V2025

முடிவுகள் தாமதமாகும் அறிகுறி; சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட தேர்தல் பெறுபேறுகள் உண்மையானவை அல்ல - தேர்தல் ஆணையாளர்!

சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வெளியிடப்பட்டு வரும் தபால்மூல வாக்களிப்பின் முடிவுகள் எவையும் அதிகாரபூர்வமற்றவை என தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

சமூக இணையத்தளங்களில் பரிமாறப்பட்டு வரும் தேர்தல் பெறுபேறு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"இன்று (16) இரவு 9.40 மணியளவில் அனைத்து தபால் வாக்குகளும் வாக்குகள் எண்ணப்படும் மத்திய நிலையங்களில் அவை இருந்த கடித உறைகள் அகற்றப்பட்டு கணக்கிடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சில வாக்குகளை எண்ணும் மத்திய நிலையங்களில் தபால் மூல வாக்குகள் கணக்கிடும் பணி இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இதுவரையில் சமூக இணையத்தளங்கள் ஊடாக உத்தியோகபூர்வ மற்றும் தபால் மூல வாக்குகள் என தெரிவிக்கப்பட்டு, வெளியிடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களிலும் உள்ள பெறுபேறுகள் உண்மையானவை அல்ல.

இரத்தினபுரி, கேகாலை, பதுளை ஆகிய மாவட்டங்களில் இன்று மாலை பெய்த மழையின் காரணமாக சிறிய அளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள வாக்குகளை எண்ணும் மத்திய நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளை எடுத்து செல்வதில் தடை ஏற்பட்டது.

சில வாக்கு எண்ணப்படும் மத்திய நிலையங்களில் வாக்குகள் எண்ணும் பணி இரவு 10 மணிக்கு பின்னரே ஆரம்பிக்கப்பட்டது. இதன் காரணமாக இந்த மாவட்டங்களின் பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படும்.

இதேபோன்று, வாக்கு பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்ட வாகனம் ஒன்று திடீர் விபத்துக்குள்ளானது. இதனால் வாக்கு பெட்டிக்கோ, அதிகாரிகளுக்கோ பாதிப்பு ஏற்படவில்லை. இந்த அதிகாரிகளும் பாதுகாப்பான முறையில் பதுளை வாக்குகள் எண்ணும் மத்திய நிலையத்திற்கு சென்றுள்ளனர். இதேபோன்று வாக்கு பெட்டிகளும் பாதுகாப்பான முறையில் எடுத்து செல்லப்பட்டுள்ளன."

தேர்தல் ஆணையாளரின் இந்த அறிவிப்பினால், கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவான சில சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட போலிச் செய்திகள் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found