V2025

சமூகத்தின் அரசியல் தலைமைக்கான அடையாள சின்னம் மர்ஹூம் அஷ்ரப்!

மறைந்த எமது பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் என்றும் எங்களோடு உடனிருக்கின்றார். மறைந்தும் மறையாத தனிப்பெரும் தானைத்தளபதியாக அவரை நாங்கள் நினைவில் வைத்திருக்கிறோம். அவர் எங்களை விட்டுப் பிரிந்து 19 வருடங்கள் உருண்டோடி விட்டன. இந்த 19 வருடங்களுக்குள் இந்த நாட்டின் அரசியல் புதிய பரிணாமங்களை அடைந்திருக்கிறது.

இந்த காலத்தில் முஸ்லிம் சமூகம் அவ்வப்போது சவால்களை எதிர்கொண்டிருக்கிறது. இந்த ஒவ்வொரு கட்டத்திலும் அஷ்ரப் அவர்களுடைய வழிகாட்டல், அவருடைய வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் எதிர்கொண்ட சவால்கள் எங்கள் கண்முன்னே வந்து நிழலாடுகின்றன.

எனக்கு இன்று போல ஞாபகம் இருக்கிறது. இரவு 10.30 மணிக்கு தலைவரிடமிருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. சுமார் 40 நிமிடங்கள் அவர் என்னோடு பேசினார்.தொலைபேசி அழைப்பினுடைய நோக்கம் அன்று முஸ்லிம் காங்கிரஸுடைய பொதுச்செயலாளர் பொறுப்பிலே இருந்த எனக்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மரச்சின்னத்தை, தான் அமைத்திருந்த தேசிய ஐக்கிய முன்னணி (நுஆ) கட்சிக்கு மாற்றியெடுப்பதாகும். சின்னத்தை மாற்றுவதற்கு தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் கட்சியின் செயலாளரான நான் தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் எழுத வேண்டும்.

ஒரு பாராளுமன்ற தேர்தல் அறிவித்ததன் பின்னால் இரண்டு கட்சிகள் தாம் விரும்பினால் தமது சின்னங்களை மாற்றிக் கொள்ள முடியும் என்ற சரத்தினை மிக நுணுக்கமாக தேடிப் பிடித்து, முஸ்லிம் காங்கிரஸை விடுத்து நாங்கள் ஒரு புதிய பொதுவான அரசியலுக்காக தயாராக வேண்டும் என்ற நோக்கிலே இது விடயமாகப் பேசினார்.

ஈற்றிலே உம்ரா முடித்து வந்தவுடனேயே எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும் அன்றைய ட்ரான்ஸ் ஏசியா ஹோட்டலில் மு.காவின் பேராளர் மாநாடு, விகாரமகாதேவி பூங்காவிலே நுஆ கட்சியின் இன்னொரு பேராளர் மாநாடு. அவர் என்ன செய்யப் போகிறார் என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. இரு கட்சிகளிலுமிருந்து செயலாளர்கள் பதவி விலகினோம். இராஜினாமா கடிதத்தை வாங்கினார். முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நான் பதவியிறக்கப்பட்டு, மு.காவின் செயலாளர் பதவிக்கு குருநாகல் மாவட்டத்திலிருந்து கட்சியின் மூத்த போராளியான டாக்டர் ஹப்ரத் நியமிக்கப்பட்டார். எனக்கும் ஒரு கௌரவ பதவி முஸ்லிம் காங்கிரஸில் தரப்படுகின்றது. பிரதி தவிசாளர் என்று நினைக்கிறேன்.

எல்லோரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். முஸ்லிம் காங்கிரஸின் தலைவரிடத்தில் செயலாளர் நம்பிக்கை இழந்து விட்டாரோ, திடீரென்று அவரது பதவி பறிக்கப்பட்டு விட்டதென்று. கட்சி தலைமைக்கு விசுவாசமாக இருக்க வேண்டிய ஒரு பதவியாகிய செயலாளர் பதவியிலிருந்து ரவூப் ஹக்கீம் அகற்றப்பட்டார் என்ற விஷயம் எல்லோருக்கும் ஒரு அதிர்ச்சி வைத்தியம் போல இருந்தது. யாரும் பேசவில்லை. தலைவர் சொன்னால் எதையும் திருப்பிக் கேட்காமல் இருக்கின்ற போராளிகள் என்ற வகையிலே நாங்கள் இருந்தோம். விகாரமகாதேவி பூங்காவிலேதான் இரகசியம் என்னவென்று தெரிந்தது. அங்கு பிரகடனப்படுத்தப்படுகிறது தேசிய ஐக்கிய முன்னணியின் (நுஆ). செயலாளராக முன்னர் நண்பர் ஹிஸ்புல்லாஹ் இருந்த இடத்திற்கு நான் நியமிக்கப்படுகிறேன். ஏனென்றால் தேசிய ஐக்கிய முன்னணிதான் தேர்தலில் களமிறங்கப் போகிறது அதிலேதான் நாங்கள் தேர்தல் கேட்கப் போகிறோம். மரச்சின்னம் அதற்கு மாற்றி எடுக்கப்படுகிறது.

தேசிய ஐக்கிய முன்னணியும், பொதுஜன ஐக்கிய முன்னணியும் அன்று தேர்தல் ஒப்பந்தம் செய்து தலைவர் அம்பாறை மாவட்டத்திலே பொதுஜன ஐக்கிய முன்னணியின் கதிரைச் சின்னத்திலே கேட்பதற்கான ஏற்பாடு. தொப்பி மொஹிதீன், அதாவுல்லா உட்பட ஏனைய மூன்று முஸ்லிம் உறுப்பினர்கள் கேட்பது. அதில் கேட்பதற்காக விமல வீர திஸாநாயக்கவும், தேசியப் பட்டியலுக்காக தெவரப்பெருமவும் போடப்படுகின்றார்கள். நிச்சயமாக எங்களுக்கு 11 ஆசனங்கள் வரும் என்று கணக்குப் போட்டு சொன்னார். தேர்தல் முடிவுகள் வந்தபோது தலைவர் எங்களோடு இருக்கவில்லை. அந்த கோரவிபத்தில் அவரை நாங்கள் இழந்தோம். அவர் சொன்ன வாக்கு அப்படியே பலித்தது.

அவர் சொன்னது போலவே 11 ஆசனங்களை நாங்கள் வென்றெடுத்தோம். ஏழு ஆசனங்கள் பொது முன்னணியுடன் கூட்டாக பெற்றோம். நான்கு ஆசனங்களை நாங்கள் நுஆ கட்சியிலே வென்றெடுத்தோம். அந்த நான்கில் ஒரு ஆசனத்திற்குரியவனாக நான் பாராளுமன்றத்திற்கு மரச் சின்னத்திலே கண்டி மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டேன். எனக்கு இன்னும் ஞாபகமிருக்கிறது வேட்பாளர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு வெகு விமர்சையாக தாருஸ்ஸலாத்தில் நடைபெற்றபோது அதிலே என்னை ஆரத்தழுவி வடகிழக்கு வெளியிலே “நீங்கள் எனது கட்சியின் முதலாவது தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராக வருவீர்கள்” என்று சொன்னார். அத்தோடு இன்னொரு விடயத்தையும் சொன்னார். “நீங்கள் என்னுடைய சபாநாயகராகவும் இருப்பீர்கள்” என்றும் சொன்னார்.

அவர் அப்படி திட்டம் வைத்திருந்தார். அடுத்த பாராளுமன்றத்திலே பேரம் பேசுகின்ற ஒரு நிலைக்கு தன்னுடைய கட்சியை கொண்டு வரவேண்டும். அதன்மூலம் சபாநாயகர் பதவியையும் நாங்கள் அடைய வேண்டும். என்பது அவரது மறைவுக்குப் பின்னால் பலருக்கு சொன்ன விடயங்களிலிருந்து நாங்கள் அறிந்து கொண்டோம். உண்மையில் எங்களது 11 ஆசனங்கள்தான் ஆட்சியை தீர்மானிக்கின்ற சக்தியாக இருந்தது. எங்களுடைய ஆசனங்கள் இல்லை என்றால் சந்திரிகா அம்மையார் ஆட்சி அமைத்திருக்க முடியாது.

 

1988ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதித் தேர்தல் என்னுடைய நினைவுக்கு வருகிறது. எங்களது கட்சி சந்தித்த முதலாவது ஜனாதிபதி தேர்தல். இந்த நாட்டின் அரசியலையே தலைகீழாக புரட்டிப்போட்ட ஒரு தேர்தல் என்றுகூட சொல்லலாம்.

ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக பெரிய எதிர்க்கட்சி கூட்டணி 'ஜனநாயக மக்கள் கூட்டணி' என்ற பெயரில் உருவாகி செயற்பட்டது. அதிலே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் புரட்சிகரமான அரசியல் இயக்கம் இணைந்திருந்தது. இந்திய_ இலங்கை ஒப்பந்தத்தில் அதிருப்தி அடைந்த முஸ்லிம்கள் தங்களுடைய அடையாள அரசியலை நிலைநிறுத்துவதற்காக ஆரம்பித்த போராட்டம், நடந்து முடிந்த மாகாண சபை தேர்தல்களிலே எங்களுக்கு புதியதொரு அரசியல் அறிமுகத்தை நாடு முழுவதிலும் உருவாக்கி தந்திருந்தது. வடகிழக்கிலே நாங்கள் உத்தியோக பூர்வ எதிர்க்கட்சி. வடகிழக்குக்கு வெளியே 12 ஆசனங்கள். மொத்தம் 29 மாகாண சபை ஆசனங்களோடு இருந்த எங்களை சேர்த்துக்கொண்டு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை வீட்டுக்கனுப்ப வேண்டும் என்பதே இந்த கூட்டணியின் நோக்காக இருந்தது.

இந்த நேரத்தில் சிலவிடயங்கள் நடந்தேறின. எங்களுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குமான தேர்தல் உடன்படிக்கையில் ஒரு முரண்பாடு வந்து விட்டது. அந்த முரண்பாட்டின் பின்னர் இரவோடு இரவாக பிரேமதாச எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடாத்தினார். அதன் பயனாகத்தான் சகோதரர் ரவூப் செயின் சொன்ன அந்த சாதனைகளில் ஓன்று நிறைவேறுகிறது. இந்த நாட்டின் அரசியல் சாசனமே மாற்றி அமைக்கப்படுகிறது. ஆறில் ஐந்து பெரும்பான்மை இந்த பாராளுமன்றம் கலைப்பதற்கு ஒரு நாள் இருக்கத்தக்கதாக 15 வது சரத்து திருத்தப்பட்டு இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு மாத்திரமல்லாமல் சகல சிறிய கட்சிகளுக்கும், பல சிறுபான்மை இயக்கங்களுக்கும் ஒரு அரசியல் அடையாளத்தை தனித்துவத்தோடு அடையக்கூடிய வாய்ப்பை ஆக்கித்தந்த பெருமைக்குரிய பாரிய சாதனையை செய்தது எங்களுடைய தலைவருடைய சாணக்கியம் என்றால் அது மிகையாகாது.

ஒரு நள்ளிரவிலே அனைத்தும் நடந்து முடிந்து அடுத்தநாள் பாராளுமன்றத்திலே அரசியல் சாசனத்திற்கு திருத்தமும் பிரேரிக்கப்பட்டு அது இரவோடிரவாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டது.

அடுத்து வருகிற தேர்தலில் இவ்வாறான உபாயத்தை கையாள வேண்டிவருமோ தெரியாது. 1988 ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கும் ஆதரவளிப்பதாக நாங்கள் சொல்லவில்லை. ஸ்ரீமாவோ பண்டார நாயக்க எங்களுக்கு துரோகம் இழைத்து விட்டார். அவரைத் தவிர யாருக்கும் வாக்களிக்கலாம். இதனைத்தான் நாங்கள் சொன்னோம். ஏனென்றால் அந்த நேரத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்க சொல்ல முடியாத நிலை. இதனை பிரேமதாசாவுக்கும் தெளிவுபடுத்தினோம் அவர் அதனை ஏற்றுக் கொண்டார். இதன் விளைவாகதான் பிரேமதாச ஜனாதிபதியானார். இது எதிர்காலத்தில் எங்களுக்கு இன்னொரு உபாயம். இவ்வாறான மாற்றுவழிகளை எங்களுக்கு சொல்லித் தந்த பெருந்தலைவராகதான் அவரை என்றும் நாங்கள் நினைவு கூருகிறோம்.

தேர்தல் காலங்களிலே தலைவரின் சுறுசுறுப்பை அருகிலிருந்து பார்த்தவர்கள் நாங்கள் இங்கு நிறையப் பேர் இருக்கிறோம். ஜனாதிபதித் தேர்தல் என்றால் எப்படி அடுத்த பாராளுமன்ற தேர்தலில் ஆசனங்களை கூட்டிக் கொள்ள முடியும். அதனோடு சமூகம் சார்ந்த விடயங்களை எப்படி சாதித்துக் கொள்வது என்பதை வடிவமைப்பதில் தொடர்ந்தும் ஊணின்றி, உறக்கமின்றி உழைக்கின்ற அந்த தலைமையைத்தான் இழந்து பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றோம். ஒரு சமூகத்தின் அரசியல் தலைமை என்றால் என்ன? அதனுடைய ஆளுமையின் அம்சங்கள் என்ன? என்பதற்கான அடையாளச் சின்னம் அவர். அந்த தலைவனைப்போல ஒருத்தலைவனை இனிமேல் நாங்கள் பார்க்க முடியாது. தன்னுடைய சொந்த குடும்ப உறுப்பினராகவே கட்சியின் உறுப்பினர்களைப் பார்த்த ஒரு தலைவனை நாம் இழந்துள்ளோம்.

பெரும் விருட்சமொன்றை எமக்கு அவர் தந்துவிட்டு சென்றுள்ளார். அதை தறிப்பதற்கு எத்தனை கோடரிக் காம்புகள் வந்தாலும் அதனை தாங்கி நிற்கின்ற திராணியை எமக்கு அவர் தந்திருக்கிறார்.

எங்களை கூறுபோட்டு எங்களுக்குள்ளே குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கின்ற சக்திகளின் மூலவித்தை நாங்கள் அடையாளம் காண வேண்டும். ஜனநாயக ரீதியாக அதெற்கெதிரான பலமான ஒரு அணியாக நாம் இருக்க வேண்டும். தலைவர் இருந்திருந்தால் இன்று அதைத்தான் செய்திருப்பார். சகல தரப்புகளையும் இணைத்த பலமான ஒரு இயக்கமாக இந்த இயக்கத்தை புடம் போடுவதற்கு புறப்படுவோம் வாருங்கள்.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found