செய்திகள்

உயர் கல்வி அமைச்சு ஆட்சேர்ப்பு, தேர்தலுக்கு முரணானதல்ல'

நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சில் இடம்பெறும் ஆட்சேர்ப்பு, எந்த விதத்திலும் தேர்தல் சட்டத்திற்கு முரணானது அல்ல என அமைச்சர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நேற்றைய தினம் சபையில் தினேஷ் குணவர்தன எம் பி, தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தமது அமைச்சில் ஆயிரக்கணக்கானோருக்கு நியமனக் கடிதங்களை இன்று வழங்குவதாகவும் அது தொடர்பில் சபையின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அதனையடுத்து எதிர்க்கட்சியை சேர்ந்த மேலும் சிலர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தேர்தல் சட்டங்களை மீறி செயல்படுவதாக குறிப்பிட்டனர். இதனால் சில நிமிடங்கள் சபை சர்ச்சைக்குள்ளாகியது. இது தொடர்பில் பதிலளித்த அமைச்சர், தேர்தல் திகதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே மேற்படி நியமனங்களுக்கான நேர்முகப்பரீட்சை நடத்தப்பட்டுள்ளது. இந் நிலையில் நியமனக் கடிதம் வழங்குவது எந்த வகையிலும் தேர்தல் சட்டத்தை மீறுவதாக அமையாது.

 தமது கருத்தை ஏற்றுக்கொள்ளாவிடில் அது தொடர்பில் தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்க முடியும் என்றார். அச் சமயம் குறிப்பிட்ட சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, தற்போது நியமனங்கள் வழங்க முடியும் என்றும் வேட்புமனு தாக்கல் அறிவிப்புக்கு பின்னரே நியமனங்கள் வழங்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார். மங்கள சமரவீர கூறுகையில், தினேஷ் குணவர்தன தெரிவித்த கருத்து நமக்கு ஆச்சரியமளிக்கிறது. 2014ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலங்களில் அன்றைய அரசாங்கம் அம்பாந்தோட்டை உட்பட பல்வேறு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கானோருக்கு நியமனக் கடிதங்களை வழங்கியதை அவர் மறந்து சிறுபிள்ளைத்தனமாக பேசுகின்றார் என்றார்.
Comment (0) Hits: 41

லலித் - குகன் காணாமலாக்கப்பட்ட விவகாரம்; கோட்டா ஆஜராகுவாரா?

லலித் குமார் வீரராஜூ மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய அரசியல் செயற்பாட்டாளர்கள் காணாமல்போன விவகாரம் தொடர்பிலான ஆட்கொணர்வு மனு குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் 27ம் திகதி நடைபெறவுள்ளது.
 
இம்முறை வழக்கு விசாரணைகளிலிருந்தும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய  தப்பித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரான கோட்டபய ராஜபக்ஷவுக்கு, 2019 செப்டம்பர் 
27 ஆம் திகதி யாழ்ப்பாண மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

எனினும், இம்முறையும் யாழ்ப்பாண நீதிமன்றில் முன்னிலையாகாது தப்பித்துக் கொள்ள கோட்டா
முயற்சிப்பதாக, முன்னிலை சோசலிச கட்சியின் பிரச்சார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
மலர்மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பேட்டியிடும் கோட்டாவிற்கு பாரிய உயிர் அச்சுறுத்தல்கள் காணப்படுவதாகத் தெரிவித்து, இதனால் யாழ்ப்பாண நீதிமன்றில் முன்னிலையாக முடியாது என வாதிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 
யாழ்ப்பாணத்தில் இந்த வழக்கு விசாரணையை நடத்தாது, கொழும்பிற்கு மாற்றுமாறு கோட்டாவின் சட்டத்தரணிகள் கோரிக்கை விடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
 
யாழ்ப்பாண நீதவான் அன்டனிபிள்ளை பீட்டர் போல் முன்னிலையில், கடந்த ஜூன் மாதம் 21ம் திகதி இந்த வழக்கு  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கோத்தாபய வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இதனால் அவரால் நீதிமன்றில் முன்னிலையாக முடியாது எனவும் தெரிவித்திருந்தனர்.
 
கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் 09ஆம் திகதி அரசியல் ஆர்வலர்களான லலித் மற்றும் குகன், அரசியல் செயற்பாடு ஒன்றை மேற்கொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்த வேளை, காணாமல் போயிருந்தனர்.
இந்த வழக்கு தொடர்பில், முன்னைய ராஜபக்ஷ அரசாங்கத்தின் கெபினட் அமைச்சரான கெஹெலிய 
ரம்புக்வெல்லாவிடம் யாழ்ப்பாண நீதிமன்றம் ஆதாரங்களை பதிவு செய்திருந்தது.

இந்த வழக்கின் விசாரணையில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில்,கோத்தாபய
ராஜபக்ஷவின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்ததினால், அவர் நீதிமன்றத்திற்கு வரவழைக்கப்பட
வேண்டிய தேவை ஏற்பாட்டது. இதனால் அவரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கோரியிருந்தனர்.
இந்த வழக்கில் கோதபாயவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்து.
 
வேன் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற கும்பலொன்று லலித் - குகன் பயணம் செய்த மோட்டார் சைக்கிளை மறித்து கடத்திச் சென்றுள்ளதாக நேரில் கண்ட சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.
 
எனினும், நேரில் கண்ட சாட்சியங்கள் எவரும் நீதிமன்றில் முன்னிலையாகி சாட்சியமளிக்கத் தயாரில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
Comment (0) Hits: 52

ஜாதி அடிப்படையிலா சஜித் ஒதுக்கப்படுகின்றார்? {VIDEO}

(video)
ஜாதி அடிப்படையிலா சஜித் ஒதுக்கப்படுகின்றார்?  நேற்று (20) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, பிரபல அமைச்சர் ஒருவரினால் கேள்வியை எழுப்பப்பட்டுள்ளது.
 
சஜித் பிரேமதாச தேர்தலில் போட்டியிடுவதனை எதிர்க்கும் சிலர், ஜாதி அடிப்படையிலா அதனைச் செய்கின்றார்கள்? என அவ அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இதன் போது உடனடியாக பதிலளித்துள்ள பிரதமர், தாம் ஜாதி பார்ப்பதில்லை எனவும் ரணசிங்க பிரேமதாஸவிற்கு உதவியதாகவும், 2010 ஆம் ஆண்டில் சரத் பொன்சேகாவை களமிறக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
ஆர். பிரேமதாஸவிற்கு ஜனாதிபதி வேட்பாளர் பதவி வழங்கப்படக் கூடாது என கடுமையான சூழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்த காமினி திஸாநாயக்கவின் மகன், தற்பொழுது சஜித் பிரேமதாஸவிற்கு எதிரான அணியில் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை, அமைச்சர்களான நவீன் திஸாநாயக்க மற்றும் ராஜித்த சேனாரத்தன ஆகிய இருவர் மாத்திரமே அமைச்சரவைக் கூட்டத்தின் போது, பிரதமருக்கு சாதகமாக பேசினர். 
 
சஜித்தை "சேர்" என்று அழைக்க முடியாத  உயர்ஜாதிக்காரர்கள்!
 
இதேவேளை, அண்மையில் தேசிய மக்கள் சக்தி இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட கருத்தரங்கு ஒன்றில் கருத்து வெளியிட்ட ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி. லால்காந்த பின்வருமாறு கூறியிருந்தார்.
 
"ஐக்கிய தேசிய கட்சியின் உயர் ஜாதிக் காரர்கள் சஜித்தை "சேர்" என விளிப்பதற்கு விரும்பாத காரணத்தினால், அவருக்கு ஜனாதிபதி வேட்பாளர் பதவி வழங்குவதற்கு எதிராக செயற்படுகின்றனர்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comment (0) Hits: 60

'என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா' நடமாடும் சேவை ஒக்டோபர் 05 வரை!

தொழில்முனைவோருக்கு மானிய அடிப்படையில் கடன் வழங்குவதற்காக என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா நடமாடும் சேவையை எதிர்வரும் சில நாட்களுக்கு முன்னெடுக்க நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இச் சேவையின் கீழ் சிறிய, நடுத்தர, சுயதொழில் மற்றும் கைத்தொழில் முனைவோருக்கு கடன் உதவிகள் வழங்கப்படவுள்ளன. இதனடிப்படையில் செப்டம்பர் 21மற்றும் 22ஆம் திகதிகளில் கிரிந்திவெல மஹா வித்தியாலயத்திலும், 28மற்றும் 29ஆம் திகதிகளில் புத்தளம், மன்னார் மற்றும் காலி மாவட்டங்களிலும் ஒக்டோபர் 05ஆம் திகதி மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் இச் சேவை முன்னெடுக்கப்படும். பாராளுமன்றத்தில் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதையடுத்து இதுவரை 93ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி 58ஆயிரம் தொழில்வான்மையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இத் திட்டத்தின் கீழ் ஒருவர் ஒரு இலட்சம் முதல் 750 மில்லியன் ரூபா வரை வர்த்தக வங்கிகளில் கடன் பெற முடியும். சுயதொழில் முனைவோர் மற்றும் பட்டதாரிகளுக்கு வட்டியில்லாமலும் வியாபாரிகளுக்கு 50 சதவீதம் தொடக்கம் 75 சதவீத மானிய அடிப்படையிலும் கடன் வழங்கப்படவுள்ளது. விவசாயம், சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் முனைவோர் இதன்மூலம் பயன் பெற முடியும்.
Comment (0) Hits: 30

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பது பற்றி விவாதிப்பது இழிவான செயல்!

ஏற்கனவே ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பது பற்றி விவாதிப்பது இழிவான செயல் என்று ஐக்கிய தேசிய கட்சியில் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பிரதமரால் கொண்டுவரப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான யோசனை நேற்று (19) விசேட அமைச்சரவையில், சஜித் பிரதேமதாச உள்ளிட்ட குழுவினரின் எதிர்ப்பால் கைவிடப்பட்டிருந்தது.

இது தொடர்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் இது பொதுமக்களின் ஜனநாயக உரிமைக்கு அடியாக அமையக்கூடிய செயல் என்றும் அவர் காட்டமான முறையில் தெரிவித்தார்.

மேலும், எதிர்வரும் ஓரிரு தினங்களில் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூடி, வேட்பாளர் தொடர்பில் ஆராயும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  

Comment (0) Hits: 27

"ராஜபக்க்ஷகளுடன் ரணில் 'ஒப்பந்தத்தில்' இருக்கிறாரா? சந்தேகம் நிலவுகின்றது" - அசோக!

பிரதமரும் அவரது  கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்களும்  ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை எதிர்ப்பது என்பது ராஜபக்க்ஷர்களின் தேவைகளுக்கு என்பதில் சந்தேகம் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்கே கூறுகிறார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக கட்சியின் முடிவால், தனது எதிர்கால அரசியலை தீர்மானிக்க முடியும் என்றும் அவர் கூறுகிறார்.

நெத் எப்.எம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தத் தேர்தலின் சில முடிவுகளில் எங்கள் அரசியல் முடிவு செய்யப்படலாம், ஏனென்றால் நாங்கள் ஒரு அரசியல் வெற்றியை விரும்புகிறோம். இதை நாம் மக்களுக்கு சொல்ல வேண்டும்.

என்னிடம் எந்த ஒழுக்க  விசாரணைகள் மேற்கொண்டாலும்  இதை நான்  கூறுகிறேன். இது ஒரு ஒப்பந்தமா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

https://soundcloud.com/theleader-lk/ashok-abesinghe-mp
Comment (0) Hits: 27

டிசம்பர் 8 ஆம் திகதிற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் - மஹிந்த தேசப்பிரிய!

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான அண்மைய தினமான நவம்பர் 15 க்கும் இறுதி தினமான டிசம்பர் 7 இற்கும் இடையில் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு இம் மாத இறுதிக்குள் வெளியிடப்படும்.

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகளின் செயலாளர்கள், கட்சி பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு இன்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்றது. 

இந்த சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காலை 10.30 மணியளவில் ஆரம்பமான இந்த சந்திப்பில் பல பிரதான கட்சிகளின் செயலாளர்கள் உள்ளிட்ட பிரதிகள் கலந்து கொண்டனர். 

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் போஷகர் பசில் ராஜபக்ஷ, ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், அகில இலங்கை மக்கள் காங்கரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன், ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த ஸ்ரீ வர்னசிங்க, தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் மைல்வாகணம் திலகராஜ் , ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா , முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இந்த சந்திப்பில் தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்பட்டதன் பின்னர் கட்சிகள் எவ்வாறு செயற்பட வேண்டும், தேர்தல் பிரசாரங்கள் குறிப்பாக இனவாதமாக பிரசாரங்களை முன்னெடுக்காமை, மைதானங்களில் பிரசாரங்களை முன்னெடுத்தல், பாதாதைகள் வைத்தல், விஷேடமாக பொலித்தீன் பாவனையற்ற தேர்தலாக இம்முறை ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற வேண்டும் என்ற விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

அத்தோடு எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கும் டிசம்பர் 7 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட வார இறுதி நாட்களில் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி தேர்தலுக்கான தினம் குறித்து இம்மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Comment (0) Hits: 58

"நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதே முதல் கடமை" - கரு!

ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட்டால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதே தனது பிரதான கடமை என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு சபாநாயகர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

கடந்த சில வாரங்களில் மதத்தலைவர்கள், பல்வேறு சிவில் அமைப்புக்களின் பிரதானிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள், தொழில்முனைவோர், இளைஞர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் தன்னை தொடர்பு கொண்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

சில முக்கிய விடயங்களுக்காக ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்குமாறு என்னை தொடர்பு கொண்டவர்கள் கோரியதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டினுள் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கும், நிலவும் அரசியல் குழப்பத்தை போக்கி கண்ணியமான ஆட்சியை ஏற்படுத்துவதற்காக நம்பிக்கைமிக்க தலைவர் ஒருவர் நாட்டிற்கு தேவை என்பதால், குறித்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து தரப்பினரும் தம்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு சபாநாயகர் இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தான் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதே தனது பிரதான கடமை என சபாநாயகர் கரு ஜயசூரிய தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

1995 ஆம் ஆண்டு முதல் நாம் தொடர்ச்சியாக முகங்கொடுக்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்காக ஒன்றிணையும் அரசியல் அணிகளுடன் மாத்திரமே தான் இணைந்து செயற்படவுள்ளதாக சபாநாயகர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Comment (0) Hits: 50

ஐ. நா. சபை இலங்கையின் துணை நிரந்தர பிரதிநிதி,மனித உரிமைகள் பேரவையின் 42வது அமர்வில் சமர்ப்பித்த அறிக்கை

ஐ. நா. சபை இலங்கையின் துணை நிரந்தர பிரதிநிதி,மனித உரிமைகள் பேரவையின் 42வது அமர்வில் சமர்ப்பித்த அறிக்கை பின்வருமாறு:

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையின் துணை நிரந்தர பிரதிநிதி, தயானி மெண்டிஸ், அவர்கள் மனித உரிமைகள் பேரவையின் 42வது அமர்வில் வழங்கிய அறிக்கை – 11 செப்டம்பர் 2019

தலைவர் அவர்களே,

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான செயற்குழு, 2015 இல் இலங்கைக்கு வருகை தந்த பின், அதனால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் செயன்முறைப்படுத்தப்பட்டமை பற்றியதிலான தொடர் நடவடிக்கை அறிக்கை பற்றி நாம் குறிப்பிட விழைகிறோம்.

தலைவர் அவர்களே,

நவம்பர் 2015 இல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய செயற்குழுவை இலங்கை வரவேற்றது. இது, ஐ.நாவின் சகல மனித உரிமைகள் பொறிமுறைகளுடனும் வெளிப்படையானதும் ஆக்கபூர்வமானதுமான ஈடுபாட்டை மேற்கொள்ளவேண்டுமென்ற அரசாங்கத்தின் கொள்கையின் அங்கமாகும். இந்த அணுகுமுறையானது, செயற்குழுவின் வருகைக்கு ஒரு மாதத்திற்குப் பின்னர், டிசம்பர் 2015 இல் இலங்கை சகல சிறப்புச் செயன்முறை ஆணை வைத்திருப்பவர்களுக்கு ஒரு திறந்த அழைப்பினை வழங்கியபோது மேலும் தெளிவாக்கப்பட்டது. இக்கொள்கையைப் பின்பற்றி, 2015 இலிருந்து இலங்கை, 10 ஐ.நா சிறப்புச் செயன்முறை ஆணை வைத்திருப்பவர்களை வரவேற்றோம் என்பதையும் இந்த வருடம் அக்டோபரில் மேலும் ஒரு வருகை உள்ளது எனக் குறிப்பிடுவதிலும் மகிழ்ச்சியடைகிறோம்.

இச்சிறப்பு ஆணை வைத்திருப்பவர்களினால் பரிந்துரைக்கப்பட்ட பல செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதானது; எமது தேசிய முந்துரிமைகளில் நாட்டம் செலுத்தப்படுதல் போல, கடந்த சில வருடங்களாக இணக்கப்பாடு, அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளை ஊக்கப்படுத்தலுக்கான இலங்கையின் செயற்போக்கிலும் முன்னணியிலுள்ளது. செயற்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டவற்றின் நிலைப்பாட்டிலிருந்து இதைக் குறிப்பிடலாம்.

ஏற்கனவே அரசாங்கம் எழுத்து பூர்வமாக வழங்கிய புதுப்பிப்புகளை மீண்டும் கூற முயற்சிக்காமல், குறுகிய 4 ஆண்டு காலப்பகுதிக்குள் இலங்கையினால் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றத்தின் முக்கிய அம்சங்களைச் சுருக்கமாக எடுத்துரைக்கிறேன்:

• டிசம்பர் 2015 இல், செயற்குழு விஜயம் செய்ததிலிருந்து 1 மாதத்திற்கும் குறைவான காலப்பகுதிக்குள், அனைத்து நபர்களையும் கட்டாயமாக காணாமல் போவதிலிருந்து பாதுகாப்பதற்கான சர்வதேச சாசனத்தில் இலங்கை கைச்சாத்திட்டது. மே 2016 இல் சாசனம் ஒப்புதலளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உள்நாட்டுச் சட்டத்துடன் சாசனத்தின் விதிகளை இணைப்பது மட்டுமல்லாமல், சாசனத்தின் கீழ் வழங்கப்பட்ட சில பாதுகாப்புக்களையும் மேம்படுத்துகின்ற வலுவான தேசிய சட்டமொன்று, இலங்கைப் பாராளுமன்றத்தால் மார்ச் 2018 இல் இயற்றப்பட்டது. எதிர்காலத்தில் வலிந்து காணாமலாக்கப்படுவதற்கான எந்தவொரு செயலும் மீள நிகழாமலிருப்பதையும், பொறுப்புக்கூறலையும் உத்தரவாதப்படுத்துவதற்கான மூலகமாக இந்த சட்டக் கட்டமைப்பு செயற்படுகின்றது.

• ஜூன் 2018 இல், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள வசதியைப் போன்ற, அனைத்து தடுப்புக்காவல் சார்ந்த இடங்களையும் தடையின்றி அணுகுவதற்கு வழிவகுக்கும் வகையிலான உடன்படிக்கையொன்றில் இலங்கை அரசாங்கம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்தது.

• காணாமல் போனவர்கள் குறித்த ஒரு சுயாதீன அலுவலகம் 2016 இல் நிறுவப்பட்டு, 2018 இல் முழுமையாக செயற்படுத்தப்பட்டது. இன்றைய நிலவரப்படி, இந்த அலுவலகம் கொழும்பில் உள்ள தனது அலுவலகத்திற்கும் மேலதிகமாக 3 பிராந்திய அலுவலகங்களை நிறுவியுள்ளதுடன், அவற்றுள் யாழ்ப்பாணத்தில் உள்ள அலுவலகம் மிகவும் சமீபத்தில் ஆகஸ்ட் 2019 இல் நிறுவப்பட்டது. தனது ஆணையின் படி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக, செயற்குழுவிலிருந்து பெறப்பட்ட நிலுவையிலுள்ள அனைத்து வழக்குகளும் இந்த சுயாதீன பொறிமுறையுடன் பகிரப்பட்டுள்ளன.

• மனித உரிமைகள் அல்லது மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் தனிநபர் மற்றும் கூட்டு இழப்பீடுகளை வழங்குவதற்காக, இழப்பீட்டுக்கான அலுவலகம் 2018 அக்டோபரில் நிறுவப்பட்டு இந்த ஆண்டு செயற்படுத்தப்பட்டது.

• காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் காணாமல் போனவர்களின் பெயரில் சில வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கு உதவும் முகமாக, இறப்புச் சான்றிதழ்களுக்குப் பதிலாக, தற்போது உடனில்லாத சான்றிதழ்களை வழங்குவதற்கான செயற்பாடு சட்டத் திருத்தத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

• காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் அதன் இடைக்கால அறிக்கையில் மேற்கொண்ட பரிந்துரைக்கிணங்க, தற்போது உடனில்லாத சான்றிதழைக் கொண்டுள்ள காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு, ரூபா. 6000 மாதாந்த கொடுப்பனவை 2019 அக்டோபர் முதல் வழங்குவதற்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியது.

• காணாமல் போன மற்றும் காணாமலாக்கப்பட்ட நபர்களின் குடும்பங்களை ஆதரிப்பதற்காக 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் ரூபா. 500 மில்லியன் ஒதுக்கப்படவுள்ளது.

தலைவர் அவர்களே,

அனைத்து பங்குதாரர்களுடனும் விரிவான ஆலோசனைகள், புதிய சட்டங்களை உருவாக்குதல் மற்றும் புதிய கொள்கைகளை உருவாக்குதல் ஆகியவற்றை உள்ளடக்கிய அளவிடப்பட்ட, ஆனால் நிலையான தேசிய செயன்முறைகளின் விளைவுகளே இந்த சாதனைகள் என நாங்கள் மதிப்பிட்டுள்ளோம். எமது தேசிய அர்ப்பணிப்பு மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றத்தை அடைவதற்கான தீர்மானம் ஆகியன தடைகள் இருந்தபோதிலும் மிகவும் வலுவானதாக உள்ளன. அரச அதிகாரத்தையும், நாட்டின் சட்டங்களையும் பயன்படுத்துவதற்கான தடைகள் மற்றும் சமநிலைகளைக் கொண்டுள்ள பல சுயாதீன நிறுவனங்களை உருவாக்கியுள்ள 19 வது திருத்தத்தை உள்ளடக்கிய இலங்கையின் அரசியலமைப்பு, அரசின் பல்வேறு ஆயுதங்களின் நடவடிக்கைகள் மற்றும் தீர்மானங்களை அறிவித்து ஆதரிக்கின்றன. உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய முடிவுகளால் சட்டத்தின் ஆட்சி மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

நாம் எமது பாதையில் சென்றுகொண்டிருக்கின்றோம் ஆதலால், இலங்கை தனது உடனடியான முன்னுரிமை விடயங்களை மாற்றியமைக்கும் வகையில் கட்டாயப்படுத்திய பல நூற்றுக்கணக்கான அப்பாவி இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டினரின் உயிர்களைக் காவுகொண்ட இந்த வருடத்தில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல்கள் உட்பட, பல சவால்களுக்கு மத்தியில் இலங்கை ஈட்டும் இத்தகைய முயற்சிகளுக்கு உரிய அங்கீகாரத்தினை வழங்குமாறு இந்த சபையை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

எவ்வாறாயினும், ஈஸ்டர் ஞாயிறு தினத்துக்கு பிந்தைய சூழலில் நாம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருந்த போதிலும், எமது அனைத்து பிரஜைகளினதும் மனித உரிமைகளின் மேம்பாடு மற்றும் பாதுகாப்பை செயற்படுத்த உதவும் கொள்கைகளுக்கான இலங்கையின் ஈடுபாட்டினை அடிக்கோடிட்டுக் காட்டுவது மிகவும் முக்கியமானதாகும்.

தலைவர் அவர்களே,

மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் இலங்கை எந்த அளவில் முக்கியத்துவமளிக்கின்றது என்பதனை மேற்கூறிய விடயங்கள் குறித்து நிற்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக எழுந்த பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், இந்த விடயத்தில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றமானது, அனைவருக்கும் மனித உரிமைகளை உறுதி செய்வதற்காக இலங்கை பேணி வந்த, மற்றும் தொடர்ந்தும் பேணி வருகின்ற வலுவான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகின்றது.

நன்றி.

Comment (0) Hits: 22

"சஜித்துக்கு ஆதரவளிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது" - ஹக்கீம்!

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

குருணாகலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்துதெரிவித்த அவர், வேட்பாளரை தெரிவு செய்வது தொடர்பிலேயே தற்போது எமது அவதானம் உள்ளது.

பிரபலமான வேட்பாளர் ஒருவரை ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து களமிறக்குவார்கள் என எதிர்ப்பார்க்கிறோம்.

எனினும் இதுவரை அது தொடர்பில் இறுதி தீர்மானம் கிடைக்கவில்லை.

எதிர்வரும் வாரத்தில் அது தொடர்பான இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கிறோம்.

அதனை தொடர்ந்தே எமது தீர்மானத்தை எடுக்கவுள்ளோம்.

எடுக்கும் தீர்மானத்தை மற்றைய கூட்டணி கட்சிகளுடன் கலந்தாலோசித்து எடுக்க தீர்மானித்துள்ளோம். என்றார்.

Comment (0) Hits: 34

ஜனாதிபதித் தேர்தலுக்கான தினம் இரு வாரங்களில் அறிவிக்கப்படும்!

தேர்தல் ஆணைக்குழு மற்றும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கிடையிலான விஷேட பேச்சுவார்த்தை ஒன்று இன்று காலை நடைபெறவுள்ளது.

அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களும் இதில் கலந்துகொள்ளுமாறு சமீபத்தில் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதேவேளை எதிர்வரும் 14 நாட்களுக்குள் ஜனாதிபதித் தேர்தலுக்கான தினம் நிர்ணயிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். தேர்தல் காலத்தில் ஊடகங்களின் செயற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஊடகங்கள் போலிப் பிரசாரங்களுக்கும், வைராக்கியத்தை ஏற்படுத்தும் கருத்துக்களுக்கும் இடமளிக்கக்கூடாது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Comment (0) Hits: 14

சஜித் தயார்; வேட்பாளரை தெரிவு செய்ய இரகசிய வாக்கெடுப்பு!

இரகசிய வாக்கெடுப்பு மூலம் வேட்பாளரை தெரிவுசெய்ய முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரான அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியினால் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்துகொள்ள முடியாவிட்டால், இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்துகொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்று (16) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
இரகசிய வாக்கெடுப்பு இன்றி தீர்வு எட்டப்பட்டால் நல்லது எனவும் அல்லது இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
வேட்பாளர்கள் யார்? என்பது குறித்து வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழு ஆகியனவற்றை கூட்டி, இரகசிய வாக்கெடுப்பு மூலம் வேட்பாளரை தெரிவு செய்ய முடியும் என பிரதி அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை கிடைக்கப் பெற்றதும், வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் ராஜித சேனாரத்ன, பிரதமரின் ஆலோசகர் தினேஸ் வீரக்கொடி, அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார, அமைச்சர் கபீர் ஹாசீம், அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஆகியோரே இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
இதேவேளை, ஜனாதிபதி கனவு பலருக்கு உண்டு என்ற போதிலும், வெற்றியிட்டக்கூடிய வேட்பாளரை தீர்மானித்து அவரை களமிறக்க வேண்டுமென நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர் பெயரிடுவதனை காலம் தாழ்த்துவது பிரதமர் அல்ல எனவும் ஜனாதிபதி கனவில் மிதக்கும் சில அமைச்சர்கள் எனவும் பிரதி அமைச்சர் நளின் பண்டார ஜஹமஹா தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நபர்களின் முகத்திரை விரைவில் கிழிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Comment (0) Hits: 23

சஜித் அதிரடி அறிவிப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச, இன்று காலை (17) முக்கிய ஊடக சந்திப்பொன்றினை நடத்தியிருந்தார்.. 

அமைச்சர் மங்கள சமவீரவின் இல்லத்தில் இடம்பெற்ற இந்த ஊடக சந்திப்பில், அமைச்சர்களான மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம, கபீர் ஹாஷிம், ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் சந்திரானி பண்டார ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பின்போது ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில், ஐக்கிய தேசிய கட்சிக்குள் எழுந்துள்ள குழப்ப நிலைக்கு கட்சி உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பினை நடத்தி, கட்சியின் சார்பில்  ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தெரிவித்ததாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக கட்சியின் மத்திய குழுவை உடனடியாக கூட்டுமாறு சஜித் கேட்டுக்கொண்டார். 

அத்துடன், இது தொடர்பான கடிதம் ஒன்றையும் தான் நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கையளித்தாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கான சகல தகுதிகளும் தனக்கு உள்ளதாகவும், அதற்கான மக்கள் ஆணை தனக்கு இருக்கின்றது என்றும் அவர் கூறினார்.

 

 

Comment (0) Hits: 79

"நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேர்தல் மூலம் ஐ.தே.மு ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்பட வேண்டும்" சம்பிக்க!

(VIDEO)

பாராளுமன்றத்தின் அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் 106 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாக்கெடுப்பொன்றை நாடத்துவதனூடாக, ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

ஜனாதிபதித் தேர்தலுக்கான ஜனநாயகக் கூட்டணியை உருவாக்குவதற்கான முறையான செயற்திட்டம் ஒன்றை,  காலம் தாழ்த்தாது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வகுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

ஜனாதிபதி வேட்பாளருக்காக ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோரின் பெயர்கள் மக்கள் மத்தியில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அதேவேளை, அதில் மிகவும் பொருத்தமான நபரை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக தற்போது பரவலாக விவாதங்கள் நடைபெற்று வருகின்ற போதிலும், தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்படுவதால், அரச்சங்கத்தில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களில், பெரும்பான்மையானவர்களின் விருப்பத்துக்கேற்ப முடிவு செய்யப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

இது மிகவும் ஜனநாயக ரீதியான செயல்முறை என்றும், இதனூடாக கட்சியின் வேட்பாளரைத் தேர்ந்தெடுத்து, அனைவரின் ஒத்துழைப்புடன் அவரது வெற்றிக்காக உழைக்க வேண்டும். அந்த வேட்பாளர்,  ஜனநாயகத்தின் தேசிய வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Comment (0) Hits: 29

"தமிழர்கள் விடயத்தில் மஹிந்த தவறிழைத்துவிட்டார்" - தயாசிறி!

உள்நாட்டு போரின் பின்னரான தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் மஹிந்த ராஜபக்ஷ தவறிழைத்து விட்டார். இதுவே 2015 ஆம் ஆண்டு தோல்விக்கு பிரதான காரணமாகியது. ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த மக்களின் ஜனநாயகத்தையும் இன நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்தியுள்ளதாக சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். 

இரத்தினபுரியில் நேற்று (15) இடம்பெற்ற கட்சி சம்மேளனத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

"சுதந்திர கட்சியில் யாரும் தனித்து செயற்பட முடியாது. எதிர்காலத்திற்காக நாட்டுக்கான சரியான தீர்மானத்தை எடுப்போம். ஒருபோதும் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணையும் எண்ணம் துளிகூட இல்லை. ரணில் விக்கிரமசிங்க தற்போது சஜித் பிரேமதாசவுக்கு விட்டுக் கொடுக்கவில்லை. சுதந்திர கட்சி இன்றி யாருக்கும் பயணிக்க முடியாது. வெற்றி பெரும் வேட்பாளரை தெரிவு செய்வது சுதந்திர கட்சி மாத்திரமேயாகும் என்று உறுதியாகக் கூறுகின்றேன். 

பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த நிலைப்பாட்டில் இருக்கின்றோம். ஆனால், பொதுஜன பெரமுன இதனைத் தவறாக பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறார்கள். ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட ஏனைய முக்கிய அமைச்சுக்களை அவர்களே எடுத்துக்கொண்டால் கூட்டணியில் சுதந்திர கட்சி எதற்கு? இதே நிலைப்பாட்டில் அவர்கள் உறுதியாக இருந்தால் பயமின்றி எமக்கு அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க முடியும். 

எனினும் தற்போது சின்னமோ வேட்பாளரோ முக்கியமல்ல. ஐக்கிய தேசி கட்சியை தோல்வியடைச் செய்வதற்கான பொது வேலைத்திட்டமே அவசியமாகின்றது" என்றும்  அவர் கூறினார்.

Comment (0) Hits: 22

"மஹிந்தவின் ஆதரவும் ஐக்கிய தேசிய கட்சிக்கு" - மரிக்கார்!

(VIDEO)

எதிர்வரும் நவம்பர் மாதத்தில் இந்த நாட்டின் 07 வது நிறைவேற்று ஜனாதிபதியாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ஒருவரே பதவி வகிப்பார் என்றும் அதற்கான மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவும்  கிடக்குமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கர் தெரிவித்துள்ளார்.

லோ லெவல் வீதியின், இராண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் (15) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்,

"திருட்டு, மோசடி, ஊழல், வீண்விரயம் மட்டுமல்லாது வெள்ளை வேன் கலாச்சாரத்தையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்காகவே 2015 ஆம் ஆண்டு ராஜபக்ஷவினர் தோற்கடிக்கப்பட்டனர்.

கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியானால், அமைச்சின் செயலாளர்களாக ஓய்வு பெற்ற இராணுவத் தளபதிகளே நியமிக்கப்படுவர். மஹிந்த ராஜபக்ஷவினால் கூட கோத்தாபயவைக் கட்டுப்படுத்த முடியாது. ஆகையால், கோத்தாபயவை தோற்கடிக்க வேண்டும் என்பதே மஹிந்தவின் எண்ணமும் கூட. ஏனெனில், மஹிந்தவின் தலைமைப் பதவியை தொடர்ந்து பாதுகாத்துக்கொள்வதற்கும், எதிர்காலத்தில் தனது மகனுக்கு தலைமைப் பதவியை பெற்றுக்கொடுப்பதற்குமான அவரது இலட்சியத்தை இதனூடாகவே அடையமுடியும்.

கோத்தாபய வெற்றிபெற்றால், நமலின் எதிர்காலம் அதோகதிதான். எனவே, ஒருபுறம் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் பொய்யாக நடித்து வேஷம் போடுகின்றனர். மறுபுறம் ஐ.தே.க வேட்பாளரை வெற்றிபெற வைப்பதற்கான ஆதரவை வழங்கிக்கொண்டிருக்கின்றனர்.” என்றார்.

Comment (0) Hits: 931

ஜே.வி.பியை இணைத்துக்கொள்ள முடியும் என ராஜித உறுதி - சின்னத்தை கைவிடும் ஜேவிபி!

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) கட்சியை ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைத்துக்கொள்ள முடியும் என அமைச்சர் ராஜித சேனாரட்ன, உறுதிமொழி வழங்கியுள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டியிடாது, கரு ஜயசூரிய போட்டியிட்டால் ஜே.வி.பி.யின் ஆதரவினை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜே.வி.பி மற்றும் சிவில் அமைப்புக்களின் ஆதரவினை பெற்றுக் கொண்டால், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கரு ஜயசூரியவை களமிறக்க முடியும் என பிரதமரின் பிரதிநிதி தினேஸ் வீரக்கொடி கடந்த 11ஆம் திகதி தெரிவித்திருந்தார்.
இதேவேளை, சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் விசேட, சிரேஸ்ட பிரதிநிதிகள் நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
ஜே.வி.பி.யின் ஆதரவினைப் பெற்றுக்கொள்வது அவசியமானது என கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, "ஐக்கிய தேசியக் கட்சிக்கோ வேறு ஓர் தரப்பிற்கோ ஆதரவளிக்கப்படாது. தேசிய மக்கள் சக்தி என்ற அரசியல் அமைப்பின் ஊடாக, தமது வேட்பாளராக அனுரகுமார திஸாநாயக்க தேர்தலில் போட்டியிடுவார். இந்த விடயத்தில் எவ்வித மாற்றங்களும் கிடையாது. நிச்சயமாக நாம் தேர்தலில் போட்டியிடுவோம்" என ஜே.வி.பி.யின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜே.வி.பி கட்சி இம்முறை "மணி" சின்னத்தில் போட்டியிடாது எனவும் பொதுவான ஓர் சின்னத்தை தெரிவு செய்து போட்டியிடும் எனவும் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
30 தன்னார்வ அமைப்புக்களுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் இதனால் பொதுவான ஓர் சின்னத்தில் போட்டியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comment (0) Hits: 42

'கட்சிக்குள் பிரிவினைகள் இல்லை; வேட்பாளர் யாரென செயற்குழு தீர்மானிக்கும்' - கிரியெல்ல!

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
 
கட்சியின் செயற்குழுவினால், ஜனாதிபதி வேட்பாளர் குறித்த தெரிவு மேற்கொள்ளப்பட்டு, எதிர்வரும் பத்து நாட்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவார் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
யார் எவ்வாறான பேச்சுவார்த்தைகளை நடாத்தினாலும் ஜனாதிபதி வேட்பாளர் செயற்குழுவினால் தீர்மானிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இதேவேளை, கட்சிக்குள் எவ்வித முரண்பாடுகளோ பிரிவிணைகளோ கிடையாது என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
 
அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து, அனைவரது விருப்பின் அடிப்படையில் ஜனாதிபதி வேட்பாளர் நியமிக்கப்படுவார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
கொட்டாஞ்சேனை பகுதியில் (14) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது, அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இதேவேளை, இந்த தேர்தலில் வெற்றியீட்டக்கூடிய ஓர் வேட்பாளரை களமிறக்க வேண்டும் எனவும், தேர்தல் செயற்பாட்டிற்கு ரணில் தலைமை தாங்க வேண்டுமெனவும் தம்பர அமில தேரர் கோரியுள்ளார்.
Comment (0) Hits: 37

Page 2 of 82