V2025

ஞானசார தேரருக்கு நோட்டீஸ்!

ஜனாதிபதியின் தீர்மானம், தனது அடிப்படை உரிமையை மீறியிருப்பதாக கூறி ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனு தொடர்பாக ஆலோசனை பெற்று, விளக்கமளிக்க உச்ச நீதிமன்றம், சட்டமா அதிபருக்கு அவகாசம் வழங்கியுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதிபதி பிரசன்ன ஜயவர்தன மற்றும் நீதிபதி எல்.டி.பி தெஹிதெனிய  ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் குறித்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

மனு தொடர்பாக ஆலோசனை பெற்று, விளக்கமளிக்க கால அவகாசம் வழங்குமாறு சட்டமா அதிபர் சார்பான மேலதிக சொலிசிஸ்டர் ஜெனரல், நீதிமன்றத்திடம் அனுமதி கோரினார்.

அதன்படி மனுவை செப்டம்பர் 10ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன் மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள சட்டமா அதிபர், ஜனாதிபதியின் செயலாளர், கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்புமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தியா எக்னலிகொட தாக்கல் செய்துள்ள மனுவில் ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கியமை அரசியலமைப்பின் 12(1) சரத்துக்கு முரணானது என்றும் குறிப்பிட்டுள்ளார். 
 
ஞானசார தேரருக்கு ஆறு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தபோதும், கடந்த மே 23 ஆம் திகதியன்று அவர் பொது மன்னிப்பின்கீழ் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found