V2025

அகதிகளுக்கான நிரந்தர தீர்வு இறக்கும் வரையில் அகதி எனும் பெயருடன் வாழ்வதா?

உலக அகதிகள் தினமான இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள போர் மற்றும் பாதுகாப்பிண்மை காரணமாக தம் நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்தவர்களைப் பற்றி அதிகமாக பேசும் நாம் நம் நாட்டிலும் நம்மவர்கள் இன்னும் அகதிகளாகவே வாழ்கின்றனர் என்பதை மறந்து விடுகின்றோம்.

 

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்துக்கும் இடையே 30 ஆண்டுகளாக நடைபெற்ற யுத்தத்தினால் இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்த தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டின் பல இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். எமது நாட்டிலேயே சொந்த இடங்களில் மீளக்குடியமர முடியாத நிலையில் இன்னும் பலர் அகதிகளாக  உள்ளனர்.

 

தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கில் யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியிலும் சொந்த இடங்களில் குடியமர முடியாது இன்று வரையில் அகதிகளாகவே வாழ்ந்து வருகின்றனர். சுpலர் மீள் குடியமர்த்தப்பட்ட போதிலும் வசதியின்மை காரணமாக உறவுகளை இழந்து உரிமையை இழந்து வாழ வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தம்மிடம் கண்டுபிடித்து தரும்படி வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மக்கள், நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் வீதியோரங்களிலும், கோவிலிலும் அகதி வாழ்க்கை வாழ வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 

நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் தஞ்சமடைபவர்களை அகதி என்று கூறினால் தமது சொந்த நாட்டிலேயே நிர்க்கதியாக வாழ்பவர்களையும் அகதி என்று தானே கூற வேண்டும். சொந்த நாட்டுக்கு உள்ளேயே இடம் பெயர்பவர்கள் தங்களுக்கான பாடசாலைகளும், குடியிருப்புப் பகுதிகளும், மருத்துவமனைகளும் குண்டு வீச்சு தாக்குதலால் உருக்குலைந்து போக, வேறு வழியில்லாமல் நாட்டின் பிற பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம். உயிருக்குப் பயந்து நாட்டில் மிக உள்ளடங்கிய பகுதிகளில் வசிக்கும் பலருக்கும் மனிதாபிமான முறையில் கூட உதவிகளை வழங்க முடியாத துர்பாக்கிய நிலை தோன்றியிருக்கிறது. கடுமையான உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அது தான் இன்று எம் நாட்டிலும் நிகழ்கின்றது.

 

சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ள மக்களுக்கே நிரந்தர தீர்வு எட்டப்படாத நிலையில் ஏனைய நாடுகளுக்கு சென்று அகதிகளாக வாழ்பவர்களுக்கு எவ்வாறு நிரந்தர தீர்வு கிடைக்கும் எனும் கேள்வி எம்மில் உருவாகின்றது.

 

உலக அகதிகள் தினம் ஆண்டுதோறும் ஜூன் 20-ம் நாளன்று நினைவுகூரப்பட்டு வருகின்றது. 2000 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானமொன்றின்படி, அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக, உலக அகதிகள் தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆபிரிக்க அகதிகள் நாள் ஜூன் 20 இல் கொண்டாடப்படுவதால் இந்நாள் உலக அகதிகள் நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி அகதிகளாக தாம் வசிக்கும் நாட்டினுள், பிற நாடுகளிலென இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களுக்குள்ளாகி வாழ்ந்துவரும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வினை உலக மக்களிடத்தில் ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கியமான நோக்கமாகும். அன்றைய நாள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் பல்வேறு போர்களால் அரசியல், சமூகச் சூழல்களால் அகதிகளாக அல்லலுறும் அகதிகளை நினைவு கூரும் வகையில் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள், இசை நிகழ்ச்சிகள், நினைவஞ்சலி நிகழ்வுகளெனப் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்ஒவ்வோர் ஆண்டும் இந்நிகழ்வுகளுக்கான கருப்பொருளைத் தீர்மானிக்கிறது.

 

 

உலக நாடுகளைப் பொருத்த வரையில் பொதுவாக  தாய்நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் தஞ்சமடைபவர்களின் எண்ணிக்கை, அதிகரித்து வருவதாக .நா. அகதிகள் ஆணையம் (UNHCR) புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது.  போர்ச் சூழல் மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக தினமும் சராசரியாக தங்கள் நாட்டைவிட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை 28,300. இப்போதைய நிலவரப்படி சர்வதேச அளவில் சுமார் 7 கோடி மக்கள் அகதிகளாக உள்ளனர். அவர்களில் பாதிப்பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்களே என்றும் அந்த ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்த அமைப்பு. இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தபோது பல நாடுகளுக்கு சிதறி ஓடிய ஐரோப்பியர்களின் மறுவாழ்வுக்காக, .நா. பொதுக்குழுவால் 1950 டிசம்பர் 14-ம் திகதி உருவாக்கப்பட்டது. தொடக்கத்தில். இதுதவிர, சர்வதேச புலம்பெயர்வு நிறுவனம் மற்றும் செஞ்சிலுவை சங்கம் ஆகியவை இந்த ஆணையத்துடன் இணைந்தும் தனித்தனியாகவும் அகதிகள் நலனுக்காக செயல்பட்டு வருகின்றன.

 

சமீபகாலமாக எந்த நாட்டிலிருந்து மிக அதிக அளவிலான மக்கள் அகதிகளாக வெளியேறுகின்றனர்? சந்தேகமில்லாமல் சிரியாதான். அங்கு கடந்த 7 ஆண்டுகளாக நடைபெறும் உள்நாட்டுப் போரால் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்திருக்கிறார்கள். 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்திருக்கிறார்கள்.அந்த நாட்டுக்கு உள்ளேயே இடம் பெயர்பவர்கள் 63 லட்சம் பேர். இதையும் தாண்டி சிரியாவிலிருந்து அண்டை நாடுகளுக்கு குடிபெயர்ந்தவர்கள் 40 லட்சத்துக்கும் அதிகம். சிரியா மக்களில் பலர் லெபனான், ஜோர்டான், எகிப்து, ஈராக் போன்ற நாடுகளில் தஞ்சம் அடைகிறார்கள்.

 

போர் என்பது ஒருபுறம் இருக்க, வெள்ளம், நிலநடுக்கம், புயல், நிலச்சரிவு ஆகிய காரணங்களால் இடம் பெயர்பவர்களும் உண்டு. இவர்களில் பலரும் தங்கள் நாட்டிலேயே உள்ள வேறு பகுதிக்கு இடம் பெயர்வதுதான் வழக்கம் என்றாலும் வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்வதும் அதிகரித்து வருகிறது. முக்கியமாக சிறிய நாடுகளிலிருந்து பெரிய நாடுகளுக்கு செல்வது அதிகரித்து வருகின்றது.

 

.நா. பொதுச்சபை 2016 செப்டம்பர் 19-ம் திகதி ஒரு உயர்மட்டக் குழு கூட்டத்தைக் கூட்டியது. அதில் அகதிகள் விஷயத்தில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்த மற்றும் மனிதாபிமான கண்ணோட்டத்தோடு நடந்துகொள்ள வேண்டும் என அடிக்கோடிட்டுக் காட்டியது.

 

தன்னை அகதி என்று கூறிக்கொண்டு பிற நாட்டுக்குச் செல்பவர், தனது அடையாளத்தையும் அகதியாக வந்ததற்கான காரணத்தையும் கூறி விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் பெரும் கூட்டமாக அகதிகள் வந்து சேரும் நிலை ஏற்பட்டால், இப்படி தனித்தனியாக விண்ணப்பிப்பதும், அவற்றைப் பரிசீலிப்பதும் நடைமுறைக்கு சாத்தியமில்லாமல் போகலாம். இந்தச் சூழலில் குழுவாகவே அவர்களை அகதிகளாகக் கருதலாம் என்றது இந்த மாநாடு.

 

.நா. அகதிகள் அமைப்பின் முக்கியச் செயல்பாடுகள் என்ன? ஒரு நாட்டில் மிக அதிக அளவில் அகதிகள் குடியேறும்போது அந்த அரசால் அவர்களுக்குப் போதிய அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது இயலாமல் போகலாம். அப்போது மேற்படி .நா. அமைப்பு அவர்களுக்கு உதவி செய்யும். தற்காலிகப் பாதுகாப்பு அளிக்கும்.

 

அகதிகள் பரிதாபமானவர்கள். சொந்த நாட்டிலிருந்து விரட்டப்பட்டவர்கள் அல்லது விரட்டப்படும் சூழலுக்கு ஆளானவர்கள். இப்படிப்பட்டவர்களுக்கு உரிமைகள் உண்டா? சில உரிமைகளை .நா.சபை வரையறுக்கிறது. அகதிகளை வற்புறுத்தி சொந்த நாட்டுக்கே அனுப்பக் கூடாது - முக்கியமாக அங்கு அவர்கள் அபாயகரமான சூழலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற நிலையில் திருப்பி அனுப்பக் கூடாது. அகதிகளிடையே பாரபட்சம் காட்டக் கூடாது.

 

ஓர் அகதியின் வாழ்க்கைத் துணைவரோ, குழந்தையோ பின்னர் அவருடன் வந்து சேரும்போது, மனிதாபிமான கண்ணோட்டத்தில் அதை அனுமதிக்க வேண்டும். அகதிகளின் உயிருக்கு பாதுகாப்பு என்பதோடு நின்றுவிடாமல் அவர்களுக்கு வேறு சில வசதிகளையும் செய்துதர வேண்டும். அதாவது அந்த நாட்டில் சட்டபூர்வமாகக் குடியேறி இருக்கும் பிற நாட்டு மக்களுக்கு சமமாக அகதிகளையும் நடத்த வேண்டும். அகதிகளுக்கு மருத்துவம், பள்ளிக்கூடம், பணியாற்றும் உரிமை ஆகியவற்றை வழங்க வேண்டும்.

 

அகதிகளும் எந்த நாட்டில் தஞ்சமடைகிறார்களோ அந்த நாட்டின் சட்டத்திட்டங்களை மதித்து நடந்து கொள்ள வேண்டும். ஒரு குற்றவாளியை அகதியாகக் கருதி ஏற்றுக் கொள்ள முடியுமா? அதேநேரம் அரசியல் காரணங்களுக்காக மட்டும் ஒருவரை அவரது நாடு குற்றவாளியாகக் கருதினால் அவர் வேறொரு நாட்டில் அகதியாக தஞ்சம் புகலாம் என .நா. பொதுச்சபை தெரிவிக்கின்றது.

 

எவ்வாறாயினும் வேறு நாடுகளில் தஞ்சம் புகும் மக்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டாலும் அவர்களின் வாழ்க்கைக்கு நிரந்தர தீர்வு தான் என்ன என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. எமது நாட்டிலும் சரி உலக நாடுகளிலும் சரி யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோ அல்லது வெள்ளம், நிலநடுக்கம், புயல், நிலச்சரிவு ஆகிய காரணங்களால் பெயர்பவர்களாக இருந்தாலும் அவர்களுக்கான நிரந்தர தீர்வு இறக்கும் வரையில் அகதி எனும் பெயருடன் வாழ்வதா?

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found