V2025

மைத்திரி - ரணில் முக்கிய சந்திப்பு; அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறுமா? இல்லையா?

மிகவும் தீர்மானமிக்க கூட்டம் ஒன்று இன்று இரவு 8.00 மணிக்கு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளது.

இனி வரும் காலங்களில் அமைச்சரவை கூட்டத்தில்  (கெபினட்) கலந்துகொள்ளமாட்டேன்  என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமையைத் தொடர்ந்து, நாளை (11) இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறாமல் இருப்பதற்கான சாத்தியப்பாடுகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சரவையின் தலைவரான ஜனாதிபதி சமூகமளிக்காது, அமைச்சரவைக் கூட்டம் ஒன்றை நடாத்துவது சட்டத்துக்கு முரணானது எனவும் அத்தகவல்கள்  மேலும் தெரிவிக்கின்றன.

கடந்த 08 ஆம் திகதி சனிக்கிழமை அவசரமாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஆராயும் நோக்கில்   அமைக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுகுழுவின் செயற்பாடுகளில் தமக்கு உடன்பாடில்லை எனவும், தொடர்ந்தும் தன்னை இலக்கு வைத்து அதன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டால், அமைச்சரவைக் கூட்டத்தில் தாம் பங்கேற்பதில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நோக்கில், மலிக் சமரவிக்கிரம உள்ளிட்ட அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் தனித்தனியே பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருந்தனர்.

அந்தவகையில், மிகவும் தீர்மானமிக்க கூட்டம் ஒன்று இன்று இரவு 8.00 மணிக்கு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் உள்ளிட்ட ஐ.தே.கவின் பிரதானிகள் பலருக்கு ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found