V2025

தயாசிறியினால் உடைக்கப்பட்ட யானையின் காலுக்கு அன்று வைத்தியம் பார்த்த ஹரின், இன்று யானையை ரேசில் ஓடவைக்கின்றார்!

1994ம் ஆண்டில் இருந்து பல தோல்விகளை சந்தித்து வந்த ஐக்கிய தேசிய கட்சியும் அதன் தலைமையுமான ரணில் விக்ரமசிங்கவும், இனிமேல் இந்த நாட்டில் ஐக்கிய தேசிய கட்சியினால் ஆட்சியமைப்பது என்ற விடயத்தினை கனவிலும் காண முடியாது என்பது 2014ம் ஆண்டு வரைக்கும் மக்கள் மனங்களில் பதியப்பட்ட நம்பிக்கையாக இருந்தது.

ஆனால் பச்சை நிறத்தில் ஊறிப்போன ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களுக்கு எப்போதாவது எமது கட்சியினை தூக்கி நிறுத்த ஒருவர் புறப்பட்டு வருவார் என்ற நம்பிக்கை எங்கையோ ஒர் இடத்தில் நிச்சயமாக இல்லாமல் இருந்திருக்காது. பல தரப்பினாலும் வெற்றிகொள்ள முடியாமல் நாட்டையே அதால பாதாலத்துக்குள் இட்டு சென்று கொண்டிருந்த 30வருட யுத்தத்தினை வெற்றி கொண்டு ஹீரோவாக பார்க்கப்பட்ட முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது ஆட்சிக்காலமானது மிகவும் கர்வத்துடனும், தன்னை எவராலும் இந்த நாட்டில் அசைக்க முடியாது என்ற இருமாப்புடன் இடம் பெற்ற காலமாக இருந்தது.

அது மட்டுமல்லாமல் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய புள்ளியாகவும், எதிர் காலத்தில் கட்சியின் தலைமைத்துவத்துக்கு தகுதியானவர் என இளைஞர்களால் வர்ணிக்கப்பட்டு, மக்கள் மத்தியில் ஜனரஞ்மாகி வந்த தயாசிறீ திடீரென பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இராஜினாமா செய்து மஹிந்த தரப்பிற்கு சென்று உட்கார்ந்து கொண்டார்.

குறித்த விடயமானது படுக்கையாய் கிடந்த யானையின் கால்களை உடைத்து மேலும் நடக்க முடியாத யானையாக மாற்றியதற்கு சமனாகவே அன்று அரசியல் விமர்சகர்களினால் பார்க்கப்பட்டது. முழு இலங்கையிலுமே மாகாண சபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தாமல் உடைத்துடைத்து நடாத்தி வெற்றியடையும் அரசியல் திட்டத்தினை அரங்கேற்றி சகல தேர்தல்களிலும் வெற்றி நாயகனாக சிங்கள மக்களால் பார்க்கப்பட்ட ஹீரோவாகவே மஹிந்த ராஜபக்ச அக்காலகட்டத்தில் வலம் வந்தார் என்பதனை எவரும் இலகுவில் மறந்து விட முடியாது. இந்த நேரத்தில்தான் பதுளை, மொனறாகளை மாவட்டங்களை கொண்ட ஊவா மகாணத்துக்கான மாகாண சபை தேர்தல் அறிவிக்கப்படுகின்றது.
எவரை முதலமைச்சு வேட்பாளராக நிறுத்துவது என்ற கேள்விகளுக்கு மத்தியில் இளம் பாராளுமன்ற உறுப்பினராகவும், துடிப்பான, சமயோசித, அரசியல் பகுதறிவுமிக்க பேச்சாளராக கட்சியில் மிளிரிக்கொண்டிருந்த ஹரின் பெர்னாண்டோ தனது பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தினை இராஜினாமா செய்து முதன்மை வேட்பாளராக நிறுத்தப்படுகின்றார்.

மறு பக்கத்திலே, மிகப்பெரிய பலத்துடன் வேட்பாளர்களை களமிறக்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பான மஹிந்த அணியே கூடிய வாக்குகளால் ஊவா மாகாண சபையில் வெற்றியடைந்து ஆட்சி அமைத்திருந்தது. ஆனால் ஏனைய மகாண சபை தேர்தல்களையும், அதற்கு முன்னர் இடம்பெற்ற ஐக்கிய தேசிய தேசிய கட்சி தோல்வி அடைந்த சகல தேர்தல்களையும் இதனுடன் ஒப்பிட்டு பார்க்கின்ற பொழுது ஹரின் பெர்னாண்டோ தலையிலான ஊவா மாகாண சபை தேர்தல் ஐக்கிய தேசிய கட்சிக்கு மறுமளர்ச்சி பெற்ற, வெற்றியை சுமந்த தேர்தல் முடிவாகவே பார்க்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் ஹரி பெர்னாண்டோ தன்னுடன் போட்டியிட்ட அனைத்து கட்சிகளையும் சேர்ந்த சகல வேட்பாளர்களையும் பின்னுக்குதள்ளி அதிகப்படியான விருப்பு வாக்குகளை பெற்றிருந்தார். பரவலாக ஊவா மாகாண சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிதான் ஆட்சியமைக்கும் என்ற கருத்துக்கணிப்பு தேர்தல் அவதானிப்பாளர்களினாலும், விமர்சகர்களினாலும் பெரிதும் எதிர்வு கூறப்பட்ட நிலையிலே ஹரின் பெர்னாண்டோ துரதிஸ்ட்டவசமாக தோல்வியடைந்து மாகாண சபையில் எதிர்கட்சி தலைவரானார்.

ஆனால் பல வருடங்கள் ஐக்கிய தேசிய கட்சி கடந்து வந்த தோல்விகளை வைத்தும், தயாசிறியின் கட்சித்தாவலை வைத்தும் குறித்த தேர்தல் முடிவானது ”தயாசிறீயினால் உடைக்கப்பட்ட யானையின் 
காலுக்கு ஹரின் பெர்னாண்டோவினால் வைத்தியம் பார்க்கப்பட்டதாகவே எல்லோராலும் அவதானிக்கப்பட்டது”. அதற்குப்பிறகு குறித்த தேர்தலானது ரணிலினுடைய ஐக்கிய தேசிய கட்சிக்கு ”மங்கிப்போன புரட்சியின் மேல் மீண்டும் ஒரு காலை வெளிச்சம்” என்ற கருத்துப்பட அரசியல் விமர்சகர்களினால் வரைவிலக்கணம் கொடுக்கப்பட்டதினால் ரணிலும் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய சிரேஸ்ட்ட உறுப்பினர்களும் தலை நிமிரத் தொடங்கினார்கள்.

2015 ம் ஆண்டைய ஜனாதிபதி தேர்தலினை மஹிந்த ராஜபக்ச முன் கூட்டியே அழைப்பு விடுத்த பொழுது தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதில் ஹரின் பெர்னாண்டோ முக்கிய பங்கு வகித்தார் என்பதனை கட்சியில் எவறும் மறுப்பதற்கில்லை. மஹிந்த ராஜபக்க்ஷ ஆட்சியின் ஊழல், சர்வாதிகார ஆட்சி மற்றும் சட்டவிரோதத்தின் எழுச்சி ஆகியவற்றை அவருடைய தேர்தல் மேடைகள், நேரடி விவாத நிகழ்ச்சிகள், என பல தரப்பட்ட நிகழ்வுகளில் மிகவும் கடுமையாக விமர்சித்தார்.

2010 ஆம் ஆண்டைய ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில் ஊவா மாகாணத்தில் மஹிந்தவின் வெற்றியினை தடுக்கும் வகையில் 2015 ஆண்டைய ஜனாதிபதித் தேர்தலில் ஹரின் பெர்னாண்டோ பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்காக அர்ப்பணிப்புடன் பகிரங்கமாக பிரச்சாரம் செய்தார். 2015 ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்கு பின்னர், பல ஐக்கிய சுதந்திர கூட்டமைப்பின் ஊவா மாகாண சபை உறுப்பினர்கள் பலர் ஹரினை ஆதரித்தனர்.

அதனால் ஊவா மாகாண சபையில் பெரும்பான்மையை பெற்றுக்கொண்டார். அத்துடன் ஆளுநர் முன் ஊவா மாகாண முதலமைச்சராகவும் பதவியேற்றதுடன், மஹிந்த சார்பாக முதலமைச்சராக இருந்த சஷிந்திர ராஜபக்ஷவை ஆட்சியில் இருந்தும் நீக்கினார். இது ஹரின் பெர்னாண்டோவின் அரசியல் வளர்சியினையும், இளம் வயதில் அவருக்கு இருந்த அரசியல் ஆளுமையின் உச்சக்கட்ட வெளிப்பாட்டினை வெளிச்சம் போட்டுக்காட்டும் விடயமகவே பார்க்கப்படுகின்றது.

அது மட்டுமல்லாமல் ஊவா மகாண சபையில் ஆரம்பித்த அந்த எழுச்சி ஐக்கிய தேசிய முன்னணி எனும் கூட்டமைப்பினுடாக 2015ம் ஆண்டைய ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவினை வீட்டுக்கு அனுப்பி பொதுவேட்பாளரான மைத்திரியினை ஜனாதிபதி சிம்மாசனத்தில் உட்கார வைத்தது. அத்தோடு இன்று பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கம் இடம் பெறுவதற்கு ஹரினுடைய ஊவா மாகாணா மீள் எழுச்சி அன்று அத்திவாரமாக இடப்பட்டது.
 
அதுவே இன்று ஐக்கிய தேசிய கட்சியின் மங்கிப்போன புரட்சியில் விழுந்த ஹரினுடைய காலை வெளிச்சமாக கட்சி தனித்து நின்று பல பொருந்திய ஜனரஞ்சக வேட்பாளர் சஜித்தினை அதி கூடிய கட்சியின் உறுப்பினர்களின் ஆசீர்வாதத்துடன் ஜனாதிபதி ரேஸ் ஓட்டத்தில் களமிறக்க மாபெரும் சக்தியாக மாற்றமடைய செய்துள்ளது.
 
Ahmed Irshad-

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found