V2025

உக்கிரமடையும் மங்கள - ரவி பனிப்போர்; மஹிந்தவிடம் சரணடைய ரவி தீர்மானம்!

நிதியமைச்சர் மங்கள சமரவீரவுக்கும், மின்வலு எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும் இடையிலான மோதல் உக்கிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு எரிவலு, மின்சக்தி அமைச்சு 8000 கோடி ரூபா கடன்பட்டுள்ள நிலையில், இந்தக் கடனை அடைக்க முடியாமல் ரவி கருணாநாயக்க திணறிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

"இந்தக் கடனை அடைப்பதற்கு நிதியமைச்சு உதவ வேண்டும்" என ரவி கருணாநாயக்க கோரியுள்ளார். எனினும், "தனி நபர்களின் திறமையற்ற நிர்வாகத்தினால் ஏற்பட்ட நட்டத்தை ஈடுசெய்ய நிதியமைச்சு தலையிட முடியாது" என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற ஆளுங்கட்சி உறுப்பினர்களை சந்தித்து பேசிய போதே, இந்த கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

நாடு எதிர்கொண்டுள்ள கடன் சுமையை சமாளித்துக் கொண்டு, நாட்டில் அபிவிருத்தியும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இவ்வாறான அநாவசிய பொறுப்புக்களை ஏற்க முடியாது எனவும் நிதியமைச்சர் இதன்போது கடும் தொனியில் தெரிவித்துள்ளார்.

''நான் நிதியமைச்சராக இருந்தபோதும் சிறப்பான நிர்வாகத்தை முன்னெடுத்தேன்'' என்று ரவி கருணாநாயக்க பதிலளிக்க, ''ஆம், நீங்கள் முன்னெடுத்த பணிகளை நாம் நன்கறிவோம்'' என மங்கள பதிலடி கொடுக்க வாக்குவாதம் சூடுபிடித்துள்ளது. இதைக் கேட்டு ரணில் விக்கிரமசிங்க சிரித்துக் கொண்டிருக்க, ரிஷாட் பதியூதீன் உள்ளிட்ட ஒரு சில எம்.பிக்கள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவை சமாதானப்படுத்தியுள்ளனர்.

இதனால், ரவி கருணாநாயக்க கடும் அதிருப்தியடைந்துள்ளார். இந்தச் சம்பவத்தின் பின்னர், கட்சிக்குள் இருக்கும் பின்வரிசை எம்.பிக்களை ரவி கருணாநாயக்க தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். எனினும், மூன்று எம்.பிக்கள் மட்டுமே ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கு வந்ததாக, அங்கு சென்ற எம்.பியொருவர் தெரிவித்தார்.

ஏற்கனவே நடந்த சம்பவத்தினால் விரக்தியடைந்த ரவி கருணாநாயக்க, ''இந்த நிலைமை நீடித்தால் தான் மஹிந்த ராஜபக்ஷ அணியில் இணைந்துகொள்வேன்'' என்று கூறியுள்ளார்.

எது எவ்வாறாயினும், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் அடுத்த தலைமை யார்? என்பது குறித்து தற்போது பல அணிகள் பிரிந்து, அதிகாரச் சண்டையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. 

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found