V2025

"MCC அமெரிக்க ஒப்பந்தம்; பாதக விடயங்கள் இருந்தால் அரசியலிருந்து விடைபெறுவேன்" - மங்கள! (VIDEO)

மில்லேனியம் சவால் ஒத்துழைப்பு (MCC) ஒப்பந்தத்தினூடாக அமெரிக்காவுக்கு ஒரு அங்குலம் காணியாவது வழங்கப்படுவதாகவோ அல்லது நாட்டுக்கு பாதகமான எந்த ஒரு வசனமாவது ஒப்பந்தத்தில் இருப்பதாகவோ நிரூபித்தால் அமைச்சுப் பதவியிலிருந்து மட்டுமன்றி அரசியலிலிருந்தே ஒதுங்குவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

நிதி அமைச்சில் நேற்று(06) நடைபெற்ற விசேட ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்,

"2006 செப்டம்பரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஜோர்ஜ் புஷ்ஷும் எம்.சி.சி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இருந்த போதும் வெள்ளை வேன் கலாசாரம், ஆட்கடத்தல் என்பன உக்கிரமடைந்ததால் அமெரிக்கா இந்த உதவியை வழங்குவதை நிறுத்தியது.

உண்ணாவிரதமிருந்த பிக்குவுக்கு கோட்டாபய வழங்கிய கடிதத்தில் ஒப்பந்தம் செய்ய மாட்டோம் என எங்கும் குறிப்பிடப்படவில்லை.

சுவசெரிய இலவச அம்பியூலன்ஸ் சேவையை ஆரம்பித்தபோது இந்திய ஆக்கிரமிப்பு இடம்பெறப்போவதாக மருத்துவர் சங்கம் எதிர்த்தது. ஆனால் அந்த சேவை இன்று மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

தற்பொழுது அமெரிக்காவுடனனா எம்.சி.சி ஒப்பந்தம் தொடர்பில் பிசாசொன்றை காட்டி பயமுறுத்த முயல்கின்றனர். ஒரு பேர்ச் 180.10ரூபா வீதம் அமெரிக்காவுக்கு காணி வழங்கி அமெரிக்க இராணுவத்தை கொண்டுவரப் போவதாக நாமல் ராஜபக்ஷவின் வழிகாட்டலில் சமூக ஊடகங்களினூடாக பிரசாரம் நடைபெறுகிறது.

தேர்தலுக்கு முன்னர் அவசரப்பட்டு ஒப்பந்த செய்யப் ​போவதாக குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால் பல மாதங்கள் அமைச்சரவையில் ஆராய்ந்த பின்னரே அதற்கு அனுமதி வழங்கப்பட்டது. டிசம்பர் 2ஆவது வாரத்தில் எம்.சி.சி. பணிப்பாளர் சபை கூடுகிறது. அதற்கு முன்னதாக அமைச்சரவையின் அனுமதியாவது பெற்றுத்தருமாறு கோரப்பட்டது.

தாமதமானால் நாட்டுக்கு கிடைக்க இருக்கும் நன்மைகளை இழக்க நேரிடும். பாராளுமன்ற அனுமதி கிடைத்த பின்னரே இந்த ஒப்பந்தம் செயற்படுத்தப்படும். இதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அனுமதி பெற சில மாதங்கள் செல்லும்.

போக்குவரத்து நெரிசல் கட்டுப்பாடு, காணி நிர்வாகம் என்பவற்றிற்கே இந்த உதவி வழங்கப்படுகிறது.

நாட்டுக்கு கிடைக்க இருக்கும் நன்மைகளை தடுக்க எதிரணி முயல்கிறது.

போக்குவரத்து நெரிசலால் வருடாந்தம் 8.1 டிரில்லியன் ரூபா பணம் விரயமாகிறது.

இது 2035 ஆகும் போது அதிகரிக்கும். மகாவலி நிர்மாணிக்க செலவிடப்பட்ட நிதியில் 13 வீதத்தை அமெரிக்கா தான் வழங்கியது. எமது 25.9 வீதமான ஏற்றுமதிகள் அமெரிக்காவிற்கே செல்கிறது" என்றார்.

அமெரிக்கா அறிக்கை

ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னரே மிலேனியம் செலன்ஞ் கோப்பரேஷன் ஒப்பந்தம் தொடர்பில் இலங்கையுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக அமெரிக்கா நேற்று அறிவித்துள்ளது.

இதனடிப்படையில், ஒப்பந்தம் கைச்சாத்திடல் மற்றும் பாராளுமன்ற அங்கீகாரத்தைப் பெறல் ஆகிய செயற்பாடுகளை எதிர்வரும் 16ஆம் திகதிக்குப் பின்னர் இலங்கையுடன் முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவிக்கின்றது.

இது தொடர்பாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

மிலேனியம் செலன்ஞ் கோப்பரேஷன் மூலம் 480 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமையை அமெரிக்கா வரவேற்கின்றது. இது இலங்கையில் வாழும் 11மில்லியன் மக்களுக்கு பயனளிப்பதாக அமையும்.

இந் நிதியுதவியைக் கொண்டு முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மூலம் நாட்டின் போக்குவரத்து நெரிசலை பெரிதும் குறைக்கலாம். இது பொது போக்குவரத்தையும் மாகாண வீதிகளையும் மேம்படுத்துவதாக அமையும்.

இலங்கையின் காணி நிர்வாகத்தை மேம்படுத்தும். இந் நிதியுதவி காரணமாக அமெரிக்கா எந்தவொரு காணிக்கும் உரித்துடையதாகவோ குத்தகையை கொண்டதாகவோ இருக்காது. இந்த 05 வருட திட்டத்தை இலங்கையே மேற்பார்வை மற்றும் முகாமைத்துவம் செய்யும்.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found