கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட குண்டுதாரிகளுக்கு, வெடிகுண்டுகளை தயாரிப்பதற்காக தனது செப்புத் தொழிற்சாலையில் இருந்து உலோகங்களை (செப்பு) வழங்கிய, ஷங்கிரி-லா ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட குண்டுதாரியின் மாமனாரான பிரபல கோடீஸ்வர வர்த்தகர் அலாவுதீன் என்பவரினால், இன்று மன்னார் பிரதேசத்தில் நடைபெற்ற கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு பூரண அனுசரணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
அவரின் ஊடாக மன்னாரில் உள்ள சுமார் 1500 தமிழர்களுக்கு, மேற்குறிப்பிட்ட கூட்டத்தில் பங்கேற்பதற்காக முஸ்லிம்கள் அணியும் தொப்பிகளும் 1500 ரூபா பணமும் வழங்கப்பட்டு, அவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. அத்துடன், கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இன்றைய தினம் அலாவுதீனின் மன்னார் வீட்டில் வைத்து விருந்துபசாரமும் வழங்கப்பட்டுள்ளது.
பிரபல அரசியல் வர்ணனையாளர் கலாநிதி தயான் ஜயதிலக்க, ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற அன்றைய தினத்திலிருந்தே, குறித்த தாக்குதலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தொடர்பு இருப்பதாக பலமுறை கூறிவந்தார். இன்று இடம்பெற்ற இந்த சம்பவத்தினால் கலாநிதி தயான் ஜயதிலக்கவின் கூற்று உண்மையானது என மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் இப்போது கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காக செயல்படுகிறார்கள் என்பதும் இதன்மூலம் தெளிவாகிறது.