பிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மேலும் கூறும் போது, பொலிஸ் நிதி மோசடிப் பிரிவு மூலம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அழுத்தங்களைச் செய்து  தண்டனைச் சட்டத்தை இடைநிறுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அதிகாரங்கள் இல்லை எனத் தெரிவித்தார்.

Comment (0) Hits: 143

‘கோட்டாவின் புகைப்படங்களை காணும்போது எமனின் ஞாபகம் வருகின்றது’ மொட்டைக் கண்டால் பீதியில் உறைந்துபோகும் வடக்கு - கிழக்கு மக்கள்!

மொட்டுக் கட்சியினர் வடக்கு, கிழக்கில் மேற்கொண்டு வரும் பிரசாரக் கூட்டங்களில் மக்கள் சொற்பஅளவில் கலந்துகொள்வதால், அவர்கள் புதிய யுக்தி ஒன்றை கையாண்டு வருகின்றனர். நாமல் ராஜபக்ஷ உட்பட அந்தக் கட்சியின் அரசியல்வாதிகள், இந்தப் பிரதேசங்களில் கூட்டங்களை ஏற்பாடு செய்யும் அமைப்பாளர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் வழங்கி, குறைந்தபட்சம் 70 பேரையாவது ஒவ்வொரு கூட்டத்துக்கும் கொண்டுவரும் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். குறிப்பிட்ட அமைப்பாளருக்கு இதனை விட மேடை அமைத்தல், ஒலிபெருக்கி வசதிகள், மின்சார வசதிகள், மேடை அலங்காரம், தேநீர் மற்றும் சிற்றுண்டி செலவுகள் என மேலதிகமாகவும் பணம் வழங்கப்படுகிறது.

இவ்வாறான யுக்திகளை இந்தக் கட்சியினர் கையாண்டு வருகின்ற போதும், மொட்டுக் கட்சியினரின் கூட்டங்களில் மக்கள் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை. சில தினங்களுக்கு முன்னர் மன்னார். எழுத்தூரில் நாமல் ராஜபக்ஷ கலந்துகொண்ட கூட்டத்தில் ஆக 10 பேர் வரையிலேயே வருகை தந்திருந்தமையினால், அவர் கூட்டத்தில் உரையாற்றாமல் திரும்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

“வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்களுக்கு மொட்டைக் கண்டாலே ஓர் அலர்ஜியும் ஆத்திரமும் வருகின்றது. கோட்டாவின் புகைப்படங்களை காண்கின்ற போது, எமனைக் காண்பது போன்ற உணர்வு வருகின்றது. விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, ஞானசார தேரர், ஆனந்த சாகர தேரர், மதுமாதவ அரவிந்த ஆகியோரின் இன வெறி பேச்சுக்களும் இனவாத நடவடிக்கைகளுமே ஞாபகத்துக்கு வருகின்றன” இவ்வாறு வடக்கு, கிழக்கை சேர்ந்த மக்கள் எமது செய்தியாளரிடம் தெரிவித்தனர்.

Comment (0) Hits: 166

ராஜபக்ஷ ஆட்சியின் அடிப்படை இதோ! - மஹிந்த குடும்பத்தின் நெருங்கிய நண்பர் சஜின்! (VIDEO)

(VIDEO)

ராஜபக்ஷக்கள் அரசியல் செய்தது இனவாதம், மதவாதம், அடிப்படைவாதம் ஆகிய மூன்று முக்கிய விடயங்களைின் அடிப்படையிலேயே என ராஜபக்ஷ அரசில் இருந்த முக்கிய கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினரான சஜின்வாஸ் குணவர்தன கூறினார்.

“பொது பல சேனாவை எடுத்துக் கொண்டால், அதனை யார் ஆரம்பித்து?, யார் நிதி வழங்கியது?, யார் உதவி செய்தது?. அடுத்தது இனவாதம், அடிப்படைவாதம், மதவாதம் ஆகிய மூன்றையும் அடிப்படையாகக் கொண்டே நாம் அரசியல் செய்தோம். இதனால்தான் இவைகளின் பலனை நாம்  2015ம் ஆண்டில் பெற்றோம். அப்போதிலிருந்து இந்தக் கொள்கைகளை அவர்கள் இன்று வரையில் மாற்றிக் கொள்ளவில்லை....” என அவர் UTV  தொலைக்காட்சியுடன் இடம்பெற்ற நேர்காணலின் போது கூறியுள்ளார்.

UTV - நீங்கள் ராஜபக்ஷ ஆட்சியிலிருந்து முக்கியமான பாராளுன்ற உறுப்பினர் ஒருவர் என்பதை நாம் அறிவோம். அப்போது ஊடகங்கள் கூறியதைப் போன்று, நீங்கள் பாரியளவிலான டீல் கொடுக்கல் வாங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ளும், பிரதானமாக நேரடியாக தலையீட்டினைச் செய்த ஒரு பாராளுமன்ற உறுப்பினராகும். அவ்வாறிருந்த நீங்கள் ஏன் திடீரென சஜித் பிரேமதாசவின் மேடையில் ஏறினீர்கள்?

சஜின் - அந்தக் காலத்தில் இருந்த மாபெரும் திருடன் நான் என்றுதானே காட்டப்பட்டது. அவர்கள் இதோ இவர்தான் திருடன், இவரைப் பிடித்துக்கொள்ளுங்கள் என என்னைக் காட்டினார்கள். ஆனால், உண்மை என்னவென்றால் அந்த எந்தவிதமான கொடுக்கல் வாங்கள்களிலும் நான் இருக்கவில்லை. உங்களைப் போன்றவர்கள் கூறுவதைப் போன்று ஒரு டீல்களையேனும் நான் செய்திருக்கவில்லை. என்மீது தாக்கல் செய்யப்பட்ட இரண்டு, மூன்று வழக்குகள் உள்ளன. அவற்றில் இப்போது இரண்டுதான் உள்ளது. அந்த வழக்குகளிலும் அரசின் எதுவும் சம்பந்தப்படவில்லை.

அரச நிதி, அல்லது நீங்கள் கூறும் டீல், நீங்கள் கூறும் கொடுக்கல் வாங்கள், நீங்கள் கூறும் அந்த எந்த விடயத்திற்கும் என்மீது வழக்குத் தாக்கல் செய்யவில்லை.  எனது வரலாற்றில் ராஜபக்ஷக்களுடன் 15, 17 வருடங்களாகும்.

2010ம் ஆண்டு வரையில், மஹிந்த ராஜபக்ஷ இதனை நன்றாகச் செய்துகொண்டு வந்தார். எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. 2010ம் ஆண்டின் பின்னர் தான் நான் கண்ட மாற்றம் ஏற்பட்டது. அது நாமல் ராஜபபக்ஷவின் அரசியல் பிரவேசத்துடன் ஆரம்பித்த மாற்றமாகும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண கட்சியினுள் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு முஸ்லிம் அரசியல்வாதி உள்ளாரா? முன்னணியான ஒரு முஸ்லிம் தலைவர் இருக்கின்றாரா? என எனக்குக் கூறுங்கள். அவ்வாறு யாரும் அந்தக் கட்சியில் இல்லை.  எனவே அந்தக் கட்சி இன்று இனவாதம், மதவாதம், அடிப்படை வாதம் ஆகியவற்றுடனேயே பயணிக்கின்றது. இந்த மூன்றையும் அடிப்படையாகக் கொண்டே அவர்கள் அரசியல் செய்கின்றார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Comment (0) Hits: 247

சஜித்துக்காக சந்திரிகா வடக்கு - கிழக்கைப் பொறுப்பேற்றார்!

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க, வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் தேர்தல் நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதற்கு தற்போது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

இதனடிப்படையில், வடக்கின் பல அரசியல்வாதிகளுடன் சந்திரிகா தற்போது பல தீர்க்கமான பேச்சுவார்த்தைகளையும் நடாத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.  

அமைச்சர் சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் புதிய ஜனநாயக தேசிய முன்னணியுடன் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் பல ஒப்பந்தங்களைச் செய்யும் நிகழ்வு (01) கொழும்பில் இடம்பெற்றதோடு, முன்னாள் ஜனாதிபதியும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.  

ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களோடு முன்னாள் ஜனாதிபதியுடன் மேடையில் அமர்ந்திருந்த போதிலும், கூட்டத்தில் அவர் உரையாற்றவில்லை.

Comment (0) Hits: 579

இலங்கை தமிழ் அரசு கட்சி சஜித்துக்கு ஆதரவு! (VIDEO)

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு இலங்கை தமிழ் அரசு கட்சி ஆதரவு வழங்குவதாக கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று (03) வவுனியாவில் இடம்பெற்ற இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து,  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

"ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நீண்ட கலந்துரையாடல் ஒன்று நடாத்தி இருக்கிறோம். இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு மற்றும், பாரளுமன்ற குழு கூட்டங்களிலும் இது பற்றி ஆராயப்பட்டிருந்தது. 

இன்று எமது மத்திய செயற்குழுவின் முடிவாக, அன்னம் சின்னத்தில் போட்டி இடுகின்ற சஜித் பிரேமதாசவை ஆதரிக்க வேண்டும் என்ற தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் இலங்கை தமிழரசு கட்சியின் உத்தியோக பூர்வ செயற்குழு இன்றைய தினம் எடுத்திருந்தாலும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியாக இருக்கின்ற காரணத்தினால், இதனை அறிவிப்பது மற்றும் தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லவேண்டிய விடயங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஜயாவின் கைகளில் நாம் ஒப்படைத்துள்ளோம். 

மற்றைய இரண்டு கட்சித் தலைவர்களோடும் கலந்தாலோசித்து இந்த தீர்மானத்தை அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்வார். பல விடயங்களை ஆராய்ந்திருக்கிறோம். பிரதான வேட்பாளர்கள் இருவர் தொடர்பில் தான் எமது கருத்துக்கள் இருந்தது. அவர்களுடைய கடந்த கால செயற்பாடுகள், தேர்தல் அறிக்கைகள் தொடர்பாக பல விடயங்களை நாம் ஆராய்ந்து, இன்றைய சூழலில் எமது மக்களுக்கு உபயோகமான ஒரு நடவடிக்கையாக சஜித்தை ஆதரிப்பதற்கான நிலைப்பாட்டை ஏகமனதாக எடுத்துள்ளோம்.

எமது கருத்தையும் மக்கள் கேட்கிறார்கள். மக்கள் திறமைசாலிகள் அவர்களிற்கு அரசியல் நன்றாகவே தெரியும். தமிழ் மக்கள் நிதானித்து வாக்களிப்பவர்கள். அவர்களுக்கு அரசியல் தலைமைத்துவம் கொடுக்கவேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கிறது. ஆகவே, மக்களுடைய கருத்தையும் நாம்  அறிந்திருக்கிறோம். ஆனால், மக்களுக்கு அரசியல் தலைமைத்துவம் கொடுப்பது என்பது 'நீங்கள் விரும்புபவர்களுக்கு வாக்களியுங்கள்' என்று சொல்லுவது அல்ல.

தற்போது இருக்கும் அரியல் அரசியல் சூழ்நிலையிலே தமிழ் மக்கள் சார்பாக, ஏனைய தரப்புகளுடன் மக்களின் பிரதிநிகளாக நாம் பேச்சுவார்த்தை நடாத்துகிறோம். அந்தக் கடப்பாட்டை நாம் சரிவர செய்வதாக இருந்தால் , மக்களிற்கு ஒரு வழி காட்டுதல் கொடுக்கவேண்டிய அத்தியவசிய கடப்பாடு எமக்கு இருக்கிறது. அதை நாங்கள் செய்வோம்" என மேலும் தெரிவித்தார்.

Comment (0) Hits: 368

‘மனச்சாட்சியுள்ள எந்தவொரு சிறுபான்மை குடிமகனும் கோட்டாவை ஆதரிக்கமாட்டான்’ - ரிஷாட்!

மனச்சாட்சியுள்ள எந்தவொரு சிறுபான்மை மகனும் பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கமாட்டான் எனவும் வாக்களிக்கக் கூடாதெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

வவுனியாவில், இன்று (03) தமிழ் மற்றும் முஸ்லிம் கிராமங்களான எருக்கலங்கல், அண்ணாநகர், முகத்தான்குளம், மறக்காரம்பளை, வாழவைத்தகுளம், மதீனா நகர், சூடுவெந்தபுலவு, பாவற்குளம் ஆகிய கிராமங்களில், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இடம்பெற்ற சூறாவளி பிரசாரத்தின் போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

“கடந்த பல தசாப்தங்களாக இந்தப் பிரதேசத்தில் வாழும் மக்கள் பல்வேறு துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்து வருகின்றனர். காணாமல் போனோரை தேடிக் கண்டுபிடிக்க முடியாமல் தாய்மார்களும் உறவினர்களும் அலைகின்றனர். வீதிகளிலே நீண்டகாலமாக உண்ணாவிரதம் இருக்கின்றனர். இடப்பெயர்வின் காரணமாக நாம் பட்ட கஷ்டங்கள் சொல்ல முடியாதவை. வீடுகளை இழந்தோம், வாசல்களை இழந்தோம், சொத்திழந்தோம், சுகமிழந்து வாழ்கின்றோம். எனினும், இன்னும் நமக்கு நிம்மதி கிடைக்கவில்லை.

2015 இல் சிறுபான்மை மக்களின் கூடிய ஆதரவில் உருவாக்கப்பட்ட அரசிலும் நாம் எதிர்பார்த்த நிம்மதி கிடைக்கவில்லை. ஜனாதிபதி ஒரு கட்சியில் பிரதமர் இன்னொரு கட்சியில் இருந்ததினாலும் தலைவர்களுக்கிடையே ஏற்பட்ட அரசியல் இழுபறி காரணமாகவும் இந்த துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.

எனினும், இனிவரும் காலங்களில் அவ்வாறான ஓர் ஆட்சி இருக்கக் கூடாது என்பதற்காகவே ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட அமைச்சரான சஜித் பிரேமதாச, ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளார். சிறுபான்மைக் கட்சிகளான முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் மனோ கணேசன், திகாம்பரம், இராதாகிருஷ்ணன் ஆகியோரின் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் ஆகியவற்றின் முழு ஒத்துழைப்புடனும் விருப்பத்துடனும் சஜித் பிரேமதாச, இந்தத் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளார்.

இந்த நாட்டிலே இனி சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதங்களோ பாகுபாடோ இருக்கக் கூடாது எனவும் அவ்வாறான ஒரு வேறுபாடு உருவாகுவதற்கு தான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் சஜித் பகிரங்கமாகத் தெரிவித்து வருகிறார். சகல இனங்களுக்கும் சமனான வாய்ப்பும் சலுகைகளும் வழங்கப்படுமெனவும் சட்டத்தை தனியார் எவரும் கையிலெடுக்க அனுமதிக்கமாட்டேன் எனவும் அவர் அடித்துக் கூறி வருகின்றார். தான் ஒரு சுத்தமான பௌத்தன் எனவும் உண்மையான பௌத்தன், பிறமதங்களின் பள்ளிவாயல்கள், ஆலயங்களை உடைக்கவோ, உடைப்பதற்கு துணைபோகவும் மாட்டான் எனக் கூறிவரும் சஜித் பிரேமதாச, அதற்கு தாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் உறுதியளித்துள்ளார். சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களான நாம், அவரை திடமாக நம்புகின்றோம். உங்களின் பிரதிநிதிகளான நாங்களும் அந்தச் செய்தியை தெரிவிப்பதோடு மாத்திரமின்றி, அவர் மீது நீங்களும் நம்பிக்கை கொள்ளலாம் என உறுதிபடத் தெரிவிக்கின்றோம்.

நாம் கடந்த காலங்களில் பட்ட துன்பங்கள் போதும். இனியும் அவலங்களை அனுபவிக்கக் கூடாது. அச்சமின்றி, நிம்மதியாக வாழ வேண்டும். எதிர்கால சமுதாயத்துக்கு நல்ல பாதையை காட்ட வேண்டும். அந்த வகையில், இனிவரும் காலங்களில் இந்த நாட்டிலே இன ஒற்றுமையையும் சமூக நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு, சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க வேண்டியது நமது கடமையாகும். அனைத்து சமூகத்தினரையும் அவர் அரவணைத்துச் செல்வார் என்பதை இந்த சந்தர்ப்பத்தில், மீண்டும் உறுதியுடன் தெரிவிக்கின்றேன்” இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Comment (0) Hits: 172

கோட்டா தெற்கில் மறைத்து வடக்கில் கூறிய விடயம்! (VIDEO)

(VIDEO)

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வடக்கில் தெரிவித்த  பகிரங்க விடயத்தை, அவரது தேர்தல் பிரசார அமைப்பு தெற்கில் மறைத்துள்ளது.

அவர் யாழ்ப்பாணத்தில் வைத்து பயங்கரவாத குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சிறைக் கைதிகளை விடுவிப்பதாக் கூறியிருந்தார்.

“நாம் எல்.டி.டி.ஈ உறுப்பினர்கள் 13,000 பேரை புனர்வாழ்வளித்து விடுதலை செய்துள்ளோம். 5000க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகளுள் 274 பேரைத் தவிற ஏனைய அனைவரையும் நாம் விடுதலை செய்திருக்கின்றோம். நான் ஜனாதிபதியாக வெற்றி பெற்றால் மீதமான அனைவரையும் புனர்வாழ்வளித்து விடுதலை செய்வதாக நான் கடந்த திங்கட்கிழமை யாழில் மக்களுக்கு வாக்குறுதி வழங்கினேன்” என கோட்டாபய ராஜபக்ஷவின் டுவீட்டர் வலைத்தளத்தில் தமிழில் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கூற்றை சிங்களம் அல்லது ஆங்கிலத்தில் இதுவரையில் காணக் கிடைக்கவில்லை.

Comment (0) Hits: 186

வறுமையினை விற்பனை செய்யும் அரசாங்கத்திற்கு பதிலாக வறுமையினை ஒழிக்கும் அரசாங்கத்தை அமைப்போம் - அநுர குமார

வறுமையினை விற்கும் அரசாங்கத்திற்கு பதிலாக வறுமையினை ஒழிக்கும் அரசாங்கம் ஒன்றை உருவாக்குவோம் என தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாயநாயக்கா தெரிவித்துள்ளார். அம்பாறை நகரில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றி அநுர குமார திசாநாயக்கா மேலும் கூறியதாவது,

“தற்போது தேர்தல் ஒன்று வந்திருக்கின்றது. எனினும் இம்முறை இது ஒரு தேர்தல் காலமாகத் தெரியவில்லை. நத்தால் காலத்தைப் போன்றிருக்கின்றது. ஒருவர் கூறுகின்றார், நான் வெற்றி பெற்றால் வேளான்மைச் செய்கைக்கு இலவசமாக உரம் தருவேன் என்று. இன்னொருவர் தான் வெற்றி பெற்றால் அனைத்து பயிர்ச் செய்கைக்கும் இலவசமாக உரம் தருவேன் என்கிறார்.

பிள்ளைகள் இருக்கும் இடத்தில் என்றால், நான் வெற்றி பெற்றால் ஒரு கப் பால் தருவேன் எனக் கூறுகின்றனர். பட்டதாரிகள் இருக்கும் இடத்தில், அனைவருக்கும் அரச தொழில் வழங்குவதாகக் கூறுகின்றனர். கர்ப்பிணித் தாய்மார் இருக்கும் இடத்தில், அனைவருக்கும் போஷாக்கு பொதி வழங்குவேன் என்கிறார்கள். நத்தால் தாத்தாக்கள் இருவர் வந்தததை்ப் போன்று.

நான் அனைவருக்கும் இலவசமான அரிசி வழங்குவேன் என அன்று ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா கூறியபோது, எங்கிருந்து அந்தளவு அரிசியைக் கொண்டு வருவீர்கள் என யாரோ ஒருவர் திரும்ப கேட்டிருக்கின்றார். அப்போது அவர் கூறியிருக்கின்றார், நான் சந்திரனிலிருந்தாவது அரிசியைக் கொண்டு வந்து தருவேன் எனக் கூறியிருக்கின்றார். அதற்கும் மக்கள் கைதட்டியிருக்கின்றார்கள்” என்றார்.

Comment (0) Hits: 138

கோட்டாவுக்கு மறுபடியும் சவால் விடுத்த சஜித்!

கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச எதிரணி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தன்னுடன் நேரடி தொலைக்காட்சி விவாதத்துக்கு வருமாறு சவால் விடுத்திருந்தார். இது குறித்து சஜித் தனது உத்தியோகபூர்வ டுவிட்டரில் பதிவொன்றையும் இட்டிருந்தார்.

இந்நிலையில், குறித்த சவாலை மறுபடியும் ஞாபகப்படுத்தும் விதமாக சஜித் பிரேமதாச இன்று (03) தனது டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ளார்.  தன்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்து பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு  கடிதமொன்றை அனுப்பியுள்ள சஜித், அதனை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

அப்பதிவில்,

“எங்கள் கொள்கைகள் சம்பந்தமாக  விவாதிப்பதற்காக 10 நாட்களுக்கு முன்பு நான் கோட்டாபயவுக்கு சவால் விடுத்தேன். ஆனால், அது குறித்து நீங்கள் இன்னும்  பதிலளிக்கவில்லை. பொதுமக்கள் காத்திருக்கிறார்கள். நானும் காத்திருக்கிறேன். தயவுசெய்து இன்று உங்கள் மனதை மாற்றி எனது சவாலுக்கு பதிலளியுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Comment (0) Hits: 146

Page 6 of 103