V2025

யாரை ஆதரிப்பது? 5 தமிழ் கட்சிகள் தொடர்ந்தும் பேச்சு!

ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது? என்பதை தீர்மானிக்கும் வகையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட ஐந்து கட்சிகள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி நேற்று (20) தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 23 ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில், அன்றைய தினத்தில் முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெறுமென்றும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது? என்பது தொடர்பில், ஐந்து தமிழ் கட்சிகள் இணைந்து கூட்டாக தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளன. இதற்கிணங்க ஜனாதிபதி வேட்பாளர்களிடம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் தொடர்பான 13 கோரிக்கைகளை முன்வைத்து, அதனை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதென உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை சம்பந்தமாக இரா. சம்பந்தன் அவர்களிடம் ஊடகவியலாளர்கள்  வினவிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேற்படி ஐந்து கட்சிகள் இணைந்து தயாரித்துள்ள 13 அம்ச கோரிக்கைகள் தொடர்பில், பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயங்கும் நிலையே காணப்படுகிறது.

மேற்படி கோரிக்கைகளில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில், இணக்கம் தெரிவிக்கப்படுமானால் பெரும்பான்மை மக்களின் வாக்குகளை இழக்க நேருமோ? என்ற மனப்பாங்கிலேயே அவர்கள் இதுவரை அது தொடர்பில், பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லையென அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found