V2025

தமிழ் வேட்பாளருக்கு வாக்களித்தால் சர்வதேசம் எங்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கும்!

இப்போது சிங்கள பௌத்த வீரன் யார்? கோட்டாவா? சஜித்தா? என்ற போட்டி இடம்பெறுகின்றது. இந்த நிலையில் கொலைகார கும்பல் கோட்டபாய ராஜபக்ஷவுக்கு இப்பொழுது தமிழ் மக்களின் வாக்கு தேவைப்படுகின்றது. எனவே, தமிழ் மக்கள் தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, கல்லடி பகுதியில் நேற்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது இலங்கையின் 8 வது ஜனாதிபதி தேர்தல். கடந்த 7 ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் எதிர்பார்த்த அரசியல் தீர்வு கிடைக்காமல் நாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம். எனவே, எங்களுக்கு அவரையோ இவரையோ வெல்ல வைக்க வேண்டும், தோற்க வைக்க வேண்டு மென்பதில்லை. எங்களைப் பொறுத்தளவிலே நாங்கள் ஈழத் தமிழர்கள். இன்று எங்களுடைய மக்கள் நொந்து போயிருக்கின்றார்கள். வடக்கு, கிழக்கு மிகப்பெரிய அழிவைச் சந்தித்திருக்கின்றது.

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வில்லை. 89 ஆயிரம் விதவைகள் இருக்கிறார்கள். இவ்வாறான பிரச்சினைகளுக்கு எங்களுடைய தேசத்தை கட்டியெழுப்ப வேண்டுமாக இருந்தால் எங்களை நாங்களே ஆளுகின்ற நிர்வாகம் தேவை. எங்களுடைய மக்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மிகப்பெரிய ஆதரவை தந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த தமிழ் வேட்பாளர் இத்தனை ஆயிரம் வாக்குகளைப் பெற்றார் என்றால் சர்வதேசம் நிமிர்ந்து பார்க்கும். எனவே, எனக்கு வாக்களியுங்கள். சர்வதேசம் எங்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும்.

தமிழ் மக்களுடைய உரிமைக் கோரிக்கைகள் மறுக்கப்பட்டுள்ளன. இதேபோல உடனடியான பிரச்சினைகளான காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுடைய பிரச்சினை தீர்க்கப்படவில்லை. 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கட்டாயமாக காணாமல் போகச் செய்யப்பட்டிருக்கின்றார்கள். அரசியல் கைதிகள் இன்னமும் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்றார்கள்.

வடக்கு கிழக்கு மாகாணங்களிலே படையினரின் கட்டுப்பாட்டில் தமிழர்களுடைய காணிகள் பல படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. கோட்டாபாய ராஜபக்ஷவுக்கு இப்பொழுது தான் தமிழ் மக்களின் வாக்கு தேவைப்படுகின்றது. இப்பொழுது தென்னிலங்கையில் கோட்டாபாய மற்றும் சஜித் ஆகிய இவருக்குமிடையே நடைபெறும் போட்டி யார் சிங்கள பௌத்த வீரன் யார்? உங்கள் போட்டிக்காக நாங்கள் வாக்களிக்கத் தேவையில்லை.

எங்களுக்கு இனப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை. அரசியல் தீர்வு தேவை, போர்க்குற்றங்கள், இனப்படுகொலைக்கு சர்வதேச ரீதியாக நாங்கள் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, பாதுகாப்புச் சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை அரசை நிறுத்துவோம்.

இதைவிட உடனடியாக இருக்கக்கூடிய கட்டாயமாக காணாமல் போனோருடைய பிரச்சினை, அரசியல் கைதிகளுடைய பிரச்சினை, காணிகள் விடுவிப்பு போன்ற விடயத்திலே ஏன் இலங்கையின் இன்றைய அரசியலமைப்பிலே 19 திருத்தங்களை போற்றிப் பாதுகாப்போம் என்று சொல்லுகின்றீர்களே 13 ஆவது திருத்தத்திலிருக்கக் கூடிய காணி பொலிஸ் அதிகாரத்தை நீங்கள் விடுவிக்கத் தயாரா? ஏற்றுக் கொள்ளத்தயாரா?

நான் வந்தால் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் படுத்துவேன். இனிமேல் நடக்கின்ற பேச்சுவார்த்தைகளிலே ஒற்றையாட்சியை பௌத்தத்திற்கு முதலிடம் என்ற நிபந்தனையில்லாமல் பேசுவேன் என்று யாராவது சொல்லட்டும். நான் வாபஸ் பெறுகின்றேன். நான் பகிரங்கமாக ஊடகங்கள் வாயிலாக சொல்லுகின்றேன்.

கோட்டாபாயவுக்கு பின்னால் 10 கட்சி என்ன 100 கட்சிகள் வந்தாலும் தமிழ் மக்கள் தமது உணர்வை வெளிப்படுத்துவார்கள் என்றால் இவர்கள் தூக்கி வீசப்படுவார்கள்.

கிழக்கு மாகாண மக்கள் மிகவும் நொந்துபோயிருக்கிறார்கள். எங்களது விகிதாசாரம் மிகவும் குறைந்து போயிருக்கின்றது. அமைச்சர்களுடைய சூழ்ச்சியால் எங்களுடைய மக்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றார்கள். இதைத் தடுத்து நிறுத்துவதற்கு சர்வதேச தலையீட்டுடனான ஒரு அரசியல் தீர்வு விசாரணைகளில்லாமல் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

எனவே, தான் தமிழ் மக்கள் எழுச்சி கொள்ளப்படும் விதத்திலே நாங்கள் ஒரு கூட்டுத் தலைமையை மக்களுக்கு எதிரான அநிதிகளை எதிர்த்துப் போராடும் உறுதியான தமிழ்த் தலைமைகளை கட்டி எழுப்புவதற்கு இது ஒரு அருமையான சந்தர்ப்பம். தேர்தல் முடிந்த பின்னரும் நாம் நடு வீதியில்தான் நிற்போம் என்றார்.

இச் ஊடகவியலதளர் சந்திப்பில் ஜனாதிபதி வேட்பாளரின் இணைப்புச் செயலாளர் திருமதி. அனந்தி சசிதரன், அடக்குமுறைக்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர் தம்பிராசா அகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found