V2025

'சு.க - பெரமுன இணைந்து அரசாங்கம் அமைத்தால் மஹிந்தவே பிரதமர்' - ஜி.எல்.பீரிஸ்!

'ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் 26 குழுக்களின் உதவியுடன் தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது' என்று அக்கட்சியின் தவிசாளரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.  

கேள்வி: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் இடையே தேர்தல் சின்னம் தொடர்பாக சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மொட்டு சின்னத்தை கைவிட நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?

பதில்: நாங்கள் பல விடயங்களில் நெகிழ்ச்சித் தன்மையை கடைப்பிடித்துள்ளோம். 25 விடயங்களில் நாம் இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கிறோம். நீண்ட கால ஸ்திரமான கூட்டணிக்கு இவை முக்கியமாகும். மொட்டு சின்னம் என்பது மிகவும் முக்கியமான அரசியல் சொத்து, அது மக்களின் மனங்களில் நன்கு பதிந்துள்ளது. அது கட்சியின் அடையாளமாகும்.எங்களை மொட்டுக் கட்சியினர்’ என்றே மக்கள் கூறி வருகின்றனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் என்று அவர்கள் சொல்வதில்லை. அவ்வாறான முக்கியத்துவத்தை பெற்றுள்ள அரசியல் சொத்தை இவ்வாறான முக்கிய தேர்தல் ஒன்று நடைபெற்றுள்ள நிலையில் இழப்பது விவேகமானது அல்ல.

கேள்வி: ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்குமாறு ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரை கேட்டிருக்கிறார். இது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினரை ஐக்கிய தேசிய கட்சியின் பக்கம் கொண்டு செல்லுமா?

பதில்: ஐக்கிய தேசியக் கட்சியினர் தாங்கள் விரும்பும் எவருடனும் பேசலாம். ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியினரை ஆதரிக்கப் போகிறதா, இல்லையா என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளுடன் தமது கட்சியின் கொள்கைகள் இணங்கிப் போகின்றனவா? ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிப்பார்களா என்பதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நினைத்துப் பார்க்க வேண்டும். இதுவே முக்கியமானது.

கேள்வி: எதிர்வரும் சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசாங்கத்தில் பிரதமர் யார் என்பது பற்றி கலந்துரையாடியுள்ளீர்களா?

பதில்: இன்னும் இல்லை. இப்போதைய நிலையில் எமது அக்கறை தேர்தலில் வெற்றி பெறுவதில் தான் உள்ளது. ஆனால் நாம் அரசாங்கத்தை அமைத்தால் மஹிந்த ராஜபக்ஷதான் பிரதமராக இருப்பார். அதுதான் மக்களின் விருப்பமும் ஆகும். அதில் எந்தவொரு இரகசியமும் இல்லை.

கேள்வி: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் இராணுவ பின்புலம் அவரது அரசியல் வாழ்க்கைக்கு பிரச்சினையாக உள்ளதாகத் தெரிகிறது. இதனால் அவரது பிரசாரத்தில் பிரச்சினைகள் ஏற்படுமா?

பதில்: இராணுவ ரீதியில் அவரது கடமைகள் சிறப்பாக இருந்தன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் அவரது தந்திரோபாயங்களின் மூலம் நாட்டில் இருந்து பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டது.பாதுகாப்பு என்பது இன்று தேசிய விடயமாக மாறியுள்ளது. குறிப்பாக ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதலுக்குப் பிறகு இந்நிலையில் நாட்டுக்கு ஒரு பலம் மிக்க தலைவரின் தேவை இருக்கிறது. அந்த இடத்தைப் பிடிக்க முடியும் என்று கோட்டாபய எடுத்துக் காட்டியுள்ளார். சரியான பதவிக்கு சரியான நபர்களை அவர் நியமிப்பார். அதன் மூலம் ஒழுக்கம் பேணப்படும்.

 

கேள்வி: முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்கவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றாரே? மொட்டுக் கட்சியின் வாய்ப்புகள் அவர் பக்கம் போகுமா? அவரை ஒரு சவாலாக பார்க்கிறீர்களா?

பதில்: இது ஒரு சவால் என்ற எண்ணமே எமக்கில்லை. ஜனாதிபதித் தேர்தலில் தமது வாக்குகளை வீணாக்க மக்கள் விரும்ப மாட்டார்கள். அதுவும் வெற்றி பெற முடியாத ஒருவர் மீது தமது வாக்குகள் வீணாவதை மக்கள் விரும்ப மாட்டார்கள்.

கேள்வி: ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அனுபவம் மிக்க அரசியல்வாதி, நல்ல பேச்சாளரும் கூட, அவருக்கு மக்களின் ஆதரவு இருப்பதாக அவர் கூறிக் கொள்கிறார். அவரை ஒரு சவாலாக கருதுகிறீர்களா?

பதில்: இல்லை, எமது பிரசாரத்தில் தாம் எதிர்த் தரப்பினர் மீது வசைபாடவில்லை. எங்கள் கொள்கையை மட்டுமே நாம் கூறி வருகிறோம். கோட்டாபய ராஜபக்ஷ அவரது எண்ணம் மற்றும் குறிக்கோள் என்ன என்பது பற்றி மட்டுமே பிரசாரம் செய்வார் ஆனால் கடந்த நான்கரை வருட காலம் ஆட்சியில் இருந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்த சஜித் பிரேமதாச அரசாங்கத்தின் முக்கிய பகுதியாக இருந்தவர். ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக இருந்தவர். எனவே நல்லெண்ண அரசாங்கத்தின் தோல்விக்கு அவரும் பொறுப்புக் கூற வேண்டும். வெளி ஆளாக அவர் தன்னைக் காட்டிக் கொள்ள முடியாது.

கேள்வி: கனவான் அரசியலில் உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா? அவ்வாறான அரசியல் உங்கள் வேட்பாளருக்கு வெற்றியை தேடித் தரும் என்று நினைக்கிறீர்களா?

பதில்: அரசியல் கலாசாரத்தில் மாற்றங்கள் வர வேண்டுமென்று மக்கள் விரும்புகின்றனர். சமூக ஊடகங்கள் மூலம் அது நன்றாகத் தெரிகிறது.

கேள்வி: சிறுபான்மையினரின் ஆதரவு உங்கள் வேட்பாளருக்கு இருக்கிறதா? முஸ்லிம்களும் தமிழர்களும் அவருக்கு வாக்களிப்பார்களா?

பதில்: நாட்டில் உள்ள விவகாரங்கள் அனைத்து மக்களுக்கும் பொருத்தும். பொருளாதார வீ்ழ்ச்சி, வாழ்க்கைச் செலவு ஆகியவை அனைவருக்கும் உள்ள பிரச்சினைகளாகும். பாதுகாப்பு விடயத்தில் இந்த அரசாங்கம் தோல்வியை அடைந்துள்ளது. மக்களைப் பாதுகாக்க இந்த அரசாங்கம் தவறி விட்டது. இவை தேசிய விவகாரங்கள் ஆகும். அதேநேரம் மாறுபட்ட தலைமைத்துவம் எதிர்பார்க்கப்படுகிறது.

கேள்வி: நீங்கள் சொல்வது எவ்வாறானதாக இருந்தாலும் சிறுபான்மையினரை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் வடக்கு, கிழக்கு மட்டுமன்றி மலையகத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியின் வசம் இருப்பதைத்தானே காண முடிகிறது.

பதில்: அது சரியானது என்று நான் நினைக்கவில்லை. அனைத்து சிறுபான்மைக் கட்சிகளும் உறுதியான தீர்மானங்களை இன்னும் எடுக்கவில்லை. அநேகமான சிறுபான்மை கட்சிகள் தேர்தல் விஞ்ஞாபனத்தை பார்த்த பின்னரே தமது நிலைப்பாட்டை பகிரங்களப்படுத்தும். எவ்வாறெனினும் கட்சி சார்பு இன்றி இலங்கை வாக்காளர்கள் தமக்குத் தாமே தமது எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்ளும் தகுதியை கொண்டிருக்கிறார்கள்.

(தினகரன்)

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found