செய்திகள்

பிரபாகரனின் பதுங்குகுழியை இராணுவத்தினருக்கு வழங்க உத்தேசம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தளத்தை இராணுவத்தினருக்கு நிரந்தரமாக எழுதி வழங்கலாம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பில் பொதுமக்களின் காணிகளில் நிலைகொண்டுள்ள 682 ஆவது படைப்பிரிவு இராணுவத்தினர், அங்கிருந்து வெளியேறுவதற்கு மாற்றுக் காணிகள் வேண்டும் என்றும், அவற்றை எழுத்தால் எழுதி வழங்கவேண்டும் என்றும் இராணுவத்தளபதி ஒருவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

அண்மையில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பிலான கோரிக்கையை இராணுவத்தளபதி முன்வைத்திருந்தார்.

இது தொடர்பிலேயே நேற்றுமுன்தினம் புதுக்குடியிருப்பு பகுதியில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, புதுக்குடியிருப்பு - ஒட்டுசுட்டான் வீதியில் அமைந்திருக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பாசறை வளாகத்தை இராணுவத்தினருக்கு எழுத்து மூலம் நிரந்தரமாக எழுதி வழங்கலாம் என்ற யோசனையை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் முன்வைத்துள்ளார்.

இந்த நிலையில் பொதுமக்கள் வாழும் பிரதேசங்களில் இராணுவத்தினருக்கு காணிகள் வழங்குவது ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயம் அல்ல என கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source - Yarl Thinakkural

Comment (0) Hits: 224

ஐ.தே.க குழுவினரின் அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியை முழுமையாக மறுசீரமைக்கும் பொருட்டான யோசனைகளைப் பெற்றுக்கொள்ள நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தலைமையிலான குறித்த குழுவில் அமைச்சர்களான ஹரின் பெர்ணான்டோ, சாகல ரத்நாயக்க, அகிலவிராஜ் காரியவசம் மற்றும் அஜித் பீ பெரேரா ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியை முழுமையாக மறுசீரமைப்பதற்கான யோசனைகளை முன்வைக்கும் பொருட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் ஒருவாரத்திற்கு முன்னர் இந்த குழு அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 92

வடக்கைத் தொடர்ந்து கிழக்கிலும் கையெழுத்து வேட்டை ஆரம்பம்

சர்வதேச குற்றவியல் பொறிமுறை ஜ.நா பாதுகாப்புச் சபையின்  தலையீட்டுடன் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மக்களிடம் கையொப்பம் பெறும் நடவடிக்கை மட்டக்களப்பிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்த செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் கையொப்பமிட்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து மக்கள் ஒன்றிணைந்து கையொப்பமிட்டனர்.

கையெழுத்து வேட்டையை ஆரம்பித்துவைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்

இலங்கை போர்க்குற்ற விவகாரம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நியாயாதிக்க தீர்மானத்தை அல்லது விசேட சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தை உருவாக்கும் தீர்மானத்தை ஜ.நா பாதுகாப்புசபை நிறைவேற்ற வேண்டும் என கோருவதாகவும்

இதனடிப்படையில் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்கள் மற்றும் இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள தமிழ் மக்களும் இவ்வாறு கையொப்பம் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணத்தில் கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்றுவருவதைத் தொடர்ந்து கிழக்கில் கையொப்பம் பெறும் நடவடிக்கை மட்டக்களப்பில் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன்  இந்த செயற்பாடு ஏனைய பிரதேசங்களிலும் விரைவில் ஆரம்பி்க்கப்படும் எனவும் தெரிவித்தார்.

எனவே நீதியைப் பெறுவதற்கு அனைத்து தமிழ் மக்கள், புத்திஜீவிகள், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து யைபொப்பம் இடுவதற்கு அணிதிரளுமாறு தர்மலிங்கம் சுரேஸ் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 118

அனைத்துப் பட்டதாரிகளுக்கும் விரைவில் தொழில்வாய்ப்பு

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் காரணமாக பிற்போடப்பட்டிருந்த நேர்முகப் பரீட்சைகள் எதிர்வரும் இரண்டு மாத காலப்பகுதியில் நடத்தப்பட்டு நாட்டிலுள்ள அனைத்துப் பட்டதாரிகளுக்கும் தொழில்களைப் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை அடுத்த ஆறுமாத காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்களை வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

200 பட்டதாரிகளுக்கும் 40 டிப்ளோமா பட்டங்களைப் பெற்றுக்கொண்டவர்களுக்கும் இதன்போது ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. இதில் 21 பேருக்கான நியமனங்களை ஜனாதிபதி வழங்கினார்.

புதிய கல்விக்கொள்கைகள் மற்றும் திட்டங்களின்படி கல்வி முறைமையில் சில மாற்றங்களை செய்வதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின் கல்வி முறைமையில் உள்ள குறைபாடுகளின் காரணமாக நாட்டின் வளமான பட்டதாரிகள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் தொழில் உட்பட ஏனைய அரச நிறுவனங்களில் உள்ள வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்யும் நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி,

நீண்டகாலமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்று வந்த யுத்தத்தின் காரணமாக பின்னடைந்திருந்த அபிவிருத்தி நடவடிக்கைகளை வினைத்திறன்மிக்க வகையில் முன்னெடுப்பதற்கு இரண்டு விசேட ஜனாதிபதி படையணிகளை தாபிப்பதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாகவும், இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி மக்கள் பிரதிநிதிகளின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 119

உனா மெக்காலேயின் இறுதிக்கிரியை இன்று கொழும்பில்

காலஞ்சென்ற  ஐ.நா. வதிவிட ஒருங்கமைப்பாளரும் UNDP வதிவிட பிரதிநிதியுமான உனா மெக்காலேயின் இறுதிக்கிரியை இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.

அவரது விருப்பத்திற்கு அமைய அவருடைய இறுதிக் கிரியைகள் கொழும்பில் நடைபெறவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது.

அவரது பூத்தவுடல் இன்று  பி.ப 1.30 – 3.30 மணி வரை கொழுப்பு 08இல் அமைந்துள்ள ஜயரத்ன மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு பின்னர் பி.ப. 4 மணிக்கு பொரளை புதிய தகன சாலையில் தகனம் செய்யப்படவுள்ளது.

இறுதிக்கிரியையில் ஐ.நா. பொதுச் செயலாளரை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலும் யு.என்.டி.பி சார்பாகவும் உனா மெக்காலேயின் குடும்பத்தினருக்கு அனுதாபங்களை தெரிவித்துக்கொள்ளும் பொருட்டு ஐ.நா. உதவிப் பொதுச் செயலாளர் ஹயோலியாங் சு (Haoliang Xu) பங்குபற்றவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment (0) Hits: 118

கடும் வரட்சி; ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு பாதிப்பு

இலங்கையில் நிலவிவரும் வரட்சி நிலை காரணமாக இதுவரை ஒரு இலட்சத்து 10 ஆயிரத்து 576 குடும்பங்களைச் சேர்ந்த மூன்று இலட்சத்து 7 ஆயிரத்து 507 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 11 மாவட்டங்களில் இவ்வாறு வரட்சி நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை அதிக மழை காரணமாக 6 மாவட்டங்களில் 125 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

சீரற்ற காலநிலை காரணமாக 78 வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதுடன், 23 வர்த்தக நிலையங்களுக்கும் சேதம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்டத்திலேயே அதிகளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு 66 ஆயிரத்து 648 குடும்பங்கள் இவ்வாறு பாதிப்பை எதிர்கொண்டிருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிடுகின்றது.

இதுதவிர, மன்னார் மாவட்டத்தில் 11,312 குடும்பங்களும், கண்டி மாவட்டத்தில் 215 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

குருநாகல் மாவட்டத்தில் கனமழை காரணமாக 28,867 குடும்பங்களும், அநுராதபுரம் மாவட்டத்தில் 3,189 குடும்பங்களும், பொலனறுவை மாவட்டத்தில் 250 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

Comment (0) Hits: 190

இலங்கை அரசாங்கத்தைக் காப்பாற்றும் வகையில் கூட்டமைப்பு செயற்படுகின்றது

பொறுப்புக்கூறுகின்ற நிலையில் இருந்து அரசாங்கத்தினைக் காப்பாற்றும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருகின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

இதனால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமாக இருந்தால் ஐ.நாவின் மனித உரிமை ஆணையகத்தின் செயற்பாட்டுக்கு வலுச்சேர்க்க வேண்டும் என அவர் தெரிவித்தார். 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கையொப்பம் பெறும் நடவடிக்கை இன்று மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதற்கமைய இன்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு  மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இந்த கையொப்பம் பெறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இலங்கை அரசாங்கத்தை  சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றில் அல்லது விசேட சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் நிறுத்துவதற்கு  பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண தமிழ் மக்கள் தங்களது குரலை ஜ.நா  மனித உரிமைகள் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதற்கு அமைவாக தமிழ் மக்களிடம் கையொழுத்து பெறும் நடவடிக்கை ஆரம்பித்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

Comment (0) Hits: 111

சிரிய படுகொலைக்கு எதிராக வடக்கில் கவனயீர்ப்பு போராட்டங்கள்

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கும் இராணுவத்தினருக்குமிடையில் இடம்பெற்றுவரும் தொடர் மோதலினால் அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுவருவதைக் கண்டித்து கிளிநொச்சியில் கண்டன போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த கண்டன போராட்டம் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இடம்பெற்றது.

முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமான இந்தப் போராட்டத்தில் இளைஞர்களும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் இணைந்து, சிரிய படுகொலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்த வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பினர்.

ஐ.நாவே உனது கள்ள மௌனத்தை கலை, ஈழத்திலிருந்து சிரியாவுக்கு குரல், பொது மக்கள் கொல்லப்படுவதனை நிறுத்து, சிரியாவின் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கு, 2009 இல் முள்ளிவாய்க்கால் - 2018 இல் சிரியா போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் இதன்போது ஏந்தியிருந்தனர்.

 

இதேவேளை, சிரியாவில் நடைபெறும் படுகொலைக்கு எதிராக யாழ்ப்பாணத்திலும், இன்றைய தினம் கண்டன போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இளைஞர்களின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Comment (0) Hits: 105

வடக்கிற்கு ஒருசட்டம்;தெற்கு மக்களுக்கு இன்னொரு சட்டமா?

மைத்திரி – ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் வடக்கில் ஒருசட்டத்தையும், தெற்கில் இன்னுமொரு சட்டத்தையும் அமுல்படுத்தி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணி குற்றம் சுமத்தியுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தின் அராஜகத்தை எதிர்த்து தெற்கில் போராடுகின்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியும், சிறையில் அடைத்தும் அராஜகத்தை அரங்கேற்றும் அரசாங்கம், வடக்கில் இராணுவ முகாம்களுக்கு முன்பாக நடத்தப்படும் போராட்டங்களை அமைதிப் போராட்டங்கள் எனக்கூறுவது வேடிக்கையாக இருப்பதாகவும் ஒன்றிணைந்த எதிரணி குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வழிநடத்துகின்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இன்று வியாழக்கிழமை பகல் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன, குருநாகல் தம்புத்தேகம நகரில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயக் குடும்பங்கள் உட்பட பொதுமக்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

“ரத்துபஸ்வல மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை சுட்டிக்காட்டியே இந்த அரசாங்கம் ஆட்சிபீடத்திற்கு வந்தது. இன்று இந்த அரசாங்கம் செயற்படுவது எவ்வாறு? அப்பாவி மக்களின் தலைகளை உடைத்து, பொலிஸ் நிலையத்திற்குள் அழைத்துச்சென்று அங்கேயும் தாக்கி அகிம்சையான விவசாய மக்களுக்கு அநியாயங்களை செய்கின்றது.

இந்த நாட்டில் மக்களுக்கு அரிசியை வழங்கும் விவசாயக் குடும்பங்கள் மற்றும் விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஜனாதிபதி ஆட்சிசெய்யும்போது விவசாயக் குடும்பங்களைத் தாக்கின்ற தருணத்தில் ஜனாதிபதி எவ்வாறு நீங்கள் மௌனமாக இதனை பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்ற கேள்வியை தொடுக்கின்றோம்.

எமது நாட்டில் ஆர்ப்பாட்டம், போராட்டங்களின்போது பொலிஸாரை இரண்டு நோக்கங்களுக்காக அரசாங்கம் ஈடுபடுத்துகின்றது. வடக்கில் ஒருசட்டமும், தெற்கில் இன்னொரு சட்டமும் செயற்படுத்தப்படுகின்றது. வடக்கில் சிவாஜிலிங்கம் ஆர்ப்பாட்டம் செய்யும்போது, இராணுவ முகாம்களுக்கு முன்பாக போராட்டம் செய்யும்போது, வடமாகாண சபை அமைச்சர் ஒருவர் தேசியக்கொடியை ஏற்றுவதை நிராகரித்தபோது அதனை கண்டுகொள்ளாதிருக்கின்றனர்.

சில சந்தர்ப்பங்களில் அரச தலைவர்களும் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு விரைகின்றனர். மிகுந்த பாசத்துடன் அவர்களுடன் கலந்துரையாடுகின்றனர். ஆனால் தெற்கில் ஒருவர் தண்ணீர்கோரி போராட்டம் செய்யும்போது விரட்டிவிரட்டி அடிக்கின்றனர். மத்தள சர்வதேச விமான நிலையத்தை விற்பனை செய்யும்போது அதற்கெதிராக போராடிய நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களை சிறைவைத்தார்கள். மாற்றம்தான் என்ன? மத்திய வங்கி மோசடி தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பொலிஸில் ஒப்படைக்க வேண்டும். ஆனால் அவருக்கே இன்று பொலிஸார் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

Comment (0) Hits: 131

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்படவில்லை

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இலங்கை இராணுவத்தினரால் கொத்துக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று, நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தின் கோட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது கொத்துக்கொத்தாக பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், யுத்தத்தின்போது இலங்கை இராணுவத்தினரால் கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இவ்வாறான நிலையில், கொத்துக்குண்டு தொடர்பான சர்வதேச ஒஸ்லோ இணக்கப்பாட்டுக்கு உடன்பாடு தெரிவிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருப்பது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே, அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

இலங்கை எப்பொழுதும் இவ்வாறான குண்டுகளைப் பயன்படுத்தவில்லை என்று குறிப்பிட்ட அமைச்சர், எதிர்காலத்திலும் பயன்படுத்தப்போவதில்லை என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

நிலையான சமாதானம் மற்றும் நிலைப்பாடு தொடர்பில் இலங்கையில் காணப்படுகின்ற அர்ப்பணிப்பினை வெளிக்காட்டும் வகையில், இதுவரை 102 நாடுகள் இந்த இணக்கப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளன.

Comment (0) Hits: 106

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு மக்கள் விடுதலை முன்னணி ஆதரவு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டால் அதற்கு ஆதரவாக தாம் வாக்களிக்கப் போவதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மஹிந்த ராஜபக்ச தரப்பினர் திருடுவதற்கே மீண்டும் வருவதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.

வெளிநாட்டு செய்திச் சேவையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கருத்து வெளியிட்ட போதே பிமல் ரத்நாயக்க இந்த விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

சக கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலவீனமடையச் செய்வதற்கும் இரண்டாக பிரிப்பதற்கும் ரணில் விக்கிரமசிங்க முயற்சித்தார் என அவர் கூறியுள்ளார்.

அத்துடன் ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிரான வழக்கு விசாரணை நடவடிக்கைகளையும் பிரதமர் கட்டுப்படுத்தினார் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தம்முடன் இருக்கும் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்தபோது ஊழல் மோசடி செய்த அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை நேரடியாக தலையிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடுத்ததார் என அறிய கிடைத்துள்ளதாகவும் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார்.

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மீறியே ஜனாதிபதி இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளார் எனவும் அவர் சாடியுள்ளார்.

Comment (0) Hits: 103

வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் பொலிஸாரால் கைது

வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்றைய தினம்  முல்லைத்தீவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வட்டுவாகல் பகுதியில் கடந்த 22ஆம் திகதி மக்களின் காணிகளை கடற்படை முகாம் அமைப்பதற்காக அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டமை தொடர்பில், வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், ரவிகரன்  இன்றையதினம் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியிருந்தபோது அவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட முல்லைத்தீவு பொலிசார் அவரைக் கைதுசெய்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

அத்துடன் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட குற்றச்சாட்டில் முன்னாள் வடமாகாண பிரதி அவைத்தலைவர் அமரர் அன்டனி ஜெகநாதனின் மகன் பீற்றர் இளஞ்செழியனும் விசாரணைக்காக அழைக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Comment (0) Hits: 125

நல்லிணக்கத்துக்கான கொள்கை; அவன் அவள் ஏனையவர் திரைப்படம் வெளியீடு

பலராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நல்லிணக்கம் மற்றும் இணைந்து வாழ்தலுக்கான தேசிய கொள்கை இன்று வெளியிடப்படவுள்ளது.

இந்த வெளியீட்டு நிகழ்வு கொழும்பு ரீகல் சினிமாவில் மாலை 5.30 அளவில் இடம்பெறவுள்ளது.

மேற்படி நிகழ்வில் அவள் அவன் ஏனையோர் என்ற திரைப்படம் வெளியிடப்படவுள்ளது. இந்த திரைப்படமானது தேசிய நல்லிணக்கம் மற்றும் ஐக்கியத்துக்கான அலுவலகத்தின் ஏற்பாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

நல்லிணக்கம் மற்றும் இணைந்து வாழ்தலுக்கான கொள்ளையானது தேசிய நல்லிணக்கம் மற்றும் ஐக்கியத்துக்கான அலுவலகத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க வழிகாட்டல்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 116

மிருகங்களும் அரக்கர்களும் இலங்கையில்; தேர்தலின் பின்னர் சிதறியுள்ள அரசாங்கம்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விமர்சகர்களது கருத்துக்களுக்கு அமைய, கடந்த உள்ளுராட்சி தேர்தலானது பேய்ப்படம் பார்த்தது போன்று அமைந்திருந்ததாகவும், அந்த தேர்தலில் சர்ச்சைக்குரிய முன்னாள் ஜனாதிபதி அவரது அரசியல் பயணத்தின் முடிவு என்ற நிலையிலிருந்து மீண்டு வெற்றியீட்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த விடயமானது கடந்த 2015 ஆம் ஆண்டு மக்களது ஆணையின்படி தோல்வியுற்று வெளியேறிய மகிந்த ராஜபக்சவுக்கு மாபெரும் வெற்றியாக அமைந்துள்ளதுடன், அவர் கடந்த 10 வருடங்கள் கறைபடிந்த, ஊழல் நிறைந்த ஆட்சியை நடத்தியிருந்தார். அந்த ஆட்சியை அவர் யுத்தத்தை ஒழித்து நாட்டுக்கு ஒழிய+ட்டிய வருடங்கள் என்று புகழாரம் சூட்டியுள்ளனர்.

அவருடைய கட்சியானது 340 உள்ளுராட்சி சபைகளில் 240க்கு குறையாது வெற்றியைப் பெற்றுள்ளதுடன், இது இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய தேர்தல் மாற்றமென அரசியல் அறிஞர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தேர்தலின் பின்னர் கருத்து தெரிவித்திருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இது தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை வெளிப்படுத்துவதாகவும், எனவே தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் பதவி விலகவேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

எனினும் அது சாத்தியப்படாத விடயம் ஏனெனில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கூட்டரசாங்கம் பிரபலமற்றதாகவும், செயற்றிறன் அற்றதாகவும் இருந்தபோதிலும், நாடாளுமன்றத்தில் தொடர்ந்தும் பெரும்பான்மையைக் கொண்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் 2020 இல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் பங்காளிக் கட்சியான சுதந்திரக் கட்சியானது அதிலிருந்து பிரிவதற்கு தீர்மானித்த போதிலும், ஐக்கிய தேசியக் கட்சி சிறிய கட்சிகளுடன் கூட்டுச்சேர்ந்த ஒரு அரசாங்கமாக இருக்கக்கூடும்.

ஆகவே ஐக்கிய தேசியக் கட்சியானது, ஜனாதிபதியும் முன்னாள் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்சவைத் தோற்கடித்து ஆட்சிக்கு வந்த மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து ஒரு அரசாங்கத்தைக் கொண்டு செல்லவே இவர்கள் விரும்புகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடமிருந்து பதவிகளைப் பறிப்பதற்காக கொண்டுவரப்பட்ட அரசியல் திருத்தச்சட்டங்களின் மூலம், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தப்பிப்பதற்கான வாய்ப்பை ரணில் விக்கிரமசிங்க பெற்றுள்ளார்.

அதன்பிரகாரம் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தை தடைசெய்ய முடியுமே தவிர, அந்த அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான எந்தவொரு அதிகாரமும் ஜனாதிபதிக்கு இல்லை.

எனவே தேர்தல் தோல்வி மூலம் அவமானத்தை சந்தித்துள்ள கூட்டரசாங்கமானது, ஏதாவது காரணத்தைக் கூறி தமக்கு பெருமையைத் தேடிக் கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளனர்.

Comment (0) Hits: 126

அம்பாறையில் கலவரம்; பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்

அம்பாறை நகரில் நேற்று திங்கட்கிழமை ஏற்பட்ட கலவரத்தை அடுத்து இன்று செவ்வாய்க்கிழமையும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு தொடர்ந்தும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அசம்பாவித சம்பம் தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படாத நிலையில், அம்பாறை பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்திவருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

அம்பாறை நகரில் மேற்கொள்ளப்பட்ட இன வன்முறைகளினால் அங்கிருந்த ஒரேயொரு பள்ளிவாசலும் முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்களும் தாக்கப்பட்டுள்ளதுடன், சில வாகனங்களும் எரிக்கப்பட்டுள்ளன.

அம்பாறை நகரிலுள்ள முஸ்லிம் ஹோட்டலில் உணவருந்த வந்திருந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சில இளைஞர்கள், நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு வேளையில் ஹோட்டல் உரிமையாளருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சிறிது நேரம் கடந்த நிலையில் அங்கு திரண்டு வந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்தோர், குறித்த ஹோட்டலையும் அந்தப் பகுதியில் அமைந்துள்ள ஜூம்ஆப் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான பலசரக்கு கடையையும் தாக்கியுள்ளனர்.

பள்ளிவாசலினுள் அத்துமீறி உள்நுழைந்தோர் அங்கிருந்த அல்குர்ஆன் பிரதிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இதன்போது பள்ளிவாசல் மற்றும் வர்த்தக நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் உட்பட சில வாகனங்களும் எரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் பள்ளிவாசலில் தங்கியிருந்த சிலரும் தாக்கப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்படுகிறது.

இந்த வன்முறை சம்பவங்களை தொடர்ந்து அம்பாறை நகரில் பெரும் பதற்றம் நிலவுவதுடன், பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அச்சம் காரணமாக அம்பாறை நகரில் தொழில் நிமித்தம் தங்கியிருந்த முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறியிருப்பதுடன் அங்குள்ள மாவட்ட செயலக மற்றும் அரச அலுவலகங்களில் பணியாற்றுகின்ற முஸ்லிம் உத்தியோகத்தர்கள் கடமைக்கு சமூகமளிக்கவில்லை என அறியமுடிகின்றது.

மூலம் – ஐ.பி.சி தமிழ்

Comment (0) Hits: 585

சட்டம் ஒழுங்கு அமைச்சராக சரத் பொன்சேகா?

சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவியை தற்காலிகமாகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பேசவல்ல தகுதிவாய்ந்த அமைச்சரான சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன, விரைவில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவை சட்டம், ஒழுங்கு அமைச்சராக நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததாலேயே தற்காலிகமாக பிரதமர் அந்தப் பொறுப்பை ஏற்றுள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சட்டம் – ஒழுங்கு அமைச்சராக பிரதமர் தற்காலிகமாகவே நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவும் நேற்று கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தினார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி நடந்துமுடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஆளும் தேசிய அரசாங்கத்தின் இரு பிரதான பங்காளிக் கட்சிகளையும் படுதோல்வியை தழுவச் செய்து வெற்றிவாகை சூடியிருந்தது.

இதனால் ஆளும் தேசிய அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளிடையே கடும் முரண்பாடுகள் ஏற்பட்டதுடன், அரசாங்கத்திற்குள் பாரிய மாற்றமொன்றை ஏற்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய கடும் இழுபறிக்கு மத்தியில் பெப்ரவரி 25 ஆம் திகதியான நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலர் புதிய அமைச்சர்களாக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

இதன்போது சட்டம் ஒழுங்கு அமைச்சராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார். எனினும் தற்போதைய அரசாங்கத்தின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக கடமையாற்றிவரும்  முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவே, சட்டம் – ஒழுங்கு அமைச்சராக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பிரதமர் ரணில் தற்காலிகமாகவே சட்டம் – ஒழுங்கு அமைச்சராக பதவியேற்றுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரான சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பில் வைத்து ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

சரத்பொன்சேகா வெளிநாடொன்றுக்கு சென்றிப்பதால் அவர் வரும் வரை அந்த அமைச்சுப் பதவியை பிரதமர் தற்காலிகமாக பொறுப்பேற்றுள்ளதாகவும் அமைச்சர் ராஜித்த தெரிவித்தார்.

இதற்கமைய இரண்டு வாரங்களின் பின்னர் சரத் பொன்சேகா நாடு திரும்பியதும் சட்டம் – ஒழுங்கு அமைச்சராக பதவியேற்பார் என்றும் குறிப்பிட்ட அமைச்சர் ராஜித,  எவ்வாறாயினும் சரத் பொன்சேகாவை சட்டம்  ஒழுங்கு அமைச்சராக நியமிப்பதற்கு சுதந்திரக் கட்சியின் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்சவுடன் தொடர்ந்தும் உறவுகளைப் பேணிவரும் ஒரு சிலரே சரத் பொன்சேகாவிற்கு சட்டம் – ஒழுங்கு அமைச்சை வழங்குவதற்கு எதிர்ப்பை வெளியிட்டுவருவதாக நேரடியாக குற்றம்சாட்டிய அமைச்சர் ராஜித, அவர்களின் தேவைக்கு ஏற்ப அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்த முடியாது என்றும் குறிப்பிட்டார்.

நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் தேவையான தீர்மானங்களை பிரதமரும் – ஜனாதிபதியும் கலந்துரையாடி எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்த அவர், இதன்போது எந்தவித பக்கச் சார்பும் இன்றி தைரியமாக தீர்மானங்களை எடுத்து அவற்றை நடைமுறைப்படுத்தக்கூடியவரையே சட்டம் – ஒழுங்கு அமைச்சராக நியமிக்க வேண்டும் என்றும் கூறினார்.

முன்னாள் இராணுவத் தளபதியான சரத்பொன்சேகா யாருக்கும் அடிபணியாது தைரியமாக தீர்மானங்களை எடுத்து அவற்றை நடைமுறைப்படுத்தக்கூடிய சிறந்த தலைவர் என்பதை ஏற்கனவே நிரூபித்துக் காண்பித்துள்ளதாகவும் குறிப்பிடும் ராஜித, படையினருக்காக குரல்கொடுத்துவரும் தரப்பினர் சரத் பொன்சேகாவும் நாட்டை மீட்ட படையினருக்கு தலைமை வகித்தவர் என்பதை மறந்துவிடக் கூடாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, சட்டம் – ஒழுங்கு அமைச்சு தற்காலிகமாகவே பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இரண்டு வாரங்களில் அந்த அமைச்சுப் பொறுப்புக்கள் மற்றுமொருவரிடம் வழங்கப்பட்டுவிடும் என்றும் தெரிவித்துள்ள அவர், அதனால் பிரதமருக்கு சட்டம் – ஒழுங்கு அமைச்சை ஒப்படைத்துவிட்டதாக கூறி மக்களை திசை திருப்ப வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அதுமாத்திரமன்றி இன்னும் ஓரிரு வாரங்களில் மேலும் ஒரு அமைச்சரவை மாற்றம் இடம்பெறவிருப்பதாகவும் தெரிவித்த அமைச்சர் திஸாநாயக்க இதன்போது புதிய சட்டம் – ஒழுங்கு அமைச்சர் பதவியேற்பார் என்றும் கூறினார்.

Comment (0) Hits: 174

வடமாகாணசபையின் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு

வடமாகாண சபையின் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட இருவரும் இன்றைய தினம் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளனர்.

மாகாணசபையின் 117 ஆவது அமர்வு இன்று காலை 9 மணியளவில் கைதடியில் அமைந்துள்ள சபையின் கேட்போர் கூடத்தில், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெறுகின்றது.

இதன்போது  வடமாகாண சபையின் புதிய உறுப்பினர்கள் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் மாகாண சபை உறுப்பினர்  இமானுவேல் ஆனோல்ட் தமது பதவியை இராஜினாமா செய்திருந்த நிலையில், அவரது இடத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சபாரட்ணம் குகதாஸ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை தனது மாகாணசபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்த முஸ்லிம் காங்கிரசின் மன்னார் மாவட்ட உறுப்பினர் மொஹம்மம் றைசிற்கு பதிலாக, அக்கட்சி சார்பில் அப்புல் நியாஸ் சினி மொஹம்மட் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் உள்ளூராட்சி சபைத் ரே்தலுக்குப் பின்னரான இன்றைய மாகாண சபை அமர்வின் ஆரம்பத்தில் குறித்த இருவரும் தமது கடமைகளைப்பொறுப்பேற்றுக்கொண்டதுடன், சபை அமர்விலும் தொடர்ந்து பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Comment (0) Hits: 121

ரணிலுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியிடம் இருந்தே நம்பிக்கையில்லா தீர்மானம்?

பிரதமரான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர்.

இந்த தகவலை அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

புத்தளம் - ஆனமடுவ தொகுதியின் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களுடனான நேற்றைய சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதற்கான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும், வெகுவிரைவில் இந்த யோசனையை சபைக்கு கொண்டுவருவதாகவும் அவர் கூறினார்.

கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்கு வங்கிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்க பொதுஜன முன்னணி பெரும் சவாலாக அமைந்தது.

இந்தப் பின்னடைவுக்கு பிரதமரும், கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவே காரணம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களும், அதேபோல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும் குற்றம் சுமத்திவந்தனர்.

இதனையடுத்து பிரதமர் பதவியிலிருந்து அவர் விலகவேண்டும் என்ற எதிர்ப்பலைகள் எழுந்த போதிலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இராஜினாமா செய்யவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயே அவரது தலைவர் பதவி பறிக்கப்பட்டு இளைய சந்ததியினருக்கு அப்பதவி வழங்கப்பட வேண்டும் என்ற யோசனை கடந்த சில ஆண்டுகளாகவே இருந்துவந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கட்சிக்குள் எதிர்ப்பலை எழுந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 133

Page 73 of 82