V2025

'கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை' - ரிஷாட்!

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவோ அல்லது ஏதேனும் மாற்றங்களுக்கு உட்படுத்தப்படவோ இல்லை என கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

எமது நாடு மிகவும் முக்கியமானதும், நெருக்கடியானதுமான தேர்தலொன்றுக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் தருணத்தில், கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதென்பது திட்டமிடப்பட்ட சதி என்பதுடன், அது அரசாங்கத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில் செய்யப்படுவதுமாகும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நுகர்வோர் விவகார  அதிகார சபையின் அனுமதியின்றி கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்தே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

"உரிய அமைச்சு மற்றும் அதிகாரசபைகளின் அனுமதியின்றி, சட்டவிரோதமான முறையில் இவ்வாறான விலை அதிகரிப்பில் கோதுமை மா வழங்குனர்கள் எவரேனும் தொடர்புபட்டிருப்பின், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். 

சட்டவிரோதமாக விலையதிகரிப்பைச் செய்வதனூடாக நுகர்வோருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவோர் தொடர்பில் கண்காணிக்குமாறு, அவர் கடந்த 11 ஆம் திகதி நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.

இதேவேளை, இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளின் ஈடுபடுவோருக்கு 2003 ஆம் ஆண்டு 60 ஆம் பிரிவின் 9 ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ், ஒருவருட  சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும் என்பதுடன், 5000 - 50,000 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found