V2025

இராஜின் முகநூல் முடக்கப்பட்டமைக்கு இனவாதப் பதிவுகள் காரணமா?

பாடகர் இராஜின் உத்தியோகபூர்வ முகநூல் கணக்கு முடக்கப்பட்டதாகவும், இதன் பின்னணியில் அரசாங்கம் இருப்பதாகவும் இராஜ் நேற்று (10) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

எனினும், இதனை பேஸ்புக் நிறுவனமே தடை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். தனது பக்கம் இடைநிறுத்தப்பட்டது குறித்து பேஸ்புக் தலைமையகத்திற்குச் சென்று முறையிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், தனது முகநூல் பக்கம் இடைநிறுத்தப்பட்டமை குறித்து தனக்கு குறுந்தகவல் ஒன்று வந்தபோதிலும், அதற்கு பதிலளிப்பதற்கான தெரிவு தனக்கு இருக்கவில்லையென்றும் குறிப்பிட்டார்.

இதுகுறித்து பொலிஸ் தலைமையகத்திலும், மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறையிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், பேஸ்புக் நிறுவனத்தினால், பேஸ்புக் பக்கமொன்று அகற்றப்பட்டமைக்கு எதிராக இலங்கையில் உள்ள பொலிஸ் தலைமையகத்திலும், மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறையிடுவதில் பயன்கிடைக்குமா என்று இந்த செய்தியாளர் சந்திப்பில் கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த இராஜ், இலங்கையில் பதிவிடப்படும் சிங்கள மொழிப் பதிவுகளை கண்காணிப்பதற்கு இலங்கையர் சிலர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் அரசியல் ரீதியாக செயற்படுவதால் இவ்வாறு நடந்துகொள்வதாகவும் குற்றஞ்சாட்டினார்.

எவ்வாறாயினும், பேஸ்புக் கணக்கில் ஒரு பக்கம் நீக்கப்படுமாயின், அதற்கான விளக்கத்தை உரிய நபர் முன்வைக்கப்படும். குறித்த விளக்கம் நியாயமானது என்றால் பேஸ்புக் நிறுவனம் அதனைப் பரிசீலனை செய்து, பக்கம் மீதான தடையை நீக்கிக் கொள்ளும். எனினும், குறித்த விளக்கத்தை முன்வைக்கவில்லையெனில் அந்தப் பக்கம் மீதான தடை நீடிக்கும்.

அத்துடன், குரோதமான பதிவுகளையும், இன ரீதியான வசைபாடல்களையும் ஒடுக்குவதற்காக பேஸ்புக் நிறுவனம், புதிய சட்டதிட்டங்களை அறிமுகப்படுத்தியிருந்தது. இதனை மீறுவோரின் கணக்குகளும், பக்கங்களும் இடைநிறுத்தப்பட்டு வந்தன.

இந்த வரிசையிலேயே இராஜின் பேஸ்புக் பக்கமும் நீக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாடகர் இராஜ், மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக கடந்த காலங்களில் பிரசாரம் செய்துவந்த நிலையில், தற்போது முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான பாரிய பிரசாரமொன்றை முன்னெடுத்திருந்தார்.

அண்மைக்காலமாக சிங்கள இனவாத ரீதியான கலந்துரையாடல்களையும், பதிவுகளையும் இராஜ் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், தனது முகநூல் பக்கத்தை தடை செய்ய இந்த அரசாங்கமே காரணம் என இராஜ் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் குற்றஞ்சாட்டியிருந்தார்.

"இலங்கையில் 1500 முகநூல் பக்கங்கள் நீக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள் தற்போது எந்தளவுக்கு பலமாக இருக்கின்றது. இலங்கையில் 1500 முகநூல் பக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன. தற்போது எமக்கு குரல் எழுப்ப வழியில்லை.

எனது முகநூல் பக்கத்தில் 11 இலட்சம் பேர் நண்பர்களாக இருந்தனர். நாங்கள் முகநூல் பல நல்ல பணிகளுக்கு பயன்படுத்தினோம். எமக்கு பலர் இணைந்தனர். இவற்றை அடக்கவா எனது முகநூல் பக்கம் நீக்கப்பட்டது.

இந்த விடயத்தின் பின்னர் சிலர் இருக்கின்றனர் என்று நான் சந்தேகப்படுகிறேன். எனது முகநூல் பக்கம் கடந்த வெள்ளிக் கிழமை நீக்கப்பட்டது. இது நாளை உங்களுக்கு நடக்கலாம். எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நடக்கலாம்.

நான் இனவாதத்துடன் சம்பந்தப்படவில்லை. எனினும் எமக்குரியவை பற்றி பேசினேன். கூரகல பற்றி பேசினேன். கலகொட அத்தே ஞானசார தேரரின் ஒரு புகைப்படத்தை கூட முகநூலில் பதிவேற்ற முடியாது. இந்த பிரச்சினை யார் உலகத்திற்கு கொண்டு செல்வது. இந்த பின்னணியில் இருப்பது யார்? முகநூல் நிறுவனத்தில் பணியாற்றும் இலங்கையர்கள் இருக்கின்றனர்.

இவர்களின் முகநூல் பக்கத்தை பார்த்தால், அவற்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் பதிவுகள் இருக்கும். ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்தவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு பணியில் சேர்த்துள்ளனர். முகநூலை கட்டுப்படுத்துவது யார்.

அப்துல் ராசிக்கின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய முடியும். அது தடை செய்யப்படவில்லை. இது திட்டமிட்டு செய்யும் வேலை. இவர்கள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். முகநூலை புதிய வாக்காளர்களே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்" என இராஜ் வீரரத்ன தெரிவித்தார்.

பிரபல சிங்கள பாடகரான இராஜ், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பினருக்கு ஆதரவாக செயற்பட்டு வருவதுடன் அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found