V2025

பிரதமர் உண்மையை புரிந்து கொண்டார்; ஞாயிறு சஜித்தை சந்திக்கின்றார்!

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில், இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, மக்கள் கருத்துக் கணிப்பில் சஜித் பிரேமதாச தம்மை விடவும் முன்னிலை வகிப்பதாக? பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒப்புக் கொண்டுள்ளார்.

பிரதமர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், தவிசாளர் கபீர் ஹாசீம், முன்னாள் தவிசாளர் மலிக் சமரவிக்ரம, ரஞ்சித் மத்துமபண்டார, காமினி ஜயவிக்ரம, லக்ஸ்மன் கிரியல்ல, வஜிர அபேவர்தன, நவீன் திஸாநாயக்க, சரத் பொன்சேகா மற்றும் தயா கமகே ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட பணிகளின் அடிப்படையில் மங்கள சமரவீர, சஜித் பிரேமதாச மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

மக்கள் கருத்துக் கணிப்பில் சஜித் முன்னிலை வகிப்பதாக சிலர் கூறுகின்றார் எனவும் தாம் அவ்வாறான விடயத்தை பார்க்கவில்லை எனவும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளதுடன், நீங்கள் அவ்வாறான விடயத்தை அவதானித்தீர்களா? என பிரதமரிடம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மலிக் சமரவிக்ரம, மங்கள சமரவீர மற்றும் பேராசிரியர் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்பட்ட அறிக்கைகளை தம்மிடம் வழங்கியதாக பிரதமர் ஒப்புக்கொண்டுள்ளார்.

"எனக்கு 20 வீதம், கரு ஜயசூரியவிற்கு 15 வீதம், சஜித் பிரேமதாசவிற்கு 35 வீதம்" என பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், இன்னமும் பலர் யாருக்கு வாக்களிப்பது என்பதனை தீர்மானிக்கவில்லை எனவும் யாரினால் கூடுதல் வாக்குகள் பெற்றுக்கொள்ள முடியும் என்ற அடிப்படையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இதன் போது, சஜித்திற்கு 47 வீதமும், பிரதமருக்கு 17 வீதமும் கரு ஜயசூரியவிற்கு 15 வீதமும் ஆதரவு உண்டு என மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிமை சஜித்தை தனியாக சந்தித்து இது குறித்து, விரிவாக கலந்துரையாட உள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். இதேவேளை, சஜித்திற்கு ஜனாதிபதி வேட்பாளர் பதவி வழங்கினால் கட்சியின் முக்கிய ஆறு அமைச்சர்கள் வெளியேறிவிடுவார்கள் என அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில் சிறிகொத்தவை தாமே பராமரித்ததாகவம் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் தகுதி தமக்கு உண்டு எனவும் தயா கமகே தெரிவித்துள்ளார்.

இதற்கு நன்றி பாராட்டும் நோக்கிலேயே கணவன் மனைவி இருவருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது என அங்கிருந்தவர்கள் கூற தயா கமகே அமைதியாகியுள்ளார்.

இதேவேளை, 2010ம் ஆண்டில் ஜனாதிபதி வேட்பாளராக தம்மை தெரிவு செய்ய முடியும் என்றால், ஏன் தற்பொழுது அவ்வாறான தீர்மானம் எடுக்க முடியாது? என சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார்.

2015ம் ஆண்டில் வேறும் கட்சியில் தேர்தலில் போட்டியிடாதிருந்திருந்தால் அது குறித்து, கவனம் செலுத்தியருக்கலாம் என அமைச்சர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2010ம் ஆண்டில் ஜே.வி.பியுடன் இணைந்து போட்டியிட்ட சரத் பொன்சேகாவின் கட்சி 6 ஆசனங்களை வென்ற போதிலும், 2015ம் ஆண்டில் ஒரு ஆசனத்தையேனும் வெற்றிகொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found