செய்திகள்

இனியாவது தரவேண்டியதை தாருங்கள் - வடக்கு முதலமைச்சர்

புதுவருடத்திற்கும் புதிய அரசாங்கங்களுக்கும் இடையில் ஒற்றுமை உள்ளதாக வடக்குமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

புதிய அரசாங்கங்கள் ஆரம்பத்தில் சிறப்பாக இயங்கினாலும் பின்னர் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுப்பதால், மக்களிடமிருந்து வரும் விமர்சனங்களால் ஆரம்பத்தில் இயங்கியமை போன்று இயங்க முடியாத நிலை உருவாகி விடுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் 3 ஆவது வருட நிறைவு நிகழ்வு வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதில் பங்கேற்று உரையாற்றும்போதே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

புதிய அரசாங்கங்கள் யாவும் ஆரம்பத்தில் நன்றாக இயங்குகின்ற போதிலும், காலம் செல்லச் செல்ல ஆரம்பத்தில் இயங்கியதுபோன்று அவர்களால் இயங்க முடிவதில்லை என்று குறிப்பிட்டதுடன்,

காலம் செல்லச் செல்ல பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுப்பதால், மக்கள் மத்தியிலிருந்து எழும் அபிப்பிராயங்கள் மற்றும் விமர்சனங்களே இதற்கு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் வடமாகாணசபை 5 ஆவது வருடத்திற்குள் நுழைந்திருப்பதாகவும் இன்னும் சில மாதங்களே தாம் ஆட்சியில் இருப்போம் எனவும், எனவே கடந்தகாலத்தில் தமக்கு வழங்கப்படாதவற்றை இவ்வருடமாவதற்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக வடமாகாண முதலமைச்சர் நிதியம் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் மாற்றம் போன்ற விடயங்களை இந்த வருடத்திலாவது வழங்குவதற்கு ஆளுநர் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comment (0) Hits: 225

இராஜகிரிய மேம்பாலம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு

இராஜகிரியவில் நிலவிய கடும் வாகன நெரிசலுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்காக இராஜகிரிய சந்தியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேம்பாலம் இன்று மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரால் இந்த பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள மிக நீளமான மேம்பாலம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 212

க.பொ.த சா/தரத்தில் ஆறு பாடங்களா?

கல்விப் பொதுத் தாராதர பத்திர சாதாரண தர பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கையை ஆறாக குறைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அவதானம் செலுத்தி வருகின்றது.

இதற்காக தேசிய கல்வி நிறுவனம் விசேட குழுவொன்றை பரிந்துரைத்து நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண தர பரீட்சையில் தோற்ற வேண்டிய ஏனைய நான்கு பாடங்களுக்கும் விசேட செயன்முறை ஒன்று அந்த குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த குழு சாதாரண தர பரீட்சையில் மேற்கொள்ளக்கூடிய திட்ட ரீதியான பரிந்துரைகளை கல்வி அமைச்சுக்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 199

தேர்தல் ஆணைக்குழுவுக்கும் சட்டமா அதிபருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பாக ஏற்பட்டுள்ள சட்டச் சிக்கல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் சிலர் இன்று சட்டமா அதிபரை சந்திக்கவுள்ளனர்.

மத வழிபாட்டு தலங்களில் தேர்தல் பிரசாரங்கள் இடம்பெறுவது உள்ளிட்ட சட்டவிரோத பிரசாரங்கள் தொடர்பில் இதன்போது சட்டமா அதிபர் திணைக்களத்துடன் கலந்துரையாடவுள்ளதாக, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Comment (0) Hits: 195

சீனியைப் பதப்படுத்தியவர்கள் கைது

தேன் போல் சீனியைப் பதப்படுத்தி போத்தல்களில் அடைத்து விற்பனை செய்து வந்த பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா – நெலுக்குளம் பிரதேசத்தில் வைத்து பொது சுகாதார பரிசோதகர்களால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் தொடர்பில் கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ள நிலையில், இதன்போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 73 போத்தல்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

நெலுக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதான பெண்ணும் 26 வயதான ஆண் ஒருவரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 199

இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்த இளம் எழுத்தாளன்

நூலொன்றை எழுதி உலகில் இளம் எழுத்தாளராக கின்னஸ் சாதனை படைத்துள்ள சிறுவன் தனுவக்க சேரசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார்.

தனது பெற்றோருடன் சீசெல்ஸ் நாட்டில் வனாதிபதி, பரிசு ஒன்றையும் வழங்கி வைத்ததுடன் எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்காக தனது ஆசீர்வாதங்களையும் வழங்கினார்.

இந்த நிகழ்வில் சீஷெல்சில் உள்ள இலங்கை தூதுவர் டிக்கிரி ஹேரத் குணதிலக்க மற்றும் சிறுவனின் பெற்றோர்களான துஷித்த சேரசிங்க, அப்சரா சேரசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

Comment (0) Hits: 225

திருகோணமலை 5 மாணவர்கள் படுகொலை – ஸ்கைப் மூலம் தொடரும் விசாரணை

திருகோணமலை கடற்கரை பகுதியில் வைத்து கடந்த 2006 ஆம் ஆண்டு 5 தமிழ் மாணவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில், தற்போதைய சட்டத்திருத்தங்கள் ஸ்கைப் சாட்சியங்களை அங்கீகரிக்கும் முகமாக மாற்றப்பட்டுள்ளதனால், படுகொலை தொடர்பிலான விசாரணைகள் ஸ்கைப் சாட்சியங்களுடன் இடம்பெறுவதாக, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

பிரதான சாட்சிகள் வெளிநாட்டில் வசிக்கின்ற காரணத்தினாலும், அவர்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க முடியாதிருந்ததாலும் இதுவரை காலமும் தடைப்பட்டிருந்த விசாரணைகள், தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ருவிட்டர் பதிவின் மூலம் அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார்.

தாமதித்து கிடைக்கின்ற நீதி மறுக்கப்பட்ட நீதி என்று இந்தப் படுகொலைகளை சுட்டிக்காட்டி, அமெரிக்க தூதுவர் அதுல் கேசாப் பதிவிட்டிருந்த ருவிட்டர் பதிவிற்கு பதிலளிக்கும் விதமாகவே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி, 5 தமிழ் மாணவர்கள் தமிழ் பொலிஸ் சிறப்பு படைப்பிரிவினரால் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அமைச்சரின் ஊடக பிரிவின் அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து இக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் அடிப்படையில் 12 பொலிஸ் அதிரடிப்படையினரை பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களில் ஒருவரின் தந்தையான வைத்தியர் காசிப்பிள்ளை மனோகரன் இப்படுகொலைகளுக்கு நீதி வேண்டி, கடந்த 2013 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் வருடாந்த கூட்டத் தொடரில் பங்குகொண்டிருந்தார்.

எனினும் இவ் வழக்கின் பிரதான சாட்சியான மனோகரன் வெளிநாட்டில் வசித்துவந்ததால், இவ்வழக்கில் சிக்கல்கள் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 215

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

அண்மையில் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 79 தமிழக மீனவர்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டமைக்காக தமது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

எனினும், பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தமையை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடிப்பதற்கு தமிழக மீனவர்கள் அனுமதிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நேற்று முன்தினம் (03) கைது செய்யப்பட்ட 13 மீனவர்கள் உள்ளிட்ட 84 மீனவர்களையும் , மீனவர்களின் 159 படகுகளையும் மீட்பதற்கு இலங்கை அரசுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Comment (0) Hits: 211

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை தேங்காய் அடுத்த வாரம் நாட்டிற்கு

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை தேங்காய் அடுத்த வாரம் நாட்டிற்கு வந்தடையவுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தோனேஷியாவில் இருந்து இவை கொண்டு வரப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.எச்.ரன்ஜித் தெரிவித்தார்.

இறக்குமதியாளர்கள் 11 பேர் தேங்காய் இறக்குமதிக்கு அனுமதி கோரியுள்ளதாக அமைச்சின் செயலாளர் இதன்போது குறிப்பிட்டார்.

பிலிப்பைன்ஸிலிருந்தும் தேங்காய் இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படவுள்ள தேங்காய்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டவுடன் அது தொடர்பில் ஆராயப்பட்டு துறைமுகத்திலிருந்து கொள்கலன்கள் விடுவிக்கப்படவுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் கூறுயுள்ளார்.

இறக்குமதியாளர்களுக்கு தெங்கு கொள்வனவுக்கு அனுமதி வழங்கப்பட்டதன் பின்னர் தேங்காய் விலை குறையும் வாய்ப்பு நிலவுவதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை வர்த்தகர்கள் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு தேங்காய் விற்பனை செய்வதாக நுகர்வோர் விவகார அதிகார சபை கூறியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இது தொடர்பான சுற்றிவளைப்பொன்றிற்காக தெல்கந்த சந்தைக்கு அதிகாரிகள் குழுவொன்று சென்றிருந்ததாக அதிகார சபை தெரிவித்தது.

அதன்போது அதிக விலைக்கு தேங்காய் விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முயன்ற அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு வர்த்தகர்கள் தடங்கல்களை ஏற்படுத்த முயன்றுள்ளனர்.

அவர்களில் இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டதன்பின்னர் கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தேங்காய் ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலையாக 75 ரூபா காணப்படுகின்றது.

இது போன்ற சுற்றிவளைப்புக்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிடுகின்றது.

Comment (0) Hits: 191

இராணுவத்தால் மீளகையளிக்கப்பட்ட இடங்களில் வெடிபொருட்கள் அபாயம்

இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து 28 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் வலி. வடக்கின் வசாவிளான் வடமூலை, ஒட்டகப்புலம் பகுதிகளில் தொடர்ந்தும் வெடிபொருட்கள் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

1989 ஆம் ஆண்டு குறித்த பகுதிகளிலிருந்து வெளியேறிய மக்கள் தற்போது 28 ஆண்டுகளின் பின்னர் மீளகுடியமர்த்தப்பட்டுள்ளதுடன், அவர்களது காணிகள் கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் திகதி விடுவிக்கப்பட்டன.

இதன்போது சுமார் 29 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வசாவிளான் ஜே-205 கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள உத்தர மாதா ஆலயம் மற்றும் றோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையும் விடுவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் வசாவிளான் அச்சுவேலியை இணைக்கும் பிரதான வீதியும் பொதுமக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டுள்ளது. 

இருந்தபோதிலும் தற்போது மீள்குடியேற்றப்பட்டுள்ள இந்த மக்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை என்று ஆதங்கம் வெளியிட்டுள்ள மக்கள், தமது பாதுகாப்பும் கேள்விக்குறியாக இருப்பதாக அச்சம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் கடந்த காலங்களில் திட்டமிட்ட முறையில் தமது பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள இப்பிலுப்பில் மரங்களால் தமது வாழ்வாதாரம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாகவும் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

இதுமாத்திரமன்றி தமது காணிகளின் எல்லைகளை அடையாளம் காணமுடியாதவாறு புதர்மண்டிக்கிடப்பதாகவும், பாதைகளை அடையாளம் காணமுடியாது தாம் பெரும் நெருக்கடிக்கு ஆளாவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மக்களது நன்னீர்க்கிணறுகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதனால் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதில் தாம் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும் இதற்கான மாற்றுவழிகள் எதுவும் தமக்கு ஏற்படுத்தி தரப்படவில்லை என்றும் மீள்குடியேற்றப்பட்டுள்ள பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Comment (0) Hits: 238

தொழிற்சாலைகளுக்கு அணு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு ரஷ்யா ஒத்துழைப்பு

அணு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இலங்கையில் கைத்தொழில் துறையை மேம்படுத்துவதற்கு தமது அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதாக இலங்கையிலுள்ள ரஷ்ய தூதுவர் யூரிமெற்ரி தெரிவித்துள்ளார்.

மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியுடன் அமைச்சில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது ரஷ்ய தூதுவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். 

மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சிற்குட்பட்ட அணுசக்தி அதிகாரசபை கட்டமைப்பு மற்றும் அதன் செயற்பாடுகள் குறித்தும் தூதுவர் இதன்போது அமைச்சரிடம் கேட்டறிந்தார். 

அணுதொழில்நுட்பத்தை பயன்படுத்தி இலங்கையில் கைத்தொழில் துறையில் பாரிய அபிவிருத்தியை ஏற்படுத்தமுடியும் என்றும் தூதுவர் குறிப்பிட்டார். 

இதற்காக தமது நாடு அணுசக்தி தொடர்பான தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் ஆலோசனையை போன்று நிதிக்கான கடன்வசதிகளையும் வழங்க கூடிய நடைமுறைகள் குறித்த விடயங்களையும் கண்டறிவதாக தூதுவர் தெரிவித்துள்ளார். 

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் சியம்பலாப்பிட்டிய இலங்கையில் நிலவும் கதிரியக்கத்தை போன்று இதன்மூலம் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு தொடர்பிலும் அணுசக்தி அதிகாரசபை கவனம் செலுத்தியுள்ளது. எதிர்காலத்தில் கைத்தொழில்துறை அபிவிருத்திக்காக இவ்வாறானவற்றை பயன்படுத்த கவனம் செலுத்தப்படும் என்றும் கூறினார். 

இதேபோன்று பலவருடகாலமாக இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் நிலவிவரும் ராஜதந்திர உறவுகள் மற்றும் நல்லுறவை உறுதிசெய்யும் வகையில் ரஷ்யாவினால் இலங்கையின் கைத்தொழில்துறை அபிவிருத்திக்காக அணுசக்தியை பயன்படுத்துவதற்கு வழங்கும் ஒத்துழைப்பிற்கும் அமைச்சர் இதன்போது நன்றி தெரிவித்தார். 

Comment (0) Hits: 214

பாடசாலை மாணவர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்பில் உத்தேச வேலைத்திட்டம்

பாடசாலை மாணவர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தை கற்பதற்கும் பரீட்சார்த்துப்பார்ப்பதற்குமான சந்தர்ப்பத்தை வழங்குவதற்குமான உத்தேச திட்டமொன்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது.

11 வயது முதல் 12 வயதுவரையிலான பாடசாலை மாணவர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தை கற்பிப்பதற்கும் பரீட்சித்து பார்ப்பதற்குமான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் 100 பாடசாலைகளில் தேவையான மென்பொருட்கள் மற்றும் தேவையான பயிற்சிகளை வழங்குவதற்கான திட்டத்தினை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

இதன்கீழ் தெரிவுசெய்யப்பட்ட 100 பாடசாலைகளுக்கு பிபிசி மைக்றோ பிற் உபகரணம் 4 , 20 கணனிகள் வீதம் மேலும் சில உபகரணங்களும் வழங்கப்படவுள்ளது. 

இந்த திட்டத்திற்கு தேவையான பயிற்சி உள்ளிட்டவற்றை வழங்குவதற்கான ஒப்பந்தம் இதுதொடர்பான குழுவின் சிபார்சுக்கு உட்பட்ட அமைச்சினால் 99.21 மில்லியன் ரூபா ஓறல் கோப்பறேசன் நிறுவனத்திற்கு நேரடியான ஒப்பந்தம் மூலம் வழங்கப்படவுள்ளது. 

இதுதொடர்பில் தொலைத்தொடர்பு டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Comment (0) Hits: 205

'சுவசரிய' அம்பியூலன்ஸ் சேவையின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்

சுவசரிய அம்பியூலன்ஸ் சேவையின் இரண்டாவது கட்டத்தின் கீழ் அம்பியுலன்ஸ் வண்டிகளைப் பெற்றுக் கொள்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் நேற்று பிற்பகல் அலரிமாளிகையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. 

இலங்கையின் சார்பில் பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா , இந்தியாவின் சார்பில் உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சண்டு ஆகியோர் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். 

இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுகையில்,

அரசாங்கம் சுகாதாரத் துறை மேம்பாட்டுக்காக பெருந்தொகைப் பணத்தைச் செலவிடுகிறது . நாட்டை முன்னேற்றப் பாதையில் செலுத்துகையில் கல்வி, சுகாதாரம் முதலான துறைகளை வலுப்படுத்த வேண்டும். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை மென்மேலும் வளர்க்கும் நோக்கத்துடன் சுவசரிய சேவை அறிமுகம் செய்யப்பட்டதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். 

இந்த இரண்டாவது கட்டத்தின் கீழ் ஒன்றரைக் கோடி டொலர் நன்கொடையுடன் 209 அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கப்படவுள்ளன. 

முதற்கட்டத்தின் கீழ் 88 அம்பூலன்ஸ் வண்டிகள் கிடைத்தன. அவற்றில் 56 வண்டிகள் மேல் மாகாணத்திற்கும் 32 வண்டிகள் தென்மாகாணத்திற்கும் வழங்கப்பட்டன. சுவசிரிய அம்பூலன்ஸ் வண்டி 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை 56 ஆயிரம் பேர் அம்பூலன்ஸ் சேவையைப் பெற்றுள்ளார்கள். 

1990 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலமாக இந்த அம்பூலன்ஸ் சேவையை பெற்றுக்கொள்ளமுடியும்.

Comment (0) Hits: 205

இலங்கையில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் பெறுமதி 990 கோடி

பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினரால் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சுமார் 990 கோடி ரூபா பெறுமதியான 332 கிலோ 500 கிராம் நிறையுடைய ஹெரோய்ன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினர் கூறியுள்ளனர்.

ஹெரோய்ன் போதைப் பொருளுடன் 29,690 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் 36 பேர் வெளிநாட்டுப் பிரஜைகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் 29,690 வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதுதவிர 09 கோடி 98 இலட்சம் ரூபா பெறுமதியான 4990 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவற்றை வைத்திருந்த 51,870 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அதே காலப்பகுதியில் கொகேய்ன் போதைப் பொருளை வைத்திருந்த 29 பேருடன், 44 இலட்சத்து 13,000 ரூபா பெறுமதியான 220 கிலோ 650 கிராம் நிறையுடைய கொகேய்ன் போதைப் பொருள் பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதேவேளை 07 இலட்சத்து 63,400 ரூபா பெறுமதியான 38 கிலோ 170 கிராம் நிறையுடைய ஹேசஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவற்றை வைத்திருந்த 35 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Comment (0) Hits: 214

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடும் வேட்பாளர் அறிமுகமும் நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் இன்று காலை நடைபெற்றது.

இதன் போது ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைக்க தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி பெற்றுக் கொண்டார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முண்னணி ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிமுகம் செய்திருக்கும் நிலையிலையே தமிழர் விடுதலைக் கூட்டணியும் தமது கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர்களை அறிமுகம் செய்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாக இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் கூட்டமைப்பில் போட்டியிட முடியாதென தெரிவித்து வெளியேறியிருந்தது.

அதன் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும், ஈரோஸ், புனர்வாழ்வழிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் கட்சி உள்ளிட்ட பல கட்சிகளையும் பொது அமைப்புக்களையும் இணைத்து தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பென்ற புதிய கட்சியை ஆரம்பித்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

இக் கட்சியின் யாழ்ப்பாண வேட்பாளர்களது அறிமுகமும் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடும் இன்றையதினம் நடைபெற்றது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ்பிரேமச்சந்திரன், ஆனந்தசங்கரி மற்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Comment (0) Hits: 224

தனித் தமிழீழம் மலர்வதை தடுக்க முடியாது; மஹிந்த

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தோல்வியடையுமானால் ஸ்ரீலங்கா பிளவுபட்டு தனித் தமிழீழம் மலர்வதை எவராலும் தடுத்துநிறுத்த முடியாமல்போப்பினர் ஏமாற்றிவருவது போல, தென்னிலங்கை மக்களை நல்லாட்சி அரசாங்கம் ஏமாற்றுவதாக குற்றம்சாட்டிய அவர், தேசப்பற்றுள்ள ஒவ்வொருவரும் தாமரை மொட்டு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான ஒருங்கிணைந்த பொதுஜன மு்னணி கூட்டணியை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தும் நிகழ்வு கொழும்பு, சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

இதில் ஒன்றிணைந்த எதிரணி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் அங்கம் வகிக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தேர்தலில் உள்ளூராட்சி சபை வேட்பாளர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் வடக்குக்குச் சென்று, புதிய அரசமைப்பின் ஊடாக சமஷ்டி உதயமாகும் என்றும், பௌத்த தேரர்களை ஏமாற்றுவதற்காகவே பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என்றும் பிரசாரம் செய்து வருகின்றார். இந்த விடயத்தில்கூட தமிழர்களுக்கு ஒன்றையும் சிங்களவர்களுக்கு ஒன்றையுமே இந்த அரசு கூறி ஒட்டுமொத்த மக்களையும் ஏமாற்றி வருகின்றது.

இந்நிலையில், தாமரை மொட்டுச் சின்னத்துக்கு வாக்களிப்பதில்தான் நாட்டின் வெற்றியே தங்கியுள்ளது. மாறாக, இச்சின்னத்தைத் தோற்கடித்தோமேயானால் நாடு பிளவுபடுவதை எவராலும் தடுத்துநிறுத்தவே முடியாது. தற்போது ஏற்பட்டுள்ள இந்த அமைதியான சூழலானது பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொடுத்து இராணுவத்தின் போராட்டத்தால் பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றியாகும். இதனை இல்லாதொழிக்கும் வகையிலும் காட்டிக்கொடுக்கும் வகையிலும் எவரும் வாக்களிக்கக்கூடாது என்றும் நாம் கேட்டுக்கொள்கிறோம்.

அதேநேரம், எனது புகைப்படத்தை பயன்படுத்துவது தொடர்பிலும் தற்போது ஒரு சர்ச்சை ஏற்பட்டுள்ளது. உண்மையில் இது மகிழ்ச்சியே. நான் யாரையும் பயன்படுத்த வேண்டாம் என்று கூறவேமாட்டேன். எனது புகைப்படத்தை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், தாமரை மொட்டுச் சின்னத்துக்கே எனது புகைப்படம் உரித்தானது என்பதை நாம் இவ்வேளையில் பதிவு செய்துக் கொள்கிறேன்” என்றார்.

இதேவேளை மிகநீண்டநாட்களாக தமிழ் மொழியில் உரையாற்றுவதைத் தவிர்த்துக் கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இந்த மாநாட்டின்போது தமிழ் மொழியிலும் உரையாற்றினார்.

Comment (0) Hits: 238

பன்னிரண்டு ஆண்டுகள் கடந்தும் மாணவர்கள் படுகொலைக்குத் தீர்வில்லை

திருகோணமலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களின் 12 ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்றைய தினம் திருகோணமலை கடற்கரையில் இடம்பெற்றது.

மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட திருகோணமலை கடற்கரையில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி 20 வயதான மனோகரன் ரஜீகர், யோகராஜா ஹேமச்சந்திரா, லோகிதராஜா ரோகன், தங்கதுரை சிவானந்தா, சண்முகராஜா கஜேந்திரன் ஆகிய மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு பல்கலைக்கழக தேர்வுக்காகக் காத்திருந்த 5 தமிழ் மாணவர்களும் திருகோணமலை கடற்கரையில் வைத்து கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி ஸ்ரீலங்காவின் சிறப்பு அதிரடிப்படையினரின் மிலேச்சத்தனமான தாக்குதலில் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

எனினும் இந்த படுகொலைகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை ஸ்ரீலங்கா அரசாங்கமும், இராணுவத்தினரும், பொலிஸாரும் தொடர்ச்சியாக மறுத்து வருகின்றனர்.

கொலைசெய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் எனவும், கைக்குண்டு வெடித்தே அவர்கள் பலியானதாகவும் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் கூறியிருந்தது.

இருப்பினும் மாணவர்கள் ஐவரும் துப்பாக்கியால் சுடப்பட்டே கொல்லப்பட்டதாக வைத்திய பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து குறித்த படுகொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் உட்பட 12 விசேட அதிரடிப்படையினர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கடந்த 2013 ஆண்டு ஜுலை 5 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டனர்.

எனினும் 2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் 14ஆம் நாள் கைதுசெய்யப்பட்ட அனைவரும் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

எனினும் அதற்குப் பின்னர் மாணவர் படுகொலையுடன் தொடர்புடைய நீதி விசாரணைகள் இடம்பெற்றிருக்கவில்லை. அது மாத்திரமன்றி இந்தப் படுகொலை தொடர்பில் விசாரணை செய்திருந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

Comment (0) Hits: 229

Page 103 of 103