V2025

இலக்கை நோக்கி கடலில் குதித்துள்ள இரணைதீவு மக்கள்

இலங்கை கடற்படையினரால் அடாத்தாக கைப்பற்றப்பட்டுள்ள தமது பூர்வீக நிலத்தை விடுவிக்குமாறு வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இரணைதீவு மக்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் நூற்றுக்கணக்கான மக்கள் படகுகள் மூலம் இரணைதீவை அண்மித்த பகுதிக்கு சென்று தமது பகுதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

கிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட இரணைதீவு பகுதி மக்கள் தமது காணியை மீட்டுத்தர வலியுறுத்தி கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் திகதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் எதிர்வரும் மே மாதம் 1ஆம் திகதியுடன் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 1 வருடம் நிறைவடையவுள்ள நிலையில் பல தரப்பினரிடமும் கோரிக்கைகளை முன்வைத்து தமது பிரச்சனைகளை எடுத்துக் கூறியும் இதுவரை எவ்வித தீர்வும் கிடைக்கப் பெறாத நிலையில் மக்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இரணைமாதா நகரிலிருந்து இன்று காலை 9.30 அளவில் சுமார் 50க்கும் மேற்பட்ட படகுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இரணைதீவை நோக்கிச் சென்றுள்ளனர்.

மக்களது இந்தப் போராட்டத்தை அடுத்து அங்கு அதிகளவிலான கடற்படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ள போதிலும் அது குறித்து அலட்டிக்கொள்ளாது மக்கள் தமது நிலமீட்பு போராட்டத்தில் துணிவுடன் ஈடுபட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை இந்த மக்களுடன் 2 படகுகளில் 15க்கும் மேற்பட்ட அருட்தந்தையர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

IMG d1dc956339169d69303e5700267e400b V

தொடர் நிலமீட்பு போராட்டம்

கடற்படையினரால் கபளீகரம் செய்யப்பட்டுள்ள, கடல்வளத்துடன் கூடிய காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, இரணைதீவு இராணுவ முகாமுக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் பின்னர் இரணைமாதா நகர் தேவலாயத்திற்கு முன்னால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

மீன்பிடியை வாழ்வாதாரமாகக் கொண்ட இரணைதீவு கிராம மக்கள் கடந்த 1982 ஆம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக அப்பகுதியிலிருந்து வெளியேறினார்.

இவ்வாறு அங்கிருந்து வெளியேறிய 176 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தற்போது 417 குடும்பங்கள் ஆகியுள்ள நிலையில், தற்போது ஓலைத்தொடுவாய் முதல் வலைப்பாடு வரை சிதறுண்டு வாழ்ந்துவருகின்றனர்.

பரம்பரை பரம்பரையாக தாம் தொழில் புரிந்த பகுதியை கையகப்படுத்தியுள்ள இலங்கை கடற்படை, அந்த பகுதிகளை தம்மிடம் வழங்க மறுத்து வருவதாக இரணைதீவு மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமது பூர்வீக நிலம் தமக்கு வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள இரணைதீவு மக்கள், மீள்குடியேற்றப்பட்ட காலம் முதல் போராடி வருவதாகவும் எனினும் இதுவரை எவ்வித பயனும் இல்லை என்று கவலை வெளியிட்டுள்ளனர்.

IMG c5d19f9804f35c3839828a7875252b0b V

 

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found