V2025

சஜித் பிரேமதாஸ; 1994இல் அரசியல் பிரவேசம்!

சுதந்திர இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஏழாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறப் ​போகின்றது. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளின் கூட்டமைப்பான ஐக்கிய தேசிய முன்னணி தனது ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சருமாகிய சஜித் பிரேமதாசவை அறிவித்துள்ளது. இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

1994ஆம் ஆண்டு, அப்போதைய மாவட்டங்களில் மிகவும் பின்தங்கிய மாவட்டமான  ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை தெரிவு செய்து தனது அரசியல் பிரவேசத்தை சஜித் ஆரம்பித்தார். இதனைத் தொடர்ந்து இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் 2000ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு 83வீத விருப்பு வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

தொடர்ந்து  2001ஆம் ஆண்டு தேர்தலிலும் 82வீத விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்று அப்போதைய அரசாங்கத்தில் சுகாதார பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஜனசுவய போன்ற திட்டங்களை ஆரம்பித்து குறிப்பாக கிராமிய வைத்தியசாலைகளுக்கு வசதிகளை பெற்றுக் கொடுப்பதில் முழு மூச்சாக செயற்பட்டார்.

வைத்திய முகாம்கள், சனசமூக நிலையங்கள் அமைத்துக் கொடுத்ததுடன், பின்தங்கிய பாடசாலைகளுக்கு கட்டடங்களையும் பெற்றுக் கொடுத்தார்.

2004, 2010மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களிலும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டினார். இறுதியாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று நல்லாட்சி அரசாங்கத்தில் வீடமைப்பு சமுர்த்தி மற்றும் வீடமைப்பு நிர்மாணத்துறை, கலாசார அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

கடந்த நான்கு வருட காலத்தில் அமைச்சராக இருந்து எமது நாட்டில் சகலருக்கும் நிழலினை பெற்றுக் கொடுக்கும் முகமாக '2025இல் சகலருக்கும் நிழல்' திட்டத்தை ஆரம்பித்து அதன் முதல் கட்டமாக கம்உதாவ உதாகம 2500மாதிரி வீடமைப்பு கிராமங்களை நிர்மாணிக்கும் பணிகளை பூர்த்தி செய்து 270இற்கும் மேற்பட்ட மாதிரிக் கிராமங்களை மக்களுக்காக கையளித்துள்ளார்.

அத்தோடு  தற்பொழுது நாடு பூராவும் 65000இற்கும் மேற்பட்ட வீடுகளை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு இதனூடாக இணைந்ததாக ஒவ்வொரு கிராமத்திலுள்ள குடும்பங்களுக்காக நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்காகவும் வீடமைப்பு கடன்கள், வீடமைப்பு உபகரண உதவிகள், சுயதொழில் உபகரணப் பொதிகள், இலவச மூக்குக் கண்ணாடிகள் மற்றும் மருத்துவ உதவிகளை  பெற்றுக் கொடுத்து வருகிறார்.

கலாசார அமைச்சைப் பொறுப்பேற்றவுடன் விகாரைகளில் தூபிகளை நிர்மாணித்ததுடன் அறநெறிப் பாடசாலைகளுக்கு கட்டடங்களை பெற்றுக் கொடுத்து கலைஞர்களை கௌரவிக்கவும் நடவடிக்கை எடுத்தார். குறிப்பாக தலைநகரிலுள்ள பாடசாலைகளுக்கு மாத்திரம் உரித்தாக இருந்த பஸ் வண்டிகள், நீச்சல் தடாகங்கள் என்பவற்றை  பின்தங்கிய பாடசாலைகளுக்கும் பெற்றுக் கொடுத்துள்ளார்.நகர்ப் புறங்களில் உள்ள மத்திய வருமானம் பெரும் குடும்பங்களுக்காகவும் தொடர்மாடி வீடமைப்பு திட்டங்களை பெற்றுக் கொடுத்துள்ளார்.

எம். இர்பான் ஸகரியா

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found