V2025

சர்வதேச சட்டங்களை மதித்து செயற்பட வேண்டும்

சர்வதேச சட்டங்களை மதித்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை இலங்கையின் முப்படைகளின் தளபதிகள் உட்பட உயர் நிலை படை அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியிருக்கின்றார்.

ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையணிக்காக படையினரை அனுப்பி வைக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையுடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையை இலங்கை இராணுவம் மீறியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றம்சாட்டியிருந்த நிலையிலேயே இலங்கை அரச தலைவர் இராணுவத்தினர் மத்தியில் ஆற்றிய உரையின் போது இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கின்றார்.

சர்வதேச சட்டங்களை மதிக்குமாறு ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோரிக்கை

இலங்கை இராணுவத்தின் மாதுரு ஓயா விசேட அதிரடிப்படை இராணுவ பயிற்சிப் பாடசாலையில் பயிற்சி பெற்றவர்கள் வெளியேறும் நிகழ்வு நேற்று முற்பகல் முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.

மாதுரு ஓயா இராணுவ பயிற்சிப் பாடசாலையின் 48 ஆவது ஆரம்ப பயிற்சிப் பாடநெறியை பயின்ற ஏழு அதிகாரிகளும் ஏனைய பதவி நிலைகளைச் சேர்ந்த 189 பேரும் பயிற்சிகளை நிறைவுசெய்து நேற்றைய தினம் வெளியேறினர்.

பேண்ட் வாத்தியத்துடன் பயிற்சிகளை முடித்துக்கொண்ட விசேட அதிரடிப்படையினரின் அணிவகுப்பும் அதேவேளை பரசூட் கண்காட்சியும் இடம்பெற்றது.

இதனையடுத்து விசேட அதிரடிப்படை பயிற்சிகளை மிகச் சிறப்பாக முடித்துக்கொண்ட படையினருக்கு விருது வழங்கி வைத்த ஜனாதிபதி அங்கு கூடியிருந்த படையினர் மத்தியில் உரையாற்றுகையில் சர்வதேச சட்டங்களை மதித்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

“ இராணுவத்திற்கு இருக்க வேண்டிய அடிப்படைக் காரணிகளான ஒழுக்கம், தைரியம், அர்ப்பணிப்பு, உண்மை மற்றும் நேர்மை ஆகியன மிகவும் முக்கியமானவை. நீங்கள் இந்த இடத்தில் செய்துகொண்ட சத்தியப்பிரமாணத்தை நான் உன்னிப்பாக கவனித்தேன். இந்த சத்தியப்பிரமாணத்தில் இந்த அனைத்து விடயங்களும் உள்ளடங்கியிருந்தன. நாம் தேசிய ரீதியிலும் அதேபோல் சர்வதேச ரீதியிலும் மதிக்கப்படுபவர்களாகவும் ஏற்றுக்கொள்ளப்படுபவர்களாகவும் இருக்க வேண்டும் என்றால் இராணுவத்திற்குரிய இந்த அடிப்படைக் காரணிகளை முழுமையாக கடைபிடிப்பவர்களாக நாம் இருக்க வேண்டும்.

எமது இராணுவம் ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச ரீதியில் அங்கரிக்கப்பட்ட இராணுவமாக மாறியிருக்கின்றது. அதனால்தான் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையணிக்காக எமது படையினரை அனுப்புவதற்கான அனுமதி இலங்கை அரசுக்கு கிடைத்திருக்கின்றது. அதனால் நாம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஒழுக்கத்தை முழுமையாக கடைபிடிப்பவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

லெபனானில் பணியில் ஈடுபட்டுள்ள ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையணியுடன் இணைந்துகொள்வதற்காக இலங்கை இராணுவத்தினரால் இறுதியாக அனுப்பி வைக்கப்பட்ட 49 பேரைக் கொண்ட இராணுவப் படையணியை ஐக்கிய நாடுகள் சபையுடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்பாட்டிற்கு அமைய முன்கூட்டிய ஆய்வுக்கு உட்படுத்தவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இராணுவம் மீது கடந்தவாரம் குற்றம்சாட்டியிருந்தது.

இந்த நடவடிக்கை மூலம் இலங்கை இராணுவம் சர்வதேசத்துடனான உடன்படிக்கையை அப்பட்டமாக மீறியுள்ளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரான கலாநிதி தீபிக்கா உடுகம ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்திருந்த கடிதத்தில் குறிப்பிட்டு கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.

இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு ஒருவாரம் பூர்த்தியாகாத நிலையில் இராணுவத்தினர் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி சர்வதேச சட்டங்களை மதித்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கின்றார்.

இதேவேளை நிகழ்வின் இறுதியில் ஜனாதிபதி தனது விஜயத்தை நினைவுகூரும் முகமாக மாதுருஓய விசேட அதிரடிப்படை இராணுவ பயிற்சிப் பாடசாலை வளாகத்தில் நாக மரக்கன்று ஒன்றையும் நாட்டிவைத்ததுடன், அங்கு அமைந்துள்ள மூலிகைப் பூங்காவையும் பார்வையிட்டார்.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரத்ன, பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, மாதுருஓயா இராணுவ பயிற்சிப் பாடசாலையின் கட்டளைத் தளபதி கேர்ணல் எம்.ரி.யு. மகலேக்கம் ஆகியோர் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரிகள் கலந்துகெண்டிருந்தனர்.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து மாதுரு ஓயா மீனவர் கிராமத்திலுள்ள கத்தோலிக்க தேவாலயத்தின் புதிய கட்டிடத்தை திறந்துவைக்கும் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

‘எழுச்சிபெறும் பொலன்னறுவை’ மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வணக்கத் தலங்களை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், மாதுரு ஓயா மீனவர் கிராமத்திலுள்ள கத்தோலிக்க தேவாலயத்திற்கான புதிய கட்டடம், சுமார் 60 லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

மீனவர் கிராமத்திலுள்ள மக்களின் வீட்டுப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்துகொண்டார். இதனையடுத்து மாதுருஓயா மீனவர் கிராம மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

அதேவேளை குறித்த பிரதேசத்திலுள்ள பிள்ளைகளின் கல்வி சுகாதாரப் பிரச்சினை உள்ளிட்ட ஏனைய தேவைகளையும் கண்டறிந்து நிறைவேற்றிக் கொடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

இந்த நிகழ்வில் பிரதேசத்தின் மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found