V2025

செய்திகள்

"பயங்கரவாத சம்பவத்துடன் "சதொச" நிறுவனத்துக்கு தொடர்பில்லை"- ரஞ்சித் அசோக!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத சம்பவத்துக்கு "சதொச" நிறுவனத்துக்கு சொந்தமான வாகனம் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக கூறியுள்ளார். 

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில், அமைச்சின் மேலதிக செயலாளரின் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இன்று (26) ஆஜராகி சாட்சியமளிக்கும் பேதே அவர் இவ்வாறு கூறினார். 

அமைச்சின் கீழ் உள்ள எந்தவொரு நிறுவனங்களும் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பு வைத்திருக்கவில்லை என்று கூறினார்.  அதேநேரம் சதொச நிறுவன கட்டிடத்தில் தான் அறிந்த வகையில், எவ்வித இரகசிய அறைகளும் இல்லை என்று அவர் கூறியுள்ளார். 

வௌிநாட்டு முதலீட்டு வேலைத்திட்டம் ஒன்றுக்கு அரசாங்கம் என்ற வகையில், தாம் அலுவலகம் ஒன்றை வழங்க வேண்டி இருந்ததாகவும், அதன்படி தானே 09 ஆம் மாடியில் அவ்வாறு அறை ஒன்றை தற்காலிகமாக வழங்கியிருந்ததாகவும் கூறினார். 

மேலும், சதொச நிறுவனம் சீனி என்ற பெயரில் போதைப் பொருள் கொண்டு வருவதாக கூறப்படும் குறற்ச்சாட்டுக்கும் அவர் மறுப்புத் தெரிவித்தார்.

Comment (0) Hits: 36

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் இன்று விசாரணை இல்லை!

முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் சாட்சியம் வழங்குவதற்காக இன்றைய தினம் (26) பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகினார்.

எனினும் இன்றைய தினம் அவரிடம் விசாரணை நடத்தாமல் ஒத்தி வைப்பதாக தெரிவுக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர். அதன்படி எதிர்வரும் 28 ஆம் திகதி 2.30 மணிக்கு அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவுக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று பகல் 02.30 மணியளவில் மீண்டும் கூடியது. இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க மற்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் உள்ளிட்டவர்கள் இன்றைய தினம் சாட்சி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 
 
Comment (0) Hits: 41

"யுத்தத்துக்கு பயந்து தப்பியோடியவரே கோட்டா" - குமார வெல்கம!

யுத்தத்துக்கு பயந்து நாட்டை விட்டு தப்பிச் சென்றவரே கோதாபாய ராஜபக்ஷ என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

களுத்துறை மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு அதனடிப்படையில் ஜனாதிபதி வேட்பாளரொருவர் களமிறக்கப்படுவாராக இருந்தால், அதற்கு தகுதியானவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா மாத்திரமே என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, யுத்தத்திற்கு பயந்து நாட்டை விட்டு அமெரிக்காவுக்கு ஓடிய கோத்தாபயவை விட சரத் பொன்சேகா மேலானவர் என்றும் குறிப்பிட்டார். 

நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புபடுத்தி நோக்கும் போது அவரே சிறந்த வேட்பாளராவார். எனினும் கடந்த தேர்தலில் போட்டியிட்டு அவர் தோல்வியடைந்து விட்டார் என்ற கேள்வி எழத் தோன்றும். அவ்வாறு நோக்கினால் சி.டபில்யு.டபில்யு.கன்கங்கரா இலவச கல்வியை அறிமுகப்படுத்தி, இலவச கல்வியின் தந்தையாக தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். எனவே அதனைப் பெரிதுபடுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். 

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில், பிரச்சினை காணப்பட்ட போதிலும் கோதாபாய ராஜபக்ஷவை அந்தப் பொறுப்பில் அமர்த்த முடியாது எனவும் நாட்டின் பாதுகாப்பு குறித்து சரியான தீர்மானங்களை எடுக்கக்கூடிய ஆற்றல் சரத் பொன்சேகாவிடம் உண்டு எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comment (0) Hits: 54

"பாலோப்பியன்" வேதம் ஓதுவதற்காக ரத்தன தேரர் குருணாலுக்கு!

சிங்கள பௌத்த தாய்மார் நான்காயிரம் பேருக்கு கருத்தடை சத்திரசிகிச்சை மேற்கொண்டதாக குருணாகல் வைத்தியசாலையின் மருத்துவர் ஷாபி ஷிஹாப்டீன் மீது குற்றஞ்சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பிலான சாட்சியங்கள் நாளை குருணாகல் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ள நிலையில், அத்துரலியே ரத்தன தேரர் இன்று குருநாகலுக்கு பயணம் செய்கின்றார்.

தாய்மாரைக் கொண்டு இந்த மருத்துவருக்கு எதிராக முறைப்பாடுகளை பெற்றுக்கொள்வதற்கும் மக்களை தூண்டும் வகையில், கருத்து வெளியிடவும் ரத்தன தேரர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தார்.

ஷாபிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனவும் அவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள வேண்டுமெனக் கூறிய ரத்தன தேரர், 90% வீதமான சாட்சியங்கள் திரட்டப்பட்டுள்ளதாக பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

நாளைய தினம் வழக்கு விசாரணைகளில் ஏதேனும் தாக்கத்தை செலுத்தும் நோக்கிலேயே ரத்தன தேரர் இன்று குருநாகல் பயணத்தை மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 47

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் - சஹ்ரானின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்தாரியும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவருமான சஹ்ரானின் மனைவி, இன்று காலை (26) கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்பான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சாய்ந்தமருதில் ஸஹ்ரான் குழு தங்கியிருந்தபோது அங்கு இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு முன்னர், சிலருக்கு பணம் விநியோகித்ததாகவும் அவர்களை அடையாளம் காட்ட முடியுமென்றும் சஹ்ரானின் மனைவி கூறியதையடுத்து, அதற்காகவே அவர் நீதிமன்றம் அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Comment (0) Hits: 69

அரச ஊழியர்கள் தமது கடமை நேரத்தில் அணிய வேண்டிய சீருடை!

அரச ஊழியர்கள் தமது கடமை நேரத்தில் அணிய வேண்டிய சீருடை தொடர்பாக நேற்று (25) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவையின் தீர்மானம் பின்வருமாறு:

27.அரச ஊழியர்களின் சீருடை (நிகழ்ச்சி நிரலில் 86ஆவது விடயம்)

அரச நிர்வாக விடயம் வழங்கப்பட்டுள்ள அமைச்சில் செயலாளரிடம் நிறுவனம் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கமைவாக அரச ஊழியர்களின் சீருடை குறித்த சுற்றறிக்கை ஒன்று 2019.05.29 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அரச நிர்வாகத்துக்கு பொறுப்பான அமைச்சரிடம் சமர்பிக்கப்பட்டுள்ள பல்வேறு உத்தரவுகளை கவனத்தில் கொண்டு, மேலே குறிப்பிடப்படும் சுற்றறிக்கையில் திருத்தத்தை மேற்கொள்வதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக அரச ஊழியர்களின் பணி நேரத்தில், தமது அலுவலகத்துக்கு வரும்பொழுது ஆண் ஊழியர்கள் காற்சட்டை மற்றும் சேர்ட் அல்லது தேசிய சீருடையுடன் இருப்பதுடன் பெண் ஊழியர்கள் சாரி, ஒசரி அல்லது அரச சேவையின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் பொருத்தமான சீருடையை அணிந்திருக்க வேண்டும் என்பதுடன் எப்பொழுதும் ஊழியர்களின் முகம் தெளிவாக இருக்க வேண்டும் என்பதுடன் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பில், விதிக்கப்பட்டுள்ள ஒழுங்கு விதிகளுக்கு தடை ஏற்படாத வகையிலான சீருடையாக இருக்க வேண்டும் என்பது போன்ற ஒழுங்கு விதிகளை உள்ளடக்கி, சுற்றறிக்கையை வெளியிடுவதற்காக அரச நிர்வாகம், இடர் முகாமைத்துவம் மற்றும் கிராம பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 
Comment (0) Hits: 37

அரச ஊழியர்களின் ஆடை; புதிய சுற்றுநிரூபத்துக்கு அமைச்சரவை அனுமதி!

அரசாங்க ஊழியர்களுக்கான ஆடை தொடர்பில் எழுந்த பிரச்சினையை அடுத்து பொது நிருவாக, கிராமிய பொருளாதார மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஏற்கனவே வெளியிட்ட சுற்றுநிரூபத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த திருத்தப்பட்ட சுற்றுநிரூபத்திற்கு நேற்று (25) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட புதிய சுற்றுநிரூபம் அமைச்சின் செயலாளர்கள், மாகாணச் செயலாளர்கள், திணைக்கள பிரதானிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சுற்றுநிரூபத்தில் பொதுநிருவாக அமைச்சின் செயலாளர் ஜே.கே. ரத்னசிறி கையொப்பமிட்டுள்ளார். ஏற்கனவே உள்ள சுற்றுநிரூபத்தில் அரசு ஊழியர்களின் ஆடை தொடர்பில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளில் முதலாவது, நான்காவது ஒழுங்கு விதிகளிலே திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி முதலாவது விதிமுறையில், அரச சேவையின் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில், பொருத்தமான ஒழுக்கமான ஆடையை அணிந்திருக்க வேண்டும். எந்தச் சந்தர்ப்பத்திலும் ஊழியர்களின் முகம் முழுமையாக தெரியக்கூடிய விதத்தில் இருக்க வேண்டும். பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பில் பணிக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளை பாதிக்காத வகையில், ஆடை அமைந்திருத்தல் வேண்டும்.

நான்காவது ஒழுங்கு விதி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது..

ஏதேனும் மதச் சம்பிரதாயங்களுக்கு உட்பட்ட தமது ஆடைகளைத் தயாரித்து கொண்டுள்ள அதிகாரி ஒருவர் இருந்தால், அவருக்கு முதலாவது விதியின்படி ஆடையை அணிந்திருப்பதோடு, தமது மத அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் அதிகாரிகளுக்கு முழுமையாக முகத்தை அறிந்துகொள்ளக்கூடிய வகையில், மேலதிகமாக ஓர் ஆடையை பயன்படுத்த முடியும்.

ஆடை தொடர்பான இந்தப் புதிய திருத்தப்பட்ட சுற்றுநிரூபம் உடனடியாக அமுல்படுத்தப்படும் வகையில், அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களையடுத்து, நாட்டின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும் பொருட்டு அரசாங்கம் அபாயா, ஹிஜாப் மற்றும் முகத்தை முழுமையாக மூடும் ஆடைகளுக்குத் தடை விதிக்கும் வகையில், 1989.02.01 திகதியிடப்பட்ட 8/89 இலக்கத்தைக் கொண்ட பொதுநிருவாக சுற்றுநிரூபத்தை, மீண்டும் 2019.05.29 ஆம் திகதியிடப்பட்ட 13/2019 திருத்தப்பட்டு அமுலுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த விவகாரம் பாராளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையிலும் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில், தெரிவுக்குழு பொதுநிருவாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறியை அழைத்து கலந்துரையாடப்பட்ட போது, இந்த சுற்றுநிரூபத்தில் திருத்தம் கொண்டுவருவது குறித்து அமைச்சருடன் கலந்துரையாடி தீர்மானிப்பதாக உறுதியளித்திருந்தார். இதற்கமைவாக சுற்றுநிரூபத்தில் இரண்டு விடயங்கள் தொடர்பில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளன.

புதிய திருத்தப்பட்ட சுற்றுநிரூபத்திற்கமைய, முஸ்லிம் பெண்கள் அபாய அணியவும், முகங்கள் முழுமையாக தெரியக்கூடிய வகையில் ஹிஜாப், நிகாப் அணியவும் அனுமதி கிடைத்துள்ளது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முகத்தை மூடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை.

அரச ஊழியர்களின் ஆடை தொடர்பான சுற்றுநிரூபத்தின் காரணமாக முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுவதால், பொருத்தமான அறிவிப்பைத் தெளிவாக வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்குக் கடிதம் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1531226978 CEYPETCO fuel prices increased from midnight today B

 
 
Comment (0) Hits: 23

"நம்பிக்கையை கட்டியெழுப்பி நாட்டை சீராக வழிப்படுத்துவதே இலக்கு" - பிரதமர்!

நல்லிணக்கமும் பாதுகாப்பும் நாட்டிற்கு மிக அவசியம் எனவும் அவை பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நல்லிணக்கம் சாத்தியமில்லையென்றால் ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டில் இரத்த ஆறு ஓடியிருக்கும் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நிலைமாற்று நீதிக்கான சமூகத் தலைவர்களை வலுவூட்டும் வகையில், இலங்கை தேசிய சமாதானப் பேரவை  நேற்று (25) கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்த வைபவத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டார். அரசியல் பிரமுகர்கள் மதத் தலைவர்கள் நாட்டின் கல்விமான்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

"நம்பிக்கையை கட்டியெழுப்பி நாட்டை சீராக வழிப்படுத்துவதே எமது இலக்கு. இருந்த பிரச்சினையோடு புதிய பிரச்சினையை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. இரண்டுக்கும் தீர்வு காணும் பலம் எமக்குண்டு. அதற்கு அனைத்துத் தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியமாகும். நாட்டில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதே அவசியம். நல்லிணக்கத்தை உருவாக்குவது தொடர்பில் எமக்கு தென்னாபிரிக்காவின் அனுபவமுள்ளது.

நாட்டின் சகல மக்களினதும் சகவாழ்வு, ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புதல், நீதிமன்றத்தின் சுயாதீனம், பாராளுமன்றத்தைப் பலப்படுத்துதல், தமிழில் தேசிய கீதம் என அனைத்திலும் எமது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதனூடான பிரச்சினைகளுக்கு நாம் வெற்றிகரமாக முகம் கொடுத்துள்ளோம். நாட்டில் சட்டத்தை நிலைநாட்டுவது தொடர்பில் பல பிரச்சினைகள் உள்ளன. இவையனைத்தையும் நிவர்த்திப்பதே எமது அடுத்தகட்ட செயற்பாடாகும்.

எமது நடவடிக்கைகளுக்கு சிலர் ஒத்துழைப்பு வழங்கும் அதேவேளை, எதிர்ப்புகளும் வருகின்றன. சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. உண்மை வெளிப்படுத்தப்படவில்லை. என சிலர் கூறிவருகின்றனர். இன்னும் சிலர் உண்மை வெளிப்படுத்தப்படும் போது, அது எமது படையினருக்கு பாதகமாக அமையும் எனக் கூறுகின்றனர். இந்த சகல தர்க்கங்களையும் ஒருபுறம் வைத்துவிட்டு என்ன நடந்துள்ளது? என்பதை நாம் பார்க்க வேண்டும். இந்த கேள்விகளுக்குப் பதிலளித்து முன்செல்ல வேண்டியுள்ளது.

அடிப்படைவாதம் நாட்டில் வெற்றி பெறவில்லை. இது எமது நல்லிணக்கத்துக்கான வெற்றி. எனினும் இதில் நாம் திருப்தி அடைய முடியாது. மீதுமுள்ளவற்றிற்கு நாம் தீர்வு காண வேண்டியுள்ளது" என்று கூறினார்.

Comment (0) Hits: 14

முஸ்லிம்களுக்கு தடைவிதித்த பிரதேச சபைத் தலைவர் நீதிமன்றத்திற்கு!

வென்னப்புவ முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை விதித்து, வென்னப்புவ பிரதேச சபைத் தலைவர் விடுத்துள்ள உத்தரவு விடயத்தினை பொலிஸார், மாரவில மஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

இதனையடுத்து பிரதேச சபைத் தலைவரை வரும் வெள்ளிக்கிழமை நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவுக்கான விளக்கத்தை அவர் நீதிமன்றில் அளிக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

Comment (0) Hits: 78

அபாயா விவகாரம்: ஜனாதிபதி, பிரதமருக்கு ரிஷாத் பதியுதீன் கடிதம்

உள்நாட்டலுவல்கள் அமைச்சு கடந்த மே மாதம் 29ஆம் திகதி வெளியிட்ட அரசாங்க ஊழியர்களின் ஆடை தொடர்பான சுற்றுநிருபத்தை, மீண்டும் திருத்தி வௌியிடுவதில் காலம் தாழ்த்தப்படுவதால் முஸ்லிம் பெண்கள் அலுவலகங்களுக்குச் செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வது தொடர்பில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டாரவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். 

இச்சிக்கலைத் தீர்த்து வைக்க முகத்தை திறந்து முஸ்லிம்களின் கலாசார உடையில் அபாயா அணிவதையும் அனுமதித்து, புதியசுற்று நிருபத்தை விரைவில் வௌியிடுமாறும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கடிதமொன்றை தனித்தனியாகஇவர்களுக்கு அனுப்பிவைத்துள்ளார். 

அக்கடித்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: 

உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் அண்மையில் வௌியிடப்பட்ட அரச ஊழியர்களின் ஆடை தொடர்பிலான சுற்று நிருபத்தில், முஸ்லிம் பெண்கள் பாரம்பரியமாக அணிந்து வந்த அபாயாவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் அலுவலகங்களுக்குச் செல்வதில் முஸ்லிம் பெண்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகினர். தேசிய உடை என்ற போர்வையில் பாரம்பரிய முஸ்லிம்களின் கலாசார ஆடைகள் மீது கட்டுப்பாடு விதிப்பதும், இஸ்லாமிய கலாசார விடயங்களில் தேவையற்ற நெருக்குதல்களை ஏற்படுத்துவதும் சமூகங்களுக்கிடையில் வீண் விமர்சனங்களை ஏற்படுத்துவதாகவுள்ளது. 

இனங்களை மோதவிட்டு சுய இலாபங்களையும் அரசியல் முதலீடுகளையும் அதிகரிக்கக் காத்திருக்கும் இனவாதிகளும், அண்மையில் வௌியிடப்பட்ட சுற்றுநிருபத்தை ஒரு இனத்தின் மீதான ஒடுக்கு முறையாகப் பயன்படுத்த முயற்சிக்கின்றனர். 

இவ்விபரீதங்களைக் கருத்தில் கொண்டு, கலாசாரங்களின் நம்பிக்கைகளில் தேவையில்லாத தலையீடுகளைத் தவிர்க்கும் வகையில், புதிய சுற்றுநிருபத்தை அவசரமாக வௌியிட வேண்டும். 

மேலும், பாரம்பரியமாக இலங்கை முஸ்லிம் பெண்கள் அணிந்து வந்த அபாயாவையும் அனுமதித்து, புதிய சுற்றுநிருபத்தை வௌியிடுவது சிறப்பாக அமையும். மேலும் ஏற்கனவே வௌியிடப்பட்ட சுற்று நிருபத்தால் சில அரச அதிகாரிகளினால், அலுவலகங்களிலும், பாடசாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும் முஸ்லிம் பெண்கள் தேவையற்ற நெருக்கடிகளை எதிர்கொள்ள நேர்ந்தது. இதைத் தவிர்க்கும் பொருட்டு ஆடைகள் தொடர்பில் தௌிவான வரையறைகளை உள்ளடக்கி, புதிய சுற்றுநிருபத்தை வௌியிட வேண்டும் என்றும் பாரளுமன்ற உறுப்பினரும் அகில இங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Comment (0) Hits: 41

அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்தார் Dr.ஷாபி!

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் சிரேஷ்ட வைத்தியர்  சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். 

தனது கைது மற்றும் தடுப்புக்காவல்  சட்டவிரோதமானது என்று உத்தரவிடக் கோரி இன்று (25) இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

குருணாகல் பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் புஷ்பலால்,  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, குருணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத்,  சி.ஐ.டி. பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர,  பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, பாதுகாப்பு செயலர் ஜெனரால் ஷாந்த கோட்டேகொட மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாக பெயரிட்டே  இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை அவர் தககல் செய்துள்ளார். 

தற்போதும் சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வைத்தியர் ஷாபி, தனது சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் ஊடாக இந்த மனுவை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(முழுமையான மனு இணைப்பு )

PetitionFInal

Comment (0) Hits: 26

"அரசியலமைப்பை ஜனாதிபதி கேலிக் கூத்தாக்கக் கூடாது"-செல்வம் எம்.பி!

அரசியலமைப்பின் 19 ஆம் திருத்தம் பொறுத்தமற்றது என்று ஜனாதிபதி கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவ்வாறு அவர் கூறினால் 19 ஆம் திருத்தத்தினால் என்ன பாதகம் ஏற்பட்டுள்ளது என்பதையும் ஆதரபூர்வமாக நிரூபிக்க வேண்டும். அதனை விடுத்து அரசியலமைப்பை கேலிக் கூத்தாக்கக் கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். 

அரசியலமைப்பின் 18 , 19 ஆம் திருத்தங்கள் நீக்கப்பட வேண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமை குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தேவைக்கேற்ப ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கருத்தை கூறிக் கொண்டிருக்கின்றார். ஆனால் அவர் கூறுவதைப் போன்று அவரது தேவைக்கேற்ப அரசியலமைப்பு திருத்தத்தை மாற்ற முடியாது. காரணம் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளதோடு, சட்டமாக்கப் பட்டுள்ளது. 

இந்நிலையில் 19 ஆம் அரசியலமைப்பு திருத்தத்தை நீக்கவேண்டும் என்று ஜனாதிபதி கூறுவது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. அரசியலமைப்பு தொடர்பாக ஜனாதிபதியின் இந்த கருத்தினால் நாட்டின் ஸ்திரத்தன்மையும், கௌரவமும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும். 

கடந்த 2015 ஆம் ஆண்டு அவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட ஆரம்ப காலப்பகுதியில் தனக்கான கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றிக் கொண்டிருந்தார். தமிழ் மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கி அவர்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டதற்கு இணங்க செயற்பட்டார். ஆனால் இப்போது பதவி ஆசையினால் அதிலிருந்து விலகி இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். 

தனக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை என்று அவர் கூறுவதை நம்ப முடியாமல் உள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக யுத்தியாகவே நாம் இதனைக் கருதுகின்றோம். ஆனால் ஜனாபதியினுடைய இது போன்ற கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம் நாட்டின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும்.  

19 ஆம் திருத்தத்தினால் நாட்டுக்கு எந்த பாதகமும் ஏற்படவில்லை. கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்டோபரில் மஹிந்த ராஜபக்ஷவை இவர் பிரதமராக்கியமையினாலேயே பிரச்சினைகள் ஏற்பட்டன. அதற்கு 19 ஆம் திருத்தம் காரணம் அல்ல. அத்தோடு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஜனாதிபதிக்கு காணப்படும் முரண்பாடுகளும் பல பிரச்சினைகளுக்கு காரணமாகியுள்ளன. 

Comment (0) Hits: 27

ஞானசார மற்றும் மைத்திரிக்கு எதிராக மனு தாக்கல்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இரண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொடவின் மனைவியான  சந்தியா எக்னலிகொட மற்றும் மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையத்தின் தலைவர் பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ், பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவித்தமையினாலேயே குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யுமாறு குறித்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

Comment (0) Hits: 26

முஸ்லிம்களுக்கெதிரான போலிப் பிரச்சாரங்களை முன்னெடுப்பதில் ஊடகங்கள் முன்நின்று செயற்படுகின்றது"- நஸீர்!

கடந்த 21ஆம் திகதி தாக்குதல் நடாத்திய சர்வதேச தீவிரவாதி சஹ்ரான் ஹாசிம் போன்றவர்களுடன் தொடர்புபடுத்தி, அப்பாவி முஸ்லிம்களை கைது செய்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர். இவர்களை விடுவிப்பதற்க்கான அனைத்து முயற்சிகளையும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் செய்து வருகின்றார்.

 
அத்தோடு எந்தவொரு குற்றமுமின்றி வைத்தியர் ஷாபி மற்றும் தல்கஸ்பிடி பிரதேசத்தில் போட்டியிட்ட பிரதேச சபை வேட்பாளர் அசாத் நஸீர் போன்றவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விரைவாக விடுதலை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஆர்ப்பாடம் செய்யவும் தயாராகவுள்ளேன் என வடமேல் மாகாணசபை முன்னாள் உறுப்பினர் நஸீர் தெரிவித்துள்ளார்.

அன்மையில் சியம்பலாகஸ்கொடுவ பகுதியில் வீதிகள் தாரிட்டு செப்பனிடும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் குளியாப்பிடிய பிரதேசசபை உபதவிசாளர் இர்பான், பிரதேச சபை உறுப்பினர் சபீர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

வைத்தியர் ஷாபி போன்றவர்களை கைது செய்து, போலியான குற்றச்சாட்டுகள் மூலம் முஸ்லிம் வைத்தியர்கள் மீதான நம்பிக்கையை இல்லாது செய்யும் ஒரு சதியாகவே நான் இதனைப் பார்க்கின்றேன்.

முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள் மீது கைவைத்த அவர்கள், இன்று வைத்தியத்துறையிலும் கை வைத்திருக்கிறார்கள். இது குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதற்காக வைத்தியசாலைக்கு செல்கின்ற தாய்மார்களுக்கு மிகப்பெரிய சவாலாக திகழ்கின்றது.

வைத்தியர் ஷாபி, அசாத் நசீர் போன்றவர்களை சந்திப்பதற்காக நான் சிறைச்சாலைக்கு சென்றிருந்தேன். எந்தவொரு குற்றமுமின்றி கைது செய்யப்பட்டிருக்கின்ற அவர்களை விசாரணைக்கு உட்படுத்தாமல் அவசரகாலச் சட்டம் மூலம் தடுத்து வைத்திருப்பது மிகவும் கவலைக்குரிய ஒரு விடயமாகும்.

எமது தல்கஸ்பிடிய வேட்பாளர் ஆசாத் நஸீர் என்பவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் புகைப்படத்தை தொலைபேசியில் வைத்திருந்தார் என்பதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். ஒரு அமைச்சரின் புகைப்படம் இருந்ததற்காக கைது செய்யப்படுகிறார் என்றால், இந்த நாட்டில் எங்கே ஜனநாயகம் இருக்கின்றது என்று கேட்க விரும்புகின்றோம்.

அதேபோன்று, சாதாரண விடயங்களுக்காக கைது செய்யப்பட்ட பலரை சிறைச்சாலையில் சந்திக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. குடும்பங்களை இழந்து எந்த ஒரு குற்றமும் செய்யாத இவர்கள் சிறைச்சாலையில் வாடி கண்ணீர் விட்டு கொண்டு இருப்பதை நான் அவதானித்தேன்.

இன்று நாம் செய்கின்ற சாதாரண தவறுகளை கூட பெரிதாக சித்தரிக்கப்பட்டு, ஊடகங்கள் மூலமாக பெரிதுபடுத்தப் படுகின்றதை நாம் இன்று அவதானித்துக் கொண்டிருக்கின்றோம். நமது பிரச்சினைகளையும் நமது செய்திகளையும் வெளிப்படுத்துவதற்காக எந்த ஊடகங்களும் முன்வருவதில்லை.

முஸ்லிம்களுக்கு எதிரான போலியான பிரச்சாரங்களை செய்வதில் ஊடகங்கள் முன்நின்று செயற்படுகின்றமை இன்று மிகப்பெரிய கவலைக்குரிய விடயமாக காணப்படுகின்றது. எனவே இந்த காலத்தைப் பொறுத்தவரையில் சிந்தித்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் நாம் காணப்படுகின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.

Comment (0) Hits: 56

46,673 தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வசதி - நிதி அமைச்சு!

"என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா" வேலைத்திட்டத்தின் கீழ், 46,673 தொழில் முயற்சியாளர்களுக்கு 79,000 மில்லியன் ரூபா கடன் வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 

"சொந்துரு பியச" வீடமைப்புத் திட்டத்தின் கீழேயே அதிகமான கடன் வழங்கப்பட்டுள்ளது.  விவசாயிகளுக்காக முன்னெடுக்கப்படும் "ரன் அஸ்வென்ன" மற்றும் "கொவி நவோதா" கடன் திட்டங்களுக்கு அதிக கேள்விகள் நிலவுவதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

"ரிவிபல சவி" கடன் திட்டத்தின் கீழ் 1339 தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Comment (0) Hits: 28

இலங்கைக்கு சர்வதேசத்திடமிருந்த மரியாதையை ஜனாதிபதி இல்லாமலாக்கிவிட்டார்"-ராஜித!

உலகத் தலைவர்கள் ஜீ - 07 மாநாட்டின் போது, எமது நாட்டு ஜனாதிபதி இருந்த இடத்திற்கே வந்து வழங்கிய மதிப்பை, ஜனாதிபதியே இல்லாது செய்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். 

முன்னாள் அமைச்சர் ஜெயலத் ஜயவர்தனவின் நினைவுதினத்தையொட்டி, ஜாஎல பிரதேச வைத்தியசாலையில் 20 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று (24) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,

"அரசாங்கத்தில் குறைபாடுகள் இருந்த போதிலும் நாட்டில் பாரிய வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்துடன், இலங்கை தொடர்பில் சர்வதேசம் மிகுந்த மரியாதை வைத்திருந்தது. அது ஒக்டோபர் 26ஆம் திகதியுடன் இல்லாது போய்விட்டது.  தற்போது கஸகஸ்தான், பலுகிஸ்தான் போன்ற நாடுகளிடமிருந்து மாத்திரமே ஜனாதிபதிக்கு அழைப்பு வருகின்றது.  மஹிந்த ஆட்சிக் காலத்திலும் இதுபோன்ற சிறிய நாடுகளைச் சேர்ந்த அரச தலைவர்களே இலங்கைக்கு வந்தனர்.  அந்த நிலையை தற்போதைய ஜனாதிபதி மீண்டும் உருவாக்கிவிட்டார். அனைவரும் ஒன்றிணைந்து ஈட்டப்பட்ட சுதந்திரம் துண்டு துண்டாக உடைவதனை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது"  என அமைச்சர் கூறினார்.

Comment (0) Hits: 27

இலங்கை மீதான பயண ஆலோசனை நீக்கம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் அமெரிக்கா இலங்கை மீது விதித்திருந்த பயண ஆலோசனையை விலக்கிக் கொண்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க இராஜாங்க திணைக்களம், அமெரிக்க அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டோரையும் இலங்கையில் இருந்து வெளியேறுமாறு அறிவித்திருந்தது.

நேற்றைய தினம் இலங்கை மீதான பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இலங்கை மீதான பயண ஆலோசனை முன்னர் இருந்த Level 3  இல் இருந்து தற்பொழுது Level 2 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment (0) Hits: 23

ரிஷாட் மற்றும் இராணுவத் தளபதி தெரிவுக்குழுவுக்கு அழைப்பு!

கடந்த ஏப்ரல் 21 இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக விசாரணை செய்யும் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு நாளை, முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான  ரிஷாட் பதியுதீன் மற்றும் இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

நாளை புதன்கிழமை (26) பிற்பகல் 3.00 மணிக்கு பாராளுமன்ற விஷேட தெரிவுக்குழு கூடவுள்ளது. இதன்போது முதல் சாட்சியமாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சாட்சியமளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 36

Page 1 of 52