V2025

உங்கள் வாக்கை சரியாக பயன்படுத்துவது எவ்வாறு?

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை நடைபெறப் போகின்றது. இத்தேர்தலை எதிர்கொள்ள நாடு தயாராகி விட்டது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை 19வது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி நெகிழ்வு கண்டிருந்தாலும் அது இன்னும் வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றது. சில வேளைகளில் உயர்நீதிமன்றம் தலையிட வேண்டியும் இருப்பதை கடந்த காலங்களில் காண முடிந்தது.

எனவே, இன்னும் எமது நாட்டில் ஜனாதிபதிப் பதவி என்பது அதிகாரம் மிகுந்ததாகவே நோக்கப்படுகின்றது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை 1978ஆம் ஆண்டில் செயல் வடிவம் பெற்றது.

ஆனாலும், ஜனாதிபதித் தேர்தல் முதன் முறையாக 1982இலேயே இடம்பெற்றது. இதில் ஜே.ஆர் ஜயவர்தனா வெற்றியீட்டி மீண்டும் ஜனாதிபதியானார். இரண்டாவது ஜனாதிபதித் தேர்தல் 1988ஆம் ஆண்டு நடந்தது. இத்தேர்தலில் போட்டியிட்ட ரணசிங்க பிரேமதாச  வெற்றி ஈட்டினார்.  மலையக சமூகமும் இத்தேர்தலில் அவருக்கு ஆதரவாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தோல்வியடைந்தார். மூன்றாவது ஜனாதிபதித் தோதலில் (1994) 62.28வீத வாக்குகளைப் பெற்று சந்திரிகா குமாரதுங்க அமோக வெற்றியீட்டினார். இதுவே இற்றைவரை இடம் பெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் ஒரு வேட்பாளர் பெற்ற ஆகக் கூடிய சதவீதமாகும்.

2005இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அனைத்து மலையக மக்களும் வாக்களிக்கும் உரிமை பெற்றிருந்தார்கள். இத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவும் ரணில் விக்கிரமசிங்கவும் மோதிக் கொண்டார்கள். வென்றவர் மஹிந்த ராஜபக்ஷ. ஆனால் நுவரெலியா மாவட்டத்தைப் பொறுத்தவரை அவர் பெற்ற வாக்குகள் 1,47210. ஆகும்.  ரணில் விக்கிரமசிங்க 1,52836வாக்குகளைப் பெற்றிருந்தார். எனினும் வடக்குத் தமிழர்கள் தேர்தலில் வாக்களிக்காமல் புலிகளால் தடுக்கப்பட்டதால் ரணில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

2010இல் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் களம் இறங்கிய மஹிந்தவுக்கு எதிராக  சரத் பொன்சேகா போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

அதன் பின்னர் 2015தேர்தலில் மஹிந்த தோல்வியடைந்து மைத்திரிபால ஜனாதிபதியானார்.

நாளை மீண்டும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இம்முறை ஜனாதிபதித் தேர்தலில்  ஒரு கோடி 59இலட்சம் பேர் வரை வாக்களிக்கும் தகுதி பெறுகின்றனர். 2017ம் ஆண்டு பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையிலேயே வாக்காளர் இடாப்பு திருத்தப்பட்டு இத்தேர்தல் நடைபெறுகின்றது.

இத்தேர்தலில் முதன் முறையாக வாக்களிக்கும் வாய்ப்புப் பெற்றுள்ளேர் தொகை 9இலட்சம் ஆகும். இனரீதியாக கிடைக்கப் பெறும் வாக்குகளும் மிதக்கும் வாக்குகளும் இத்தேர்தலில் தீர்க்கமானவையாக அமையப் போகின்றன என்பதே அரசியல் அவதானிகளின் கருத்தாக இருக்கின்றது.

மொத்த வாக்குகளில் 15இலட்சம் வாக்குகள் மலையக மக்களின் வாக்குகளாகக் காணப்படுகின்றன.  இரு வேட்பாளர்கள்தான் இங்கு கவனத்துக்கு உரியவர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் இருவரில் யாரோ ஒருவர்தான் தெரிவு செய்யப்பட இருக்கிறார்.

இத்தேர்தலுக்காக பயன்படும் வாக்குச் சீட்டின் நீளம் 26அங்குலமாகும். தேர்தல் வரலாற்றில் முதன் முறையாகவே இவ்வளவு நீளமான வாக்குச் சீட்டு பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதில் 35வேட்பாளர்களது பெயர் மற்றும் சின்னங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். இதனால் உடனடியாக தமது விருப்புக்குரியவரைத் தெரிந்து புள்ளடி இடுவது சற்று தாமதமான காரியமாகவே இருக்கும். குறிப்பாக மலையக மக்கள் குழப்பமடைய நேரிடலாம்.

எனினும் சிறுபான்மைச் சமூகங்களுக்கு இத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால் வாக்களிப்பது சம்பந்தமான சில விபரங்களைக் கருத்திலும் கவனத்திலும் கொள்ள வேணடியது அவசியமாகின்றது.

வாக்காளர் அட்டைகள் அநேகமாக இந்நேரம் வாக்காளர்களின் கரங்களுக்கு வந்து சேர்ந்திருக்கும். பெருந்தோட்டப் பகுதிகளுக்கு வாக்காளர் அட்டைகள் உரிய காலத்தில் விநியோகிக்கப்படுவது இல்லை என்பது நெடுநாளைய குற்றச்சாட்டு ஆகும். இம்முறையும் அக்குற்றச்சாட்டு கடந்த வாரம் தெரிவிக்கப்பட்டது. இதற்காக தொழிலாளர்களை அலைகழிக்கச் செய்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

 வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்கள் கவலைப்படத் தேவையில்லை. உங்கள் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஏதாவது ஒரு ஆவணத்தை எடுத்துக் கொண்டு வாக்களிப்பு நிலையங்களுக்குப் போகத் தவறாதீர்கள். வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் இருக்குமாயின் வாக்காளர் அட்டை இல்லாவிட்டாலும் நீங்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவீர்கள் என்று தேர்தல்கள் திணைக்களம் கூறியிருக்கின்றது.

 உங்களிடம் தேசிய அடையாள அட்டைஇல்லை என்றால் கடவுச் சீட்டு (பாஸ்போட்), சாரதி அனுமதிப் பத்திரம் (லைசன்ஸ்),ஓய்வூதிய அட்டை (பென்சன் கார்ட்), முதியோர் அடையாள அட்டை, தேர்தல் திணைக்களத்தால் விநியோகிக்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை போன்றவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துச் சென்று வாக்கினைப் பதிவு செய்ய முடியும்.

இவை தவிர எந்தப் பத்திரங்களும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டது என்பதை மறந்து விடாதீர்கள்.

அத்துடன் ஜனாதிபதித் தேர்தலில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பதை நன்கு விளங்கிக் கொள்வது அவசியமாகின்றது. இது ஒன்றும் சிரமமான காரியம் அல்ல. ஆனால் இம்முறை 35வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், அவர்களின் பெயர்களையோ சின்னங்களையோ கண்டுபிடிப்பதில் தடுமாற்றம் எழுவது இயல்பே ஆகும். இதற்கு வழமையை விட நேரம் எடுக்க வேண்டி நேரிடலாம்.

இதற்காகவே இதுவரை காலமும் காலை 7மணி முதல் மாலை 4மணிவரை இடம்பெற்ற வாக்களிப்பு நடைமுறை இத்தடவை மாலை 5மணிவரை நீடிக்கப்படுள்ளது. அதாவது 1மணிநேர அதிகரிப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. இதைப் பயன்படுத்தி நிதானத்தைக் கடைப்பிடித்து உங்கள் விருப்பத்துக்குரிய வேட்பாளரின் சின்னத்தைக் கண்டறிந்து புள்ளடி இடுவதே புத்திசாலித்தனம்.

ஒவ்வொரு வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னம் பொறிக்கப்பட்டுள்ள கோட்டிற்கு எதிரே இருக்கும் கூட்டில் புள்ளடி இட  ​வேண்டும். இதற்காக உங்களது விருப்புக்குரிய வேட்பாளரது சின்னத்தை நன்றாக மனதில் பதிய வைத்துக் கொள்வது முக்கியம்.இப்படி ஒரு வேட்பாளரை மட்டும் அடையாளப்படுத்தி வாக்குச் சீட்டைப் பெட்டியில் போட்டால் அவருக்கு உங்கள் வாக்கு உறுதியாகி விடும்.ஆனால் ஜனாதிபதித் தேர்தலில் 2ஆம், 3ஆம் வேட்பாளர் தெரிவுகளுக்கும் இடமிருக்கின்றது.

2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 140,925ஆகும். இவற்றில் அதிகமான வாக்குகள் மலையகத்திலிருந்து நிராகரிக்கப்பட்டவை என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள  வேண்டும். வாக்குச் சீட்டில் குறிப்பிட்ட வேட்பாளருக்கு புள்ளடி அல்லது ஒன்று(1) என்னும் அடையாளம் இடலாம். விருப்பு வாக்கு பயன்படுத்த வேண்டுமாயின் வேட்பாளர்களின் பெயர், சின்னத்துக்கு எதிரே உள்ள கூட்டில்  இலக்கங்கள் மட்டுமே எழுதப்பட்டிருக்க வேண்டும். இதனை விடுத்து வேறு ஏதும் எழுதப்பட்டிருக்குமானல் அது நிச்சயம் செல்லுபடியாகாத வாக்காகவே கொள்ளப்படும்.

வேட்பாளர் ஒருவர் தெரிவு செய்யப்பட 50வீதத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெற வேண்டியுள்ளது. வாக்குகள் கணக்கெடுப்பின் போது 50உம் மேலதிக வாக்கும் பெறும் வேட்பாளரே வெற்றி பெறுவராக இருப்பார். எந்தவொரு வேட்பாளரும் 50வீதத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெற முடியாது போகுமானால் மட்டுமே 2ஆம், 3ஆம் தெரிவுகள் கணக்கில் எடுக்கப்படும்.

வாக்குச் சீட்டில் வேட்பாளரின் பெயரைத் தேடிக் கொண்டிருப்பதை விட அந்த வேட்பாளர் போட்டியிடும் சின்னத்தை மட்டும் ஞாபகம் வைத்துக் கொண்டு வாக்களிப்பது இலகுவாக இருக்கும். 

வரலாற்றிலேயே மிக முக்கியமானதொரு தேர்தலாக இந்த ஜனாதிபதித் தேர்தல் அமைந்துள்ளது. எனவே மக்கள் தெளிவுடன் தமது பங்களிப்பை வழங்க வேண்டியுள்ளது.  தமக்கான ஜனநாயக கடமையைப் புறக்கணிப்பது தவறு. அதை ஏனோதானோவென்று பயன்படுத்துவது புத்சாலித்தனம் ஆகாது. வேட்பாளர்களது கடுமையான போட்டிகளுக்கு இடையில் நடைபெறும் இத்தேர்தல் சிறுபான்மை இனங்களுக்கு சவால் மிக்கதாகவே காணப்படுகின்றது.

இதை மனதில் வைத்துக் கொண்டு நாளை நேரகாலத்தோடு வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லுங்கள். உங்கள் ஆளடையாளத்தை உறுதி செய்யும் ஆவணத்தை மட்டும் மறந்து விடாதீர்கள். வாக்குச் சீட்டு கைக்கு வந்ததும் உங்களை அறியாமலே பதற்றம் ஏற்படலாம். சமாளித்துக் கொள்ளுங்கள். ஞாபத்தில் வைத்துக் கொண்டுள்ள வேட்பாளரது சின்னத்துக்கு எதிரே உள்ள கூட்டில் புள்ளடி இடுங்கள். வாக்குச் சீட்டை மடித்து வாக்குப் பெட்டியில் இடுங்கள். உங்களது ஜனநாயக கடமையை உரிய முறையில் நிறைவேற்றிய திருப்தியோடு வீடு திரும்புங்கள்.

தேவையற்ற வாக்குவாதங்கள், கருத்து மோதல்கள் அவசியமற்றவையாகும். தேர்தலில் உங்களுக்கு ஜனநாயக உரிமை உள்ளது. நீங்கள் விரும்பும் எவருக்கும் ஆதரவளிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு.அந்த உரிமை அந்தரங்கமானது. ஏனையோரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.

சாரங்கன்...

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found