V2025

மதுஷ்- ஷாபி: உள்ளே 'செட்'!

பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள மாக்கந்துர மதுஷ் மற்றும் குருநாகல் வைத்தியசாலையின் மருத்துவர் ஷாபி ஆகியோர் குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்தில் ஒன்றாகவே தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக  பொலிஸ் தலைமையகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கபடாமல்  தடுத்து வைத்திருக்கும் வைத்தியர் ஷாபி தொடர்பில் கேட்டபோதே, அந்த அதிகாரி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Dr.ஷாபிக்கு எதிராக முறைப்பாடுகள் இருந்தால், முன்வைக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொதுமக்களிடம் விடுத்த வேண்டுகோளையடுத்து, தற்பொழுது வரை வைத்தியர் ஷாபிக்கு எதிராக 400 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் அவற்றில் 39 தாய்மார்கள் மாத்திரமே சத்திர சிகிச்சை மேற்கொண்டதன் பிற்பாடு தமக்கு குழைந்தைகள் பிறக்கவில்லை என்று முறைப்பாடு செய்துள்ளார்கள் என அந்த பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

 மேலும், சில தரப்பினர் தமது சுயலாபத்துக்காக “கருத்தடை” கதையை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்ற போதிலும், இதுவரை அந்த விடயம் தொடர்பில் யாருமே முறைப்படுகளை மேற்கொள்ளவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

வைத்தியர் ஷாபியிடம் சத்திரசிகிச்சையை செய்துகொண்ட தாய்மார்களில் சிலர், சிகிச்சைக்குப் பின் தாங்கள்  பிள்ளைகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்திருக்கவில்லை என்றும், ஊடகங்களின் வாயிலாக வெளியிடப்படும் அறிக்கைகள் காரணமாகவும் மற்றும் தமது பிரதேசவாசிகளின் அச்சறுத்தலினாலுமே பரிசோதனை செய்துகொள்வதற்காக முறைப்பாடு செய்துள்ளனர்  என்றும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 நீதிபதி மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள சிரேஷ்ட அதிகாரிகளுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், முறைப்பாடுகளைச் செய்த தாய்மார்கள், கொழும்பு தலைமை நீதிமன்ற வைத்திய அதிகாரி  அஜித் தென்னகோன் அவர்களின் கீழ், மகப்பேறு விஷேட வைத்திய பரிசோதனை குழுவிடம் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தௌஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடைய வைத்திய அதிகாரி ஒருவர் 4000 சிங்கள பௌத்த தாய்மாருக்கு கருத்தடை சத்திர சிகிச்சை செய்ததாக, கடந்த மே மாதம் 23ஆம் திகதி “திவயின” பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. 

இதனையடுத்து, குறுகிய அரசியல் இலாபம் பெறும் நோக்கில் இராஜபக்ஷ தரப்பினர், இந்த விவகாரத்தை கையில் எடுத்து, குறித்த வைத்தியரை கைதுசெய்யும் வரை அழுத்தம் கொடுத்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.

தற்போது, குறித்த மருத்துவர் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர். இதற்கமைய, குருநாகல் வைத்தியசாலையில் சத்திர சிகிச்சையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 26 மருத்துவ அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதனைத்தவிர 69 தாதியரிடமும், 18 நிர்வாக அதிகாரிகளிடமும் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இதன் விசாரணை அறிக்கை எதிர்வரும் 27ஆம் திகதி நீதிமன்றில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அந்த விசாரணை அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found