V2025

ராஜபக்ஷ அரசாங்கத்தின் கடன்சுமையை செலுத்தியது எவ்வாறு? - விபரங்களை வெளியிட்ட மங்கள!

ராஜபக்ஷ அரசாங்கத்தின் கடன்களை செலுத்திய விபரங்களை நிதி அமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்டுள்ளார்.
 
2016 ஆம் ஆண்டு முதல் அரசாங்கம் பெற்றுக்கொண்ட வெளிநாட்டுக் கடன்கள் அனைத்திலும், ராஜபக்ஷ யுகத்தின் கடன் மலையை செலுத்தியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 
கடந்த 06 ஆம் திகதி, ஆங்கில மொழியில் அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த விடயங்களைத் தெரிவித்த நிதியமைச்சர், அதில் மேலும் கூறியிருப்பதாவது,
  
"தாமரைக் கோபுரம், மத்தள விமான நிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகம், சூரியவெவ மைதானம், தகவல் தொழில்நுட்ப பூங்கா, ரன்மினிதென்ன சினிமா கிராமம், ஹம்பாந்தோட்டை மாநாட்டு மண்டபம் போன்றவற்றிக்காக பாரியளவிலான நிதி செலவிடப்பட்டுள்ளது.
 
இலங்கை பொருளாதார கேந்திர நிலையமான திறைசேரியில் மறைந்திருக்கும் இரகசியங்கள்  பற்றி மக்கள் அன்று அறிந்திருக்கவில்லை. திறைசேரி ஆவணங்களின் மூலம் பல்வேறு விடயங்கள் அம்பலமாகியுள்ளன. ராஜபக்ஷ ஆட்சியில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்கள், ஆக்கபூர்வமான வகையில் முதலீடு செய்யப்பட்டால் இத்தனை பாரிய கடன் பொறியில் சிக்கியிருக்க வேண்டியதில்லை.
 
2005ஆம் ஆண்டில் ராஜபக்ஷக்கள் ஆட்சியை நிறுவிய போது, நாட்டில் தனிநபர் கடன் தொகையானது 113,131 ரூபாவாகும், 2015 ஆம் ஆண்டில் ஆட்சியை கைவிட்டுச் சென்ற போது தனிநபர் கடன் தொகை 355,708 ரூபா வரையில் உயர்வடைந்திருந்தது. கடன் தொகையில் அதிகமானவை வட்டி அடிப்படையிலானவை என்பது குறிப்பிடத்தக்கது.
 
பொறுப்புணர்ச்சியற்ற பொருளாதார முகாமைத்துவம் அத்துடன் நிறுத்திக்கொள்ளப்படவில்லை. 2005ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 13.7 வீதமாக அரச வருமானங்கள் காணப்பட்டன. 2014ம் ஆண்டில் இந்தத் தொகை 10.1 வீதமாக குறைவடைந்துள்ளது. எமது அரசாங்கமே ராஜபக்ஷக்களின் கடன் மற்றும் வட்டிகளை செலுத்தியது. கடன் செலுத்துவதற்கும் வெளிநாட்டு கடன்களின் வட்டித் தொகைகளை செலுத்துவதற்கும் நாம் கடன் பெற நேரிட்டது. 2016ம் ஆண்டு முதல் இதுவரையில் நாம் பெற்றுக்கொண்ட கடன்கள் அனைத்தும் செலுத்தப்பட்டுள்ளன.
 
2009ஆம் ஆண்டு போரின் பின்னர், நாடு எதிர்பார்த்திருந்த பொருளாதார வளர்ச்சி எமக்கு எப்போதும் கிடைக்கப் பெறவில்லை. ஜீ.எஸ்.பி வரிச்சலுகை எமக்கு கிடைக்காமல் போயுள்ளது. சர்வதேச பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படக்கூடிய அபாயத்தை எமது நாடு எதிர்நோக்கியுள்ளது.
 
சர்வதேச ஊடகங்களில் இலங்கை மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகவும் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும், சர்வாதிகார ஆட்சி நடாத்துவதாகவுமே செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. பங்குச் சந்தை, ஊழல் மோசடிகாரர்களின் கேந்திர நிலையமாக மாற்றமடைந்திருந்தது.
 
ராஜபக்சக்களின் முகாமைத்துவ குறைபாடுகளை வெளிக்காட்டுவதற்கு விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனங்களை உதாரணமாக காட்ட முடியும். ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதன் பின்னர், பாரியளவில் நட்டம் ஏற்பட்டுள்ளது. மிஹின் லங்கா நிறுவனத்தின் ஊடாகவும் பாரியளவில் நட்டம் ஏற்பட்டது. இவ்வாறான ஓர் பின்னணியில் இன்றும் மத்தள விமான நிலையத்திற்கு விமானங்கள் செல்வதில்லை.
 
ஊழல் ஹெஜின் கொடுக்கல் வாங்கல் மற்றும் முறையற்ற கிரேக்க முதலீட்டு கொடுக்கல் வாங்கல்கள் போன்றவற்றின் ஊடாக அரசாங்கப் பணம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது.
 
இவ்வாறு மிகவும் இழிவான முறையில் ஆட்சி அதிகாரத்தை விட்டுச் சென்றதன் பிற்பாடு, 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு உறுதியான பொருளாதாரத்தை எம்மால் கட்டியெழுப்ப முடிந்தது.   அத்தகையோரினால் மீண்டும் இந்த நாடு துயரங்களை எதிர்நோக்க அனுமதிக்க முடியாது.  63 ஆண்டுகளின் பின்னர், கடந்த வருடம் பொருளாதாரத்தில் சாதகமான நிலைமைகள் நாட்டில் பதிவாகியுள்ளன. முதல் தடவையாக அரசாங்க செலவுகளை விடவும் அரச வருமானம் அதிகரித்திருந்தது.
 
எமது அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ், பல்வேறு உட்கட்டுமான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன"
என நிதி அமைச்சர்  மங்கள சமரவீர மேலும் கூறினார்.
 
1231

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found