V2025

நேரில் கண்ட சாட்சியங்கள் எங்கே?

திருகோணமலையில் 05 மாணவர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கின் சாட்சியாளர்கள் எங்கே? என தேடியறிந்து, அறிக்கையிடுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரட்ணவிடம், சட்ட மா அதிபர் திணைக்களம் கடிதம் மூலம் கோரியுள்ளது.

திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து, விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட 12 பேர் கைதுசெய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வந்தனர். எனினும், இவர்கள் தான் குற்றவாளிகள் என நிரூபிப்பதற்கோ, அவர்களை அடையாளம் காட்டுவதற்கோ சாட்சியங்கள் இல்லாத நிலையில் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர முடியாது என குறிப்பிடப்பட்டது.

இந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை அதிகாரிகள் உள்ளிட்ட 12 பேரையும் திருகோணமலை நீதிமன்றம் கடந்தவாரம் விடுதலை செய்திருந்தது.

2006ஆம் ஆண்டு ஜனவரி இரண்டாம் திகதி திருகோணமலை காந்தி சுற்றுவட்டத்தில், இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது. பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உள்ளிட்ட ஐந்து பேர் இதன்போது கொல்லப்பட்டிருந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்திருந்தனர்.

மனோகரன் ரஜீகரன், யோகராஜா ஹேமசந்திரன், லோகித ராஜா ரோகன், தங்கதுரை சிவநாதன், சண்முகராஜா கஜேந்திரன் ஆகிய மாணவர்களே சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து விசேட அதிரடிப்படையின் 12 பேரும், பொலிஸ் அதிகாரியொருவரும் கைதுசெய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வந்தனர். இந்த வழக்கு விசாரணை நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சாட்சியங்களை விசாரித்த நிலையில், குறித்த சந்தேக நபர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க போதுமான சாட்சியங்கள் இல்லை என்பதால், சந்தேக நபர்களை விடுவிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.

எனினும், குறித்த சம்பவத்தில் காயமடைந்த இரண்டு மாணவர்களும், கொல்லப்பட்ட மாணவர் ஒருவரின் தந்தையும் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். எனினும், வழக்கு விசாரணைகளின் போது இந்த சாட்சிகளை நீதிமன்றத்திற்கு அழைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காரணம். இவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதோ, அவர்களைத் தொடர்புகொள்வதற்கோ வழி இல்லாத நிலையில், சாட்சியங்களை கண்டறிய முடியாதுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.

நேரில் கண்ட சாட்சியங்களை முன்னிலைப்படுத்தி, சந்தேக நபர்களை அடையாளம் காண முடியாததால், குறித்த வழக்கு எவ்வித முன்னேற்றமும் இன்றி இழுபறி நிலையில் இருந்தது. இந்த நிலையில் தான், விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட சந்தேக நபர்களை குற்றவாளிகளாக நிரூபிக்க போதுமான சாட்சியங்கள் இல்லையெனக் குறிப்பிட்டு, நீதிமன்றம் அவர்களை விடுவித்திருந்தது.

இந்த நிலையில், சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியங்களைத் தேடியறிந்து அறிக்கையிடுமாறு, சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸ் மா அதிபருக்கு கடிதமூலம் கோரியுள்ளது.

குறித்த சாட்சிகள் மீண்டும் முன்வரும் நிலையில், திருகோணமலை மாணவர் படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

திருமலை மாணவர் படுகொலை விவகாரம்; கொலையாளி யார்?

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found