V2025

Dr.ஷாபி விவகாரம்; 25 ஆம் திகதி வரை விளக்கமறியல்!

குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர்  சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபியை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குருநாகல் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வைத்தியர் ஷாபி குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று காலை (11) 10.30 மணியளவில் குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். 

இன்றைய தினம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் பின்னர் அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பயங்கரவாத அமைப்புக்களின் முன்னேற்றத்துக்கு நிதி உதவி செய்துள்ளதாக வைத்தியர் ஷாபி மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதற்கு போதுமான சாட்சிகள் இல்லை என்று பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் தெரிவித்தார்.

இந்நிலையில் அவரின் மூன்று மாத கால தடுப்புக் காவல் உத்தரவை சட்ட மா அதிபர் திணைக்களம் மீளப் பெற்றதாக மன்றில் தெரிவிக்கப்பட்டது.

 வைத்தியர் ஷாபிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்துவதற்கு போதுமான சாட்சிகள் இல்லை என்று தெரிவித்து, பாதுகாப்பு அமைச்சுக்கு நேற்று அறிக்கை சமர்பிக்கப்பட்டதையடுத்து, அவரை தடுத்து வைப்பதற்கான அனுமதி இரத்து செய்யப்பட்டதாக பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் துசித் முதலிகே நீதிமன்றில் தெரிவித்தார். 

அத்துடன் அவருக்கு எதிரான அசாதாரண சொத்து சேகரிப்பு குற்றச்சாட்டு தொடர்பில், விசாரணை தொடர்வதாக அவர் மேலும் கூறினார். 

அதேநேரம் அவருக்கு எதிரான நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அசாதாரண நிதி உழைப்பு சம்பந்தமான குற்றச்சாட்டை நியாயப்படுத்துவதற்கு போதுமான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என்றும் எனினும், அது தொடர்பில் தொடர்ந்து விசாரிக்கப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார். 

அதேநேரம் வைத்தியர் ஷாபி சத்திரசிகிச்சை செய்த பின்னர் 02 வருடங்களாகியும் கர்ப்பம் தரிக்கவில்லை என்று முறைப்பாடு செய்துள்ள 147 தாய்மார்களை, விஷேட வைத்திய நிபுணர்கள் வழங்கிய ஆலோசனைப் படி, கட்டாயம் SHG பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிடுமாறும் பிரதி சொலிசிஸ்டர் நீதவானிடம் கேட்டுக் கொண்டார். 

இதன்போது, இன்றைய தினம் சிங்கள அமைப்புக்கள் சில நீதிமன்ற வளாகத்தில் கூடி வைத்தியரின் விடுதலையை எதிர்த்தபடி கருத்துக்களை ஆங்காங்கே வெளியிட்டு வந்ததால் அங்கு ஒருவித பதற்ற நிலை காணப்பட்டது.

இதையடுத்து குறித்த வைத்தியரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வைத்தியர் ஷாபி நீதிமன்றத்தில் ஆஜர்!

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found