V2025

“பருத்தித்துறை முதல் தேவேந்திர முனை வரை”

நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் 30 ஆண்டுகால அரசியல் பயணம் குறித்த நூல் வெளியிடு, கடந்த 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாத்தறையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் ஐயா அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அவர் கூறியதாவது,

''நான் ஒரு தமிழன். தமிழ் மக்களின் தலைவர்களில் ஒருவன் என்று கூறுவதில் நான் பெருமையடைகிறேன்.

தமிழர்கள் ஆரம்பத்தில் நாட்டைப் பிரிக்குமாறு கோரவில்லை. சுதந்திரத்திற்கு முன்னர் கண்டி பிராந்தியத்தில் இருந்து சமஷ்டி ஆட்சி முறை கோரப்பட்டிருந்தது. கண்டியை ஆண்ட ஆட்சியாளர்கள் அதிகாரத்தைப் பகிருமாறு கோரியிருந்தனர். அதன் பின்னர் கரையோரத்தில் இருந்து சமஷ்டி ஆட்சி முறையில் அதிகாரத்தைப் பகிருமாறு கோரிக்கை எழுந்தது. மூன்றாவதாகவே தமிழர்கள் வடக்கு - கிழக்கில் அதிகாரத்தைப் பகிரக் கோரினர்.

தமிழர்கள் எப்போதும் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரத்தைப் பகிர்ந்து, அனைவருக்கும் சம உரிமையை வழங்குமாறே கோரி வந்தனர். வடக்கு மக்கள் சுயாட்சியைத் தான் கோரியிருந்தனர். முழு நாடும் தம்மைத் தாமே ஆளக்கூடிய சுயாட்சியைத் தான் கோரியிருந்தனர். எனினும், நாடு சுதந்திரமடைந்த பின்னர், நாம் நினைத்தது நடக்கவில்லை. துரதிஷ்டவசமான சம்பவங்களே நடந்தன. அதன் பின்னர் மொழி, காணி, கல்வி, தொழில்வாய்ப்பு ஆகியவை அரசியல் பேசுபொருளாக மாறியிருந்தன.

தமிழர்களுக்கு நடந்த அநீதிகளினால், அவர்கள் அதனை எதிர்த்துப் போராடிய அதேவேளை, அவர்கள் நாட்டைவிட்டு பெருமளவில் வெளியேறிவிட்டனர். தமிழர்களுக்கு சிங்கள அரசியல்வாதிகள் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை, தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் ஆகியவற்றினால் தான் புலிகள் தோற்றம் பெற்றனர்.

தமிழர்களின் பிரச்சினைகளை முறையாக கையாளாத காரணத்தினால், தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தும் நிலை ஏற்பட்டு, 30 வருடகாலம் போர் தொடர்ந்தது. 30 வருட கால போர் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தாலும் இராணுவ ரீதியாக மட்டுமே போர் முடிவுக்கு வந்தது.

தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக பல அணுகுமுறைகள் கையாளப்பட்டன. சர்வகட்சி பேச்சுக்கள், திம்பு பேச்சுக்கள், இந்திய - இலங்கை ஒப்பந்தம், 13 ஆம் அரசியலமைப்புத் திருத்தம் ஆகிய முறைகளில் பிரச்சினைக்குத் தீர்வுகாண முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. 13ஆம் திருத்தத்தின் பின்னர், அப்போது ஜனாதிபதியாக இருந்த ரணசிங்க பிரேமதாஸ, மங்கள முனசிங்கவின் தலைமையில் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாண குழுவொன்றை நியமித்தார்.

ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட சமாதான நடவடிக்கைகளுக்கமைய, அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில், அமைக்கப்பட்ட வெண்தாமரை இயக்கத்தின் ஊடாக ஊர் ஊராக சென்று மக்களைத் தெளிவுபடுத்தும் செயல்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அமைச்சர் மங்கள சமரவீர இதன்போது முன்நின்று உழைத்தார்.

அதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியான பின்னர் 2006 ஆம் ஆண்டு வரலாற்று ரீதியான உரையொன்றை நிகழ்த்தியிருந்தார். அதிகபட்ச அதிகாரங்களைப் பகிர்வதன் மூலம்தான் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என அன்று மஹிந்த கூறியிருந்தார். இந்த தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாண நிபுணர்கள் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. ஆனால், அதுவும் நடக்கவில்லை. அதன்பின்னர் போர் முடிந்து ஒருவார காலத்திற்கு பிறகு, அப்போதைய ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கை வந்திருந்தார். அப்போது இரண்டு, மூன்று வருடங்களில் நிரந்தர சமாதானத்தை நிலைநாட்டுவதாக புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று செய்துகொள்ளப்பட்டது. இதனை செய்து முடிப்பதாக மஹிந்த ராஜபக்ஷ ஐ.நா. வுக்கு உறுதி வழங்கியிருந்தார்.

அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், வெளிவிவகார அமைச்சராக இருந்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிசும் இந்தியாவுக்கு உறுதிமொழியொன்றை வழங்கியிருந்தனர். 13வது திருத்தத்தின் ஊடாக அதிகபட்ச அதிகாரத்தைப் பகிர்ந்து, மீண்டும் ஒரு பிரச்சினை ஏற்படாதிருக்க பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என அவர்கள் கூறியிருந்தனர். அதன்பின்னர் நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டது. உப குழு அமைக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களைப் பெற்று பிரச்சினைக்குத் தீர்வுகாண முயற்சிக்கப்பட்டது. இவர்களின் அறிக்கையில் அரசியலமைப்புக் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர். இந்த யோசனைகளுக்கு நாட்டின் சட்டவாக்க அதிகாரமுடைய, அதிஉயர் பீடமான நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியிருந்தது.

2009ஆம் ஆண்டு போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர், நாட்டுத் தலைவர்கள் சர்வதேசத் தலைவர்களைச் சந்தித்து, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு, மீண்டும் ஒரு பிரச்சினை ஏற்படாதிருக்க பணியாற்றுவோம் என உறுதி வழங்கியிருந்தனர். ஜனாதிபதிகளாக இருந்த ரணசிங்க பிரேமதாச, சந்திரிக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின்படி தமிழர்களுக்கு பிரச்சினை இருப்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். எனினும், எமது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை அனைத்தும் தவிடுபொடியாகி, அனைத்து முயற்சிகளும் மௌனித்துள்ளதாகவே எண்ணத்தோன்றுகிறது.

தற்போது இரண்டு கேள்விகள் எழுந்துள்ளன. ஒன்று, தரமான செயற்பாடுகளை முன்னெடுக்க, நேர்மையான அரசியல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமா என்ற விடயம். 2009ஆம் ஆண்டு பிரச்சினை போர் ரீதியாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதன் அர்த்தம், சமாதானம், நல்லிணக்கம் குறித்து இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கு வழங்கியிருந்த அனைத்து உறுதிமொழிகளும் முடிவுக்கு வந்துவிட்டது என்பதா? என்ற கேள்வி எழுகிறது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக சர்வதேச நாடுகளும், சர்வதேச அமைப்புக்களும் இலங்கை அரசாங்கத்திற்கு பெருமளவு உதவிகளை வழங்கியிருந்தன. போர் முடிந்த பின்னர் நாட்டில் நிரந்தர சமாதானம் ஏற்படும் என அந்த நாடுகள் பார்த்துக் கொண்டிருக்கின்றன. எனினும், அவர்கள் மௌனமான பார்வையாளர்களாக இருக்கின்றனர்.

இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய இராச்சியம், ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் புலிகளைத் தடைசெய்துள்ளன. இவர்கள் இலங்கை அரசாங்கம் மீது நம்பிக்கைக் கொண்டுள்ளன. மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாத வகையில், அனைத்து இன மக்களும் சம உரிமையுடன் வாழக்கூடிய நிரந்தர சமாதானத்தை இலங்கை அரசாங்கம் ஏற்படுத்தும் என அந்த நாடுகள் இன்னமும் நம்புகின்றன. இதற்குக் காரணம், விடுதலைப் புலிகளின் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக எமக்கு பிரச்சினைகள் குறித்து பேச்சு நடத்த முடியவில்லை. எனவே விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்த பின்னர் அனைத்து இன மக்களையும் சமமாக நடத்தும் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவோம் என இலங்கை அரச தலைவர்கள் சர்வதேச தலைவர்களுக்கு வாக்குறுதி வழங்கியிருந்தனர்.

71 ஆண்டுகால சுதந்திர இலங்கைக்குள் அநேக மோதல்களைப் பார்த்துவிட்டோம். இந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கையை ஆட்சி செய்த தலைவர்கள் சர்வதேச நாடுகளுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர். எனினும், தற்போது இலங்கை அரச தலைவர்கள் தமது பொறுப்புக்களை எந்தளவு நிறைவேற்றுகின்றனர் என்பது குறித்து, அனைவரும் அவதானித்து வருகின்றனர். எனினும், ஏற்கனவே தாமதமாகிவிட்டது என்றே நான் நினைக்கின்றேன். இந்தப் பிரச்சினையில் எப்போதும் எங்களுக்கு ஒரே நிலைப்பாடுதான் இருந்தது.

பிரிக்கப்படாத, துண்டுகளாக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து மக்களும் சம உரிமையுடன் நடாத்தப்படும் நாடாக, எமது எதிர்கால சந்தத்தியினர் வாழ வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாக இருக்கிறது. இதனை செய்யவில்லையெனில், மனித உரிமைகள் காக்கப்படும் என ஐ.நா வுக்கு வழங்கியுள்ள வாக்குறுதியை நிறைவேற்றவில்லையெனில், எமது நாட்டின் ஆட்சி எவ்வாறு இருக்கும்? என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

தமது பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுத்தருமாறு ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுத்து வரும் மக்கள் ஆட்சியாளர்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர். எனினும், இதற்கும் எல்லைகள் உள்ளன. அப்படியெனில், ஆட்சியாளர்கள் என்ன செய்ய போகின்றனர். இன்று நாடு விழுந்துள்ள இந்தப் பொருளாதார நெருக்கடியில் இருந்து எவ்வாறு மீள்வது? அனைத்து இன மக்களும் இணைந்து, பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக நாட்டைக் கட்டியெழுப்பும் எண்ணக்கருவொன்றை உருவாக்கும் சிந்தனை எமது ஆட்சியாளர்களுக்கு இன்னும் வரவில்லை.

எனினும், எமக்குப் பின்னர் சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்ட மலேசியா, கம்போடியா, பங்களாதேஸ் உள்ளிட்ட சிறிய நாடுகள்கூட இந்த நான்கு தாசப்தங்களில் எம்மைவிட முன்னேற்றம் கண்டுள்ளனர். சமூக, வாழ்க்கைத்தரங்களில் அவர்கள் எம்மைவிட முன்னேற்றம் கண்டுள்ளனர். ஆனால் இலங்கையில் அவ்வாறு இல்லை. இதற்குக் காரணம், எமது தலைவர்கள் சரியானதை, சரியான நேரத்தில் செய்யத் தவறிவிட்டனர்.

எமது நாட்டு மக்களிடம் நான் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். சமாதானத்தை என்றும் விரும்பும், தெற்கு மக்களிடமும், இந்தப் பிரச்சினையைப் பற்றி முழு நாட்டு மக்களிடமும் பேசிய மங்கள சமரவீரவின் இந்த நிகழ்வில் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். தமிழன் என்று கூறுவதில் நான் பெருமையடைகிறேன். நான் வடக்கைச் சேர்ந்தவன். தமிழ் மக்கள் தலைவர்களில் ஒருவன். நான் மாத்தறையில் வைத்து இதனைக் கூறுகிறேன். அனைவரும் ஒன்றிணைந்து, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகண்டு, இந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்று கேட்டுக்கொள்கிறேன்.''

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found