செய்திகள்

விரைந்து செயற்படுமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அமெரிக்கா அழுத்தம்

இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற கலவரத்துக்கு காரணமானவர்கள் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறும் சிறுபான்மை இனத்தவர்களின் உரிமையைப் பாதுகாக்கவும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

கண்டியில் இடம்பெற்ற கலவரத்தை அடுத்து அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

குறித்த அறிக்கையில் சட்டம் மனித உரிமைகள் மற்றும் சமத்துவம் ஆகியன இணைந்து வாழ்தலுக்கு மிக அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் அனைவரதும் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தும் முகமாக அவசரகால நிலைமை நீக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Comment (0) Hits: 183

சமூக வலைத்தளங்களுக்கு பிரவேசிக்க விதிக்கப்பட்டுள்ள தடை இன்றும் தொடரும்

முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு பிரவேசிக்க விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடை இன்றைய தினமும் அமுலில் இருக்கும் என, தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கண்டி மாவட்டத்தில் நிலவும் நிலமையைக் கருத்திற் கொண்டு இந்த தற்காலிக தடை நீடிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய இணையம் ஊடாக பயன்படுத்தப்படும் முகநூல், வைபர், ஐஎம்ஓ, வட்சப் ஆகிய சமூக வலைத்தளங்களுக்கு தொடர்ந்தும் பிரவேசிக்க முடியாது  என்று அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் மாற்று வழிகளைப் பயன்படுத்தி முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு பிரவேசிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறானவர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இனவாத கருத்துக்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியிடுவோர் மற்றும் பரிமாறுவோர் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கான ஆதரவை, குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்திடம் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comment (0) Hits: 188

அர்ஜுன் மகேந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நிறைவு

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நேற்றைய தினத்துடன் நிறைவடைந்துள்ளது.

எனினும் கொழும்பு - கோட்டை நீதவான் லங்கா ஜயரட்னவினால் அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக இது தொடர்பில் விடுக்கப்பட்ட அறிவித்தலை அவரிடம் கையளிக்கும் வாய்ப்பு இதுவரை இதுவரை கிடைக்கவில்லை.

அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூரில் இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சர்வதேச பொதிச் சேவை ஊடாகவும் அதிவேக அஞ்சல் ஊடாகவும் அவருக்கான அறிவித்தலை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும் சிங்கப்பூரில் அவர் வசிக்கும் இல்லம் பூட்டப்பட்டுள்ளதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.

எவ்வாறிருப்பினும் குறித்த அறிவித்தல் தொடர்பில் அர்ஜுன் மகேந்திரனின் தனிப்பட்ட தொலைபேசிக்கும் மின்னஞ்சல் முகவரிக்கும் குற்றப் புலனாய்வு திணைக்களம் தகவல் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர் தொடர்பில் எடுக்கப்படக்கூடிய அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா விளக்கமளித்துள்ளார்.

அவரது விளக்கத்துக்கு அமைய அர்ஜுன் மகேந்திரன் தொடர்பில் சர்வதேச பொலிஸார் ஊடாக சிவப்பு அறிவித்தல் ஒன்று விடுக்கப்படுவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்து அவரைத் தம்மிடம் கையளிக்குமாறு சிங்கப்பூரிடம் கோரலாம்.

எனினும் இரண்டு நாடுகளுக்கும் இடையில் குற்றங்கள் தொடர்பில் உடன்படிக்கை கைச்சாத்திடப்படாததால் சிங்கப்பூர் அவரைக் கையளிப்பதை தவிர்க்கலாம்.

இந்த நிலையில் தூதரகம் ஊடாக அவரை நாட்டுக்கு அழைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 188

நெல்சன் மண்டேலாவின் உருவச்சிலையை யாழ்ப்பாணத்தில் நிறுவ தீர்மானம்

சமாதானத்தின் தந்தை என போற்றப்படும் தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் உருவச்சிலையை யாழ்ப்பாணத்தில் நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவின் உயர்ஸ்தானிகர் ரொபினா பீ.மார்க்ஸ்க்கும் வடமாகாண ஆளுநருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள தென்னாபிரிக்காவின் உயர்ஸ்தானிகர் ரொபினா பீ.மார்க்ஸ் நேற்றைய தினம் வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேயை அவரது அலுவலகத்தில் வைத்து சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது மேற்குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதுடன் இதன்போது இருநாடுகளுக்கும் இடையே இடம்பெறும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் மத சகவாழ்வு என்பன குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன் நெல்சன் மண்டேலா சமாதானத்தின் சின்னமாக இருப்பதாகவும் இது உலகம் முழுவதிலும் உள்ள அபிப்பிராயமாகும் என்றும் குறிப்பிட்ட ஆளுநர்  

நெல்சன் மண்டேலாவின் உருவச்சிலையை யாழ்ப்பாணத்தில் ஸ்தாபிக்க வேண்டும் என்ற யோசனையை உயர்ஸ்தானிகர் முன்வைத்தமையை இட்டு தாம் நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Comment (0) Hits: 186

சட்டம், ஒழுங்கு அமைச்சராக ரஞ்ஜித் மத்தும பண்டார நியமனம்

சட்டம், ஒழுங்கு அமைச்சராக ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினரான ரஞ்ஜித் மத்தும பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை முற்பகல் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

Comment (0) Hits: 202

இனவாத வன்முறை நடவடிக்கைக்கு ஐ.நா கண்டனம்

இலங்கையின் கண்டி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வன்முறையினால்  பாதிக்கப்பட்டவர்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுப்பதற்கும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலையை உருவாக்குவதற்கும் விரைவில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

கண்டியில் இடம்பெற்றுவரும் வன்முறையை அடுத்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இனவாத வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை, இந்த செயற்பாட்டுக்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

அத்துடன் இலங்கையில் வாழும் அனைத்து குடிமக்களதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Comment (0) Hits: 192

காணாமல் ஆக்கப்படுவதில் இருந்து அனைவரையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாய சட்டமூலம் நிறைவேற்றம்

வலிந்துகாணாமல் ஆக்கப்படுவதில் இருந்து அனைத்து ஆட்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

கடந்த காலங்களில் இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டுவந்த நிலையில், திருத்தங்களுடன் குறித்த சட்டம் நாடாளுமன்றத்தில் நேற்று பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வலிந்துகாணாமல் ஆக்கப்படுவதில் இருந்து அனைத்து ஆட்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாயத்தில் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கை அரசாங்கம் கையெழுத்திட்டிருந்தது.

இந்த சமவாயத்தை சட்டமாக இயற்றுவதற்கான நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டிருந்ததுடன், அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி வெளியிட்டிருந்தது.

இதனை வர்த்தமானியில் வெளியிடுவதற்கான அங்கீகாரத்தை கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி அமைச்சரவை வழங்கியதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறியிருந்தார்.

இதன்பிரகாரம் வலிந்து காணாமல் ஆக்கப்படுவதில் இருந்து அனைத்து ஆட்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாயத்தை சட்டமாக்குவதற்கான வரைபு கடந்த ஆண்டு ஜுலை மாதம் சமர்ப்பிக்கப்பட்டு, விவாதம் நடத்துவதற்கு திகதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

எனினும் இந்த சமவாயத்தை சட்டமாக்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி மற்றும் பௌத்த உயர்மத பீடங்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முன்னெடுத்த இலங்கை இராணுவத்திற்கு அச்சுறுத்தலாக இந்த சட்டம் அமையும் என தெரிவித்து, மல்வத்து, அஸ்கிரிய மற்றும் ராமான்ஞ பீடங்கள் இணைந்து கூட்டாக கடுமையாக எதிர்ப்பு அறிக்கையை வெளியிட்டிருந்தன.

அத்துடன் இந்த சட்டமூலம் ஊடாக குற்றமிழைத்தார்கள் என்ற குற்றச்சாட்டில் இலங்கை நாட்டவர்களை கைதுசெய்வதற்கான அதிகாரத்தை மேற்குலக நாடுகள் பெறும் என மஹிந்த ராஜபக்ச எச்சரித்திருந்தார்.

தொடர்ச்சியான எதிர்ப்புக்களை அடுத்து வலிந்து காணாமல் ஆக்கப்படுவதில் இருந்து அனைத்து ஆட்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாயத்தை சட்டமாக்கும் நடவடிக்கை தொடர்ச்சியாக அரசாங்கத்தினால் பிற்போடப்பட்டுவந்த நிலையில், நேற்று புதன்கிழமை இது தொடர்பான சட்ட வரைபு திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறிப்பாக காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கை நாட்டவர்களுக்கு எதிராக வெளிநாடுகளில் வழக்குத் தொடர முடியும் என்ற சரத்தில் திருத்தம் செய்யப்பட்டு, அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

IBC tamil

Comment (0) Hits: 188

வன்முறைகளுக்கு பின்னால் அரசியல் சதி - ஜே.வி.பி

கண்டி திகன மற்றும் தெல்தெனிய உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைகளுக்குப் பின்னால் இனவாதத்தையும், மோதல்களையும் தூண்டுவற்கான மிகப்பெரிய அரசியல் நோக்கம் இருப்பதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்றைய தினமும் சில அசம்பாவிதங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், இனவாதத்தை தூண்டி அதில் குளிர்காய முயற்சிக்கும் அரசியல்வாதிகளின் சூழ்ச்சிகளில் இருந்து மக்கள் தப்பித்துக்கொள்ள வேண்டும் என்று ஜே.வி.பியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க கேட்டுக்கொண்டார்.

கண்டி மாவட்டத்தின் கட்டுகஸ்தோட்டை, அக்குறனை மற்றும் பூஜாப்பிட்டிய பகுதிகளில் இடம்பெற்ற கலவரத்தின்போது ஒருவர் உயிரிழந்ததுடன் 10க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் மீது நேற்று புதன்கிழமை தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளன.

தொடர்ந்து பரவுகின்ற இவ்வாறான வன்முறைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்றைய தினமும்  அதிருப்திகளும், எதிர்ப்புக்களும் வெளியிடப்பட்டன.

இந்த நிலையில் ஜே.வி.பியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க, பௌத்த மக்களின் பெருந்தலைமைத்துவங்களில் ஒன்றான கண்டி - மல்வத்துபீடத்திற்கு நேற்று முற்பகல் விஜயம் செய்தார்.

மல்வத்துபீட துணை மகாநாயகர் திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் மற்றும் மகாநாயக்கர் திட்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் ஆகியோரை சந்தித்த அவர், அண்மைய நாட்களாக இடம்பெறுகின்ற கலவரங்கள் தொடர்பாக நீண்டநேரம் கலந்துரையாடலை நடத்தினார்.

இருபெரும் தலைவர்களிடமும் ஆசிபெற்ற அவர் அதனையடுத்து ஊடகங்களுக்கும் கருத்து வெளியிட்டார்.

 “இந்த சம்பவங்களுக்குப் பின்னால் அரசியல் நோக்கம் இருப்பது தெளிவாகின்றது. இனவாதத்தை தூண்டுவதே அந்த அரசியல் நோக்கமாகும். அதிகாரத்தில் இருக்கின்ற தரப்பினர் அதனை தக்கவைப்பதற்காகவும், அதிகாரத்தை இழந்த தரப்பினர் அதனை மீண்டும் பெற்றுக்கொள்ளவும் இனவாதத்தை பயன்படுத்துகின்றனர்.

இனவாதமானது வரலாற்றில் எந்தவித நன்மையையும் இந்த நாட்டு மக்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்கவில்லை. 30 வருடங்களாக மிகப்பெரிய யுத்தம் இருந்த எமது நாட்டில் மீண்டுமொரு இனவாதம் ஏற்படாத வகையில் அதனை மக்கள் நிராகரிக்க வேண்டும். எனவே இனவாத மோதல்களுக்கு உதவிகளை ஒத்துழைப்புக்களை வழங்காமல் அனைவரும் ஐக்கியமான சமாதானத்துடன் வாழ ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

சிங்களம், தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து வாழும் நாடு இது. குரோதம், கோபதாபங்களுடன் இந்த நாட்டை முன்நோக்கி நகர்த்த முடியாது. விமல் வீரவன்ச போன்றவர்கள் இந்த நாட்டில் எப்போதாகிலும் இனவாத மோதல்கள் ஏற்படுமா என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கின்ற தருணத்திலும் குருதி, கண்ணீரில் இந்த நாடு பலமுறை நனைந்திருக்கின்ற நிலையிலும், மீண்டும் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வகையில் இனவாத தீ பரவாமலிருப்பதற்கு மக்கள் அதற்கு அணைகட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றோம்” என்றார்.

IBC tamil

Comment (0) Hits: 196

மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்

கண்டி நிர்வாக எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்களில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 188

இலங்கையில் முகநூல் பாவனை முடக்கம்

நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு கண்டி மாவட்டம் உட்பட நாட்டின் சில முக்கிய இடங்களில் தொலைபேசிகளினூடான இணைய பாவனைகளும் வலையமைப்பு சேவைகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலதிக அறிவிப்பு வரும் வரை குறித்த இணைய சேவைகள் இடைநிறுத்தப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் முகநூலை அரசாங்கம் முற்றாக தடைசெய்துள்ளது.

நாட்டின் கண்டி, தெல்­தெ­னிய, பல்­லே­கல உள்ளிட்ட பகுதிகளில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட வன்­மு­றைகள் நேற்று பகல் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டபோதும் இரவு வேளையில் ஊரடங்கு உத்தரவுக்கு மத்தியில் மீண்டும் தாக்குதல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டியில் தற்போது பதற்றநிலை ஏற்பட்டுள்ளதோடு கண்டி நிர்வாக மாவட்டத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை அமுலில் இருக்குமென பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அத்தோடு, பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் கண்டி பிரதேசத்திற்கு அனுப்பட்டுள்ளன.

இந்த குழுக்களில் தலா மூன்று பிரதி பொலிஸ் மா அதிபர்களும் தலா மூன்று பொலிஸ் அதிகாரிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment (0) Hits: 204

கண்ணிவெடி அற்ற நாடாக மாற்றுவதற்கான முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும்

இலங்கையை 2020 ஆம் ஆண்டு கண்ணிவெடி அற்ற நாடாக மாற்றுவதற்கான முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஜோர்தான்  இளவரசரும் ஆளணி எதிர் கண்ணிவெடிகளை தடை செய்வதற்கான சாசனத்தின் விசேட தூதுவருமான மிரெட் ராட் அல் ஹூஸைன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்காக மேலதிக நிதி உதவிகளை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜோர்தான்  இளவரசரும் ஆளணி எதிர் கண்ணிவெடிகளை தடை செய்வதற்கான சாசனத்தின் விசேட தூதுவருமான மிரெட் ராட் அல் ஹூஸைன் கடந்த 5 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.

இந்நிலையில் இவர் நேற்று செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி முகமாலை பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் கண்ணிவெடி அகற்றும்   பிரதேசங்களை பார்வையிட்டார்.

முற்பகல் 10 மணிக்கு  குறித்த பகுதிகளுக்கு விஜயம் செய்த அவர் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுடன் உரையாடியதுடன் கண்ணிவெடி அகற்றும் பகுதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,  தான் இரண்டு நாட்களாக கண்ணிவெடி அகற்றும் பணி நடைபெறும் இடங்களை பார்வையிட்டு வருவதாகவும் இது தொடர்பில் இலங்கை பிரதமர் மற்றும் அமைச்சர்கள் உயர் அதிகாரிகளுடன் பேசியதாகவும் தெரிவித்தார்.

கண்ணிவெடிகள் உள்ள பகுதிகளில் குறைந்த காலத்திற்குள் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு மக்கள் மீள்குடியேற்றப்படுவார்கள் என தெரிவித்தார்.

இந்நிலையில் இலங்கை அரசாங்கம் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கி வருவதற்கு ஜோர்தான்  இளவரசர்  மிரெட் ராட் அல் ஹூஸைன் நன்றி தெரிவித்தாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

Comment (0) Hits: 188

ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஒத்திவைப்பு

பிரதமரான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்ஜித் டி சொய்ஸா இதனைத் தெரிவித்தார்.

பிரதமருக்கு எதிராக 14 குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் இன்று சமர்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நாட்டில் ஏற்பட்டிருக்கும் அமைதியின்மை காரணமாக இந்த தீர்மானம் பிற்போடப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Comment (0) Hits: 183

இலங்கை முழுவதும் அவசரகால நிலை பிரகடனம்

இலங்கை முழுவதும் அடுத்துவரும் 10 நாட்களுக்கு அவசரகால நிலையை பிரகடனம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கண்டி மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் முதல் இடம்பெற்றுவந்த இரு இனங்களுக்கிடையிலான வன்செயல்களை அடுத்து இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பின்போது ஜனாதிபதியும், அமைச்சர்களும் இந்த முடிவை எடுத்ததாக இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கா தெரிவித்துள்ளார்.

இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

பதற்றத்தைத் தணிக்க கூடிய வகையில் சட்டம் முறையாக அமுல்படுத்தப்படவில்லை என்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், உடனடியாக பொலிஸாரும் இராணுவத்தினரும் அதற்காக சேவையில் ஈடுபடுத்தப்படுவர் என்றும் குறிப்பிட்டார்.

அவசரகாலநிலையை மேலும் நீடிப்பதா என்பது குறித்து 10ஆவது நாளில் ஜனாதிபதி அறிவிப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.

நேற்றையதினம் திங்கட்கிழமை முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை அடுத்து கண்டி மாவட்டத்தில் நேற்று இரவு முழுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததுடன் இன்று காலை 6 மணியளவில் அகற்றப்பட்டு பின்னர் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும், தாம் தங்கியிருந்த பகுதிகளின் மீது இரவு வேளையில் கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக அப்பகுதி முஸ்லிம் மக்கள் தெரிவித்ததாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

Comment (0) Hits: 200

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று சபாநாயகரிடம்

பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்றைய தினம் சபாநாயகர் கருஜயசூரியவிடம் கையளிக்கப்படவுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியினால் இந்தப் பிரேரணை கையளிக்கப்படவுள்ளதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வுக்கு முன்னதாக இடம்பெறவுள்ள ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தின் போது இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்து இடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின்னர் சபாநாயகரிடம் அதனைக் கையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comment (0) Hits: 181

உடன் அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் ஊரடங்குச் சட்டம்

உடன் அமுலுக்கு வரும் வகையில் கண்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெல்தெனிய மற்றும் பல்லேகல பகுதிகளில் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று பிற்பகல் முதல் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம், இன்று காலை 6 மணியுடன் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் மீண்டும் இன்று முற்பகல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் குழப்பம் ஏற்பட்ட தெல்தெனிய மற்றும் திகன பகுதியில் தொடர்ந்தும் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முன்தினமும் நேற்றும் தெல்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற அமைதியற்ற சம்பவங்களைக் கருத்திற்கொண்டு இந்த ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 219

மாகாணசபைத் தேர்தலை கலப்பு முறையில் நடத்துவதற்கு தயார்

இடம்பெறவுள்ள மாகாணசபைத் தேர்தலை கலப்பு முறையில் நடத்துவதற்கு தயாராக இருப்பதாக உள்ளுராட்சிமன்ற மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

மாகாணசபை தேர்தலுக்கான எல்லை நிர்ணய பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதற்கு நாடாளுமன்ற அனுமதி மாத்திரம் பெறப்படவுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர்,

கலப்பு தேர்தல் முறையை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

எனவே கலப்பு தேர்தல் முறைமையின் கீழாகவே மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் எனவும், கலப்பு தேர்தல் முறையின் மூலம் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் இனங்காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பைசர் முஸ்தபா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Comment (0) Hits: 201

இராணுவத்தை பழிவாங்குவதற்கான ஆயத்தக் கருவியே காணாமற் போனோர் தொடர்பான அலுவலகம்

தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்து நாட்டில் முப்பது வருடங்களாக நிலவிய போரை முடிவுக்கு கொண்டுவந்த  இராணுவம் உட்பட அரச படையினரை பழிவாங்குவதற்கான ஆயத்தக் கருவியாகவே காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தை பயன்படுத்தவிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.

காணாமல்போனோர் அலுவலகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தொடர்பிலும் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தனது கடும் அதிருப்தியையும், எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள நிலையில், போர்க்காலத்திலும், அதற்குப் பின்னரும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான விவகாரத்தை அணுகுவதற்காக உருவாக்கப்பட்ட காணாமல் போனோர் அலுவலகத்திற்கான 7 பேர் அடங்கிய குழுவொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்தவாரம் நியமித்திருந்தார்.

இந்தக் குழு தொடர்பாக தென்னிலங்கை அரசியல் களத்தில் பெரும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலும் கடும் கண்டனங்கள் முன்வைக்கப்பட்டன.

இதன்போது கருத்து வெளியிட்ட பேராசிரியர் பீரிஸ், “காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் ஒரு நிறுவனமாகும். இராணுவத்தினரை வேட்டையாடுவதே அந்த அலுவலகத்தின் நோக்கமாகும். காணாமல் போனோர் அலுவலகத்திற்காக 7 உறுப்பினர்கள் அவசரமாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தூண்டலுக்காகவே அது அமைக்கப்பட்டுள்ளது. அதற்காக 1200 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

குறித்த அலுவலக உறுப்பினர்களில் ஒருவரான நிமல்கா பெர்ணான்டோ தெரிவுசெய்யப்பட்டதையிட்டு எதிர்ப்பை வெளியிடுகின்றோம். ஒவ்வொரு வருடமும் ஜெனீவாவுக்கு சென்று எமது நாட்டின் இறையாண்மைக்கு பங்கத்தை ஏற்படுத்தியவர் நிமல்கா பெர்ணான்டோ. இப்படியான நியமிப்புக்களை கண்டிப்பதாக அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்திருக்கின்றார். எனினும் வாய்மூலம் அல்லாமல் இதற்கு அவர்கள் உண்மையாகவே எதிர்ப்பை வெளியிட வேண்டும்” என்றார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்துத் தெரிவித்த பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், மைத்திரி – ரணில் தலைமையிலான தற்போதைய அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களை சுதந்திரமாக நடமாட அனுமதித்து வருவதாகவும் சாடினார். 

“பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு இலங்கை ஒப்புக்கொண்டதை நிறைவேற்றும்படி இன்று மேற்குலக நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. இன்று அந்த சட்டம் இலங்கை புலனாய்வுப் பிரிவு மற்றும் இராணுவத்தினருக்கு எதிராகவே அமுல்படுத்தப்படுகின்றது. விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு அதிவேக படகு தயாரிப்பில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் நபர், அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட நிலையில் இலங்கை புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு ஓரிரு  கேள்விகள் கேட்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் குற்றச்சாட்டுக்களின் பேரில் கைதாகிய இராணுவ சிப்பாய்கள் பல மாதங்களாக சிறைவைக்கப்பட்டுள்ளனர். வடக்கில் ஒருசட்டத்தையும், தெற்கில் இன்னுமொரு சட்டத்தையும் அமுல்படுத்துமாறு பொலிஸாருக்கு அரசாங்கம் அறிவுறுத்தல் வழங்கிவருகின்றது.

முல்லைத்தீவில் அண்மையில் இராணுவ முகாமை அகற்றுமாறு கோரி பாரிய ஆர்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. நில அளவைத் திணைக்களத்தின் வாகனத்தையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சேதமாக்கினர். இதுவரை அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த சம்பவத்துடன் தம்புத்தேகம போராட்டத்தையும் தொடர்புபடுத்தி பார்க்கவேண்டும்” என்று தெரிவித்தார்.

இதேவேளை 1989ஆம் ஆண்டில் காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடு ஒன்றை சர்வதேசத்திடம் முறையிடுவதற்காக ஜெனீவா சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதாகியதை ஊடகவியலாளர்கள் இன்றைய ஊடக சந்திப்பில் ஜி.எல்.பீரிசுக்கு நினைவுபடுத்தினார்.

அத்துடன் 1990ஆம் ஆண்டில் வடக்கில் தாய்மாரின் அமைப்பொன்று உருவாக்கப்பட்டு அதில் இணை ஏற்பாட்டாளர்களாக மஹிந்த ராஜபக்சவும், தானும் இருந்ததாக நிதியமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்ட அறிக்கையையும் சுட்டிக்காட்டிய ஊடகவியலாளர்கள், காணாமல்போனோர் தொடர்பான விவகாரத்தை மஹிந்த ராஜபக்சவே ஆரம்பித்து வைத்த நிலையில், இன்று எதிர்ப்பு தெரிவிப்பது எதற்காக என்றும் வினவினர்.

இதற்கு பதிலளித்த பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், காணாமல்போனோர் தொடர்பான சுயாதீன மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணைகளுக்கு தாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறினார்.

“நபர் ஒருவர் காணாமல்போயிருந்தால் அதுகுறித்து சுயாதீன மற்றும் பக்கச்சார்பற்ற சட்டத்தின்படியான விசாரணைகளுக்கு நாங்கள் எதிர்ப்பாளர்கள் அல்லர். விசேட சட்டங்களுக்கே நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம். குற்றவியல் சட்டக்கோவை போன்ற சட்டங்களின்கீழ் விசாரணைகளை மேற்கொள்ள முடியும். மஹிந்த ராஜபக்ச அந்த நிலைப்பாட்டிலேயே இருந்தார். இன்றும் அதே நிலைப்பாட்டில்தான் இருக்கின்றார்” என்று அவர் கூறினார்.

Comment (0) Hits: 202

ஊரடங்குச் சட்டம் விலக்கப்பட்டுள்ளது; பொலிஸ்

கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று பிற்பகல் முதல் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணியுடன் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர உறுதிப்படுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும் குழப்பம் ஏற்பட்ட தெல்தெனிய மற்றும் திகன பகுதிகளில் தொடர்ந்தும் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முன்தினமும் நேற்றும் தெல்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற அமைதியற்ற சம்பவங்களைக் கருத்திற்கொண்டு இந்த ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டது.

கடந்த மாதம் 22 ஆம் திகதி தெல்தெனிய பிரதேசத்தில் பாரவூர்தி ஒன்றில் சென்று கொண்டிருந்த சாரதி ஒருவர் முச்சக்கரவண்டியில் சென்ற சிலரால் தாக்கப்பட்டார்.

அவர் தாக்கப்படும் காட்சி அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் சீ.சீ.டி.வி கமெராக்களில் பதிவாகி இருந்தது.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தெல்தெனிய பகுதியை சேர்ந்த 46 வயதுடைய குறித்த நபர் மறுநாள் மரணமானார்.

அவரது மரணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச மக்கள் நேற்று முன்தினம் முதல் தெல்தெனிய நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் அமைதியற்ற வகையில் செயற்பட்டதாக, எமது செய்தித் தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை முன்னிறுத்தி பிரதேசவாசிகள் சிலர் நேற்று முன்தினம் இரவு தெல்தெனிய நகரில் அமைதியற்ற முறையில் செயற்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்கள் நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் சிலவற்றின்மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன், அவற்றுக்கு தீ வைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் இதுவரையில் 24 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும் நேற்று பிற்பகல் சிலதரப்பினர் திகன மற்றும் தெல்தெனிய பகுதிகளில் மீண்டும் அமைதியைக் குழப்பும் வகையில் செயற்பட்டுள்ளதாக எமது செய்தித்தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்களை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டனர்.

இதேவேளை திகன பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பக்கசார்பற்ற மற்றும் சுயாதீனமான விசாரணையை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது தொடர்பான ஆலோசனை பாதுகாப்பு பிரிவுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக விசேட செயற்திட்டங்களை முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி, பொலிஸ் மற்றும் இராணுவத்திற்கு ஆலோனை வழங்கியுள்ளார்.

இதேவேளை கண்டி நிர்வாக மாவட்டத்துக்கு உட்பட்ட சகல அரச பாடசாலைகளுக்கும் இன்றையதினம் விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆலோசனை வழங்கியுள்ளார்.

Comment (0) Hits: 209

Page 93 of 103