V2025

காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு 6,000 ரூபா இடைக்கால கொடுப்பனவு - நிதி அமைச்சு!

2019 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு, நவம்பர் மாதத்தில் இருந்து 6000 ரூபா மாதாந்த இடைக்கால கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்தக் கொடுப்பனவு குறித்து, நிதி அமைச்சு நேற்று (20) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் கூறியிருப்பதாவது,

2019 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களின் பரிந்துரைப்படி, காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக 6,000 ரூபா செலுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. முப்படைகளில் மற்றும் பொலிஸில் பணியாற்றும் போது, காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் இந்தக் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள முடியும்.  

நாடு பூராகவும் உள்ள காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மன வேதனையும் துன்பத்தையும் அனுபவித்து வரும் அதேவேளை, மேலதிகமாக, அவர்களின் அன்புக்குரியவர்கள் காணாமல் போயுள்ளதனால் கடுமையான பொருளாதார கஷ்டங்களையும் எதிர்கொள்கின்றனர். 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், காணாமல் போனோர் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கையில், தங்கள் குடும்ப உறுப்பினர்கள் காணாமல் போனதற்கான “காணமல்போனோர் சான்றிதழை” சமர்ப்பிக்கும் குடும்பங்களுக்கு, இந்த இடைக்கால நிவாரணத்தை பெற்றுக்கொள்ளும் தகுதி உண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது. 2௦19 வரவு செலவுத்திட்ட அறிக்கையில் இந்தப் பரிந்துரை உள்ளடக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் மற்றும் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சினால் இணைந்து சமர்ப்பிக்கப்பட்ட, வரவு செலவுத் திட்டத்தின் மூலம் பரிந்துரைக்கப்பட்ட, இந்த இடைக்காலக் கொடுப்பனவை வழங்குவதற்கு, அமைச்சரவை அண்மையில் அங்கீகாரம் வழங்கியது.

அதன்படி, “காணமல்போனோர் சான்றிதழை” பெறுபவரின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் 6000 ரூபா இடைக்கால நிவாரணக் கொடுப்பனவு வைப்புச் செய்யப்படும். சமீபத்தில் நிறுவப்பட்ட இழப்பீடுகளுக்கான அலுவலகத்தினால், இழப்பீடுகள் மற்றும் வேறு வகையான இழப்பீடுகளை பெற்றுக்கொடுக்கும் வரை, இந்த இடைக்கால கொடுப்பனவு செலுத்தப்படும்.

இந்த இடைக்கால நிவாரணக் கொடுப்பனவானது, நீதித்துறை செயல்முறைக்கான, பொருத்தமான உடனடி இழப்பீடுகளை வழங்குவதற்கான உரிமையை எந்த வகையிலும் பாதிக்காது.

இதுவரையில், வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் காணாமல் போனவர்களின் 656 குடும்பங்களுக்கு “காணமல்போனோர் சான்றிதழ்” விநியோகிக்கப்பட்டுள்ளது. படை நடவடிக்கைகளின் போது, காணாமல் போன முப்படை உறுப்பினர்களின் சில குடும்பங்களும் அதிலடங்கும். காணாமல்போனோருக்கான சான்றிதழ்களை துரிதமாக வழங்குவதற்காக, தலைமை பதிவாளர் திணைக்களத்துக்கு ஒப்பந்த அடிப்படையில், மேலதிகமான அதிகாரிகளை இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found