V2025

சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் மாற்றம் - ஜனாதிபதி

“ தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் அமைச்சரவை மறுசீரமைக்கப்படும். இந்தப் பணியை திருப்திகரமாக செய்துமுடித்தால் மாத்திரமே புத்தாண்டை நிம்மதியாக கொண்டாடமுடியும்” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்துள்ளார்.

தேசிய அரசின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் கூட்டத்தை புறக்கணித்ததால் பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சர்கள் மாத்திரமே பங்கேற்றிருந்தனர்.

இதன்போது பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, கூட்டரசுக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடு உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் சம்பந்தமாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் பங்கேற்காவிட்டாலும், அமைச்சரவையால் இவ்வாரம் (நேற்று) எடுக்கப்படவேண்டிய தீர்மானங்கள் கட்டாயம் எடுக்கப்படவேண்டும். அது எக்காரணம்கொண்டும் ஒத்திவைக்கப்படக்கூடாது என்று ஐக்கிய தேசியக்கட்சி அமைச்சர்கள் சுட்டிக்காட்டினர். இதன்படி நிகழ்ச்சிநிரலிலிருந்த யோசனைகள் நிறைவேற்றப்பட்டன.

அதன்பின்னர் அமைச்சரவை மறுசீரமைப்பு சம்பந்தமாகவும் பேசப்பட்டுள்ளது. அவ்வேளையிலேயே புத்தாண்டுக்கு முன்னர் மறுசீரமைப்பு இடம்பெறும் என்ற தகவலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

“ நாட்டில் அரசியல் ஸ்தீரமற்றநிலை ஏற்பட்டுள்ளது. அரசின் போக்கு என்னவென்பது சம்பந்தமாக அதிகாரிகளுக்கும் தெரியாமல் இருக்கின்றது. இவ்வாறானதொரு நிலையில் புத்தாண்டை நிம்மதியாக கொண்டாடமுடியாது. எனவே, புத்தாண்டு உதயமாவதற்கு முன்னர் அமைச்சரவையில் உறுதியானதொரு மாற்றத்தை ஏற்படுத்துவேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.

இதன்பிரகாரம் எதிர்வரும் 13 ஆம் திகதிக்குள் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என்றும், புத்தாண்டு உதயமானதும், கடமைகளை பொறுப்பேற்கும் சுபவேளையில் அமைச்சுகளின் பொறுப்புகளை அமைச்சர்கள் ஆரம்பிக்கும் வகையில் ஏற்பாடுகள் இடம்பெறும் என்றும் நம்பகரமாக அறியமுடிகின்றது.
புத்தாண்டுக்கு முன்னர் அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளதால் , புத்தாண்டைமுன்னிட்டு ஊருக்கு புறப்பட தயாரான அமைச்சர்கள் சிலர் கொழும்பிலேயே முகாமிட்டுள்ளனர் என்றும், முக்கிய அமைச்சுப் பதவிகள் கைமாறவுள்ளன என்றும் தெரியவருகின்றது.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found