கட்டுரை

அகதிகளுக்கான நிரந்தர தீர்வு இறக்கும் வரையில் அகதி எனும் பெயருடன் வாழ்வதா?

உலக அகதிகள் தினமான இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள போர் மற்றும் பாதுகாப்பிண்மை காரணமாக தம் நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்தவர்களைப் பற்றி அதிகமாக பேசும் நாம் நம் நாட்டிலும் நம்மவர்கள் இன்னும் அகதிகளாகவே வாழ்கின்றனர் என்பதை மறந்து விடுகின்றோம்.

 

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்துக்கும் இடையே 30 ஆண்டுகளாக நடைபெற்ற யுத்தத்தினால் இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்த தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டின் பல இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். எமது நாட்டிலேயே சொந்த இடங்களில் மீளக்குடியமர முடியாத நிலையில் இன்னும் பலர் அகதிகளாக  உள்ளனர்.

 

தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கில் யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியிலும் சொந்த இடங்களில் குடியமர முடியாது இன்று வரையில் அகதிகளாகவே வாழ்ந்து வருகின்றனர். சுpலர் மீள் குடியமர்த்தப்பட்ட போதிலும் வசதியின்மை காரணமாக உறவுகளை இழந்து உரிமையை இழந்து வாழ வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தம்மிடம் கண்டுபிடித்து தரும்படி வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மக்கள், நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் வீதியோரங்களிலும், கோவிலிலும் அகதி வாழ்க்கை வாழ வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 

நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் தஞ்சமடைபவர்களை அகதி என்று கூறினால் தமது சொந்த நாட்டிலேயே நிர்க்கதியாக வாழ்பவர்களையும் அகதி என்று தானே கூற வேண்டும். சொந்த நாட்டுக்கு உள்ளேயே இடம் பெயர்பவர்கள் தங்களுக்கான பாடசாலைகளும், குடியிருப்புப் பகுதிகளும், மருத்துவமனைகளும் குண்டு வீச்சு தாக்குதலால் உருக்குலைந்து போக, வேறு வழியில்லாமல் நாட்டின் பிற பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம். உயிருக்குப் பயந்து நாட்டில் மிக உள்ளடங்கிய பகுதிகளில் வசிக்கும் பலருக்கும் மனிதாபிமான முறையில் கூட உதவிகளை வழங்க முடியாத துர்பாக்கிய நிலை தோன்றியிருக்கிறது. கடுமையான உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அது தான் இன்று எம் நாட்டிலும் நிகழ்கின்றது.

 

சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ள மக்களுக்கே நிரந்தர தீர்வு எட்டப்படாத நிலையில் ஏனைய நாடுகளுக்கு சென்று அகதிகளாக வாழ்பவர்களுக்கு எவ்வாறு நிரந்தர தீர்வு கிடைக்கும் எனும் கேள்வி எம்மில் உருவாகின்றது.

 

உலக அகதிகள் தினம் ஆண்டுதோறும் ஜூன் 20-ம் நாளன்று நினைவுகூரப்பட்டு வருகின்றது. 2000 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானமொன்றின்படி, அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக, உலக அகதிகள் தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆபிரிக்க அகதிகள் நாள் ஜூன் 20 இல் கொண்டாடப்படுவதால் இந்நாள் உலக அகதிகள் நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி அகதிகளாக தாம் வசிக்கும் நாட்டினுள், பிற நாடுகளிலென இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களுக்குள்ளாகி வாழ்ந்துவரும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வினை உலக மக்களிடத்தில் ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கியமான நோக்கமாகும். அன்றைய நாள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் பல்வேறு போர்களால் அரசியல், சமூகச் சூழல்களால் அகதிகளாக அல்லலுறும் அகதிகளை நினைவு கூரும் வகையில் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள், இசை நிகழ்ச்சிகள், நினைவஞ்சலி நிகழ்வுகளெனப் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்ஒவ்வோர் ஆண்டும் இந்நிகழ்வுகளுக்கான கருப்பொருளைத் தீர்மானிக்கிறது.

 

 

உலக நாடுகளைப் பொருத்த வரையில் பொதுவாக  தாய்நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் தஞ்சமடைபவர்களின் எண்ணிக்கை, அதிகரித்து வருவதாக .நா. அகதிகள் ஆணையம் (UNHCR) புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது.  போர்ச் சூழல் மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக தினமும் சராசரியாக தங்கள் நாட்டைவிட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை 28,300. இப்போதைய நிலவரப்படி சர்வதேச அளவில் சுமார் 7 கோடி மக்கள் அகதிகளாக உள்ளனர். அவர்களில் பாதிப்பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்களே என்றும் அந்த ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்த அமைப்பு. இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தபோது பல நாடுகளுக்கு சிதறி ஓடிய ஐரோப்பியர்களின் மறுவாழ்வுக்காக, .நா. பொதுக்குழுவால் 1950 டிசம்பர் 14-ம் திகதி உருவாக்கப்பட்டது. தொடக்கத்தில். இதுதவிர, சர்வதேச புலம்பெயர்வு நிறுவனம் மற்றும் செஞ்சிலுவை சங்கம் ஆகியவை இந்த ஆணையத்துடன் இணைந்தும் தனித்தனியாகவும் அகதிகள் நலனுக்காக செயல்பட்டு வருகின்றன.

 

சமீபகாலமாக எந்த நாட்டிலிருந்து மிக அதிக அளவிலான மக்கள் அகதிகளாக வெளியேறுகின்றனர்? சந்தேகமில்லாமல் சிரியாதான். அங்கு கடந்த 7 ஆண்டுகளாக நடைபெறும் உள்நாட்டுப் போரால் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்திருக்கிறார்கள். 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்திருக்கிறார்கள்.அந்த நாட்டுக்கு உள்ளேயே இடம் பெயர்பவர்கள் 63 லட்சம் பேர். இதையும் தாண்டி சிரியாவிலிருந்து அண்டை நாடுகளுக்கு குடிபெயர்ந்தவர்கள் 40 லட்சத்துக்கும் அதிகம். சிரியா மக்களில் பலர் லெபனான், ஜோர்டான், எகிப்து, ஈராக் போன்ற நாடுகளில் தஞ்சம் அடைகிறார்கள்.

 

போர் என்பது ஒருபுறம் இருக்க, வெள்ளம், நிலநடுக்கம், புயல், நிலச்சரிவு ஆகிய காரணங்களால் இடம் பெயர்பவர்களும் உண்டு. இவர்களில் பலரும் தங்கள் நாட்டிலேயே உள்ள வேறு பகுதிக்கு இடம் பெயர்வதுதான் வழக்கம் என்றாலும் வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்வதும் அதிகரித்து வருகிறது. முக்கியமாக சிறிய நாடுகளிலிருந்து பெரிய நாடுகளுக்கு செல்வது அதிகரித்து வருகின்றது.

 

.நா. பொதுச்சபை 2016 செப்டம்பர் 19-ம் திகதி ஒரு உயர்மட்டக் குழு கூட்டத்தைக் கூட்டியது. அதில் அகதிகள் விஷயத்தில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்த மற்றும் மனிதாபிமான கண்ணோட்டத்தோடு நடந்துகொள்ள வேண்டும் என அடிக்கோடிட்டுக் காட்டியது.

 

தன்னை அகதி என்று கூறிக்கொண்டு பிற நாட்டுக்குச் செல்பவர், தனது அடையாளத்தையும் அகதியாக வந்ததற்கான காரணத்தையும் கூறி விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் பெரும் கூட்டமாக அகதிகள் வந்து சேரும் நிலை ஏற்பட்டால், இப்படி தனித்தனியாக விண்ணப்பிப்பதும், அவற்றைப் பரிசீலிப்பதும் நடைமுறைக்கு சாத்தியமில்லாமல் போகலாம். இந்தச் சூழலில் குழுவாகவே அவர்களை அகதிகளாகக் கருதலாம் என்றது இந்த மாநாடு.

 

.நா. அகதிகள் அமைப்பின் முக்கியச் செயல்பாடுகள் என்ன? ஒரு நாட்டில் மிக அதிக அளவில் அகதிகள் குடியேறும்போது அந்த அரசால் அவர்களுக்குப் போதிய அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது இயலாமல் போகலாம். அப்போது மேற்படி .நா. அமைப்பு அவர்களுக்கு உதவி செய்யும். தற்காலிகப் பாதுகாப்பு அளிக்கும்.

 

அகதிகள் பரிதாபமானவர்கள். சொந்த நாட்டிலிருந்து விரட்டப்பட்டவர்கள் அல்லது விரட்டப்படும் சூழலுக்கு ஆளானவர்கள். இப்படிப்பட்டவர்களுக்கு உரிமைகள் உண்டா? சில உரிமைகளை .நா.சபை வரையறுக்கிறது. அகதிகளை வற்புறுத்தி சொந்த நாட்டுக்கே அனுப்பக் கூடாது - முக்கியமாக அங்கு அவர்கள் அபாயகரமான சூழலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற நிலையில் திருப்பி அனுப்பக் கூடாது. அகதிகளிடையே பாரபட்சம் காட்டக் கூடாது.

 

ஓர் அகதியின் வாழ்க்கைத் துணைவரோ, குழந்தையோ பின்னர் அவருடன் வந்து சேரும்போது, மனிதாபிமான கண்ணோட்டத்தில் அதை அனுமதிக்க வேண்டும். அகதிகளின் உயிருக்கு பாதுகாப்பு என்பதோடு நின்றுவிடாமல் அவர்களுக்கு வேறு சில வசதிகளையும் செய்துதர வேண்டும். அதாவது அந்த நாட்டில் சட்டபூர்வமாகக் குடியேறி இருக்கும் பிற நாட்டு மக்களுக்கு சமமாக அகதிகளையும் நடத்த வேண்டும். அகதிகளுக்கு மருத்துவம், பள்ளிக்கூடம், பணியாற்றும் உரிமை ஆகியவற்றை வழங்க வேண்டும்.

 

அகதிகளும் எந்த நாட்டில் தஞ்சமடைகிறார்களோ அந்த நாட்டின் சட்டத்திட்டங்களை மதித்து நடந்து கொள்ள வேண்டும். ஒரு குற்றவாளியை அகதியாகக் கருதி ஏற்றுக் கொள்ள முடியுமா? அதேநேரம் அரசியல் காரணங்களுக்காக மட்டும் ஒருவரை அவரது நாடு குற்றவாளியாகக் கருதினால் அவர் வேறொரு நாட்டில் அகதியாக தஞ்சம் புகலாம் என .நா. பொதுச்சபை தெரிவிக்கின்றது.

 

எவ்வாறாயினும் வேறு நாடுகளில் தஞ்சம் புகும் மக்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டாலும் அவர்களின் வாழ்க்கைக்கு நிரந்தர தீர்வு தான் என்ன என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. எமது நாட்டிலும் சரி உலக நாடுகளிலும் சரி யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோ அல்லது வெள்ளம், நிலநடுக்கம், புயல், நிலச்சரிவு ஆகிய காரணங்களால் பெயர்பவர்களாக இருந்தாலும் அவர்களுக்கான நிரந்தர தீர்வு இறக்கும் வரையில் அகதி எனும் பெயருடன் வாழ்வதா?

Comment (0) Hits: 623

கூட்டமைப்பின் பிடி; முன்னணியின் சறுக்கல்!

அரசியலில், கிடைத்த சந்தர்ப்பங்களைச் சாதகமாகப் பயன்படுத்துவது மாத்திரமல்ல; சாதகமான சந்தர்ப்பங்களை உருவாக்குவதும் அடிப்படையானது. அதற்கு, சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை நகர சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்திருப்பதை அண்மைய உதாரணங்களாகக் கொள்ளலாம்.  

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், வடக்கு- கிழக்கு பூராகவும் கூட்டமைப்பு சுமார் இரண்டு இலட்சம் வாக்குகளை இழந்தது. முக்கியமாக, பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி நகர சபைகளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடம் தோல்வியடைந்திருந்தது. யாழ். மாநகர சபையில் மயிரிழையில் தப்பிப்பிழைத்தது. இவ்வாறான நிலையில், யாழ். மாநகர சபையில் மாத்திரமல்ல, சாவகச்சேரி நகர சபையிலும் பருத்தித்துறை நகர சபையிலும் கூட்டமைப்பு ஆட்சியமைக்க முடிந்திருக்கின்றது என்ற விடயம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. 

புதிய தேர்தல் முறைக்கு அமைய நடத்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், நாடு பூராகவும் சில சபைகளைத் தவிர, அனைத்துச் சபைகளிலும் மற்றைய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைக்க வேண்டிய சூழலே, வெற்றிபெற்ற கட்சிகளுக்கு ஏற்பட்டது. வடக்கு - கிழக்கில் கூட்டமைப்பு வெற்றி பெற்ற சபைகளிலும் பெரும்பாலும் இதுவே நிலைமையாகக் காணப்பட்டது. இந்த நிலையில், வடக்கு - கிழக்கில் பொது இணக்கப்பாடொன்றுக்கு வருவது சார்ந்து, கூட்டமைப்பு ஆர்வம் காட்டியது. அதாவது, ஒவ்வொரு சபையிலும் எந்தக் கட்சி அதிக ஆசனங்களைப் பெற்றிருக்கின்றதோ, அந்தக் கட்சியிடம் ஆட்சியைக் கையளிப்பது என்ற விடயம் தொடர்பிலானது அது.

இந்த யோசனைக்குப் பரவலான ஆதரவும் இருந்தது. இந்த யோசனை வெற்றியளிக்கும் பட்சத்தில், யாழ். மாநகர சபை உள்ளிட்ட, தாம் அதிக உறுப்பினர்களை வெற்றி கொண்ட சபைகளில், மேயர், பிரதி மேயர் மற்றும் தவிசாளர், பிரதித் தவிசாளர் பதவிகளுக்குப் போட்டித் தவிர்ப்பு நிலையை உருவாக்க முடியும் என்றும் கூட்டமைப்பு நம்பியது. ஆனால், யாழ். மாநகர சபையைத் தமது ஒற்றை இலக்காகக் கொண்டிருந்த முன்னணியின் முடிவால், அது சாத்தியமில்லாமல் போனது.

பருத்தித்துறை, சாவகச்சேரி நகர சபைகளில் அதிக உறுப்பினர்களைப் பெற்றிருக்கின்ற முன்னணி, பொது இணக்கப்பாட்டின் பிரகாரம் ஆட்சியமைக்கும் சூழல் இருந்தது. ஆனால், அதைப் புறந்தள்ளிவிட்டு, யாழ். மாநகர சபைக்கான மேயர் போட்டியில் குதித்தமையானது, வெற்றி பெற்ற சபைகளிலும் எதிர்க்கட்சியில் உட்காரும் நிலையை உருவாக்கி விட்டிருக்கின்றது.

பொது இணக்கப்பாட்டின் மூலம், முன்னணி, ஈ.பி.டி.பி ஆகிய கட்சிகளிடம் கூட்டமைப்பு வெளிப்படுத்தியது, மோதல் தவிர்ப்பு ஒப்பந்தமேயாகும். அது, சபைகளில் நிர்வாக நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டாகும். ஆனால், மோதல் தவிர்ப்பு ஒப்பந்தத்தை எத்தித்தள்ளும் நிலைக்கு முன்னணி வந்தபோது, சுமந்திரனும் தன்னுடைய ஆட்டத்தை ஆடுவது சார்ந்து ஆர்வம் வெளியிட்டார். அதை அவர், வெளிப்படையாக அறிவிக்கவும் செய்தார்.

யாழ். மாநகர சபையில், மொத்தமுள்ள 45 உறுப்பினர்களில் கூட்டமைப்பு 16 உறுப்பினர்களும், முன்னணிக்கு 13 உறுப்பினர்களும், ஈ.பி.டி.பிக்கு 10 உறுப்பினர்களும், ஐ.தே.க, சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஏனைய கட்சிகளுக்கு 6 உறுப்பினர்களும் இருக்கிறார்கள். இப்படியான நிலையில், மேயர் பதவிக்கான வாக்கெடுப்பில், தனியொரு கட்சியின் வாக்குகள் மாத்திரம் வெற்றியை ஈட்டித்தரப் போதுமானதல்ல. ஏனைய கட்சிகளின் வாக்குகளும் தீர்மானம் மிக்கவையே.

எனினும், முன்னணி மேயர் பதவிக்கான போட்டியில் குதித்தது இன்னோர் எண்ணத்தின் போக்கிலாகும். அதாவது இமானுவேல் ஆர்னோல்டை, மேயர் வேட்பாளராக முன்னிறுத்துவது தொடர்பில் தமிழரசுக் கட்சிக்குள் தேர்தலின் பின்னரும் பிரச்சினைகள் இருந்தன. இதனால், ஆர்னோல்டுக்கு எதிரானவர்கள், தவிர்க்க முடியாமல், முன்னணி முன்னிறுத்திய மேயர் வேட்பாளரான வி.மணிவண்ணனை ஆதரிக்கும் சூழல் உருவாகும் என்று நம்பினார்கள். இதனால்தான், கஜேந்திரகுமார் மேயர் வேட்பாளர் தேர்வின்போது, இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கோரினார்.

ஆனாலும், ஆர்னோல்ட்டுக்கு எதிரானவர்களை, சுமந்திரன் தேர்தல் முடிந்து சில நாட்களுக்குள்ளேயே சரிசெய்துவிட்டார். கட்சியின் கட்டுக்கோப்பு, விதிகள் சார்ந்தும் எடுத்துரைக்கப்பட்டு கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஒரே அணியில் சேர்க்கப்பட்டு விட்டார்கள். அத்தோடு, யாழ். மாநகர சபையில், மூன்றாவது பெரிய கட்சியான ஈ.பி.டி.பியோடு பொது இணக்கப்பாடு சார்ந்து, ஆரம்பத்தில் திரைமறைவிலும் இறுதி நேரத்தில் வெளிப்படையாகவும் கூட்டமைப்பு பேசியது. ஆனால், முன்னணியோ மேயர் பதவியைக் கைப்பற்றுவது சார்ந்து, எந்தவித முயற்சியையும் எடுக்கவில்லை. மாறாகத் தமிழரசுக் கட்சியின் உள்வீட்டுப் பிரச்சினையில் குளிர்காயலாம் என்றிருந்தது. விளைவு, கையை மீறிப்போயிருக்கின்றது.

தன்னுடைய தன்முனைப்பு (ஈகோ) மனநிலையால் முன்னணி, தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பையும் நிராகரிக்கும் வகையில் செயற்பட்டிருக்கின்றது. பொது இணக்கப்பாடு என்கிற விடயத்தை கூட்டமைப்பு கையிலெடுக்கும் போது, முன்னணி முறுக்கிக்கொண்டு நிற்காமல் ஏற்றுக்கொண்டிருக்கலாம். யாழ். மாவட்டத்தில், யாழ். மாநகர சபைக்கு அடுத்து, பெரிய சபைகளான சாவகச்சேரி, பருத்தித்துறை நகர சபைகளை இழந்திருப்பதானது, தங்களைத் தாங்களே பலமிழக்கச் செய்யும் போக்கிலானது.

ஏனெனில், சாவகச்சேரி, பருத்தித்துறை நகர சபைகளில் முன்னணி வெற்றி பெற்றமைக்கான காரணங்கள் வேறாக இருந்தாலும், கூட்டமைப்புக்கு மாற்றாக இன்னொரு கட்சியைக் கணக்கில் எடுக்காமல், முன்னணியை மக்கள் முன்னிறுத்தியமை கவனிக்கத்தக்கது. அப்படியான நிலையில், இரண்டு நகர சபைகளிலும் ஆட்சியமைத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளைச் செய்வதன்மூலம், மக்களின் நம்பிக்கைகளை இன்னமும் வளர்த்திருக்க முடியும். ஆனால், அதனைச் செய்யாமல், யாழ். மாநகர சபை என்கிற ஒற்றை இலக்கை கையாண்டமை என்பது, முன்னணி தொடர்பில் தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை மெய்ப்பிக்கின்றது.

ஏனெனில், தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசியப் பேரவை, முன்னணி உள்ளிட்ட தரப்புக்கள், கடந்த காலத்தில் பெரும்பாலும் யாழ். (நல்லூர்) மையவாதச் சிந்தனையையும், மேட்டிமைத்தனத்தையுமே வெளிப்படுத்தி வந்திருக்கின்றன. இவ்வாறான நிலையில், யாழ். மாவட்டத்தின் இரண்டாவது, முக்கிய நகரங்கள் குறித்தே அக்கறை கொள்ளாத சிந்தனை என்பது, வடக்கு - கிழக்கின் ஒட்டுமொத்த மக்களின் அபிலாஷைகள் குறித்து, அக்கறையோடு இருக்கிறார்களா? என்கிற கேள்வியை இன்னமும் பலம்பெற வைத்திருக்கின்றது.

அரசியலில் நிலைத்திருப்பதற்கும் வெற்றி காண்பதற்கும் அதிக உழைப்பைக் கொட்ட வேண்டியிருக்கும். சிந்தனைகள் மாத்திரமல்ல; அதைச் செயல்வடிவமாக்க வேண்டிய சமயோசிதம் அதிமுக்கியமானது. உலகத்தில் அதியுன்னத சிந்தனைகளைப் பல தரப்புகளும் வெளியிட்டு வந்திருக்கின்றன. அவற்றில், செயல்வடிவம் பெறாதவை காலாவதியாகிவிட்டன. அதிக தருணங்களில் தமிழ்ச் சிந்தனாவாதிகளின் நிலையும் அதுவாகவே இருந்திருக்கின்றது.

புளொட் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவர், இந்தப் பத்தியாளரிடம் ஒருமுறை கூறினார், “....தமிழீழத்துக்கான ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த தருணத்தில், அதிகமாகப் படித்தவர்களைக் கொண்டிருந்தது எமது இயக்கமே. தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட, பல சமூக, பொருளாதார விடயங்களைத் திட்டங்களோடு வரைந்து வைத்திருந்தோம். ஆனால், அவற்றைச் செயற்படுத்துவதில், நாங்கள் பெரிய சோம்போறிகள்; கதைப்பதோடு சரி. ஆனால், நாங்கள் உரையாடிய விடயங்களைச் செயற்பாட்டுத்தளத்தில் வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர்கள் புலிகள். அவர்கள் திட்டங்களை மாத்திரமல்ல, செயற்பாட்டையும் முதன்மையான விடயமாகக் கருதினார்கள். அதுதான், அவர்களை விமர்சனங்கள் கடந்து, தமிழ் மக்களை வழிநடத்தும் பொறுப்புக்கு வர வைத்தது...” என்றார்.

யாழ். மாநகர சபை மேயர் வேட்பாளர் போட்டியில் தோல்வி, சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை நகர சபைகளில் ஆட்சியமைப்பதற்கான சந்தர்ப்பத்தைத் தவறவிட்டமை உள்ளிட்ட விடயங்கள் சார்ந்து, முன்னணி முன்வைத்திருக்கின்ற கருத்துகள் அதிகம் சிரிப்பையே ஏற்படுத்துகின்றன. அது, ‘பேஸ்புக்’ சண்டைகளில் வெளிப்படுத்தும் கருத்துகள் போன்றதாக இருக்கின்றது. ஆனால், முன்னணி தன்னுடைய கைக்குக் கிடைத்த வாய்ப்புகளை எவ்வாறு நழுவ விட்டது என்பது சார்ந்து ‘துரோகி’ உரையாடல்களுக்கு அப்பால் நின்று சிந்திக்க வேண்டிய தருணம் இது. ஏனெனில், மக்கள் வழங்கிய வாய்ப்பைக் கைநழுவ விடுதல் என்பது, ஒரு வகையில் சிறுபிள்ளைத்தனமாகும்.

யாழ். மாநகர சபை, சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை நகர சபைகளில் ஆட்சியமைப்பதற்காக கூட்டமைப்பு எடுத்துக் கொண்ட முயற்சிகளை, கிழக்கிலும் முன்னெடுக்க வேண்டிய கடப்பாடு உண்டு. அல்லது, பொது இணக்கப்பாடு என்ற நிலைப்பாட்டின் போக்கில், ஆட்சியமைப்பதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும்.

மாறாக, கிழக்கின் குரல்களுக்கு மதிப்பளிக்காமல், வடக்கில் ஒரு மாதிரியும் கிழக்கில் இன்னொரு மாதிரியுமான முடிவை கூட்டமைப்பு எடுக்குமாக இருந்தால், தமிழ்த் தேசியத்துக்கு எதிரான சக்திகள் கிழக்கில் பலம்பெறுவதைத் தடுக்க முடியாது.

வடக்கையும் கிழக்கையும் இரு கண்களாக மிக அக்கறையோடு பார்க்க வேண்டும். கண்களில் பார்வைக் குறைபாடுகள் ஏற்பட்டு, கண்ணாடி பொருத்த வேண்டிய சூழல் வரலாம். கண்ணாடியில் பொருத்த வேண்டிய வில்லைகளின் அளவில் மாற்றம் வரலாம். ஆனால், பார்வையைச் சீர்படுத்துவதற்கான கட்டம் என்பது, சரியாக இருக்க வேண்டும். இல்லையென்றால், கண்ணாடி, இரு கண்களையும் மேலும் மேலும் பழுதாக்கிவிடும். வடக்கில் மாத்திரமல்ல, கிழக்கிலும் கூட்டமைப்பு சமயோசிதமாகவும் ஆக்கபூர்வமாகவும் மக்களின் குரல்களை மதித்து நடக்க வேண்டிய தருணம் இது.

புருஜோத்தமன் தங்கமயில்

Comment (0) Hits: 504

மலையக மக்களை அரசியலிலிருந்தும் அவர்களது பூமியிலிருந்தும் பிடுங்கியெறிய பாரிய திட்டம்

காட்டு யானைகள் கிராமத்திற்குள் நுழைவதையும்  வாழை, தென்னந் தோட்டங்களும், வயல் வெளிகளை துவம்சம் செய்வதையும்,வீடுகளை தாக்கி உடைப்பதையும் தொடர்ச்சியாக நாம் அறிவோம். காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் செய்திகளாக்குவதும் தெரிந்ததே.

அத்தோடு, மக்கள் தமக்கு நேர்ந்த அழிவுகளுக்கு நட்டஈடு, பாதுகாப்பு வேலி என்பன கோரி போராட்டம் நடத்துவதும் தொடர் நிகழ்வுகளாக உள்ளன. ஒரு சில இடங்களில் பழக்கப்பட்ட யானைகள் திட்டமிட்டே கிராமங்களுக்குள்ளும், தோட்டங்களுக்குள்ளும் அனுப்பப்படுவதாகவும் மக்கள் சந்தேகப்படுகின்றனர். காரணம் மக்களை பயத்தோடு வாழவைப்பதற்கும், அவர்களை அப்பூமியில் இருந்து அகற்குவதற்கும் எடுக்கின்ற இனவாத செயற்பாடாகவே சிந்திக்கின்றனர்.

அபிவிருத்தி எனும் போர்வையில் காடுகளை அழிப்பது, காட்டுப் பகுதியில் கஞ்சா வளர்ப்பது, விலை மதிப்பு மிகுந்த மரங்களை வெட்டி அகற்றுவது போன்ற காரணங்களால் அடிமட்ட விவசாய மக்கள் பல்வேறு பாதிப்புக்களை வனவிலங்குகள் மூலம் சந்திக்கின்றனர்.

இக் கட்டுரையின் நோக்கம் மேற்கூறிய விடயத்தை ஆராய்வதல்ல, வெளிவராததும் மலையக மக்கள் சந்திக்கின்றதுமான அபாயகரமான விடயம் தொடர்பில் அவதானத்தை ஏற்படுத்துவதாகும்.

அன்மையில் ஹட்டன், பத்தனை, திம்புல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பத்தனை கிரேக்லி தோட்டத்தில் மக்கள் குடியிருப்பு பகுதியில் இரண்டு சிறுத்தைக் குட்டிகள் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளன (வீரகேசரி 11-03-2018) எனும் செய்தி வெளியாகி இருந்தது.

நாவலப்பிட்டி பார்கேப்பல் தோட்ட ஊழியரான சிரில் எந்தனி, “முன்னர் 1,200 ஏக்கரில் தேயிலை வளர்க்கப்பட்டதோடு தற்போது 100 ஏக்கரில் மட்டுமே தேயிலை வளர்கின்றது. ஏனைய பிரதேசங்கள் காடுகளாக்கப்பட்டுள்ளன. இப்பிரதேசத்தில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து விட்டது. கடந்த 5 வருடகாலமாக மக்கள் பயத்துடனே வாழ்ந்து வருகின்றனர்” எனக் கூறுகின்றார்.

பெருந்தோட்டக் கம்பனிகள் பெருந்தோட்டங்கள் காடுகளாவதற்கு விட்டுவிடுகின்றன. இதனால், தொழிலாளர்கள் தொழிலை இழக்கின்றனர் என்பது நாம் அறிந்ததே. தேயிலை செடிகள் ஆளுயர  வளர்ந்து, புல்லுகளும் நிறைந்துள்ள பகுதியில் தொழிலுக்கு செல்வோர் தொடர்ச்சியாக குளவி கொட்டுக்கும் உள்ளாகி ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படுகின்றார்கள் என்ற செய்திகளும் அடிக்கடி வெளிவரும் நிலையில்தான் சிறுத்தைகள் தொடர்பான செய்திகளும் நம் காதுகளுக்கு எட்டியுள்ளன.

கோப்பி பயிர் செய்கையைத் தொடர்ந்து தேயிலைச் செய்கை பெருந் தோட்டங்களாக வளர்ச்சியடைந்த பின்னர் கொடிய விலங்குகளின் நடமாட்டம், அதன் தாக்குதல் தொடர்பான சம்பவங்கள் மிக அண்மைக் காலம் வரை அறியக் கிடைக்கவில்லை.

ஆனால், தற்போது கலஹா, நாவலப்பிட்டி, கினிகத்ஹேனை, தியகமை, புஸ்ஸல்லாவை, பொகவந்தலாவை, மில்லகஹாமுல்ல, பெகலாய தோட்டம், பென்ரோஸ் தோட்டம், கெட்டபூலா, பார்கேபல், கொட்டகலை, ஹட்டன், நோர்வுட் போன்ற மலையகத்தின் மையப் பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் உள்ளதாக அறியப்பட்டுள்ளது. மேலும், புலிகளின் தாக்குதலால் இதுவரை 40க்கும் அதிக சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் பதியப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. பாரிய சம்பவங்கள் 25க்கும் அதிகம் எனவும், ஒரு பெண் சிறுத்தையினால் இழுத்துச் செல்லப்பட்டு சடலம் வேறு மிருகங்களுக்கு இறையாகாமல் இருக்க இரவோடு இரவாக பொலிஸார் மீட்டுள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது.

மேலும், சிறுத்தைகள் தம் உணவிற்காக ஆடு, மாடு, கோழி என்பவற்றை தேடித் தோட்ட குடியிருப்பிற்கு அண்மையில் நடமாடுவதாகவும் கூறப்படுகின்றது. இதனால் மக்கள்:

1)             பயத்தோடு வாழவேண்டும்.

2)             பயத்தோடு தொழிலுக்குச் செல்ல வேண்டும்.

3)             பயத்தோடு பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்ப வேண்டும்.

4)             ஆடு மாடு, கோழி இழப்பால் பொருளாதாரம் பாதிக்கப்படும்.

இதன் பின்புலத்தில் பெருந்தோட்ட கம்பனிகள் தமக்கு கீழ் உள்ள பெருந்தோட்டங்களை திட்டமிட்டே காடுகளாக்குகின்றனவா? வன விலங்கு நடமாட்டம், சிறுத்தைகள் தாக்குதல் எதிர்பார்க்கப்படுகின்றதா? எனும் கேள்விகளை எழுப்பத் தோன்றுகின்றது.

ஏனெனில், சில இனவாத அமைப்புகள் பிரித்தானியரின் கொள்கையில்லா, திட்டமில்லா காடழிப்பாலும், பொருளாதார சூறையாடல் நோக்கத்தாலும், மலையக மக்களின் வருகையாலுமே மலையகத்தின் இயற்கை சூழல் அழிந்தது எனும் குற்றச்சாட்டினை மலையக மக்களுக்கு எதிராக வைப்பதைக் காணலாம். தற்போது மலையகத்தில் வாழ்ந்து வரும் மக்கள் இதற்கு பொருப்பானவர்கள் அல்லர்.

மலையக பகுதிகளில் வாழும் மக்கள் “இலங்கை மலையகத் தமிழர்” என்றே அழைத்தல் வேண்டும், அதுவே அவர்களுக்கான அரசியல் சமூக கௌரவத்தை உருவாக்கும். ஆனால், இவர்கள் “இந்திய வம்சாவழி தமிழர்” என்றே அழைக்கப்படுகின்றனர். இதற்குக் காரணம் இம் மக்களை இம் மண்ணுக்கு அந்நியமாகவே வைத்திருக்க வேண்டும் எனும் சிந்தனையாகும்.

இந்நோக்கத்தினை நிறைவேற்ற அரசின் “தேசிய பௌதீக திட்டம் 2030” என்பதில் திட்டமிடப்பட்டுள்ளது.  இதில் மலையக பிரதேசத்தில் புதிய நகரங்கள் உருவாக்குதல், சுற்றுலா துறையை மேம்படுத்துதல் பெருந்தோட்டத் துறையை சுற்றுலாத் துறையோடு இணைத்தல் ஆகிய திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதனால்தான் நகரங்களுக்கே உரித்தான அளவில் பொருந்தோட்ட மக்களுக்கும் சுய பொருளாதாரத்தில் வளரமுடியாத முறையில் வீட்டுக்கு மட்டும் 7 பேர்ச் காணி வழங்கப்படுவதை நாம் அறிவோம். ஒரே மாதிரியான வீட்டுத்திட்டம் அமைக்கப்பட்டு பலவந்தமாக நகர் கலாச்சாரத்திற்குள் தள்ளப்படுகின்றனர்.

இதற்குள் தமக்குத் தேவையான தொழிலாளர்களை, அவர்கள் குடும்பங்களை மட்டும் வைத்துக் கொண்டு ஏனையோரை அப்பூமியிலிருந்து வெளியேற்றும் திட்டமும் இனவாதிகளின் “தேசிய பௌதீகத் திட்டம் 2030” இற்குள் அடக்கி உள்ளனர்.

இந்நிலையில், மலையகத்தில் அண்மையில் தோன்றியுள்ள சிறுத்தைகள் பிரச்சினை மக்கள் இயல்பு வாழ்வையும், பொருளாதாரத்தையும் பாதிப்பதால் மக்கள் தமது பாதுகாப்பு, எதிர்காலம் என்பன கருதி தாம் தொடர்ந்து வாழ்ந்து வரும் பூமியிலிருந்து சுயமாகவே வெளியேறி விடுவர். இது ஆட்சியாளர்களுக்கும், இனவாதிகளுக்கும் தமது திட்டத்தை நிறைவேற்ற இலகுவாக அமையும்.

எதிர்வரும் காலங்களில் இயற்கை இனப் பெருக்கத்தால் சிறுத்தைகளின் தொகை இன்னும் அதிகரிக்கலாம். இவற்றை கட்டுப்படுத்த மக்கள் குடியிருப்புப் பகுதிகளை நோக்கி வருவதை தடுக்க யானைகளுக்கு தடுப்புவேலி அமைப்பதைப் போன்று அமைக்க முடியாது. சிறுத்தைகள் மரங்கள் மீதேறி பாய்ந்து வெளியில் வரும்.

மக்களின் பாதுகாப்பு என்பது அவர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. இதனால் தனித் தனி குடும்பங்களாக வெளியேறலாம். பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வாடும் இம் மக்கள் எங்கோ ஒரு இடத்தில் தொழிலாளியாக இணைவதோடு குடும்ப வாழ்வும் சிதைவடையும்.

எனவே, தற்போது பெருந்தோட்ட கம்பனிகள் உற்பத்தியிலிருந்து நிலம் கைவிடுதல், காடாக்குதல், அரசின் பௌதீக திட்டம் 2030, சிறுத்தைகளின் நடமாட்டம் என்பவற்றின் பின்னால் மலையக மக்களுக்கும் அரசியலுக்கும், பூமிக்கும் அவர்களுக்கு இருக்கும் பற்றிற்கும், அவர்களின் இருப்பிற்கும் எதிரான பாரிய திட்டம் உள்ளது போல் தோன்றுகின்றது.

வட கிழக்கு தமிழர்கள் அடக்கப்பட்டு விட்டார்கள​ எனும் சிந்தையோடு முஸ்லிம்களின் பொருளாதாரத்தைப் பறித்ததும் திட்டமிட்ட முறையில் அவர்களுக்கு எதிரான வன்முறை காலத்திற்கு காலம் தூண்டி விடப்பட்டு பயத்திலே வாழ வைத்திருப்பதோடு அவர்களின் பொருளாதார வளர்ச்சியையும் தடுக்க திட்டமிட்டுள்ளனர். இதன் இன்னுமொரு திட்டம் மலையகத்தில் அரங்கேறி மக்கள் இயல்பு வாழ்வை பாதிக்கவிட்டு நிலத்தை கையகப்படுத்தும், இனவாதத்தோடு பொருளாதார அபிவிருத்திக் கொள்கையை முன்னெடுக்க முனைவதாக தோன்றுகின்றது.

அரசின் முதலாளித்துவ தாராள பொருளாதார கொள்கையின் முகம் கிழிக்கப்படுவதன் மூலமே மலையக மக்களின் இயல்பு வாழ்வையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும். இதனை மலையக அரசியல்வாதிகளால்  செய்ய முடியாது. ஏனெனில், அவர்கள் முதலாளித்துவ ஏணிகளிலே ஏறுவதற்கு பெரும்பான்மை கட்சிகளின் தயவில் தொங்கிக் கொண்டிருக்கின்றனர்.

மலையக மக்களைப் பொறுத்த வரையில் எல்லா மலைகளுமே கல்வாரி மலைகள் தான். யார் யாரோ வாழ்வதற்கு இவர்கள் வாழ் நாள் முழுதும் சிலுவை சுமக்கிறார்கள்.

அருட்தந்தை மா.சத்திவேல்

 

நன்றி - மாற்றம்

Comment (0) Hits: 828

பலம்பெற வேண்டிய காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டக்களம்!

தமிழ்த் தேசியப் போராட்டத்தின் இன்றைய ஒற்றைக்குறியீடாக, ‘காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளே’ எழுந்து நிற்கின்றார்கள். முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான பெரும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், தமிழ் மக்களின் நீதிக் கோரிக்கைகளை தமது தோளில் சுமந்து கொண்டு முன்வந்தவர்கள் அவர்கள்.

தனது பிள்ளையையும் பேரப்பிள்ளைகளையும் ஒருங்கே தேடுகின்ற ஆச்சிமாரையும், தன்னுடைய கணவனையும் மகனையும் தேடுகின்ற தாய்மாரையும், தன்னுடைய தந்தையையும் அண்ணனையும் தேடுகின்ற மகள்மாரையும் ‘காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்’ என்கிற அடையாளத்துக்குள் நாளாந்தம் காண்கிறோம். உறவுகளை தேடி அலைந்து அவர்களது கால்கள் பலமிழந்துவிட்டன. கண்களில் கண்ணீர் வற்றிவிட்டது. பல தாய்மார் தமது பிள்ளைகளின் நிலை என்னவென்று அறியாமலேயே மரணித்துவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் நெஞ்சுரத்தோடு போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

கிளிநொச்சியில் ஆரம்பித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் போராட்டம், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, மருதங்கேணி என்று அனைத்துப் பகுதிகளிலும் ஓராண்டைத் தாண்டி நீள்கின்றது. அரசியல் கட்சிகளும், செயற்பாட்டு இயக்கங்களும், அரசசார்பற்ற நிறுவனங்களும், ஏன் ஊடகங்களும் கூட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை முன்னிறுத்திக் கொண்டே தமது செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டி ஏற்பட்டிருக்கின்றது. அரசியல் உரிமைகளுக்காகப் போராடிய சமூகமொன்று சந்தித்து நிற்கின்ற அனைத்து அச்சுறுத்தல்களையும் தமிழ்ச் சமூகம் எதிர்கொண்டு விட்டது. அதிலும், முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னர், மீளெழுச்சி தொடர்பில் சிந்திப்பதற்கான வெளிகள் அனைத்தும் அடைக்கப்பட்டு குற்றுயிராகக் கிடந்த தமிழ்த் தேசியப் போராட்டத்தினை நீதிக் கோரிக்கைகளின் சார்பில் மீட்டெடுத்துத் தந்தவர்கள் அவர்கள்.

ஆனால், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டங்களை முன்னிறுத்திக் கொண்டு ஒருங்கிணைந்தாலும், அரசியல் கட்சிகளும், செயற்பாட்டு இயக்கங்களும், ஊடகங்களும் உண்மையிலேயே அவர்களில் போராட்டத்தை போதியளவில் வலுப்படுத்தியிருக்கின்றனவா என்கிற கேள்வி எழுகின்றது.

வடக்கு- கிழக்கில் மாத்திரமல்ல, கொழும்பிலும் நீதிக் கோரிக்கைகள் சார்ந்த போராட்டங்கள் என்றால், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் அரசியல் கைதிகளின் உறவுகளே செல்ல வேண்டியிருக்கின்றது. அவர்களோடு தொடர்ச்சியாக இணைந்து செயற்படும் சில செயற்பாட்டாளர்களும், இயக்கங்களும் வருகின்றன. ஆனால், அந்தப் போராட்டங்களில் பங்களிப்பது தொடர்பில் அரசியல் கட்சிகளினதும், தலைவர்களின் உண்மையான அர்ப்பணிப்பு என்பது, ஊடகக் கவனம் பெறுவதைத் தாண்டிய அர்ப்பணிப்பு சார்ந்ததா என்கிற சந்தேகம் இங்குண்டு.

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுத்த தொடர் போராட்டம் 365 நாட்களை தாண்டிய நிலையில், கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த செயற்பாட்டாளர் ஒருவர் இந்தப் பத்தியாளரிடம் கீழ்க்கண்டவாறு கூறினார்,

“…கவனயீர்ப்புப் போராட்டத்துக்கு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பலரும் வருகை தந்தார்கள். ஒரு சிலர் சில மணி நேரங்களுக்கு முன்னரேயே வந்து இருந்து போராட்டக்காரர்களின் உணர்வுகளோடு பங்களித்தார்கள். இன்னும் சில அரசியல்வாதிகளோ முக்கிய தருணத்தில் மாத்திரம் வந்திருந்தார்கள். அதில், முக்கிய அரசியல்வாதியொருவர், கவனயீர்ப்புப் போராட்டத்தின் இறுதித் தருணத்தில் ஊடகங்கள் எல்லாமும் கூடிய பின்னர், வந்து ஊடகங்கள் படம் பிடிக்கும் இடத்தை கவனமாகத் தேடி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளையெல்லாம் விலக்கிக் கொண்டு முன்வந்து நின்றார். அதைப் பார்க்கும் போது, பெரும் எரிச்சல் ஏற்பட்டது. கொள்கை அரசியலை முன்னிறுத்துவதாகக் கூறிக் கொள்பவர்கள், போராடும் மக்களைப் பின்தள்ளி தான் கவனம்பெற வேண்டும் என்று சிந்திப்பதை எவ்வாறு கொள்வது…?” என்றார். 

இவ்வாறான அரசியல்வாதிகள் குறித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மாத்திரமல்ல, செயற்பாட்டாளர்களும், ஊடகவியலாளர்களும் கூட அறிந்தே வைத்திருக்கின்றார்கள். ஆனால், அந்த அரசியல்வாதிகளின் சிறுபிள்ளைத்தனங்களுக்கு கவனம் கொடுத்து, உண்மையான பிரச்சினையைத் திசைதிருப்பிவிட வேண்டாம் என்பதற்காக பலரும் ஒதுங்கிப்போக வேண்டி வந்திருக்கின்றது. எனினும், இவ்வாறான நிலையை தொடர்ந்தும் அனுமதிப்பது என்பது, உண்மையான உணர்ச்சியாளர்களையும் கூட விலகியோட வைத்துவிடும். போராட்டக்களங்களை நோக்கி சாதாரண மக்களை அழைத்து வருவதென்பது ஏற்கனவே குதிரைக் கொம்பாக இருக்கின்ற நிலையில் உணர்ச்சியாளர்களையும் விலக வைப்பது ஏற்புடையதல்ல. 

இன்னொரு கட்டத்தில் நோக்கினால், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுக்கும் போராட்டத்தை நோக்கி சாதாரண தமிழ் மக்களையே குறிப்பிட்டளவு அழைத்து வர முடியவில்லை. பிரதான ஊடகங்களும், இணைய ஊடகங்களும் கூட காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான போராட்டங்களை செய்திகள், படங்கள் என்கிற அளவில் கடந்துவிடும் சூழல் ஏற்பட்டுவிட்டது. அவ்வாறான நிலையில், தமிழ் மக்களில் பெரும்பான்மையினருக்கு, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டங்களுக்கும் தமக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்கிற உணர்நிலை மெல்ல மெல்ல தோற்றுவிக்கப்பட்டுவிட்டது. தொடர் போராட்டக் கூடாரங்களையும், அங்கு உடல் உயிர் இழைத்துப் போராடும் உறவுகளையும் பொருட்டாகக் கருதுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகின்றதோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

போர் சப்பித்துப்பிய சமூகமொன்று எதிர்கொண்டிருக்கின்ற அனைத்துச் சமூக, பொருளாதார சிக்கல்களையும் தமிழ் மக்களும் எதிர்கொண்டிருக்கின்றார்கள். நாளாந்த ஜீவனோபாயம் என்பதே பெரும் தலையிடியாக இருக்கின்ற போது, இவ்வாறான போராட்டக்களங்களை நோக்கிய நகர்தல் என்பது இலகுவானதல்ல என்கிற சாமானிய தமிழ்க் குரலும் கேட்கப்படக் கூடியதுதான். ஆனால், அந்தப் போராட்டங்களில் ஒலிப்பதுவும் இந்தச் சாமானிய தமிழ்க் குரல்களில் ஒரு பகுதிதான் என்பதுவும், அது மெல்ல மெல்ல தனித்து விடப்படுகின்றதோ என்பதுமே இப்போதுள்ள பெரும் அச்சம்.

தமிழ்த் தேசியப் போராட்டங்களை அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் வழிநடத்தியிருந்தாலும், அதனை தலையாய கடமையாக ஏற்று நடந்தவர்கள் தமிழ் மக்கள். அதிலும் குறிப்பாக அதிகார அரசியல்- பொருளாதார மேல்நிலையில் இல்லாத சாதாரண தமிழ் மக்கள். இன்றைக்கும் தமிழ்த் தேசியத்தின் காவலர்களாக அந்த மக்களே இருக்கின்றார்கள். ஆனால், அவர்கள் களத்துக்கு வருவதற்கான நடைமுறைச் சிக்கல்கள் பெருமளவு இருக்கும் போது, அந்த இடத்தை சிக்கல்களின் அளவு குறைந்தவர்கள் நிரப்பியிருக்க வேண்டும். வழிப்படுத்தியிருக்க வேண்டும். முன்கொண்டு சென்றிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறான சூழலொன்று கடந்த ஒன்பது ஆண்டுகளில் தமிழ்ச் சூழலில் ஏற்படவேயில்லை என்பதுதான் வேதனையானது.

தேர்தல் அரசியல் அடிபிடிக்குள்ளும், மேடிமைத்தனம் சார் இழுபறிகளுக்குள்ளும் யாழ்ப்பாணம் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கின்ற நிலையில், அர்ப்பணிப்பான போராட்டங்களை அடுத்த கட்டங்களுக்கு நகர்த்துவது சார்ந்தும், நீதிக் கோரிக்கைகளுக்கான அழுத்தங்களை வலுப்படுத்துவது சார்ந்தும் சிந்திப்பதற்கும் இயங்குவதற்குமான சூழல் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றது. யாழ்ப்பாணத்தினை பிரதானப்படுத்தி நிகழ்ந்து கொண்டிருக்கின்ற அரசியல் என்பது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடாக மாறிவிடாது பார்த்துக் கொள்ள வேண்டிய தேவை உண்டு. அது, வார்த்தையளவிலான தமிழ்த் தேசியம் என்கிற நிலைகளைக் கடந்து தமிழ் மக்களின் ஒவ்வொரு அடையாள அதிகார வரம்பினையும் காப்பாற்றுவதில் அக்கறை செலுத்த வேண்டும். அதுதான், தமிழர் தாயகம் என்கிற பெரும் அடையாளத்தை தக்க வைக்க உதவும். மாறாக, யாழ்ப்பாணத்துக்குள் மாத்திரம் முனைப்புப்பெற்று மூழ்குதல் என்பது மக்கள் மத்தியில் அதிருப்தியையே உண்டு பண்ணும்.

தமிழ்த் தேசியப் போராட்டக் களத்தில் அனைத்து வகையான போராட்டங்களுக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளே முன்னிற்கிறார்கள். அவர்களைத் தாண்டி போராட்டங்களில் பங்களிப்பவர்களின் எண்ணிக்கையென்பது நூறுகளுக்குள் அடங்கிவிடும். இப்போதெல்லாம், தேர்தல் கூட்டங்கள், நூல் வெளியீட்டு விழாக்களுக்குக் கூடும் கூட்டத்தினை விட, நீதிக்கோரிக்கைகளுக்கான போராட்டங்களுக்கு கூடும் கூட்டத்தின் அளவு பெரும்பாலான தருணங்களில் குறைவாகவே இருக்கின்றது. இவ்வாறான தன்மை நீடிக்கும் போது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுக்கும் நீதி கோரிய பயணம் கணக்கெடுக்கப்படால் போகும் சூழல் உருவாகும்.

அரசியல் அதிகாரத்துக்கானதும், நீதிக் கோரிக்கைகளுக்குமான போராட்டங்களையே வாழ்வின் ஒரு பகுதியாக ஏற்ற தமிழ் மக்களின், போராட்ட சூழல் என்பது ஒரு அளவில் மட்டுறுத்தப்பட்டு, அதன் வலுவை இழந்து வருகின்றதோ என்று தோன்றுகின்றது. அப்படிப்பட்ட நிலையில், போராட்ட வடிவமாக எழுந்து நிற்கின்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுக்கும் போராட்டங்களை பலப்படுத்த வேண்டியதும் எங்களின் முன்னாலுள்ள முக்கிய பொறுப்பாகும்.

- புருஜோத்தமன் தங்கமயில் -

Comment (0) Hits: 658

கௌதமருக்கே பௌத்தம் போதித்தல்! - 'வடக்கு ஆளுநரின் சாதி விவகாரத்தை முன்வைத்து...'

என்.சரவணன்
 
வடமாகாண சபையின் ஆளுநர் ரெஜினோல்ட் குரே கடந்த அன்று வடக்கிலிருந்து மாற்றப்பட்டு மத்திய மாகாணத்துக்கான ஆளுநராக தெரிவு செய்யப்பட்டு 24 மணி நேரத்திற்குள் மீண்டும் வட கிழக்கு மாகாணத்துக்கு ஆளுநராக ஜனாதிபதியால் நியமனம் செய்யப்பட்டதை அறிவோம்.
 
இலங்கையில் முதற்தடவையாக 24 மணிநேரத்திற்குள் இரண்டு தடவைகள் ஆளுநராக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட நபர் ரெஜினோல்ட் குரேவாகத் தான் இருப்பார். ஆனால் இங்கு அது முக்கியமான தகவலல்ல. இப்படி அவசர அவசரமாக மாற்றப்பட்டதன் பின்புலத்தில்  “சாதி” சார்ந்த காரணி தொழிற்பட்டிருக்கிறது என்பது அதிர்ச்சி மிக்கத் தகவல்.
 
ரெஜினோல்ட் குரே இனத்தால் சிங்களவர் தான். ஆனால் மதத்தால் கத்தோலிக்கர், சாதியால் கராவ சாதியச் சேர்ந்தவர்.
 
 
ஏற்கெனவே மத்திய மாகாண முதல்வராக 17.03.2016 அன்று நிலூகா ஏக்கநாயக்க நியமிக்கப்பட்ட போதும் மகா சங்கத்தின் அஸ்கிரிய தரப்பு தமது கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது. அதற்கான காரணம் அவர் ஒரு திருநங்கை என்பது தான். (இலங்கையில் ஒரு திருநங்கை முதற்தடவையாக அரசியல் அதிகாரத்துக்கு தெரிவான சந்தர்ப்பம் அது தான்.) நிலூகா ஏக்கநாயக்க கலந்துகொள்ளும் முக்கிய அரச நிகழ்வுகளில் தாமும் சேர்ந்து கலந்துகொள்ள முடியாது என்றும் வேறொருவரை அந்த இடத்துக்கு மாற்றும்படியும் ஜனாதிபதியிடம் தெரிவிக்கும்படி மகா சங்கத்தினரை சந்தித்த அமைச்சர்களான எஸ்.பீ.திசாநாயாக்க, மகிந்த அமரவீர ஆகியோர் ஆசி வாங்க வந்த வேளை கோரியிருந்தார்கள். ஆனாலும் அந்த சர்ச்சை நீடித்துக் கொண்டிருந்தது. இந்த இரண்டு வருடங்களுக்குப் பின்னர் அவருக்குப் பதிலாக தெரிவானவர் தான் ரெஜினோல்ட் குரே. ஆனால் அதே மகா சங்கத்தினர் இப்போது ரெஜினோல்ட் குரே சிங்களவராக இருக்கலாம் ஆனால் ஒரு அவர் பௌத்தரும் இல்லை, கொவிகம சாதியைச் சேர்ந்தவராகவும் இல்லை என்கின்றனர் மகாநாயக்கர்கள்.
 
தன்னை “மீண்டும் வடமாகாண முதல்வராக ஆக்கும்படி வடக்கிலுள்ள பல  தமிழர்கள் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டதற்காகவே தான் மீண்டும் நியமிக்கப்பட்டதாகவும் வேறு காரணங்கள் இல்லை” என்று ஊடகங்கள் இது பற்றி கேள்வி எழுப்பியபோது ஆளுநர் ரெஜினோல்ட் குரே பூசி மெழுகினாலும் (பார்க்க - “ரெச” என்கிற சிங்களப் பத்திரிகைக்கு 19.04.2018 அன்று வழங்கிய பேட்டி) நிகழ்ந்தது என்னவென்பது இப்போது நாடே அறியும். அது மட்டுமன்றி கடந்த ஏப்ரல் 14 அன்று ரட்ணஜீவன் ஹூல் சண்டே லீடர் பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையில் “அவர் ஒரு சிங்கள – கத்தோலிக்க - கொவிகம சாதியைச் சேர்ந்தவராக இருந்திருந்தால் கூட எற்றுக்கொண்டிருப்போம். ஆனால் அவர் கத்தோலிக்க - கராவ சாதியைச் சேர்ந்தவர் (கரையார்)” மகாநாயக்க தேரர் தெரிவித்திருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.
 
இலங்கையின் சிங்கள அரசியல் செயன்முறைக்குள் சாதியம் எப்படியெல்லாம் இன்றும் செல்வாக்கு செலுத்தி வருகிறது என்பது பற்றி சிங்கள சாதியம் பற்றி ஆராய்ந்த முக்கிய நிபுணர்களாக கருதப்படும் பேராசிரியர் ஜெயதேவ உயங்கொட, விக்டர் ஐவன், கலாநிதி காலிங்க டியூடர் டீ சில்வா போன்றவர்கள் தொடர்ந்தும் எழுதி வருகிறார்கள்.
 
சாதியத்தின் கோட்டை கண்டி? 
 
மத்திய மாகாணமானது கண்டி, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது. மத்திய மாகாணத்தின் தலைநகராக கொள்ளப்படுவது கண்டி மாவட்டம். கண்டி மாவட்டம் இலங்கையின் சிங்கள, பௌத்த மரபின் முக்கிய அடையாளமாகக் கருதப்படுகிறது. சிங்கள சாதியமைப்பின் வீரியமாக இன்னமும் எச்சம் கொண்டுள்ள மாவட்டம் அது. மூன்று நூற்றாண்டுகளாக காலனித்துவத்திடம் பிடிகொடுக்காமல் தாக்குபிடித்து இறுதியாக வீழ்ந்த பிரதேசம் அது. ஆகவே அந்த மூன்று நூற்றாண்டுகளும் இலங்கையின் பாரம்பரிய மரபை இழக்காமல் தற்காத்த பின்னணி அதற்குண்டு. இலங்கையின் சுதேசிய கொடி; கடைசியாக காலனித்துவத்தால் இறக்கப்பட்ட இடம் கண்டி.
 
இலங்கையின் பாரம்பரிய மரபு எனும் போது அது சாதியத்தையும் உள்ளடக்கியது தான். சிங்கள சாதியமைப்பில் கண்டிய கொவிகம சாதியத்துக்கு இருக்கின்ற பலமும் பெருமிதமும் அது தான். அது மட்டுமன்றி புத்தரின் புனிதப் பல்லை தற்காத்து வைத்து இருக்கும் தலதா மாளிகையும், பௌத்த மத மகாசங்க தலைமைப் பீடங்களையும் கொண்டுள்ள மாவட்டமும் கண்டி தான். ஆக கண்டியை புனித நகராக அங்கீகரிக்கும்படி 1988 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் முன்வைத்த கோரிக்கையை 1989 ஆம் ஆண்டு அங்கீகரித்த யுனெஸ்கோ நிறுவனம் பாரிசில் நடந்த மாநாட்டில் கண்டியை புனித நகராக ஏற்றுக்கொண்டது. இந்தப் பின்னணி கண்டியின் மரபுரிமைக்கு மேலும் பலம் சேர்த்தது.
 
இலங்கையின் மறைமுக சிங்கள பௌத்த ஆட்சியமைப்பு முறையை பேணிக்காப்பதை உறுதிபடுத்தும் பலமான அங்கமாக கண்டி திகழ்ந்து வருகிறது. சிங்கள ஆட்சியாளர்கள் பதவியேற்பதற்கும் அங்கே செல்வதை மரபாக கொண்டுள்ளனர். கண்டிய அரசர்கள் மக்கள் முன் தோன்றி பேசும் தலதா மாளிகையின் பத்திருப்பு பகுதியில் இன்றைய நவீன ஆட்சியாளர்களும் பதவியேற்புரையை செய்வதை சிங்கள பௌத்த பெருமிதமாகக் கொண்டுள்ளனர்.
 
பதவிகளையேற்கும் போதும், முக்கிய அரசியல் நிகழ்வுகளில் போதும் கண்டியிலுள்ள பௌத்த மகா பீடத்தினரை சந்தித்து ஆசீர்வாதம் பெறுவதையும், ஆலோசனைகளை பெறுவதையும் மரபாக இப்போது ஆக்கியுள்ளனர். அது மட்டுமன்றி முக்கிய அரசியல் சிக்கல்களின் போது ஆளுங்கட்சியும், எதிர்கட்சிகளும் தமது தரப்பு அரசியல் விளக்கமைப்பதற்கும், ஆதரவு தேடுவதற்கும் அங்கே செல்லுமளவுக்கு இலங்கையின் பலம் பொருந்திய “திரைமறைவு அதிகாரிகளாக” கண்டி மகாசங்கத் தேரர்கள் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களும் அரசியல் நிலைமைகள் குறித்து கருத்து கூறுவதும், கட்டளையிடுவதும், எச்சரிக்கையிடுவதையும் நாம் கண்டு வருகிறோம்.

1956 அரசியல் மாற்றமென்பது இலங்கையின் அரசியலில் மாத்திரமல்ல இலங்கையின் இனத்துவ அரசியலிலும் ஒரு முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்திய மாற்றம்.   சிங்கள   அரச அமைப்புமுறையை “சிங்கள பௌத்த”த் தனத்துக்கு கட்டமைக்க  சிங்கள பௌத்த அரசியல் சக்திகளும், சிவில் அமைப்புகளும் ஒரு சேர செயற்பட்டு வெற்றிபெற்ற காலகட்டம் அது. சிங்கள மகாசபையின் பண்டாரநாயக்கவை முன்னிறுத்தி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஆரம்பிக்கச் செய்ததே சிங்கள அதிகாரத்தை நிறுவுவதற்குத் தான். அந்த நிகழ்ச்சிநிரலில் சற்று சந்தேகம் வந்தாலும் பெரும் விலையைக் கொடுக்கக் கூட தயாராக இருந்தது அன்றைய சிங்கள பௌத்த சக்திகள். அதுபோலவே பண்டாரநாயக்கவின் உயிர் அதற்கு விலையாகக் கொடுக்கப்பட்டது. அன்றிலிருந்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் முவைக்கப்பட்ட சந்தர்ப்பங்களிலும், அரசியல் தீர்வுக்கான சகல முயற்சிகளின் போதும் முட்டுக்கட்டைபோட்டு அதனை மறுத்தும், எதிர்த்தும், தடுத்தும் வந்ததும், தலைமைதாங்கியதும் கண்டி பௌத்தத் தலைமை தான்.
 
1957 ஆம் ஆண்டு பண்டா - செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து ஜே.ஆர். தலைமையில் திரண்ட “கண்டி பாதயாத்திரை” வரலாறு மறக்காது. அதேபாணியில் நல்லாட்சி அரசாங்கத்தை எதிர்த்து 2016இல் மேற்கொண்ட பாதயாத்திரையும் கண்டி பாதயாத்திரை தான். பொது பல சேனா, இராவணா பலய, சிங்களே அமைப்பு போன்றவையும் அவ்வப்போது நடத்தும் ஊர்வலம், பாதயாத்திரை என்பன கண்டிக்கோ அல்லது கண்டியிலிருந்தோ தான் ஆரம்பித்ததை நாம் கண்டிருக்கிறோம். இனவாத சக்திகள் தமது கடும்போக்கு நடவடிக்கைகளையும், ஆர்ப்பாட்டங்களையும், வன்முறைகளையும் பிரயோகிப்பதற்கு பௌத்த சீருடை தரித்தவர்களை முன்னிறுத்தித் தான் காரியம் சாதித்து வருவதை நாம் நேரடியாக கண்டு வருகிறோம். அப்படியான சந்தர்ப்பங்களில் நீதியை நிலைநாட்ட வேண்டிய போலீசார் கூட அடிபணிந்து பின்வாங்குவதையும், கெஞ்சி சமரசம் பேசுவதையும் கூட நிதமும் கவனித்திருக்கிறோம்.
 
அது மட்டுமன்றி இலங்கையில் சமாதான முயற்சியின் போது நோர்வே தூதுவர்களும் ஏனைய இணை அனுசரணை நாட்டு பிரதிநிதிகளும் கூட பல தடவைகள் உத்தேச சமாதான யோசனைகளைக் காவிக்கொண்டு கண்டி மகாசங்கத்தினரை சந்தித்து அவர்களிடம் அரசியல் விளக்கம் அளித்தனர். அவர்களின் ஆதாரவைக் கோரி பகீரதப் பிரயத்தனம் கொண்டனர்.  ஏறத்தாள இலங்கையின் நிழல் அரசாகவே இந்த மகாசங்கத்தினர் இருந்து வருவதை இப்படி தொகுத்துப் பார்த்தால் தான் விளங்கிக் கொள்ள முடியும்.
 
அமைதியைப் போதித்த புத்தர் வழிவந்த பௌத்த பிக்குகள் யுத்த தளபதிகளுக்கு ஆசி வழங்கி போருக்கு அனுப்பி வைத்த காட்சிகளைக் கண்டிருக்கிறோம். அதுபோல யுத்தக் களத்துக்கே சென்று படையினருக்கு ஆசி வேண்டி மதச் சடங்குகளை சென்றதையும் பகிரங்கமாக ஊடகங்களில் கண்டிருக்கிறோம். சமாதான முயற்சிக்காக வந்த வெளிநாடுகளைக் கூட எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், கூட்டங்கள், அடிதடிகள் வரைக்கும் பௌத்த பிக்குமார் தலைமையில் நிகழ்ந்ததையும் நாம் கண்டிருக்கிறோம். இலங்கைக்கு பௌத்த மதத்தைக் கொண்டு வர காரணமாக இருந்த அசோக சக்கரவர்த்தி கூட பேரழிவைத் தரும் யுத்தத்தை வெறுத்து பௌத்த வழிமுறையை ஏற்றுக்கொண்டவர். அந்த அமைதிவழி பௌத்த தத்துவத்தையே இலங்கைக்கும் இன்னும் பல தேசங்களுக்கும் அறிமுகப்படுத்தியவர் என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும். ஆனால் இலங்கையிலோ பௌத்தமதம் தவிர்ந்தவர்களின் மீது வெறுப்பையும் வன்முறையையும் பிரயோகிக்கும் மதமாக பௌத்தம் ஆக்கப்பட்டிருக்கிறது.
 
போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட படையினரையும், மேலும் கொலை, கொள்ளை, கடத்தல், பாலியல் வல்லுறவு, ஊழல் போன்ற பல்வேறு குற்றங்களை இழைத்த படையினரையும் விடுவிக்கக் கோரும் முயற்சிகளுக்கு இன்று தலைமை கொடுப்பதும் இந்த மகாசங்கத்தினர் தான். அது போல விசாரணயின்றி நீண்ட காலமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கூடாது என்கிற அழுத்தத்துக்கு தலைமை தாங்குவதும் அதே மகா சங்கத்தினர் தான்.
 
இலங்கை பௌத்தர்களிடம் மட்டும்?
 
இலங்கை, மியான்மார், தாய்லாந்து ஆகிய தேரவாத பௌத்தத்தைக் கடைபிடிக்கும் நாடுகள் மாத்திரம் மோசமான அந்நிய வெறுப்புணர்ச்சியையும், தீவிர வன்முறையைக் கைகொள்வதன் பின்னணி என்ன என்கிற ஆய்வுகள் சமீப காலமாக  கவனத்துடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது மேலதிக செய்தி. மென்போக்கும் கருணையும் நிறைந்த மஹாயான பௌத்தத்தை சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் வாழும் பெரும்பான்மை மக்கள் பின்பற்றுகிறார்கள். இந்த மஹாயான நாடுகள் தான் செல்வந்த நாடுகளாகவும் உள்ளன. அதுபோல இலங்கைக்கும் நீண்டகாலமாக பொருளாதார ஒத்துழைப்பு வழங்கும் நாடுகளாகவும் திகழ்கின்றன.
வெசாக் தினத்திற்காக உலகத் தொழிலாளர் தினத்தை தள்ளிப்போடும்படி அரசாங்க வர்த்தமானியில் வெளிவந்த அரச ஆணை
இலங்கையின் சிங்கள பௌத்தத்தனத்தின் மூடத்தனமான போக்கின் சமகால இன்னொரு விவகாரம் வெசாக் தினத்துக்காக சர்வதேச தொழிலாளர் தினத்தை மே 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கும் அரச முடிவு. மகாசங்கத்தினரின் கோரிக்கையின் பேரிலேயே இந்த முடிவை எடுத்ததாக மார்ச் 27 அன்று ஜனாதிபதி மைத்திரிபால அறிவித்திருந்தார். வெசாக் தினத்தை கொண்டாடும் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, திபெத், மியான்மார், கம்போடியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் அனைத்துமே இம்முறை வெசாக் தினத்தை மே 29 தான் அனுஷ்டிகின்றன. ஏன் வெசாக் பண்டிகை பற்றிய  ஐக்கிய நாடுகள் சபை 50 ஆண்டுகளுக்கு வெளியிட்டுள்ள பட்டியலிலும் கூட இவ்வருடம் மே. 29ஆம் திகதியைத் தான் பல ஆண்டுகளுக்கு முன்னரே அறிவித்திருக்கிறது. இலங்கையின் மகா சங்கத்தினருக்கு மாத்திரம் இப்படி விபரீத விசித்திர எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன என்கிற கேள்வி எழுகின்றது.
 
பௌத்த சங்கங்களின் ஆசீர்வாதமும், அனுமதியுமின்றி எதையும் நிறைவேற்ற முடியாத அளவுக்கு அரச அமைப்புமுறை கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
 
கண்டியிலுள்ள ராமக்ஞ நிக்காய, அமரபுர நிக்காய ஆகியவை சாதிய ரீதியில் பிளவுண்டிருந்தாலும் கூட அங்கே வெளிப்படையான நடைமுறை கிடையாது. அனால் சீயம் நிக்காய வெளிப்படையாக சாதியத்தைக் கைகொள்கிறது. பௌத்த பிக்குவாக மாறவிரும்புபவர்கள். அல்லது மாற்றப்படும் சிறுவர்கள் உயர் சாதி கொவிகம குலத்தைச் சேராதவருக்கு பௌத்த தீட்சை வழங்குவதில்லை. அதாவது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு பௌத்த பிக்குவாக தமது நிக்காயவுக்குள் உள்வாங்குவதிலை. ஆனால் சீயம் நிக்காய போன்றவை உயர்சாதியற்ற பெரும் பணக்காரர்கள் வழங்கும் உதவிகளையும், வசதிகளையும் அனுபவிக்கவே செய்கின்றன.
 
இன்னமும் இலங்கையின் நாளாந்த பத்திரிகைகளில் பௌத்த பிக்குவாக ஆவதற்கு கொவிகம சாதியைச் சேர்ந்தவர்கள் “இன்ன” விகாரைக்கு தேவை என்கிற நாளாந்த பத்திரிகை விளம்பரங்கள் வெளிவரவே செய்கின்றன.
"விகாரையொன்றுக்கு பிக்குவாக ஆக விரும்பும் மூன்று கோவிகம சாதியைச் சேர்ந்த 10-15 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்கள் தேவை. தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்..... (அடிக்கடி காணக்கூடிய பத்திரிகை விளம்பரம்)"
 
 “பௌத்த சாசனத்தை” பாதுகாப்பது என்கிற பாரம்பரிய சுலோகம் எத்தனை போலியானது என்பதையே இது தெளிவுபடுத்துகிறது. புத்தரின் போதனைகளை அடிப்படையாகக் கொண்ட வழிகாட்டலையே சாசனம் என்கிறோம். அப்படியென்றால் இந்த நிக்காயக்களை பாதுகாப்பது சாசனமா சாதியா என்கிற கேள்வியையும் நாம் எழுப்ப வேண்டியுள்ளது.
 
இலங்கையின் சாதியமைப்பை ஆராய்ந்த முக்கிய ஆய்வாளராக போற்றப்படும் பிரய்ஸ் ரயன் (Bryce F. Ryan) தனது “நவீன இலங்கையில் சாதியம்” (Caste in Modern Ceylon) என்கிற நூலில் உலகில் எந்தவொரு பௌத்த நாட்டிலும் கடைபிடிக்காத சாதி அமைப்புமுறை இலங்கை சிங்களவர்களிடம் மட்டும் தான் காணப்படுகிறது என்பதை அழுத்தமாக குறிப்பிடுகிறார். அது மட்டுமன்றி அவர் இன்னொன்றையும் குறிப்பிடுகிறார்.
“ஒருபுறம் பௌத்த தத்துவத்தையும், அதன் அறநெறியையும் கொண்டாடிக்கொண்டு மறுபுறம் அதற்கு நேரெதிரான திட்டவட்டமான கட்டமைப்பையும் பேணிக்கொண்டு மேலும் 2500 ஆண்டுகள் பௌத்தம் எப்படி தளைத்திருக்கும்” என்கிற முக்கிய கேள்வியை எழுப்புகிறார்.
சாதியத்துக்கு எதிராக பௌத்தம்
 
சாதியத்துக்கு எதிராக புத்தரை முன்னிறுத்துவோர் ஒரு கதையை தொடர்ச்சியாக ஆதாரம் காட்டுவது வழக்கம்.
 
தலையில் முடி மரம் வளர்ந்திருந்த அரசரொருவர் அதனால் பெரும் துன்பத்தை அனுபவித்து வந்தார். ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவருடன் ஒன்றாக ஆகாரம் உண்டால் தான் இதிலிருந்து மீட்சி பெறலாம் என்கிற அறிவுரையை யாரோ கூறி விடுகிறார்கள். அரசரும் மாறுவேடமணிந்து ஒரு தாழ்த்தப்பட்ட சாதியொருவரைக் கண்டுபிடித்து அப்படியே ஒன்றாக உணவுண்ட போதும் எதுவும் மாறவில்லை. அரசர் மீண்டும் மாளிகைக்குத் திரும்பும் வழியில் தற்செயலாக ஒரு மோசமான நடத்தையைக்கொண்ட உயர்சாதிக் குடும்பமொன்றை கடக்க நேரிடுகிறது. அவர்களின் குரூர நடத்தையை மோசமாக கண்டித்து திட்டுகிறார் அரசர். மாறுவேடத்தில் இருப்பவர அரசர் தான் என்று அறியாத அவர்களில் ஒருவர் தனது உணவை அரசரின் முகத்தை நோக்கி எறிகிறார். அதிலிருந்த சோற்றுப்பருக்கை முகத்தில் பட்டதும் அரசரின் தலையிலிருந்த குடி மரம் மறைந்து விடுகிறது. “எந்தவொரு மனிதனும் பிறப்பால் தாழ்த்தப்பட்டவரோ, பிராமணரோ கிடையாது. ஒருவன் தனது நன்னடதையாலேயே உயர்ந்தவனாக போற்றப்படுகிறான்.” என்கிற புத்தரின் போதனை அப்போது தான் அரசன் நினைவுகொள்கிறான்.
“நஜஜ்ஜா வசலோ ஹோதி – நஜஜ்ஜா ஹோதி பிரஹ்மனோ கம்மனா வசலோ கோதி – கம்மனா ஹோதி பிரஹ்மனோ...” (வசல சூத்திரம்)
இந்தக் கதை சிங்கள சமூகத்தில் மிகவும் பிரபலமான பௌத்த கதை.
 
இந்தியாவில் ஆதிக்க சாதியாக கொடுமை தாங்காது அண்ணல் அம்பேத்கர் ஐந்து லட்சம் தலித் மக்களுடன் சேர்ந்து பௌத்தத்துக்கு மாறினார். பௌத்தம் அந்தளவு சாதி மறுப்பு மார்க்கமாக கருதப்படுவதால் தான் அப்படி செய்ய அவர் முன்வந்தார். ஆனால் இலங்கையில் இந்துத்துவ சாதிக்கொள்கைகள் பௌத்த பண்பாட்டின் மீதும் தாக்கம் செலுத்தி சிங்கள பௌத்தத்துக்கென்று தனித்துவமான சாதியமைப்பை உருவாக்கிக்கொண்டது. சிங்களமும் பௌத்தமும் தான் மற்றவர்களுக்கு எதிராக ஒரு சித்தாந்த கட்டமைப்பைக் கொண்டு சமாந்தரமாக பயணித்துக் கொண்டிருக்கிறது என்று பார்த்தால் கூடவே சொந்த சிங்கள பௌத்தர்களுக்கு எதிராக சாதியமும் கூடவே சமாந்திரமாகத்தான் செல்வாக்கு செலுத்திக் கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்திய மற்றுமோர் சமகால சம்பவம் தான் ரெஜினோல்ட் குரே விவகாரம்.
 
அது சரி.... கண்டிக்கு ஒரு சிங்கள – பௌத்த – கொவிகம – ஆண்/பெண் (மூன்றாம் பாலினம் அல்லாத)  பின்னணியைக் கொண்ட ஒருவர் தான் ஆளுநராக ஆக வேண்டும் என்கிற கோரிக்கையை நிறைவேற்றுபவர்களால் ஏன் இன்னமும் வடக்குக்கு அல்லது கிழக்குக்கு ஆளுநராக ஒரு தமிழரை தெரிவுசெய்ய முடியாது இருக்கிறது. 
 
ரெஜினால்ட் குரே
12.11.1947இல் பிறந்த ரெஜினால்ட் குரே கத்தோலிக்க கராவ சாதி பின்னணியைக் கொண்டவர். இடதுசாரிப் பின்னணியுடைய அவர் ஆரம்பத்தில் ஜே.வி.பியில் தனது அரசியல் செயற்பாடுகளை ஆரம்பித்தவர். 1977 பொதுத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு தொல்வியடைந்தார். பின்னர் விஜயகுமாரதுங்கவின் இலங்கை மக்கள் கட்சியில் இணைந்துகொண்டார். 1988இல் இடதுசாரிக்கட்சிகள் கூட்டாக அமைத்த ஐக்கிய சோஷலிச முன்னணியின் மூலம் களுத்துறை மாவட்டத்திலிருந்து மேல்மாகாணசபைக்கு தெரிவானார்.
  ஐ.சோ.மு வும் சுதந்திரக் கட்சியும் இணைந்து பொதுஜன ஐக்கிய முன்னணியின் மூலம் 1994 இல் களுத்துறை மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவானார். மீண்டும் 2000 ஆம் ஆண்டும் தெரிவானார். சந்திரிகா அரசில் இன விவகார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். பின்னர் சில மாதங்களிலேயே அவர் மேல் மாகாண முதலமைச்சராக தெரிவானார்.
2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மீண்டும் பாராளுமன்றத்துக்கு தெரிவாகி தகவல் தொடர்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு மேல் மாகாண சபைத் தேர்தலிலும் போட்டியிட்டு வென்றார். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து தனது பதவியை இராஜினாமா செய்துகொண்டார். ஆனால் 2005 ஆம் ஆண்டு அவர் மீண்டும் முதலமைச்சராக தெரிவானார். 2009 இல் மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்றார். அடுத்த ஆண்டே 2010 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று நீதித்துறை பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் சிறு ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைச்சராக நியமனமானார். 2015 ஆம் ஆண்டு புதிய நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியமைத்ததும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டார். பொருளாதார காரணிகளால் அவர் 2015 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் அவரை தேசிய பட்டியலில் சேர்த்துக் கொண்டிருந்தது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சி. ஆட்சியமைத்ததன் பின்னர் அவரை தேசிய பட்டியல் உறுப்பினராக நியமிக்கவில்லை. ஆனால் 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அவரை வட மாகாணத்தின் ஆளுனராக நியமித்தது அரசாங்கம்.

 

Comment (0) Hits: 690

பாலினம், தோல் நிறம், சித்­தாந்த வேறு­பா­டு­க­ளுக்கு அப்பால் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கான பொது­வான இயல்பு

பாலினம், தோல் நிறம் மற்றும் சித்­தாந்தம் ஆகி­ய­வற்றில் வேறு­பா­டுகள் இருந்­த­போ­திலும், ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கென்று ஒரு பொது­வான  இயல்பு ஒன்று  உள்­ளது. அதா­வது சத்­தி­யத்தை சொல்­வதன் மூலம் சுதந்­திரம் மற்றும் சமா­தா­னத்­திற்­காக போராடும் தரப்­பா­கவே உலக ஊட­க­வி­ய­லா­ளர்கள் திகழ்­வ­தாக கொரிய பன்­னாட்டு ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் தெரி­விக்­கப்­பட்­டது.

கொரி­யாவின் ஊட­க­வி­யா­ளர்கள் சங்­கத்தின் ஏற்­பாட்டில் சியோல் நகரில் உலக ஊட­க­வி­ய­லாளர் மாநாடு இடம்­பெற்­றது. கடந்த 4 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை இடம்­பெற்ற இந்த மாநாட்டில் கொரிய தீப­கற்­பத்தின் அணு ஆயுத பயன்­பாடு மற்றும் உலக அமை­திக்­கான ஊட­க­வி­ய­லா­ளர்­களின் பங்­க­ளிப்பு என்­பன முக்­கி­ய­மா­ன­வை­­யாகும். 

60 நாடு­க­ளி­லி­ருந்து 70 பத்­தி­ரி­கை­யா­ளர்கள் இந்த மாநாட்டில் கலந்­து கொண்­டி­ருந்­தனர்.  சியோல், ஜிங்­குங்ஹி மாகாணம், சுவான் நகரம், பூசான், வட ஜியோங்ஸ்பாங்க் மாகாணம், ஜேஜு தீவு மற்றும் இன்சோன் ஆகிய  பகு­தி­க­ளுக்கும் பன்­னா­டு­க­ளிலும் இருந்து வருகை தந்­தி­ருந்த  ஊட­க­வி­ய­லா­ளர்கள் பயணம் மேற்­கொண்­டனர். இதன் போது  மேயர்கள் மற்றும் துணை மேயர்­களை சந்­தித்து கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு ஒழுங்­குகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன.  21 ஆம் நூற்­றாண்டில் ஒரு சமா­தான கொரி­யாவின் தொடர்பில் கருத்­துக்­கள்,விவா­தங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. 

பாலினம், தோல் நிறம் மற்றும் சித்­தாந்தம் ஆகி­ய­வற்றில் வேறு­பா­டுகள் இருந்­த­போ­திலும், எமக்கு பொது­வான  இயல்பு ஒன்று  உள்­ளது. அதா­வது சத்­தி­யத்தை சொல்­வதன் மூலம் சுதந்­திரம் மற்றும் சமா­தா­னத்­திற்­காக போராடும் பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளா­கவே திகழ்­வ­தாக கொரி­யாவின் ஊட­க­வி­யலா­ளர்கள் சங்­கத்தின் தலைவர் ஜங் கியூ ஷங் தெரி­வித்­தமை அனை­வ­ராலும் வர­வேற்­கப்­பட்ட விட­ய­மா­னது. 

கொரி­யாவில் தொழில்சார் ஊட­க­வி­ய­லா­ளர்­களின் மிகப்­பெ­ரிய அமைப்­பாக, 1964 ஆம் ஆண்டில் கொரி­யாவின் ஊட­க­வி­ய­லாளர் சங்கம் ஸ்தாபிக்­கப்­பட்­டது. தற்­போது கொரி­யாவின் ஊடக நிறு­வ­னங்கள், ஒளிப­ரப்பு சேவைகள், இணைய செய்தி மற்றும் பிற நிறு­வ­னங்­க­ளுக்கு 10,000 க்கும் அதி­க­மான ஊட­க­வி­ய­லா­ளர்­களின் ஒத்­து­ழைப்­புடன் இந்த சங்கம் செயற்­ப­டு­கின்­றது. உல­க­ளா­விய பாது­காப்பு மற்றும் அமைதி உள்­ளிட்ட அபி­வி­ருத்­தியின் கடி­ன­மான பக்­கங்கள் குறித்த பன்­னா­டு­களின் பார்­வைகள் உலக ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுடன் ஆரா­யப்­பட்­டமை இந்த மாநாட்டின் மற்­று­மொரு பக்­க­மாக காணப்­ப­டு­கின்­றது. 

கொரி­யாவின் தேசிய பொக்­கி­ஷ­மான அரண்­ம­னைகள் மற்றும் தொழில்­நுட்ப நிறு­வ­னங்கள் போன்ற தென் கொரி­யாவின் கலா­சார மற்றும் தொழில்­நுட்ப அம்­சங்­கள் இந்த திட்­டத்தின் சிறப்­பம்­சங்­க­ளாக உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தன.  6 ஆம் திகதி செவ்­வாய்­க்கி­ழமை சுவான் நகரில் அமைந்­துள்ள கொரிய தொழில்­நுட்­பத்தின் மாபெரும் பரி­ணா­ம­மாக காணப்­ப­டு­கின்ற இடங்கள் மற்றும் கலா­சார மையங்­க­ளுக்கும் உலக ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு விஜயம் செய்­வ­தற்கு வாய்ப்­புகள் வழங்­கப்­பட்­டி­ருந்­தன.

மறுநாள் காலை கொரி­யாவின் நிர்­வாக மைய­மான சீஜோன் நக­ரிற்கு விஜயம் மேற்­கொண்­டனர். 2003 ஆம் ஆண்டில், முன்னாள் ஜனா­தி­பதி நாமூ ஹயூன் , சியோஜின்  முக்­கிய அர­சாங்க வச­தி­களை கொரி­யாவின் மையப்­ப­கு­திக்கு மாற்­று­வ­தற்­கா­கவும், கொரியா மையத்தில் ஒரு பகு­தியும் மற்றும் பிற முக்­கிய நக­ரங்­க­ளி­லி­ருந்து சுமார் இரண்டு மணி நேரத்தில் வரக் கூடி­ய­வாறு நிர்­வாக நகர் அமை­ய வேண்­டி­யதன் முக்­கி­யத்­து­வத்தை வலி­யு­றுத்­தி­யி­ருந்தார். 

இத­ன­டிப்­ப­டையில் புதிய நிர்­வாக நகரின்  மேயர் லீ சன்­ஜோவின் சிறப்புத் திட்­டங்கள் குறித்து பன்­னாட்டு ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு விளக்­க­ம­ளிக்­கப்­பட்­டது. மேலும் வட கொரிய ஜனா­தி­பதி கிம் ஜோங் ஹுங்­வு­ட­னான நம்­பகத் தன்மை குறித்து இதன் போது ஊட­க­வி­ய­லா­ளர்கள் கேள்­வி­யெ­ழுப்­பினர் . 

வட கொரிய ஜனா­தி­ப­தியின் சமீ­பத்­திய செயல்­களின் நேர்மை வெளிப்­ப­டு­கின்­றது. ஒரு­மித்த கொரி­யாவைப் பொறுத்­த­வ­ரையில் எங்­க­ளுக்கு முன்னால் உள்ள வாய்ப்­பு­க்களை சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொள்ள முடி­யுமா என்­பது பற்றி முக்­கி­யத்­துவம் வாய்ந்­த பேச்­சுக்­களை முன்­னெ­டுக்­கின்றோம். நான் சமா­தா­னத்தைப் பற்றி மிகவும் சாத­க­மா­னவன்  என இதன் போது மேயர் பதி­ல­ளித்தார்.

இன்­னொரு முக்­கி­ய­மான நிகழ்வு அன்டோங்  நகரில் அமைந்­துள்ள பாரம்­ப­ரிய மது­பான உற்­பத்தி நிலை­ய­மான சோஜோ ஆலை­யினை பார்­வை­யிட வாய்ப்­பு வழங்­கப்­பட்­டது. இதே போன்று பல்­வேறு நக­ரங்கள் மற்றும் தீவுகள் என பல பகு­தி­க­ளுக்கும் பன்­னாட்டு ஊட­க­வி­ய­லா­ளர்கள் விஜயம் செய்­தனர். 

தென்­கொ­ரிய வெளிவி­வ­கார அமைச்சர் கெங் கியங் வோ, 

தென் கொரி­யா­வா­னது குளிர்­கால ஒலிம்பிக் போட்­டி­களை திற­மை­யாக ஒழுங்­க­மைத்து நடத்­தி­யுள்­ளது. அதன்­மூ­ல­மாக சர்­வ­தே­சத்தின் மத்­தியில் ஒருங்­கி­ணைப்பு மற்றும் ஒற்­று­மை­யுடன் செயற்­படும் ஒரு நாடாக தென் கொரியா தன்னை நிறு­விக்­கொண்­டுள்­ளது. இவ்­வ­ருட குளிர்­கால ஒலிம்பிக் போட்­டி­களை ஒழுங்­க­மைத்­த­மை­யா­னது உண்­மை­யி­லேயே மிகச்­சி­றந்­த­தொரு அனு­ப­வ­மாகும் என தென்­கொ­ரிய வெளிவி­வ­கார அமைச்சர் கெங் கியங் வோ மாநாட்டில் உரை­யாற்றும் போது தெரி­வித்தார்.

இவ் அனு­பவம், மாற்றம் ஒன்­றிற்­கான அடிப்­ப­டை­யா­கவும் அமைந்­துள்­ளது. இப்­போட்­டி­களின் தொடக்க நாள் மற்றும் நிறை­வுநாள் வைப­வங்­களின் போது தென் கொரி­யாவின் உயர்­மட்ட அர­சியல் அதி­கா­ரிகள் கலந்­து­கொண்­டி­ருந்­தனர். இதன்­மூலம் அந்­நி­கழ்­விற்கு தென் கொரியா அளித்­துள்ள முக்­கி­யத்­து­வத்­தினை புரிந்து கொள்ள முடியும். 

குளிர்­கால ஒலிம்பிக் போட்­டி­களின் தொடக்க நாள் வைப­வத்தில் தென் கொரிய ஜனா­தி­பதி மூன்-­ ஜெ- இன் கலந்­து­கொண்­டி­ருந்தார். அத்­தோடு வட­கொ­ரிய ஜனா­தி­பதி கிம்-­ ஜொங்-­ உன்னின் சகோ­தரி கிம்-­யோ-ஜொங் வருகை தந்­தி­ருந்தார். வட கொரிய ஜனா­தி­ப­தியின் நெருக்­கத்­திற்­கு­ரிய ஒரு­வ­ரான கிம்-­ யோ-­ ஜொங்கின் வரு­கை­யினை இரு நாடு­க­ளுக்­கு­மி­டையில் இணக்­கப்­பாட்­டினை எட்­டு­வ­தற்­கான ஒரு நேர்­ம­றை­யான குறி­யீ­டா­கவே நாங்கள் கரு­து­கின்றோம். 

வட கொரி­யா­வுடன் உற­வு­களை மீள புதுப்­பித்துக் கொள்­வதில் எவ்­வி­த­மான பிரச்­சி­னை­களும் இல்லை. எனினும் வட கொரி­யாவின் அணு­வா­யுத செயற்­பா­டுகள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட முடி­யா­த­வை­யாகக் காணப்­ப­டு­கின்­றன. வட கொரிய மற்றும் அமெ­ரிக்க நாடு­க­ளுக்கு இடை­யி­லான முரண்­பா­டு­களின் பிர­தி­ப­ல­னாக உரு­வாகும் அணு­வா­யுதம் அனைத்து நாடு­க­ளுக்கும் தீங்­காக மாறும். வட கொரி­யா­வு­ட­ன் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்­து­வதில் பிரச்­சி­னைகள் இல்லை என்­கின்ற போதும், அதன் அணு­வா­யுத உற்­பத்தி மற்று பயன்­பாடு என்­ப­வற்­றிற்கு எதி­ரான நிலைப்­பாட்­டினைக் கொண்­டுள்ளோம். 

இவ்வாறானதொரு முக்கியமான காலக்கட்டத்தில் உலக ஊடகவியலாளர் மாநாட்டினை ஏற்பாடு செய்தமையானது கால சிறந்த விடயமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

லியோ நிரோஷ தர்ஷன்

நன்றி - வீரகேசரி

Comment (0) Hits: 385

முள்ளிவாய்க்காலில் தரித்து நிற்கும் தமிழர் அரசியல்!

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானைச் சேர்ந்த முன்னாள் போராளியொருவர், புற்றுநோய்த் தாக்கத்துக்குள்ளாகி, அண்மையில் உயிரிழந்திருக்கின்றார். கடந்த காலத்தில், பெரும் கவனத்தைப் பெற்றிருந்த முன்னாள் போராளிகளின் தொடர் மரணங்கள், இன்றைக்குப் பெட்டிச் செய்திகளாகச் சுருங்கிவிட்டன. பரபரப்புக்காக மாத்திரம், முன்னாள் போராளிகளின் பிரச்சினைகளைக் கையிலெடுக்கும் தரப்புகளும் அந்தப் பரபரப்பு அடங்கியதும், அவர்களை அப்படியே கைவிட்டு, இன்னொரு பரபரப்பைத் தேடிச் சென்றுவிடுகின்றன. மாய்மாலங்களைத் தாண்டிப் பேசினால், முன்னாள் போராளிகள் தொடர்பிலான உரையாடல் வெளி, தமிழ்ச் சூழலில் இருந்து அகற்றப்பட்டுவிட்டது என்பதுதான், உறைக்கும் உண்மை. 

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானைச் சேர்ந்த முன்னாள் போராளியொருவர், புற்றுநோய்த் தாக்கத்துக்குள்ளாகி, அண்மையில் உயிரிழந்திருக்கின்றார். கடந்த காலத்தில், பெரும் கவனத்தைப் பெற்றிருந்த முன்னாள் போராளிகளின் தொடர் மரணங்கள், இன்றைக்குப் பெட்டிச் செய்திகளாகச் சுருங்கிவிட்டன. பரபரப்புக்காக மாத்திரம், முன்னாள் போராளிகளின் பிரச்சினைகளைக் கையிலெடுக்கும் தரப்புகளும் அந்தப் பரபரப்பு அடங்கியதும், அவர்களை அப்படியே கைவிட்டு, இன்னொரு பரபரப்பைத் தேடிச் சென்றுவிடுகின்றன. மாய்மாலங்களைத் தாண்டிப் பேசினால், முன்னாள் போராளிகள் தொடர்பிலான உரையாடல் வெளி, தமிழ்ச் சூழலில் இருந்து அகற்றப்பட்டுவிட்டது என்பதுதான், உறைக்கும் உண்மை. 

முள்ளிவாய்க்கால் கோரங்கள் நிகழ்ந்து, ஒன்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. நாம் மீண்டுமொரு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மாதத்தில் நிற்கிறோம். இன்னொரு வழியில் சொன்னால், தமிழ்த் தேசியப் போராட்ட வரலாற்றில், வெற்றி அடையாளங்களோடு கோலொச்சிய ஆயுதப் போராட்ட வடிவம் முடிவுக்கு வந்து ஒன்பது ஆண்டுகளாகிறது. முப்பது ஆண்டுகளாக நீடித்த போராட்ட வடிவமொன்று, சமூகத்துக்குள் ஏற்படுத்திச் செல்கின்ற தாக்கம் மிகப்பெரியது. அப்படித்தான், ஆயுதப் போராட்ட வடிவமும் வெற்றிகளோடு, மிகப்பெரிய சமூக, பொருளாதார நெருக்கடிகளையும் ஏற்படுத்திச் சென்றிருக்கின்றது. போராட்டங்களின் உண்மையான வெற்றி என்பது, அந்தப் போராட்டங்களுக்கான அர்ப்பணிப்பு மற்றும் வெற்றியைத் தக்க வைப்பதற்கான உத்திகளிலேயே தங்கியிருக்கின்றது. அத்தோடு, வெளிப்பூச்சுகளுக்கு அப்பாலான வெற்றியின் உண்மையான கனதி, என்ன என்பதும் உணரப்பட்டிருக்க வேண்டும்.

தமிழ்த் தேசியப் போராட்ட வரலாற்றில், தமிழீழ விடுதலைப் புலிகள் அளவுக்கு அர்ப்பணிப்பைக் காட்டிய தரப்புகள் ஏதும் இல்லை. யாருமே எதிர்பார்க்காத தியாகங்களின் வழியேதான், புலிகள் மேலெழுந்து வந்தார்கள். மக்களுக்காக, எந்த எல்லைக்கும் போவதற்கும் அவர்கள் துணிந்தார்கள். ஆனால், வெற்றி அடையாளங்களோடு மாத்திரம் மக்களை அடைந்தால் போதுமென்கிற அவர்களின் மனநிலை, அதிக தருணங்களில் இன்னொரு பக்க உண்மைகளைத் தவிர்க்கச் செய்தது. அது, “பெடியள் வெண்டு தருவாங்கள்” என்கிற உணர்நிலையை மக்கள் மத்தியில் விதைத்தது. மக்களின் பொறுப்புகளை குறிப்பிட்டளவு அகற்றியது. அது, இன்றைக்கும் தொடர்வதுதான், பெரும் பிரச்சினையாக நீடிக்கின்றது. 

முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னர், தமிழ்த் தேசியப் போராட்டங்களை யார் வழிநடத்துவது என்கிற குழப்பமும், குடுமிப்பிடிச் சண்டையும் குறிப்பிட்டளவு நீடித்தன. தாயகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தேர்தல் வழி அரசியலுக்காகத் தமிழ் மக்கள் முன்மொழிந்தார்கள். புலம்பெயர் சூழலோ, ‘நாடு கடந்த தமிழீழம்’ உள்ளிட்ட பல அமைப்புகளாகப் பிளவுகண்டு நின்றது. அதிக தருணங்களில், புலிகளின் வகிபாகத்தை முழுமையாக யார் எடுத்துக் கொள்வது என்பது சார்ந்தே குழப்பங்கள் நீடித்தன. விடயமொன்றுக்கான திட்டமிடலையும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பையும் யாரும் எதிர்பார்க்க முடியாதளவுக்கு வழங்கியே புலிகள் மேலெழுந்தார்கள். ஆனால், புலிகளுக்கு ஒப்பாக தங்களை நினைத்துக் கொண்டதுதான், பல தரப்புக்களையும் தோல்வியடையச் செய்தது. 

முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னரான, தாயகத்திலுள்ள மக்களின் மனநிலை என்பது, பெரும்பாலும் சூனியமானது. அடுத்தது என்ன, என்கிற சிந்தனைகளே எழுந்திருக்கவில்லை. கிட்டத்தட்ட உறைந்திருந்தார்கள். முள்ளிவாய்க்கால் கோரங்களைச் சந்தித்து நின்ற மக்களையும் முன்னாள் போராளிகளையும் எவ்வாறு எதிர்கொள்வது என்பதே யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. கூட்டமைப்புக்கு, மஹிந்த ராஜபக்ஷவோடு அல்லாடிக் கொள்வதற்கும், பிராந்திய வல்லரசின் ஆணைகளுக்கு அசைவதற்குமே நேரம் போதுமாக இருந்தது. சூனிய வெளியிலிருந்து மீள்வதற்கான யோசனைகள், திட்டங்களை யாருமே கொண்டிருக்கவில்லை. அவ்வாறான சிறிய முயற்சிகளும் எந்தவித ஒத்துழைப்புமின்றிக் கைவிடப்பட்டன.

இறுதி மோதல்களுக்குள் சிக்கிய மக்களை அரவணைத்துக் கொள்வதற்கே, முள்ளிவாய்க்கால் கோரங்களை நேரடியாகச் சந்திக்காத மக்களுக்குக் காலம் எடுத்தது. பாதுகாப்புத் தரப்பினரின் கெடுபிடிகள், கடத்தல்கள், காணாமற்போதல்கள் என்று மக்கள், இறுக்கத்துக்குள்ளேயே வைக்கப்பட்டார்கள். யார் மீதும் யாரும் நம்பிக்கை கொள்வதற்கான கட்டங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டன. ஒவ்வொரு தமிழரும் தனித் தனித் தீவுகளாகப் பிரித்து வைக்கப்பட்டார்கள். அவர்கள், மற்றவரை நம்புவதற்கும், ஒருங்கிணைவதற்கான வாய்ப்புகளும் அகற்றப்பட்டிருந்தன. அது, அனைவரையும் சந்தேகக் கண்களோடு பார்க்கவும் வைத்திருந்தது. ஒன்பது ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், அந்த நிலை குறிப்பிட்டளவு தொடரவே செய்கின்றது. 

கல்வி, பொருளாதாரம், சமூக அபிவிருத்தி என்று அனைத்துக் கட்டங்களிலும் பின்னடைவைச் சந்தித்து நிற்கின்ற சமூகமொன்று, முன்னோக்கிப் பயணிப்பதற்குத் திட்டமிடலும், அர்ப்பணிப்பும், ஒழுங்கும் அவசியம். ஆனால், அது நிலைப்படுத்தப்படவில்லை. வடக்கு மாகாண சபையின் வருகையை, சிறியதொரு நம்பிக்கையாக மக்கள் எதிர்கொண்டாலும், தென்னிலங்கை அதற்கான வாய்ப்புகளை அடைத்தது. அது மாத்திரமல்லாமல், வடக்கு மாகாண சபைக்குச் சென்றவர்களும் கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் வீணடித்தார்கள். அதிகளவில் தீர்மானங்களை மாத்திரமே நிறைவேற்றி நிம்மதி கண்டார்கள். வடக்கு மாகாண சபைக்கூடாகவோ அல்லது வெளியிலேயே கூட, நிதியங்களை அமைப்பதற்கான கட்டங்களை அடையவில்லை. முதலமைச்சர் நிதியத்துக்கான குரலை, மத்திய அரசாங்கத்திடம் சி.வி.விக்னேஸ்வரன் உயர்த்தினாலும், அதன் அடுத்த கட்டங்கள் அடையப்படவேயில்லை. முதலமைச்சர் நிதியத்துக்கூடாக மாத்திரமே விடயங்களைக் கையாள முடியும் என்கிற உணர்திறனோடு, விடயங்கள் கைகழுவப்பட்டு விட்டன. 

புலம்பெயர் தேசங்கள் பூராவும் பறந்து திரிந்து கட்சிகளுக்கும், தாம் சார் அமைப்புகளுக்கும் நிதியைப் புரட்ட முடிந்தவர்களால், முன்னாள் போராளிகளுக்கான வேலைத்திட்டங்களுக்கான நிதியைத் திரட்ட முடியவில்லை. போர் வடுக்களோடு வாழ்பவர்களின் வாழ்வாதாரத்தில் அக்கறை கொள்ள முடியவில்லை. முயலாமை என்கிற வியாதி, தமிழ் அரசியல்வாதிகளிடம் மாத்திரமல்ல, செயற்பாட்டாளர்கள், புலமையாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பிடமும் ஓங்கியிருக்கின்றது. கிட்டத்தட்ட தமிழ்த் தேசிய அரசியல் என்பது, சமூக - பொருளாதார விடயங்களை மறந்து, தேர்தல் அரசியல் என்கிற ஒற்றை வழியில் பயணிக்க ஆரம்பித்து விட்டது.
புலிகள், வெற்றி அடையாளங்களோடு மேலெழுந்து வந்தாலும், சமூக- பொருளாதாரக் கட்டமைப்பில் தம்மால் முடிந்தளவுக்கான கட்டங்களைக் கட்டியிருந்தார்கள். அரசாங்கத்தின் பொருளாதாரத் தடைக்கு மத்தியிலும் பொருண்மிய மேம்பாட்டுத் திட்டங்களைத் திறம்படச் செய்தார்கள். ஆனால், என்ன, அந்தத் திட்டங்களின் முழுமையான ஆளுமையும் பங்களிப்பும் அவர்கள் சார்ந்தே இருந்ததால், புலிகள் தவிர்ந்த, வெளியிலிருந்த புலமைத்தரப்பினர், எந்தவித சிந்தையுமின்றிச் சோம்போறிகளாகினர். அந்தச் சோம்போறித்தனமான- மந்த நிலைதான், இன்றும் அறைகளுக்குள் இருந்துகொண்டு, கருத்துகளை மாத்திரம் கூறிவிட்டு, ஒதுங்கிவிட வைத்திருக்கின்றது. விடயமொன்று பரபரப்பாக மேலெழும் போது மாத்திரம், செயற்படுவது மாதிரியான போக்குக் காட்டப்படுகின்றது.

முன்னாள் போராளிகள் விடயத்தில் இது, பலமுறை நிகழ்ந்திருக்கின்றது. முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டது என்கிற விடயம் மேலெழும் போது, அதைப் பரபரப்புக்காகவே பல தரப்புகள் கையாண்டன. 16,000 முன்னாள் போராளிகள் மற்றும் அவர்களோடு நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கை எவ்வளவு பாதிக்கப்படும் என்று யோசித்த தரப்புக்கள் வெகு குறைவு. அச்சமூட்டும் செயற்பாடுகளே அதிகமாக நிகழ்த்தப்பட்டன. அதுபோல, சமூகத்தால் ஒட்டுமொத்தமாகக் கைவிடப்பட்ட நிலையில், இராணுவப் பண்ணைகளில் வேலைக்குச் செல்லும் நிலை, முன்னாள் போராளிகளுக்கு ஏற்பட்ட போதும், அவர்களை நோக்கி ‘துரோகி’ பட்டங்களை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்தநிலை ஏன் உருவானது என்று யாரும் சிந்திக்கவில்லை. 

புலம்பெயர் தேசங்களில் புலிகள் இருந்த காலத்தில் எவ்வளவு நிதி சேகரிக்கப்பட்டதோ, அதற்குச் சற்றும் குறையாமல் தற்போதும் பல தரப்புகளினாலும் நிதி சேகரிக்கப்படுகின்றது. அந்த நிதியின் போக்கிடம் எது என்று யாருமே ஆராய்வதில்லை. இலண்டனில் மாவீரர் துயிலும் இல்லம் கட்டுவதற்கும், தமிழகத்தில் சீமான் கட்சி நடத்துவதற்கும் புலம்பெயர் தேசங்களில் நிதி சேகரிக்கப்படுகின்றது. இப்படி பல்வேறு வடிவங்களில் தமிழ் மக்களின் நிதி வீணடிக்கப்படுகின்றது. சீமான் போன்றவர்களை புலிகளின் தலைவர் பிரபாகரனோடு ஒப்பிட்டு, புளகாங்கிதம் அடையும் ஒரு வகையிலான உளவியல் சிக்கல், புலம்பெயர் தேசங்களில் மெல்ல மெல்லக் கட்டமைக்கப்படுகின்றது. அது, தாயகத்திலுள்ள மக்களின் தேவைகளைக் கவனத்தில் கொள்ள முடியாதளவுக்கு, புலம்பெயர் தேசங்களிலுள்ள பல அமைப்புகளையும் மாற்றிவிட்டிருக்கின்றது.

மிகவும் தெளிவான- புரிந்துணர்வுடனான வேலைத்திட்டமொன்று தாயகத்துக்கும்- புலம்பெயர் சூழலுக்கும் இடையில் நிகழ வேண்டியிருக்கின்றது. அவ்வாறான சூழலொன்று உருவாவதை இலங்கை அரசாங்கமும், புலம்பெயர் தேசத்தில் பணம் பறிக்கும் கும்பல்களும் விரும்பாது. ஆனாலும், தடைகளையும் சதிகளையும் முறியடித்து, சமூக - பொருளாதார - அபிவிருத்திக்கான கட்டமொன்று தாயக - புலம்பெயர் சூழலுக்கிடையில் உருவாக்கப்பட வேண்டும். அது, ஊழல், மோசடிகளற்ற வெளிப்படையான தன்மையோடு உருவாக வேண்டும். அந்த முயற்சி இலகுவானதல்ல; ஆனால், முடியாத ஒன்றல்ல. திட்டமிட்டு, சரியாக இணைந்தால், அதைச் செயற்படுத்த முடியும். அது, பாரிய முன்னோக்கிய கட்டங்களை அடைய உதவும். இவற்றையெல்லாம் விட்டுவிட்டு, முள்ளிவாய்க்காலில் மலர் தூவுவதால் மாத்திரம், எந்தப் பயனும் இல்லை; வரலாறும் மன்னிக்காது.

புருஜோத்தமன் தங்கமயில்

Comment (0) Hits: 1066

சுன்னாகம் சந்தைப் படுகொலையும் தொடர்ந்த வன்முறைகளும்

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 135)

ஒரு விமானப்படை அதிகாரி, சட்டவிரோதமான முறையில், துப்பாக்கிதாரி ஒருவரினால் சுட்டுக் கொல்லப்படுகிறார். இதில் குற்றவாளி, அந்தத் துப்பாக்கிதாரி மற்றும் அந்தக் குற்றத்துக்கு உதவிபுரிந்தவர்கள் மற்றும் அந்தக் குற்றத்துக்கான சூழ்ச்சியில் ஈடுபட்டவர்கள்.  

குறித்த படுகொலையாளி, குறித்த ஓரினத்தைச் சார்ந்தவர் என்று அறியப்பட்டதால், குறித்த படுகொலைக்குப் பழிவாங்க, குறித்த விமானப்படை, குறித்த இனத்தைச் சேர்ந்த, பொதுமக்கள் ஒன்றுகூடும் பொது இடமொன்றுக்குச் சென்று, திறந்த துப்பாக்கிச் சூடு நடாத்தி, எட்டு அப்பாவி உயிர்களைப் பலி கொண்டதுடன், ஏறத்தாழ 50 அப்பாவிப் பொதுமக்களையும் காயமுறச் செய்தமை, நியாயத்தின் எந்த அளவுகோலின்படி, ஏற்றுக் கொள்ளத்தக்கதாகும்?   

இது ஒரு காடையர் குழுவோ, வன்முறைக் குழுவோ நடத்திய தாக்குதல் அல்ல; அரச படைகள் - அதாவது ஓர் அரசையும் அதன் மக்களையும் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ள படைகள்; அந்த மக்களின் ஒருசாராரை எந்தவித அடிப்படைக் காரணங்களுமின்றிச் சுட்டுக் கொன்ற கொடூரம் நடந்தேறியிருக்கிறது.   

யுத்த காலத்தின் போதான,குடிமக்களின் பாதுகாப்பு தொடர்பான, 1949ஆம் ஆண்டின் 4ஆவது ஜெனீவா ஒப்பந்தத்தின் 147ஆவது சரத்தானது, தன்னிச்சையாக உடல்ரீதியான அல்லது ஆரோக்கிய ரீதியான தீவிரமான காயங்களை அல்லது துன்பங்களை விளைவித்தல், சட்டத்துக்குப் புறம்பான வலுக்கட்டாயமான நாடுகடத்தல் (இடம் பெயர்த்தல்) அல்லது சட்டத்துக்கெதிரான வகையில் நபரொருவரைத் தடுத்துவைத்தல் அல்லது சிறைப்படுத்தல், நபரொருவரை வலுக்கட்டாயமாக எதிர்ப்புணர்வுமிக்க படைகளில் சேவையாற்றச் செய்தல், மனவுறுதியுடன் நபரொருவரது நியாயமான விசாரணைக்கான உரிமையை இல்லாது செய்தல், பணயக்கைதிகளாகப் பிடித்துவைத்திருத்தல், பாரிய அழிப்புகள் மற்றும் சொத்துகளை சட்டவிரோதமாக அபகரித்தல் உள்ளிட்ட சட்டவிரோதமானதும், நியாயமான இராணுவத் தேவை என நிரூபிக்க முடியாததுமான கொலை, சித்திரவதை மற்றும் மனிதத்தன்மையற்ற நடத்துமுறைகள் என்பவை தண்டனைக்குரிய குற்றம் என்கிறது.  

 அதாவது, இவற்றில் ஈடுபடுவது யுத்தக் குற்றமாகும். முன்னாள் யுகோஸ்லாவியா தொடர்பிலான, சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் கூட ஆயுதப் போராட்டங்களின் போது, குடிமக்களுக்கு எதிராக நடத்தப்படும் சட்டவிரோதமான கொலை, குழுரீதியான அழிப்பு, அடிமைப்படுத்தல், வலுக்கட்டாயமான நாடுகடத்தல், இடப்பெயர்த்தல், கைதுகள், சித்திரவதை, கற்பழிப்பு, இன, மத, அரசியல் காரணங்களுக்கான கொலைகள் என்பன பிரதான யுத்தக்குற்றங்கள் என்கிறது. இந்த ஜெனீவா ஒப்பந்தங்களில், இன்றுவரை இலங்கை கைச்சாத்திடவில்லை என்பதையும் கருத்தில் கொள்க.  

சுன்னாகம் சந்தைப் படுகொலை என்பது, இதுவரை நடந்த இதுபோன்ற தொடர் சம்பவங்களின் இன்னோர் அத்தியாயம்தான். உள்நாட்டுக்குள் ஆயுதக் கிளர்ச்சி இயக்கங்கள் உருவானால், அதை ஆயுதவழி கொண்டு அடக்க, அரசாங்கம் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற பெயரில், அப்பாவிக் குடிமக்களைக் கொன்று குவித்தல், எவ்வகையில் நியாயப்படுத்தத்தக்கது?   

தொடர்ந்த வன்முறைகள்

‘கண்ணுக்கு கண்; பல்லுக்குப் பல்’ என்ற பதிலடி நியாயம், ஆபத்தானது. ஏனென்றால் காந்தி சொன்னது போல, அது குருடான உலகத்தைதான் உருவாக்கும்.   

ஆனால், இந்த மீயுயர் தத்துவ கருத்துருவாக்கங்களுக்கும் யதார்த்தத்துக்கும் ஓர் இடைவெளி இருந்துகொண்டே இருப்பதை நாம் அவதானிக்கலாம். பதிலடிக்குப் பதிலடி என்பது, ஒரு முடிவிலாத் தொடரி. ஆனால், அது வீழ்ச்சியை நோக்கிய தொடரி என்பதை இருதரப்பும் உணராமை கவலைக்குரியது.  

 யாழ்ப்பாணம் மிக மோசமான ஒரு காலப்பகுதிக்குள் நுழைந்திருந்தது. மார்ச் 28ஆம் திகதி, சுன்னாகம் சந்தைப் படுகொலைகள், இலங்கை ஆயுதப்படைகளால் நடத்தப்பட்டிருந்த நிலையில், 1984 ஏப்ரல் ஒன்பதாம் திகதி, விடுதலைப் புலிகள் அமைப்பு, யாழ்ப்பாணத்தில் இராணுவ ட்ரக் வாகனம் ஒன்றின் மீது கார்க் குண்டுத்தாக்குதல் நடத்தியது.   

இதைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் முழுவதும் மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டது. யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதுடன், அரச படைகள் யாழ். நகரெங்கும் வன்முறை வெறியாட்டத்தை முன்னெடுத்தன. அரச படைகளின் இந்த வெறியாட்டத்தில் கார், பஸ் உள்ளிட்ட பல வாகனங்கள், பல்வேறு கட்டடங்கள் என்பன பெரும் சேதத்தைச் சந்தித்தன.   

அரச படைகளின் தாக்குதலில் யாழ். அடைக்கலமாதா தேவாலயமும் சேதமடைந்தது. இது மக்களிடையே கடும் ஆத்திரத்தை உருவாக்குவதாக அமைந்தது. இந்தத் தாக்குதலைக் கண்டித்து, பொதுமக்கள் பலரும் வீதியிலிறங்கி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.   

அரச படைகளின் இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து, யாழ். நகரில் ஆரியகுளம் சந்திக்கருகில் அமைந்துள்ள நாகவிகாரை மீது, காடையர் குழுவொன்று தாக்குதலொன்றை நடத்தியது. இந்தத் தாக்குதலில் நாகவிகாரை பெருஞ் சேதத்தைச் சந்தித்தது. தேவாலயம் மீதான அரச படைகளின் தாக்குதலுக்கான பதிலடி இது என்று ரீ.சபாரட்ணம், கே.ரீ.ராஜசிங்கம் உள்ளிட்ட சிலர் இந்தச் சம்பவம் பற்றிக் கருத்துரைக்கிறார்கள். இரு தவறுகள், ஒரு சரியை ஒருபோதும் உருவாக்காது. இந்தத் தாக்குதல்களின் விளைவு என்பது இரட்டை அழிவேயாகும்.   

ஜனநாயகப் பாதையா, வன்முறைப் பாதையா?

நாகவிகாரை மீது நடத்தப்பட்ட தாக்குதல், ஜனாதிபதி ஜே.ஆருக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் பெரும் அதிர்ச்சியைத் தருவதாக இருந்தது. அதுபோலவே, இது ஜே.ஆரின் தந்திரோபாயத்தை வலுவாக முன்னெடுக்கும் வாய்ப்பையும் அவருக்கு உருவாக்கித் தந்தது என்பதையும் மறுக்க முடியாது.   

இந்த இனப்பிரச்சினையை, இராணுவ ரீதியாக எதிர்கொண்டு அழிக்க வேண்டுமானால், தமிழ்த் தரப்பின் ஜனநாயக தலைமைகள் ஓரங்கட்டப்பட்டு, ஆயுதத் தலைமைகள் முன்னணிக்கு வர வேண்டும். அது நடந்துகொண்டிருந்தது. அதை ஊக்குவிக்கும் சில செயற்பாடுகளை, ஜே.ஆர் மற்றும் அவரது அரசாங்கத்தினரின் பேச்சு மற்றும் செயற்பாடுகளில் நாம் அவதானிக்கக் கூடியதாகவிருந்தது.   

ஜே.ஆரும், அத்துலத்முதலியும் தொடர்ந்து, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி பலமிழந்துவிட்டது; அவர்களுடன் பேசுவதில் பயனில்லை; ஏனெனில் தமிழ் மக்களை இப்போது அவர்கள் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள் என்று சொல்ல முடியாது; அவர்களால் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை; அவர்கள் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு அச்சப்படுகிறார்கள் போன்ற கருத்துகளை ஊடகங்களில் பகிர்ந்து வந்தார்கள்.   

அத்தோடு அரசாங்கம் ஒருபோதும் பயங்கரவாதிகளோடு பேச்சுவார்த்தையில் ஈடுபடாது என்றும் அத்துலத்முதலி ஓரிடத்தில் குறிப்பிட்டிருந்தார். இதில் இரண்டு விடயம் கவனிக்கத்தக்கது. தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி - அதாவது தமிழ் மக்களின் ஜனநாயகத் தலைமைகளோடு பேசுவதில் பயனில்லை என்று சொன்னது ஒன்று; மற்றையது, பயங்கரவாதிகளோடு பேச்சுவார்த்தை இல்லை என்று சொன்னது. 

இதன் சாரம் ஜே.ஆர் அரசாங்கத்தின் பேச்சுவார்த்தை மூலமான தீர்வுக்கு எதிரான நிலைப்பாட்டைத்தான் கோடிட்டுக்காட்டி நிற்கிறது.   

தமிழர்கள் பிரிவினைவாதிகளா? 

தமிழ் மக்கள் பிரிவினைவாதிகள், அவர்கள் தனிநாடு கோரியவர்கள், 1977 பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாகத் தனிநாட்டுக்கான மக்களாணையை வழங்கி இருந்தார்கள் என்ற கற்பிதங்கள் இங்கு பலமாகக் கட்டியெழுப்பப்பட்டுள்ளன. ஆனால் உண்மை இந்த கற்பிதங்களிலிருந்து சற்றே தள்ளிநிற்பதை நாம் காணக்கூடியதாக உள்ளது.   

தமிழ் மக்களின் ஜனநாயகத் தலைமைகள் 1976 வட்டுக்கோட்டை மாநாட்டிலே தனிநாடு தான் தமிழ் மக்களுக்கு ஏற்ற தீர்வு என்று “வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை” நிறைவேற்றியது உண்மை. 1977 பொதுத் தேர்தலில் “வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை” முன்னிறுத்தி தமிழ் மக்களிடம் மக்களாணை பெற்றதும் உண்மை.   

ஆனால், அதைத் தொடர்ந்து யதார்த்தத்தில், தனிநாட்டுக்கானதோ, பிரிவினைக்கானதோ ஏதுவான எந்தவோர் அடிப்படை நடவடிக்கைகளையும் அவை முன்னெடுத்திருக்கவில்லை என்பதும் உண்மை. 

குறிப்பாகத் தனிநாட்டுக்கான அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்குவோம் என்று 1977 பொதுத்தேர்தலின் போது அறிவித்திருந்ததைக் கூட, அவை முன்னெடுக்கவில்லை.   

அவை, இணக்கப்பாடு மிக்க தீர்வுக்கு தயாராகவே இருந்தன. அதற்கான கோரிக்கைகளையும் அழுத்தத்தையும் அவை தொடர்ந்தும் அரசாங்கத்திடம் முன்வைத்து வந்தன. தனிநாடு என்பது ஜனநாயகத் தமிழ்த் தலைமைகளின் பகட்டாரவாரப் பேச்சுகளில் மட்டுமே இருந்ததேயன்றி, அவர்களில் செயல்களில் அது எங்கும் இடம்பிடித்திருக்கவில்லை.   

ஆங்காங்கே தமிழ் இளைஞர்களிடம் தமிழ்த் தலைமைகளின் இந்தப் போக்கு தொடர்பில் அதிருப்தி காணப்பட்டாலும், பெரும்பான்மைத் தமிழர்கள் இந்தப் போக்கு எதிர்த்தமைக்கான சான்றுகள் இல்லை. ஆனால், 1983இல் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட “கறுப்பு ஜூலை” இன அழிப்புத் தாக்குதல்கள் ஒரு திருப்புமுனையாக அமைந்தன.  

 அதன் பின்னர், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் செல்வாக்கு தமிழ் மக்களிடையே ஓங்கத்தொடங்கியது. இப்போது கூட, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களைத் தடுக்க அரசாங்கம் விரும்பியிருந்தால், ஜனநாயக வழியிலான சமரசத் தீர்வொன்றுக்கு தயாராக இருந்த தமிழ்த் தலைமைகளை அரவணைத்து இந்தப் பிரச்சினையைத் தீர்த்திருக்கலாம். மாறாக, ஜனநாயகத் தமிழ்த் தலைமைகள் அரசியல் அரங்கிலிருந்து ஓரங்கட்டப்பட்டு, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் தமிழ் மக்களிடையே முக்கியத்துவம் பெற்றதில் ஜே.ஆர் அரசாங்கத்தின் பங்கும் இருந்திருக்கிறது என்பதுதான் யதார்த்தம்.   

மீண்டும் கூடியது சர்வகட்சி மாநாடு

தமிழ் ஜனநாயகத் தலைமைகள் தமது நாடாளுமன்ற ஆசனங்களை இழந்திருந்தன. தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்குக் குறைந்து கொண்டிருந்தது. சிங்கள மக்கள் மத்தியில் இவர்கள் பிரிவினைவாதிகள் என்ற தோற்றப்பாடு வலுவாகக் கட்டியெழுப்பப்பட்டிருந்தது.   

இது மிக மோசமான கையறு நிலை. வன்முறை நிறைந்ததாக அமைந்த ஏப்ரல், முடிவுக்கு வந்து, மே மாதம் வந்தபோது, ஜே.ஆர் அரசாங்கத்தின் நிலைப்பாடு அமிர்தலிங்கம் உள்ளிட்டோருக்கு மிகத் தெளிவாகப் புரிந்திருந்தது.  

1984 மே ஒன்பதாம் திகதி, ஏழு வார கால ஒத்திவைப்புக்குப் பிறகு, சர்வகட்சி மாநாடு கூடியபோது, அதில் உரையாற்றிய அமிர்தலிங்கம், தன்னுடைய ஆதங்கத்தைப் பதிவு செய்திருந்தார்.   

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியோடு பேசுவதால் பயனில்லை என்று ஜே.ஆர் சொன்ன கருத்தை மனதில் வைத்து, “எம்மை இந்தப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தவர்களே, இப்போது எமது தகுதியைச் சவாலுக்கு உட்படுத்துவதானது, பேச்சுவார்த்தை மூலமான அரசியல் தீர்வொன்றை எட்டும் எண்ணமேதும் அவர்களுக்கு இல்லை என்பதையே வெளிப்படுத்தி நிற்கிறது” என்று குறிப்பிட்டார்.   

ஜே.ஆர் தன்னுடைய தந்திரோபாயத்தை முன்னெடுப்பதில் மிகத் தெளிவாக இருந்தார். ஏற்கெனவே சர்வகட்சி மாநாட்டில் இரண்டு குழுக்கள், பிறகு ஓர் இணைந்த குழு என்று அமைத்து ஆராய்ந்தவர், மே ஒன்பதாம் திகதி மீண்டும் சர்வகட்சி மாநாட்டில் இரண்டு குழுக்கள் அமைப்பதாக அறிவித்தார்.   

முதலாவதாக, அதிகாரப்பகிர்வின் கட்டமைப்பு: அதிகாரங்கள், செயற்பாடு ஆகியவற்றை வரைவதற்கான பிரதமர் ரணசிங்க பிரேமதாஸ தலைமையிலான அதிகாரப் பகிர்வுக் குழு. 

அடுத்ததாக கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் மொழி உரிமைகளை அமுலுப்படுத்தல் தொடர்பில் சமவாய்ப்புகளை ஏற்படுத்தத் தேவையாக நடவடிக்கைகள் பற்றி ஆராய அமைச்சர் கே.டபிள்யு. தேவநாயகம் தலைமையில் குறைகள் ஆராயும் குழு.  

இந்தக் குழுக்கள் மீதான நம்பிக்கையை இழந்திருந்ததால் போலும், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸும், கம்யூனிஸ்ட் கட்சியும் இந்தக் குழுக்களில் பங்குபற்ற மறுத்துவிட்டன. ஆயினும், மீண்டும் சர்வகட்சி மாநாட்டின் பிரதான கூட்டத்தில் கலந்துகொண்டு, இந்தக் குழுக்களின் அறிக்கைகளை ஆராய்ந்து கருத்தில் கொள்வதாக அவை அறிவித்தன.   

(அடுத்த திங்கட்கி​ழமை தொடரும்) 

Tamil Mirror

Comment (0) Hits: 425

காணி விடுவிப்புக்காக நன்றி சொல்லும் மனநிலை, ஓர் அரசியல் தோல்வி

வலிகாமம் வடக்கில், இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள பொது மக்களின் காணிகளில் ஒரு தொகுதி (638 ஏக்கர்), கடந்த வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டது.   

கால்நூற்றாண்டுகளுக்கும் மேலாக முகாம்களிலும், அடுத்தவர் வீடுகளிலும் அகதி வாழ்க்கைக்கு வலிந்து தள்ளப்பட்ட மக்களுக்கு, தமது சொந்த வீடு, வளவைக் காணுதல் என்பது பெரும் கனவு. யாராவது, எப்படியாவது தங்களது காணிகளை மீட்டுத்தந்துவிட மாட்டார்களா? என்று ஒவ்வொரு நாளும் ஏங்கித் தவிக்கிறார்கள்; போராடிச் சாய்கிறார்கள்.   

 அப்படியான நிலையில், இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்படும் தமது காணிகளை நோக்கிச் செல்லும் மக்களிடம் மகிழ்வு, ஆர்ப்பரிப்பு, ஏக்கம், ஏமாற்றம் என்கிற எல்லா மனநிலையும் கலந்தே இருக்கும்.  

 கடந்த வெள்ளிக்கிழமையும் அவ்வாறான உணர்ச்சி வெளிப்பாடுகளை, மக்கள் வெளிப்படுத்தினார்கள்.  
அன்றைக்கு, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோரின் படங்களைத் தன்னுடலில் கட்டிக்கொண்டு, காவடி நேர்த்திக்கடனை நிறைவேற்றிச் செல்லும் ஒருவர், ஊடகங்களின் கமெராகளில் பதிவானார். சமூக ஊடகங்களில் அதிகமாகப் பகிரப்பட்டார்; விமர்சிக்கப்பட்டார். அவரின், பூர்வீகம் தொடர்பான ஆய்வுகளெல்லாம் செய்து முடிக்கப்பட்டது.   

 அந்தப் படத்தைப் பார்த்ததும், இராணுவ வற்புறுத்தலின் பேரில், குறித்த நபர் படங்களைத் தன்னுடலில் கட்டிக் கொண்டு சென்றாரா, அல்லது உண்மையிலேயே சுயவிருப்பின் பேரில்தான் கட்டிக்கொண்டாரா? என்கிற கேள்வி எழுந்தது.   

இராணுவ வற்புறுத்தலின் பேரில்தான் அவர் அவ்வாறு நடந்து கொண்டிருந்தார் என்றால், அது தொடர்பில் அந்த நடுத்தர வயது நபரை, பெரிதாகக் குற்றஞ்சொல்வதற்கு ஒன்றுமில்லை.   

ஏனெனில், இலங்கை இராணுவமும் தேசியப் புலனாய்வுத் தரப்பும் எவ்வாறான அழுத்தங்களையும் அச்சுறுத்தல்களையும் நாளாந்தம் தமிழ் மக்கள் மீது வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது எல்லோருக்கும் தெரியும். அதன் ஒரு பகுதியாகவே, அதையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு எதிராகப் போராட வேண்டும்.   

 ஆனால், அவர் தன்னுடைய சுய விருப்பின் பேரில்தான் ஜனாதிபதி, பிரதமர், மற்றும் இராணுவத் தளபதி ஆகியோரின் படங்களைத் தன்னுடலில் கட்டிச் சுமந்தார் என்றால், அது குறித்துக் கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் பல உண்டு.  

 ஏனெனில், அது தனிநபர் விருப்பு, வெறுப்பு சார்ந்தது மட்டுமல்ல. அது, அரசியலோடும், எதிர்காலத்தோடும் சம்பந்தப்பட்டது.   

ஒருவரின் பூர்விகத்தை ஆய்வு செய்து பழித்துவிட்டு, ஆத்திரங்களைத் தீர்த்துக் கொள்வதால், பிரச்சினைகள் தீர்ந்து போவதில்லை. உண்மையில், அந்த நடுத்தர வயது மனிதரின் மனநிலையைப் பற்றி ஆராய வேண்டும்.   

 குறித்த படத்தைப் பற்றிய உரையாடலின் போது, செயற்பாட்டாளர் ஒருவர், முல்லைத்தீவில் 2014ஆம் ஆண்டு, தான் சந்தித்த அனுபவமொன்றை இந்தப் பத்தியாளரிடம் கூறினார்.   

 இறுதி மோதலின் போது, முள்ளிவாய்க்கால் வரை சென்று, காயம் பட்டு முகாமில் இருந்து மீண்ட ஒருவர், தன்னுடைய ஏழு வயது மகன், இராணுவம் நடத்திய நடனப் போட்டியில், பரிசு பெற்றதைப் பெருமையாகக் கூறினாராம்.   

இறுதி யுத்தத்தின் கோர வடுவை, தன்னுடலில் தாங்கியிருக்கின்ற அவர், அதற்குக் காரணமான இராணுவத்திடமே மகன் பரிசு பெற்றதை, அங்கிகாரமாகக் கருதுகிறார் என்றால், அதற்கான சூழல் ஏன் உருவானது? அதற்கான காரணங்கள் என்ன? என்றெல்லாம் ஆராயப்பட வேண்டும் என்றார்.   

 தமிழ்த் தேசியப் போராட்டம், தமிழர் தேசத்தையும் தமிழ் மக்களையும் அதிகாரங்களோடு தக்க வைப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது. அரசியல் உரிமைகளும் அதுசார் அதிகாரமுமே ஒரு சமூகத்தின் நீட்சிக்கும் முன்னேற்றத்துக்குமான அடிப்படை. அதிலிருந்துதான், அடுத்த கட்டங்கள் சார்ந்து சிந்திக்கவே முடியும்.   

ஆனால், போராட்ட வடிவமும் அதன் போக்கும் எல்லாக் காலத்திலும் ஒரே மாதிரியான தோரணையோடு இருக்க வேண்டியதில்லை. அது காலத்தையும் சூழலையும் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்; சந்தர்ப்பங்களைச் சரியாகக் கையாளும் சமயோசிதத்தை வளர்த்துக் கொண்டிருக்க வேண்டும். 

இல்லையென்றால், போராட்டங்கள் மீது, யாருக்காகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றதோ, அந்த மக்களே நம்பிக்கை இழப்பார்கள்.   

அவ்வாறான கட்டத்தை நோக்கி, ஈழத்தமிழர் உரிமை மீட்புப் போராட்டமும் தமிழ் மக்களும் குறிப்பிட்டளவு நகர்ந்துவிட்டார்களோ என்று அஞ்ச வேண்டியிருக்கின்றது.   

 கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், வடக்கு- கிழக்கு பூராவும் யாரும் எதிர்பார்க்காத அளவு, தென்னிலங்கைக் கட்சிகள், தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றிருக்கின்றன. குறிப்பாக, மஹிந்த ராஜபக்ஷ தலைமையேற்றிருக்கின்ற ஒன்றிணைந்த எதிரணியே வெற்றிகளைப் பெற்றிருக்கின்றது.  

 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில், வவுனியா செட்டிக்குளம் பிரதேச சபை உறுப்பினராகத் தெரிவாகியிருக்கும் உறுப்பினர் ஒருவர், இந்தப் பத்தியாளரிடம் பேசும் போது கூறினார். “தேர்தலில் நிற்குமாறு பல கட்சிகளும் என்னிடம் கோரின. ஆனால், நான் (மத்தியை) ஆளும் கட்சியிலேயே நிற்க விரும்பினேன். ஏனென்றால், தேர்தலில் வென்றபின் மக்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். தமிழ்க் கட்சிகளில் நின்றால் அவற்றைச் செய்ய முடியாது. சும்மா பெயருக்கு உறுப்பினராகவே இருக்க முடியும்” என்றார்.   

 முள்ளிவாய்க்காலுக்குப் பின்னராக கடந்த ஒன்பது வருடங்களில், பல கட்டங்களைத் தமிழ் மக்கள் கண்டுவிட்டார்கள். போராட்டத்தின் மீதான பற்றுறுதியை மக்கள் தொடர்ந்தும் வெளிப்படுத்தி வந்தாலும், நாளாந்த வாழ்க்கை நெருக்கடிகள் போராட்டத்தின் மீதான பற்றுறுதியையும் தாண்டியதாக இருக்கும்போது, சிக்கல் உருவாகின்றது.   

அந்தச் சிக்கலைத் தீர்த்து வைப்பதற்கான உத்திகளையும் மக்கள் தேட வேண்டியேற்படுகின்றது. தமிழ்த் தேசியப் போராட்ட வடிவம், தொடர்வதிலுள்ள குறைபாடுகள், ஒவ்வொரு தடவையும் மேலெழும்போது, அதை ஆராயாமல், உணர்ச்சி மேலிடல்களை மாத்திரம், பேசிக் கடந்துவிட முடியும் என்பதே, தமிழ்த் தேசியத்தின் வேர்களை மெல்ல மெல்ல அறுத்துக் கொண்டிருக்கின்றது.   

ஏனெனெில், தமிழ்த் தேசியப் போராட்டங்களை, இதுவரையும் தூக்கிச் சுமக்கிறவர்கள் மக்களே; அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், தலைவர்களும் அதை வழிப்படுத்தி இருக்கிறார்கள்.   அவ்வளவுதான்!
மக்களின் ஒருங்கிணைவும் ஓர்மமும் இல்லையென்றால், தமிழ்த் தேசியப் போராட்டங்கள் இவ்வளவு காலமும் நீடித்திருக்கவே வாய்ப்பில்லை. அப்படியான நிலையில், மக்களின் ஒருங்கிணைவு, ஓர்மத்தைத் தாக்கும் அக- புறக் காரணிகளை ஆராய வேண்டும். அவற்றை, ஆராயாமல் தமிழ்த் தேசியத்தின் தொடர்ச்சி என்பது கேள்விக்குரியதுதான்.   

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் பேரவை என்று எந்தத் தரப்பாக இருந்தாலும், இவர்கள் மீதான நம்பிக்கையிழப்பை மக்கள் வெளிக்காட்ட ஆரம்பித்திருப்பது என்பது, அரசியல் தோல்வியாகவே கொள்ள வேண்டும்.   

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தமிழ்த் தேசிய வாக்குகள் கூட்டமைப்புக்கும் முன்னணிக்கும் இடையில் பகிரப்பட்டிருந்தால் அதிகமாக அலட்டிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. ஆனால், (ஈ.பி.டி.பியைத் தாண்டியும்) சுதந்திரக் கட்சிக்கும், மஹிந்த தரப்புக்கும் விழுந்திருக்கின்ற வாக்குகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. அது கிட்டத்தட்ட சண்டைக்காரர்களின் காலில் விழும் நிலை.   

 கால் நூற்றாண்டுகளுக்கு முன், தன்னுடைய சொந்த வீடு, வளவிலிருந்து விரட்டியடித்த இராணுவத்துக்கே, காணி விடுவிப்புக்கான நன்றி சொல்லும் மனநிலை உருவாகுமாக இருந்தால், அதுவும் தமிழ்த் தேசிய அரசியலின் தோல்வியே.  

அது, எவ்வாறான நிலையை உணர்த்துகின்றது என்றால், தமிழ் அரசியல் கட்சிகள், அமைப்புகள், செயற்பாட்டாளர்கள் என்கிற தரப்புகளைத் தாண்டி, இலங்கை அரச இயந்திரமும், அதன் கூறுகளும் மக்களிடம் தாக்கம் செலுத்த வல்லவை.   

அவை, எடுக்கின்ற முடிவுகளின் பிரகாரம் மக்களை இயக்கக் கூடியவை என்கிற கட்டங்களைக் காட்டுகின்றன. இது, தொடருமாக இருந்தால், தனது உடல்களில் படங்களை ஏந்திச் செல்பவர்களின் எண்ணிக்கை, இன்னும் இன்னும் அதிகரிக்கவே செய்யும்.    

புருஜோத்தமன் தங்கமயில்

Comment (0) Hits: 1022

வடக்கு - கிழக்கில் இரு கட்சி ஜனநாயகச் சூழல்?

- புருஜோத்தமன் தங்கமயில்

“வடக்கு கிழக்கில் ஒரு கட்சி ஏகபோகம் உடைந்து, இரு கட்சித் தடம் ஒன்று உருவாகியிருக்கின்றது. இரு கட்சி ஜனநாயகத்தை நோக்கி, தமிழ்ப் பரப்பு நகர்கிறது” என்று அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் குறிப்பிட்டிருக்கின்றார். யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற சிரேஷ்ட அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய ‘பூகோளவாதம்- புதிய தேசியவாதம்’ எனும் நூல் வெளியீட்டு விழாவில், தலைமையுரை ஆற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.   

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டே, நிலாந்தனின் கருத்து அமைந்திருந்தது. வட்டாரத் தேர்தல் முறையொன்று கொண்டிருக்கின்ற அம்சங்களையும் தேவைகளையும் அவர் கருத்தில் எடுத்துப் பேசியிருந்தாலும், ‘இரு கட்சித் தடம்’ என்கிற விடயத்தை அவர், என்ன கோணத்தில் முன்மொழிந்திருந்தார் என்கிற கேள்வி எழுகின்றது.   

மஹிந்த ராஜபக்ஷவின் எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராக, பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை முன்னிறுத்தி, 2015இல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய கட்சிகளுக்கும், அதன் பங்காளிகளுக்கும், இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள், பலத்த ஏமாற்றத்தை அளித்துள்ளன. 

தெற்கில் ஐக்கிய தேசியக் கட்சியும் மைத்திரி தரப்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் படுதோல்வியைச் சந்தித்திருக்கின்ற நிலையில், வடக்கு - கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கியிலிருந்து, சுமார் இரண்டு இலட்சம் வாக்குகள் இழக்கப்பட்டிருக்கின்றன.   

தேர்தல் முடிவுகளின் பிரகாரம், கூட்டமைப்பின் பின்னடைவு என்பது வெளிப்படையானது. வடக்கு - கிழக்கில் அதிக சபைகளில் வெற்றிபெற்றிருந்தாலும், அறுதிப்பெரும்பான்மைப் பெற்று ஆட்சியமைக்கும் சூழலைப் பெற முடியவில்லை என்பது தோல்வியாகக் கொள்ளப்பட வேண்டியதுதான். 

ஆனால், கூட்டமைப்பின் பின்னடைவை, தமிழ்த் தேசிய அரசியலில், இரு கட்சி ஜனநாயகத்துக்கான ஆரோக்கியமான கட்டமாக உணர முடியுமா? உண்மையில் அதற்கான அம்சங்களைத் தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டிருக்கின்றனவா?  

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் (2012), வடக்கு மாகாண சபைத் தேர்தல் (2013), பொதுத் தேர்தல் (2015) ஆகியவற்றில், கூட்டமைப்பு பெற்ற வாக்குகள், தமிழ்த் தேசிய அரசியலில் ஏகபிரதிநிதிகள் என்கிற அங்கீகாரத்தை அண்மித்தவை. 

அதுவும், கடந்த பொதுத் தேர்தலில், கூட்டமைப்பு பெற்ற வெற்றி என்பது, எதிர்பார்க்கப்பட்ட அளவையும் மீறியது. மஹிந்த ராஜபக்ச காலம் வரையில், கூட்டமைப்பை எதிர்ப்பு அரசியலின் வடிவமாக முன்னிறுத்திய தமிழ் மக்கள், ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரான காலத்தில், (ஒரு வகையில்) தமது ஆளும் கட்சியாக உணரத் தொடங்கினார்கள். மத்திய அரசாங்கத்தோடு கூட்டமைப்பு, பெரும் இணக்கநிலை அரசியலைக் கடைப்பிடித்தமையும் அதற்குக் காரணமாகும்.   

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த தரப்பாகவும், யுத்தத்தின் கோர வடுக்களைத் தாங்கி நிற்கின்ற தரப்பாகவும் தமிழ் மக்களின் அரசியலும் சமூக பொருளாதாரத் தேவைகளும் எந்தவித விட்டுக்கொடுப்புகளுக்கும் உள்ளாக முடியாதவை. 

அரசியல் உரிமைகள் மற்றும் நீதிக்கான கோரிக்கைகள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்ற அதே தருணத்தில், மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளும் நாளுக்கு நாள் அதிகரித்தே வந்தன. அரசியல் தீர்வொன்றைப் பெறுவது சார்ந்து, கூட்டமைப்பு எடுத்து வைத்த அடிகள், அதன் பிடரியில் ஓங்கி அறைய, வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க முடியாத நிலை என்பது, முகத்தில் குத்தியது. இந்த நிலைகள்தான், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்க ஆரம்பித்தன.   

 யாழ்ப்பாணத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பெற்ற வாக்குகளின் அளவுக்கும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி பெற்ற வாக்குகளின் அளவுக்கும் இடையில் சில ஆயிரங்களே வித்தியாசம். 

ஆனால், கடந்த பொதுத் தேர்தலோடு ஒப்பு நோக்கும் போது, முன்னணி பெற்ற வாக்குகள் ஐந்து மடங்கினால் அதிகரித்திருக்கின்றன. அந்த ஐந்து மடங்கு வாக்குகளில், கூட்டமைப்பு மீதான அதிருப்தி வாக்குகள் மற்றும் முன்னணி மீதான நம்பிக்கை வாக்குகளின் வீதம் எவ்வளவு என்பதுதான் எடுத்து நோக்கப்பட வேண்டியது.   

யாழ். மாநகர சபைக்கான தேர்தலில் தமிழரசுக் கட்சியின் உள்ளகக் குழப்பம், முன்னணியை நோக்கி எவ்வளவு வாக்குகளைக் கொண்டுவந்து சேர்ந்தது, சாவகச்சேரி நகர சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் அருந்தவபாலன் எவ்வளவு வாக்குகளை முன்னணியின் பக்கத்துக்குக் கொண்டு வந்து சேர்ந்தார் என்பதெல்லாம் கருத்தில் எடுக்கப்பட வேண்டியவை. அத்தோடு, வட்டாரத் தேர்தல் முறையொன்று, கொண்டிருக்கின்ற வாக்களிப்பின் அம்சங்களும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியவை.   

யாழ். தேர்தல் மாவட்டத்தில், இரண்டாமிடம் பெற்ற முன்னணி, வடக்கு - கிழக்கின் ஏனைய மாவட்டங்களில் எத்தனையாவது இடத்தைப் பிடித்தது என்கிற விடயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டியது.

குறிப்பாக, யாழ் மாவட்டத்திலிருந்து அடுத்திருக்கின்ற கிளிநொச்சி மாவட்டத்திலேயே, இரண்டாமிடம் என்கிற நிலையை முன்னணியால் அடைய முடியாத போது, ஆய்வாளர் நிலாந்தனின் இரு கட்சி ஜனநாயத்துக்கான வாய்ப்புகள் பற்றிய உரையாடல்களுக்கு அது வலுச் சேர்ப்பதாகக் கொள்ள முடியாது.   

இன்னொரு பக்கம், முன்னணி பெற்ற வாக்குகளை, கூட்டமைப்பின் அதிருப்தியாளர்களை ஒருங்கிணைப்பதற்கான கருவியாகக் கொள்ள முடியும் என்கிற ரீதியில் நோக்கினாலும், அதன் அடுத்த கட்டங்களை எவ்வாறு வடிவமைக்கப்போகிறார்கள்?

 ஏனெனில், வட்டார முறைத் தேர்தலிலிருந்து அரசாங்கம் பின்வாங்கி, பழைய தேர்தல் முறைக்குச் செல்லும் போது, கிராமங்கள், பிரதேசங்கள் சார்ந்த வாக்கு வங்கி உடைபடும். அது, முன்னணி எங்கெல்லாம் வாக்குகளைப் பெற்றதோ அதிலும் பின்னடைவை ஏற்படுத்தலாம். அத்தோடு, தமிழரசுக் கட்சியின் உள்ளக குழப்பங்கள் தீர்க்கப்படும் போது, அந்த வாக்குகளும் மீண்டும் கூட்டமைப்பின் பக்கமே வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.

குறிப்பாக, விகிதாசாரத் தேர்தல் முறையில், அதிக வாக்குகளைப் பெறும் கட்சியின் பக்கம் நிற்பதே, தமது வெற்றியை உறுதிப்படுத்தும் என்கிற நிலையில், மற்றக் கட்சிகளை நோக்கிய தமது ஆர்வத்தை வெளியிட்டவர்கள் பின்வாங்குவார்கள். அது, அவர்களின் ஆதரவாளர்களையும் பின்வாங்கச் செய்யும்.   

அப்படியான நிலையில், முன்னணியை முன்னிறுத்தி மாத்திரம் பலமான இன்னோர் அணி உருவாக முடியாது. மாறாக, கூட்டமைப்பிலிருந்து வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும், தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட அனந்தி சசிதரனும் முன்னணியை நோக்கி வந்தால், அவர்களோடு சுரேஷ் பிரேமச்சந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எப் தரப்பும் இணைந்தால், ஓர் அதிர்வை உண்டு பண்ணக் கூடிய அணியை உருவாக்கலாம். 

ஆனாலும், அது, யாழ். மாவட்டத்தைத் தாண்டி, அதிர்வை உண்டு பண்ணுமா என்பதே பெரும் கேள்வி? அந்தக் கேள்விக்கான பதில்கள் தொடர்ந்தும் ஏமாற்றமளிக்கின்ற நிலையிலேயே, கூட்டமைப்புக்கு எதிராகத் தரப்புகள் இன்றுவரை ஓரணியில் இணைய முடியாமல் போயிருக்கின்றன.   

 விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டிருந்த சூழலில், அவரை நோக்கி, தீர்க்கமான முடிவை எடுக்குமாறு வலியுறுத்துவதற்காகவே நிலாந்தன், இரு கட்சி ஜனநாயகத்துக்கான சூழல் வாய்த்திருக்கின்றது என்று உரையாற்றியிருப்பதாக இன்னோர் அரசியல் ஆய்வாளர் இந்தப் பத்தியாளரிடம் கூறினார். இந்தப் பத்தியாளரும், அந்தக் கருத்தோடு குறிப்பிட்டளவு இணங்கினாலும், கடந்த மூன்று வருடங்களில் விக்னேஸ்வரனை நோக்கி, தீர்க்கமான முடிவுகளை எடுக்குமாறு, தமிழ் மக்கள் பேரவைக்காரர்களும், முன்னணியும், ஊடகங்களும், அரசியல் பத்தியாளர்களும் வலியுறுத்திச் சோர்ந்து போன நிலையில், நிலாந்தனின் முயற்சி பலனளிக்குமா என்று நோக்க வேண்டியிருக்கின்றது.   

 விக்ரமாதித்தன்- வேதாளம் கதையாக நீளாமல், விக்னேஸ்வரன் தீர்க்கமான முடிவெடுக்கும் பட்சத்தில், யாழ். அரசியல் அரங்கு இன்னும் சற்று அதிர்வுகளைச் சந்திக்கலாம். 

அத்தோடு, அந்த அதிர்வை யாழ்ப்பாணத்திலிருந்து அடுத்த கட்டங்களை நோக்கி, ஊடுகடத்துவதிலுமே இரு கட்சி ஜனநாயகத்துக்கான உண்மையான கட்டங்கள் தங்கியிருக்கின்றது. மாறாக, யாழ் மாவட்டத்தின் கிராமங்களுக்குள்ளேயே செல்ல முடியாத அரசியல் நிலைப்பாடு- அதிர்வொன்றைத் தமிழ்த் தேசிய அரசியலின் பெருமாற்றமாக அடையாளப்படுத்துவது என்பது, உண்மையில் ஆரோக்கியமானதா என்கிற கேள்வியும் எழுகின்றது.  

தமிழ்த் தேசிய அரசியலில் இரு கட்சி ஜனநாயகத்துக்கான கட்டம் என்பது, நல்லூரில் மாத்திரமல்ல, ஊர்காவற்துறையிலும் இயக்கச்சியிலும் முள்ளிவாய்க்காலிலும் நெடுங்கேணியிலும் திருகோணமலையிலும் செங்கல்லடியிலும் அம்பாறையிலும் உணரப்பட வேண்டும்.    

Comment (0) Hits: 434

ஈழத்தில் ஒரு கீழடி : திருக்கரசை

திருக்கரசை மண்ணை, கிளிவெட்டி கிராமத்திலிருந்து பத்து மைல் தூரத்திலும் கங்குவேலி கிராமத்திலிருந்து இரண்டு மைல் தூரத்திலும் மாவலி கங்கையின் கரையோரம் வளமான காடுகளுக்குள் பல நூற்றாண்டுகள் மறைந்து போன நாகரிக தொட்டிலாக நாம் அடையாளம் காண முடியும்.

ஈழத் தமிழர்களின் தொன்மை நாகரிகத்தின் முடிச்சு அவிழும் இடமாக அமைவதற்கான எல்லா ஆதாரங்களும் இங்கு புதைந்து கிடக்கின்றன.

30705063 1737458209633517 1519327060206918831 n

திருக்கரசை புராணம் இந்த நிலத்தை இப்படி வர்ணிக்கிறது;

"காடெலாங் கரிநல் யானை கரையெலாம் பவளக் குப்பை
நாடெலா மிரத்ன ராசி நகரெலாம் நல்லோர் சங்கம்
வீடெலாஞ் செம்பொற் கூரை வெளியெலாஞ் செந்நெற் குன்றங்
கோடெலாம் மஞ்ஞை யீட்டம் குழியெலாங் கழுநீர்ப் போது. 13

காவெலாம் மதன பாணங் கரையெலாஞ் சங்கச்சங்கம் 
பூவெலாம் வண்டின் சாலம் புறவெலாம் நிரையி னீட்டம்
மாவெலா மன்னக் கூட்டம் மலையெலாங் காள மேகம்
நாவெலா மமிர்த கீத நதியெலா முதுநீர்த் தீர்த்தம். 14

தண்ணமர் சாலி முத்தும் தடங்கட லிப்பி முத்தும்
வண்ணவொண் பணில முத்தும் வரையறா வோல முத்தும்
கண்ணமர் கரும்பின் முத்துங் ககனமஞ் சீன்ற முத்தும்
வெண்ணில வில்லாப் போது மிகுநிலாக் கொழிக்கு மன்றே. 15

பணிலம்வெண் டிரையி னார்ப்பப் பவளமுந் தவள முத்தும்
மணிகளுஞ் சாந்தும் பூவும் மாலையும் பிறவும் வேய்ந்தும்
திணிமதிக் குடைக வித்துத் திரைக்குழாங் கவரி காட்ட 
அணிமணி வீதி தோறு மாழியு முலாவு மாமால். 16

கொஞ்சிய கிள்ளை மென்சொற் கோதையர் சிலம்பி னார்பும்
வஞ்சியின் காஞ்சி யார்ப்பும் வாயறாத் தமிழி னார்ப்பும்
விஞ்சிய மள்ள ரார்ப்பும் விழாவெழு முழாவி னார்ப்பும்
அஞ்சிறை வண்டி னார்ப்பு மன்றியோ ரார்ப்பு மின்றால். 17

தெளிவுறு கிரணக் கற்றைச் செம்மணிப் பத்தி சேர்ந்து
குளிர்புனல் நதிக ளெல்லாங் குருதியி னாறு போலு
மொளிர்தரு மிப்பி யீன்ற வொண்ணிறத் தவள முத்தின்
வெளிநிலா வீங்கி யுப்பு வேலைபா லாழி யொக்கும். 18

ஊட்டு செஞ்சுடர் மணியினைத் தடியென வுகந்து 
காட்டுத் தம்மிரு பதங்காளற் கவர்கின்ற கங்கந்
தோட்டுத் துண்டங்கொண் டுண்பதற் காமெனத் துணிந்து
கூட்டில் வைத்தன பறந்தன வாதரங் கூர்ந்து. 19

மடைகி டந்தவொள் வளவயற் றொளியறா வரம்பின்
கிடைகி டந்தசங் குதவிய முத்தெலாங் கண்டு
புடைகி டந்ததம் மண்டங்க டம்மொடு புகட்டி
யடைகி டந்தன சிறையகத் தடக்கியே யன்னம். 20

மாறில் பாளைகண் மலரிளங் கமுகினல் வாளை
யேறு பாய்தர வயலெலா முகுவன விளங்கா
யாறு பாய்வதென் றதிசய மெனக்கரும் பாலைச்
சாறு பாய்தர வளாவன கழனியிற் சாலி. 21

இன்ன லின்றியே யிணர்த்ததா ளிப்பனை யெவைவும்
பொன்னின் வீதியுட் பொலிநிலைத் தேர்க்குழாம் போலுங்
கன்னி மார்குழல் கூந்தலங் கமுகுகள் காட்ட
வன்ன பாளைக ளளிப்பன கமுகுக ளனந்தம். 22

கண்ணி லாவிய நறுந்தொடைக் காளையர் தங்கள்
வண்ண மாதர்கள் வதனமேற் புணர்கின்ற வைரம்
மண்ணி லாவிய வெண்ணிறக் கலைமதி யெழுச்சி
யுண்ணி லாவிய புனலிடைக் கண்டபி னொழிப்பார். 23

மஞ்சின் முத்தமு மரந்தையின் மரகத மணியும் 
விஞ்சு செம்பொனும் வலவயிற் செம்மணி வேய்ந்தும்
மஞ்சொற் கம்பலை யாற்றினன் னீலமு மவிர்ந்தும்
பஞ்ச வன்னமே யிரவினும் பகலினும் பயிற்றும். 24"

ஈழத் தமிழர்கள் புராதன நாகரிகத்துக்கு சொந்தக் காரர்கள். ஈழதேசத்தின் கிழக்கின் தொல்லியல் களஞ்சியமாய் விளங்கும் கொட்டியாரம் நம் முன்னோர்கள் வழி வரலாற்றை பறைசாற்றும் பல ஆதி கால சான்றுகள் நிறைந்து காணப்படுகிறது.

சேனையூர், கட்டைபறிச்சான், சம்பூர், பள்ளிக்குடியிருப்பு, நல்லூர், மல்லிகைத்தீவு, மூதூர், இலங்கைத்துறை, கிளிவெட்டி, ஈச்சலம்பற்று, மேங்காமம், கங்குவேலி, வெருகல் என விரிந்திருக்கும் கிராமங்கள் தோறும் வரலாற்றுத் தடங்கள் விரவிக் கிடக்கின்றன.

சிந்து சமவெளி நாகரிகமாக மொகஞ்சதாரோ ஹரப்பா தமிழர் முது நாகரிகத்தை சொல்கிறது. தென்னக வைகைக் கரையில் நாம் சங்க இலக்கியத்தில் படித்த நாகரிகம் மிக்க தமிழர் வாழ்வை அண்மைக்கால கீழடி ஆய்வுகள் நிருபிக்கின்றன.

30729006 1737458212966850 1522882039959281433 n

ஈழத் தமிழர் தொன்மை வாழ்வு மாவலி நதிக்கரையில் செழிப்போடு இருந்ததற்கான சான்றுகள் நமக்கு திருக்கரசை திருமங்கலாயில் ஆழப் புதைந்த பதிவுகள் கட்டிட இடிபாடுகளாய் நம் கண் முன் திருக்கரசை புராணம் இலக்கியமாய் ஈழத் தமிழர் தொன்மை நாகரிகத்தை எடுத்தியம்பும்.

இன்று கல்வெட்டுகளும் அடித்தள கட்டுமானங்களும் திருக்கரசையில் புதைந்து கிடக்கும் அந்த நாகரிகத்தை மீட்டெடுக்க வேண்டும்.

ஒரு பெரும் பழந்தமிழர் நகரமே இங்கு புதைந்து கிடக்கிறது. இலங்கையில் பொலநறுவையும், அனுராதபுரமும் புராதன நகரங்களாக எந்த அளவுக்கு கொண்டாடப்படுகின்றனவோ அந்த அளவுக்கு திருக்கரசை நகரும் கொண்டாடப்பட வேண்டும்.

ஒரு செழிப்பு மிகு நாகரிகம் இங்கு இரண்டாயிரம் வருசங்களுக்கு முன்பிருந்தே தொடர்கிறது என்பதை ஆரம்ப ஆய்வுகள் நிருபிக்கின்றன. இன்னும் நாம் மேலும் மேலும் அகழ்வாய்வுகளை மேற்கொள்கிற போது நம் நாகரிகத்தின் பழமையயை ஆணித்தரமாக உறுதிப்படுத்த முடியும்.

உலக வரலாறு நதிக்கரைகளையும் ஆற்று படுக்கைகளையும் அண்டியே வளர்ந்திருக்கிறது. திருக்கரசை பெரும் கங்கை சமவெளியாய் நீண்டு கிடக்கிறது. மணல் படுக்கைகளாய் உறைந்து கிடக்கும் பெரு நகரம் ஒன்று மறைந்து கிடக்கும் திருக்கரசையின் பண்டைப் பண்பாட்டை நாம் மீட்டெடுக்க வேண்டும்.

கீழடி ஆய்வுகள் எப்படி இந்திய வரலாற்றின் பக்கங்களை திருப்பிப் போட்டிருக்கின்றனவோ, அதே போல திருக்கரசையிலும் அதனைச் சூழ உள்ள மகாவலி ஆற்றுப் படுக்கையிலும் அகழ்வாய்வு சரியான முறையில் மேற்கொள்ளப்படுகிற போது ஈழத் தமிழர் வரலாற்றின் புதிய அத்தியாயங்களை எழுத முடியும்.

பால.சுகுமார், மேனாள் முதன்மையர், கலை கலாசார பீடம் கிழக்குப் பல்கலைக் கழகம்

Comment (0) Hits: 578

கல்வித் துறையில் மிகப்பெரும் ஆளுமை கலாநிதி சஹாப்தீன்

‘நேற்று இருந்தவர் இன்று இல்லை’ என்பதை உலகின் பெருமை எனக் கூறுகிறார் வள்ளுவர். இது இயற்கையின் நியதி. மனிதர் தோன்றுவதும், வாழ்வதும், சிறப்பதும், இறப்பதும் என இந்த நியதி சதா நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றது. எனவே வந்து போன சகலரையும் நினைவில் நிறுத்துவது என்பது அசாதாரணம். ஆயின் சிலர் நின்று நிலைப்பர். அவர்கள் நினைவு கொள்ளப்படுவர், அவர்கள் மனித வரலாற்றின் தொடர்ச்சியில் ஏதோவொரு மையப்புள்ளியில் நின்றுகொண்டு தாம் செய்த நற்செயல் காரணமாக நினைவு கூரப்படுவர், அவ்வாறாக நின்று நிலைத்தோருள் நினைவுகூரப்பட வேண்டிய ஒரு மாமனிதர் மர்ஹூம். தேசமான்ய, கலாநிதி ஏ. எம். முஹம்மத் சஹாப்தீன் அவர்கள். (1926-2017)

இலங்கை வரலாற்றில் பொதுவாக வணிக சமூகமாக அறியப்பட்ட இஸ்லாமிய மக்களில் இருந்து, அந்த வணிக மேம்பாட்டையும் தாண்டிய இறைநேசர்கள், கல்வியாளர்கள், பொதுச் சேவையாளர்கள் எனப் பலர் மேற்கிளம்பியுள்ளனர். அவ்வாறான மேற்கிளம்பிகளில் மூத்த தலைமுறையினர் எனப் பலரை அடையாளங்காட்ட முடியும். அவர்களுள் பட்டம், பதவி, வணிகம், இறைபணி, பொதுத்தொண்டு எனப் பல துறைகளிலும் கால்பதித்து தன்னை அடையாளப்படுத்திக் கொண்டோருள் கலாநிதி சஹாப்தீன் முதன்மையானவர்.

இலங்கை மத்திய மலைநாட்டில் இஸ்லாமியர்கள் செறிந்து வாழ்கின்ற கம்பளைதான் அவரது ஜன்மபூமி. அப்துல் மஜீத், சஹாஹர்வான் மஜீத் தம்பதியினரின் மகனாக 1926 இல் பிறந்த அவர் தாம் கல்வி மீது கொண்ட தணியாத தாகத்தால் ஆரம்ப இடைநிலைக் கல்வியைக் கற்றுத் தேறி, இலங்கைப் பல்கலைக்கழகத்துள் அனுமதிக்கப்பட்டு 1949 இல் கலை மாணிப் பட்டம் பெற்றவர். அடுத்த ஆண்டில் (1950) இலங்கை நிருவாக சேவையில் (C.C.S) இன்றைய (SLAS) இணைந்து கொண்டார். 1973 இல் ஓய்வு பெறும் வரை இலங்கை அரசின் பல உயர் பதவிகளை அவர் அலங்கரித்திருக்கின்றார். ஓய்வின் பின்னரும் கடினமான உழைப்பாளியாக அவர் தம்மை நிலைநிறுத்தியுள்ளார்.

அன்னாரது செயற்பாடுகளை பின்வரும் மூன்று தளங்களில் வைத்து நோக்கமுடியும்.

(அ) அரச நிர்வாகி

(ஆ) கல்வியாளன்

(இ) இறைபற்றுடன் கூடிய சமூக சேவையாளன்.

1950 இல் அரச நிர்வாக சேவையில் இணைந்த அரச நிறுவனங்களிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் செயலாளராகவும், தலைவராகவும், பணிப்பாளராகவும் உறுப்பினராகவும் தொடர்நது செயலாற்றி வந்துள்ளார். அவர் வகித்த பதவிகளின் பட்டியல் மிக நீண்டது. பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னரும் அவர் அரச பதவிகளில் அமர்த்தப்பட்டார் என்றால் அவர் தம்மீது சுமத்தப்பட்ட பணிகளில் எவ்விதம் இயங்கியுள்ளார் என்பதைக் கணிப்பிட முடியும்.

சிறந்த நிர்வாகியாக விளங்கியவர். சிறந்த கல்விமானாகவும் விளங்கியுள்ளார். அவர் தமது பட்டப்படிப்பில் மேலைத்தேய மெய்யியலைப் பிரதான பாடமாகக் கொண்டிருந்தமையினால் 1957-1959 காலப் பகுதியில் இலங்கைப் பல்கலைக்கழக வித்தியோதய வளாகத்தில் (ஸ்ரீ ஜெயவர்த்தன பல்கலைக்கழகம்) மேற்கத்தைய மெய்யியல் துறையின் வருகை விரிவுரையாளராகவும், துறைத் தலைவராகவும் செயற்பட்டுள்ளார். அவ்வாறு மெய்யியல் துறையின் மீது கொண்ட ஈடுபாட்டின் காரணமாக பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு நிகழ்த்தி 1985 இல் கலாநிதிப்பட்டத்தினைப் பெற்றுக்கொண்டார். சூபி மார்க்க இறைநேசர்களின் இறையியல் கொள்கைகள் பற்றியதாகவே அவரது ஆய்வேடு அமைந்திருக்கின்றது. இவ்விடத்தில் இன்னோர் இஸ்லாமிய அறிஞரான பேராசிரியர், அல்லாமா எம். எம். உவைஸ் அவர்களையும் நினைவு கூரல் தகும். பேராசிரியர் உவைஸ் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் கவனங்கொண்டு தனது ஆய்வுகளை நிகழ்த்த கலாநிதி சகாப்தீன் இஸ்லாமியத் தத்துவத்தினை அடிப்படையாகக் கொண்டு தமது ஆய்வினை நிகழ்த்தினார். மர்ஹூம் சஹாப்தீன் அவர்களது கலாநிதிப்பட்ட ஆய்வு ‘The Suti Doctrine in Tamil Literature’ என்பதாகும்.

‘இஸ்லாமிய தத்துவக் கொள்கைகள், சூபித்துவ ஞானம் என்பவற்றை முஸ்லிம் இறை ஞானிகளின் எழுத்துக்களில் இருந்தும் தமிழகத்தில் தோன்றிய பீர் முகமதப்பா, குணங்குடி மஸ்தான் போன்றவர்களின் ஞானப்பாடல்களிலிருந்து எடுத்து எழுதினேன். முக்கியமாக திருக்குர் ஆன் ஹதீஸ்களிலிருந்தும் அவைகளைப் பற்றிய ஆதாரபூர்வமான விளக்கத்தை ஆங்கில பாஷையில் எடுத்துரைத்தேன்’ என்று அவர் எந்த ஆய்வேடு பற்றிக் குறிப்பிடுகின்றார். அந்த ஆய்வேடு ஆங்கிலத்திலும், பின் சில திருத்தங்களுடன் ‘இறைவனும் பிரபஞ்சமும்’ என்ற பெயரில் தமிழிலும் வெளிவந்தது.

‘தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரையில் இஸ்லாத்தின் பல்வேறு துறைகளையும், தத்துவஞானத்தையும் தமிழ் இலக்கியத்தையும் தமிழ்மொழி வன்மையையும் ஒருங்கே கொண்டிராத காரணத்தினால் ஆய்வாளர்கள் எவரும் இப்பாரிய கைங்கரியத்தை ஏற்க முன்வந்தார்களில்லை..... எவ்வளவுதான் மொழியாற்றல் இருந்தாலும் சூபித்தத்துவத்தின் நுணுக்கமான அம்சங்களில் பரிச்சயம் இல்லாதவிடத்து, அக்கருத்துக்களைத் திருப்தி அடையக்கூடிய விதத்தில் ஒரு மொழியிலிருந்து பிறிதொரு மொழிக்குப் பெயர்க்க முடியாது. ஆனால் இந்நூலாசிரியரோ இங்கு கூறப்பட்ட துறைகளில் எல்லாம் பாண்டித்தியம் பெற்றிருப்பதால் இப்பணி இவருக்கு இலகுவான ஒரு காரியமானது. சூபிச் சிந்தனைகளையும் கருத்துக்களையும் இந்நூல் நன்கு விளக்கிச் செல்கிறது. இத்துறையில், இந்நூல் தலைசிறந்து விளங்குகின்றது, எனக் கூறின் அது மிகையாகாது.’

என அல்லாமா. எம். எம். உவைஸ் அவரக்ள் குறிப்பிடுவது வெறும் புகழ்மாலையல்ல. மேற்குறித்த நூல்கள் தவிர மெய்யியல் சார்ந்தும், வாழ்வியல் சார்ந்தும், செவ்வியல் இசை சார்ந்தும் அவர் கொண்ட ஈடுபாடு காரணமாகப் பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார் என்பது இவ்விடத்தில் மனங்கொள்ளத்தக்கது.

கலாநிதி சஹாப்தீன் அவர்கள் இன்னோர் தளத்தில் விஸ்வரூபம் கொண்டார். அதுதான் அவரது சமூக சேவைத் தளமாகும். அந்தச் செயற்பாட்டிற்கு ஆதார சுருதியாக அமைந்தது அவரது வணிகச் செயற்பாடுகளாகும். மஜீட்சன்ஸ் குழுமத்தை உருவாக்கி, மாணிக்கக்கல், தங்க ஆபரணத் தொழில், கட்டட நிர்மாணத் தொழில் எனப் பலவாறாக இயங்கி அந்த நிறுவனத்தின் வழி பெருஞ் செல்வந்தரானார்.

ஆனால் தான் உழைத்த பணத்தை தனது சுக போகங்களில் அவர் செலவிடவில்லை. மாறாக அதனை இறைபணியுடன் கூடிய சமூக சேவைக்கு செலவிடுவதில் கவனங்கொண்டார். இந்த நோக்கின் வழி உருவானதுதான் ஏ. எம். எம். சஹாப்தீன் நம்பிக்கை நிதியம். 1991 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி மற்றும் சமூக நலன்புரி நிறுவனமாக அது தன்னைப் பதிவு செய்துகொண்டது. இதன் வழி உயர்கல்வி, பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு ஆகியவற்றைப் பயிலும் வறிய, திறமை மிக்க மாணவர்க்கான புலமைப் பரிசில்கள் வழங்கப்பட்டன. அத்துடன் விஞ்ஞானம், இலக்கியம் மற்றும்சர்வதேச புரிந்துணர்வு ஆகியவற்றில் திறமைமிக்க தென் ஆசியாவைச் சேர்ந்த புலமையாளருக்கான விருதுகளையும் வழங்கி வருகின்றது.

இதற்கும் மேலாக குருநாகல் மாவட்டத்தில் செறிந்து வாழ்கின்ற பஹமுன என்ற இடத்தில் பட்டக் கற்கைகளுக்கான டாக்டர் சஹாப்தீன் நிறுவனம் ஒன்றை ஆறு ஏக்கர் பரப்பளவு கொண்ட வளாகத்தில் நிறுவினார். அந்த வளாகம் சகல வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள், கேட்போர் கூடம், நூலகம், விரிவுரையாளர்கள் ஓய்வறைகள் ஆகியவற்றுடன் கூடிய பிரதான கட்டட தொகுதி, தகவல் மையம், பெண்களுக்கான விடுதி, விளையாட்டு மைதானம் ஆகிய சகல உள்ளகக் கட்டுமானங்களையும் கொண்டதாக விளங்குகின்றது.

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் வெளிவாரி மாணவர்களாகப் பதிவு செய்து கொண்ட மாணவர்களுக்குச் சகல பாடங்களுக்குமான விரிவுரைகள் பொருத்தமானவர்களைக் கொண்டு நடத்தப்படுகின்றது. இவற்றுக்கு மேலாக ஆங்கிலப் போதனை, கணினி போதனை, மா வெட்டுதல் மற்றும் வடிவமைப்பு, தையற்கலை ஆகிய தொழில் சார் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. இன்றைய தனியார்மயப்பட்ட கல்வி நடவடிக்கைகள் இலாப நோக்கில் இயங்க, சஹாப்தீன் பவுண்டேசனோ சமூக நலதிட்டம் ஒன்றையே கருதி வசதி குறைந்த பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டில் கவனங் கொண்டு இலாப நோக்கில் தன்னை இழந்து, தம் பிள்ளைகளுக்குக் கல்விக் கண்களைத் திறந்து விட்டு அவர்களைக் கல்விச் செல்வர்களாக்க முயல்கின்றது.

நிறைவாக :

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் முகம் வாடியவர்களாக மஸ்ஜிநுந் தபவில் அமர்ந்திருந்தார். முகவாட்டத்துக்குக் காரணங்கேட்ட ஸஹாகாபஜகளிடம் “என் உம்மத்தின் வருங்காலத்தை நினைத்து வருந்துகிறேன்.” என்று சுருக்கமாக அவர்கள் பதிலளித்தார்கள்.

அதாவது ‘அதிகமான செல்வத்தைக் குவித்து ஆண்டவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் அலட்சியமாக இருந்து விடுவார்களோ என்று அஞ்சுகிறேன்” – என்றார்கள். ‘பணப்பெருக்கம் இறை நெருக்கத்தை அந்நியமாக்கி விடுமோ’ என்பதுதான் அவர்களது கவலையாக இருந்தது.

ஆயின் மர்ஹீம் தேசமான்ய கலாநிதி சஹாப்தீன் போன்றவர்களிடம் உம்மத்தும் இருந்து, இறைநேசமும் இருந்தது, சமூக மயப்பாடும் இருந்தது. அவர்கள் போன்றவர்களுக்குப் பணம் எசமானவர்கள் அல்ல. பணம் அவர்களிடம் ஏவல் கேட்டது. சஹாப்தீன் போன்றோர்கள் அதன் வழி நின்று எஞ்ஞான்றும் நினைவு கொள்ளப்படுவர்.

பிற்குறிப்பு :

நல்ல பெற்றோர்களும், குருவானவர்களும் வாய்க்கப் பெற்றவர்கள் அதிஷ்டசாலிகள். அவ்வாறானபேறு எனக்கும் கிடைத்தது. என் குடும்பத்தின் வழி, இஸ்லாம் சமூகத்துடனான ஊடாட்டம் பால்யப்பருவத்திலிருந்து தொடங்கியது. சாஹாப்தீன் போன்றோரது ஊடாட்டம் என் பேராசிரியர் தில்லைநாதன் வழிவந்தது. அவரது வழிகாட்டலில் நான் பலரைச் சந்திக்கவும் அறியவும், தொடர்பு கொள்ளவும் முடிந்தது.

1998 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உள்ள குறிஞ்சிக்குமரன் கோயிலின் “அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம்” நடைபெற்றது. அதற்கான நிதி சேகரிப்பில் ஈடுபட்ட போது, என் பேராசிரியர் கூறினார். ‘கலாநிதி சஹாப்தீன் நமது நண்பர், நமது பல்கலை மாணவர், ஒருமுறை தமிழ்த்துறை நடத்திய கருத்தரங்கிற்கு நிதியளித்தவர். ஆகவே அவரிடம் சென்று நிதி கேட்கலாம் என்றார். அவரின் ஆலோசனைப்படி அவரது கொழும்பிலுள்ள சிபானி கட்டத்திற்குச் சென்றேன்.

தில்லையின் மாணவன் என்ற மதிப்புடன் உபசரிக்கப்பட்டு நிதியையும் பெற்றேன். அன்றிலிருந்து தொடங்கியது நமக்கிடையேயான உறவு. அர் பகமுனாவில் ஆரம்பித்த கல்வி நிறுவனத்தில் தமிழுக்கான ஆலோசனைச் சபை உறுப்பினராக இன்று வரை இருந்து வருகின்றேன். தமது கல்விநிறுவனத்தை தான் காலத்திலேயே இணைந்த பல்கலைக்கழக கல்லூரியாகத் தரமுயர்த்த விரும்பினார். நானும் பேராசிரியர் அனஸ் மற்றும் அவரது நிறுவன மேலாளர் ஜனாப் ரிஷான், பவுண்டேசன் பணிப்பாளர் ஜனாப் இஸ்மாயில் ஆகியோருடன் சேர்ந்து உழைத்தோம். எனின் அந்த எண்ணம் கைகூடவில்லை.

அவருடைய கனவை அவரது பிள்ளைகள் நிறைவேற்றுவர். அவர் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையுடன் நீண்ட கால உறவைப் பேணியவர், பேராசிரியர் சி. தில்லைநாதனுடன் நல்ல நட்பைப் பேணியவர், அவரது முயற்சிகளுக்குக் கைகொடுத்தவர். அண்மையில் எமது துறை சர்வதேச மாநாடு ஒன்றை நடத்திய போது வழமைபோல அவரிடம் அணுகினேன். மாநாட்டுப் பேராளர்களுக்கான கைப்பையை வழங்குவதற்கான நிதியை அவர் வழங்கினார். எனக்கும் அவருக்குமிடையே மானசீக உறவு இருந்தது.

என்னை அன்புடன் டொக்டர் என்று அழைப்பார். அவரது விருந்தோம்பல் விபரிக்கமுடியாதது. கொள்ளுப்பிட்டி பஹத்தல வீதியில் அமைந்துள்ள அவரது மாமளிகையில் பல தடவைகள் விருந்துண்டிருக்கிறேன். விருந்துக்குமேலான அன்பும், அனுசரணையும் நிறைந்ததாய் அதுஅமையும். எவ்வளவு பெரிய மனிதன் மிக எளிமையுடன் என்னுடன் பழகியதை என்னால் என்றும் மறக்கவியலாது. என் வாழ்நாளில் சந்தித்த மிகப் பெரும் ஆளுமையாக அவரை நான் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.

பேராசிரியர்
வ. மகேஸ்வரன்
(தமிழ்த்துறை, பேராதனைப்
பல்கலைக்கழகம்)

Comment (0) Hits: 690

விக்னேஸ்வரன் என்ன செய்யப் போகிறார்?

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இருவார கால ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டு, இந்தியா சென்றிருக்கின்றார். வடக்கு மாகாண சபையின் முதலாவது பதவிக்காலம் முடிவதற்கு இன்னமும் ஐந்து மாதங்களே இருக்கின்ற நிலையில், அவர் இருவார கால விடுப்பில் சென்றிருப்பதானது, முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. முதலமைச்சரின் பயணத்துக்கு, ஆன்மீக அடையாளம் வழங்கப்பட்டாலும், அது அரசியல் நோக்கங்களும் கொண்டதாகவே இருக்க முடியும். அவர், டெல்லி வரை சென்று வருவார் என்று தெரிகின்றது. நடிகர் ரஜினி மொழியில் ‘ஆன்மீக அரசியல்’ பயணம் என்று சொல்லலாம்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன், வடக்கு மாகாண சபைத் தேர்தலைத் தமிழ் மக்கள் எதிர்கொண்ட விதம் அசாத்தியமானது. ஆக்கிரமிப்பாலும் அடக்குமுறையாலும் தமது போராட்ட உணர்வை, யாராலும் தோற்கடித்துவிட முடியாது என்கிற செய்தியை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கிய ஆணை மூலம், தமிழ் மக்கள் மீளவும் நிரூபித்தார்கள். கொழும்பிலிருந்து வந்தாலும், விக்னேஸ்வரனைத் தங்களது ஆணையின் நாயகனாகவே மக்கள் பார்த்தார்கள். ஆனால், பெரும் ஆணைபெற்ற கூட்டமைப்பும் ஆணையின் நாயகனாக அடையாளம் பெற்ற விக்னேஸ்வரனும் மக்களது நம்பிக்கையைப் பூர்த்தி செய்திருக்கின்றார்களா என்றால், பெரும் எரிச்சலே மிஞ்சுகின்றது.

மஹிந்த ராஜபக்சவின் சர்வாதிகாரத்துக்கும் வெற்றிவாதத்துக்கும் எதிராக, முதலில் தடுப்புச் சுவர் எழுப்பியது தமிழ் மக்களே. 2012ஆம் ஆண்டு, கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், மஹிந்தவின் வெற்றிவாதத்துக்கு அச்சுறுத்தல் வழங்கிய தமிழ் மக்கள், 2013ஆம் ஆண்டு, வடக்கு மாகாண சபைத் தேர்தலில், தடுப்புச் சுவரை எட்டிப்பார்க்க முடியாதளவுக்கு கட்டி முடித்தனர். ஆனால், இன்றைக்கு அந்தத் தடுப்புச் சுவரின் கற்களை ஒவ்வொன்றாக உருவி, எதிரிகளின் சிறு அழுத்தத்துக்கே உடைந்துபோகும் ஒன்றாக மாற்றியிருப்பதில் கூட்டமைப்பும் விக்னேஸ்வரனும் பொறுப்புக்கூற வேண்டியவர்களாகிறார்கள்.

ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் மீளெழுச்சி பற்றிய பெரும் நம்பிக்கையை விதைத்திருக்க வேண்டிய கூட்டமைப்பும் முதலமைச்சரும் பங்காளிச் சண்டைகளுக்குள் எல்லாவற்றையும் கானலாக்கி விட்டார்கள். ‘அதிகாரங்களற்ற மாகாண சபையை வைத்துக் கொண்டு, எதுவுமே செய்ய முடியாது’ என்கிற வாதம், அடிப்படையில் சரியானதுதான். ஆனால், மாகாண சபைக்குண்டான மிகச்சிறிய அதிகாரங்களைக் கொண்டு மாகாண சபை நிர்வாகத்தில் நிகழ்ந்திருக்கின்ற குழறுபடிகளையும் ஊழல் மோசடிகளையும் எவ்வாறு நோக்குவது? அது, மக்களைக் குறிப்பிட்டளவு நம்பிக்கையிழக்கவே செய்திருக்கின்றது.

2017 பெப்ரவரி மூன்றாம் திகதி, தகவலறியும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளில் இருந்து, வடக்கு மாகாண சபையின் நிர்வாக விடயங்கள் தொடர்பில் கோரப்பட்ட தகவல்கள் ஏராளம். அதன்மூலம், ஆதாரபூர்வமான அறிக்கைகளினூடும் தகவல்களினூடும் வடக்கு மாகாண அமைச்சுகள் உள்ளிட்ட நிர்வாகத்துக்குள் நிகழ்ந்த குழறுபடிகள் நாளுக்கு நாள் வெளியாகி வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்னரும், ஓடாத பிக்-அப்புக்கு (வாகனத்துக்கு) எரிபொருள் நிரப்பிய அமைச்சர்களும், கூட்டு வங்கிக் கணக்கு வைத்து சம்பள மோசடி செய்தவர்களும் அம்பலப்பட்டிருக்கின்றார்கள்.

முன்னாள் அமைச்சர்கள் பொ.ஐங்கரநேசன், த.குருகுலராஜா உள்ளிட்டவர்கள் மீதான முதலமைச்சரின் விசாரணைக்குழு சமர்ப்பித்த அறிக்கைகளில் குற்றங்களாக காணப்பட்ட விடயங்கள் தொடர்பில், விக்னேஸ்வரன் இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன என்பது தொடர்பில் எந்தப் பதிலும் இல்லை. பதவி விலகல் அல்லது பதவி நீக்கத்தோடு ஊழல் மோசடிகள் தொடர்பிலான விசாரணை அறிக்கையைக் கடந்துவிட வேண்டும் என்று நினைக்கிறாரா என்றும் தெரியவில்லை. அது தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினால், முதலமைச்சர், கேள்வியைத் தவிர்த்துக் கொண்டு எழுந்து சென்றுவிடுகின்றார்.

ஊடக அறிக்கை வழி மாத்திரம் தனக்கு உவப்பான கேள்விகளைத் தேர்ந்தெடுத்து நீட்டி முழக்கி பதிலளிக்கும் முதலமைச்சர், தமிழ் மக்களின் நம்பிக்கைகளை பாழாக்கிய அமைச்சர்களின் மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் வாய் திறப்பதில்லை. ஒரு கட்டம் வரையில், அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் சார்ந்தது என்று சமாளித்து வந்த முதலமைச்சர், தற்போதைய அமைச்சர்களுக்கு எதிராக தகவலறியும் உரிமைச் சட்டத்தின் உதவியோடு பெறப்பட்ட ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகளுக்கும் என்ன பதில் சொல்லப்போகிறார்?  

அரசியல் ரீதியாக மாத்திரமல்ல, இராஜதந்திர ரீதியாகவும் தமிழ்த் தேசிய அரசியலில் இரா.சம்பந்தனுக்கு அடுத்த இடத்தில் விக்னேஸ்வரன் இருந்தார். அந்த இடத்தை, சம்பந்தனும் எம்.ஏ.சுமந்திரனும், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பேராசிரியர் சிற்றம்பலம் உள்ளிட்டவர்களின் எதிர்ப்புகளை மீறி உருவாக்கிக் கொடுத்தனர். ஆனால், விக்னேஸ்வரனோ எல்லாமும் இலகுவாகக் கிடைத்துவிடும் என்கிற நினைப்பில் எடுத்த முயற்சிகள் அவரை பின்னுக்குத் தள்ளிவிட்டன. அரசியல் என்பது பெரும் எதிர்ப்புகளைச் சமாளித்து, சந்தர்ப்பங்களை வெற்றிகரமாகக் கையாளும் உத்தி. ஆனால், அதிகம் உணர்ச்சி வசப்படும் நிலையால், தன்னுடைய இடத்தை, மிக வேகமாக இழந்தார்.

விக்னேஸ்வரனை வடக்கு மாகாண முதலமைச்சராக முன்னிறுத்தியமைக்கான காரணங்களில் ஒன்றாக, சம்பந்தன் பங்காளிக் கட்சிகளிடமும் மாவையிடமும் கூறியதாவது, “…வடக்கு மாகாண சபை முதலமைச்சர் பதவி என்பது மிக முக்கியமானது. தெற்கோடு மாத்திரமல்ல, சர்வதேசத்தோடு பேசுவதற்கும் முதலமைச்சராக இருப்பவருக்கு மிகுந்த அனுபவமும், ஆற்றலும் வேண்டும். அது, விக்னேஸ்வரனிடம் உண்டு…” என்று.

ஆனால், தன்னுடைய தோற்றத்தினூடு தன்னையோர் ஆளுமையாக வரையறுத்துக்கொண்ட விக்னேஸ்வரன், நடவடிக்கைகளினூடு உணர்ச்சிவசப்படும் நபராக, பக்குவப்படாத அரசியல்வாதியாக வெளிப்பட்டார். அந்தத் தருணமே, சுமந்திரனை, சம்பந்தனுக்கு அடுத்த இடத்தில் வைத்தது.

சுமந்திரனை அரசியலுக்கு சம்பந்தன் அழைத்து வரும் போது, கூட்டமைப்பின் இரண்டாம் பெரும் தலைமையாக உருவாக்கும் எந்த எண்ணமும் அவரிடத்தில் இல்லை. சட்ட ரீதியிலான விடயங்களைக் கையாள்வதற்காக தேர்ச்சிபெற்ற ஒருவர் கட்சிக்குள் இருப்பதன் அவசியத்தால் சுமந்திரனை முன்னிறுத்தினார். ஆனால், விக்னேஸ்வரனை அழைத்துவரும் போது, அவரைத் தனக்கு அடுத்த அடையாளத் தலைமையாகவும் (கட்சித் தலைமையாக அல்ல) முன்னிறுத்த முனைந்தார். ஆனால், அடையாளத் தலைமை என்பதற்கும், மிகுந்த உழைப்பைக் கோருகின்ற கட்சித் தலைமைக்குமான வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளாமல், விக்னேஸ்வரன் தவறிய இடமே அவரின் அரசியல் ரீதியிலான தோல்விக்கு காரணமாகும்.

தான் இழந்த இடத்தைத் தமிழ் மக்கள் பேரவையின் மூலம் மீட்டெடுக்க முடியும் என்கிற எதிர்பார்ப்பு, விக்னேஸ்வரனிடம் உண்டு. ஆனால், பேரவையின் செயற்பாட்டாளர்கள் என்கிற இடத்தை, இதுவரை காலமும் மேல் மட்டத்தில் வைத்துக் கொண்டிருந்தவர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எப்., புளொட் ஆகிய கட்சிகளின் தொண்டர்கள். ‘எழுக தமிழ்’ முதல், பேரவையின் மனித உழைப்பைக் கோருகின்ற அனைத்து விடயங்களிலும் கட்சிகளின் பங்கே அதிகமாக இருந்தன. ஆனால், பேரவைக்குள் கட்சிகள் முக்கியத்துவம் பெறுவதை விரும்பாத விக்னேஸ்வரன், புத்திஜீவிகளை மாத்திரம் வைத்துக்கொண்டு தனியாவர்த்தனம் செய்ய நினைக்கின்றார். அதன்மூலம், புதிய வெற்றிகளைப் பெற முடியும் என்றும் நம்புகின்றார். எனினும், விக்னேஸ்வரனின் கடந்த நான்கரை ஆண்டுகாலச் செயற்பாட்டின் வழி, தமிழ் மக்களுக்கு குறிப்பிட்டளவு தெளிவு கிடைத்திருக்கின்றது. அது, அவரை முதன்நிலைத் தலைவராக வரையறுக்கும் அளவுக்கு இல்லை என்பது வெள்ளிடைமலை.

இந்தக் கட்டத்தில் ஆன்மீக அரசியல் பயணமாக இந்தியா சென்றிருக்கும் விக்னேஸ்வரன், அங்கிருந்து நிலைமைகளை இன்னமும் ஆழமாக ஆராயக்கூடும். ஏனெனில், முதலமைச்சர் என்கிற அடையாளம் இன்னமும் 5 மாதங்களே அவரோடு இருக்கும் என்கிற நிலையில், தமிழ்த் தேசிய அரசியலில் கௌரவமான இடமொன்றைப் பெற்றுக்கொள்வது சார்ந்து அவர் சிந்திப்பது இயல்பானதுதான். குறிப்பாக, “கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரனை இனி நியமிக்கப்போவதில்லை” என்று தமிழ் மக்களை 2015ஆம் ஆண்டிலிருந்து சுமந்திரன் தயார்ப்படுத்தி வருகின்றார். அப்படியான நிலையில், தேர்தல் அரசியலில் நீடிக்க வேண்டுமானால், கூட்டமைப்புக்கு எதிரான அணியொன்றை பலமாக உருவாக்கி அதற்கு தலைமையேற்க வேண்டும். அதன்மூலம் அரசியல் ரீதியாக குறிபிட்டளவான முக்கியத்துவத்தை விக்னேஸ்வரன் தக்க வைக்கலாம். ஆனால், அது, இராஜதந்திர ரீதியிலான முக்கியத்துவத்தைப் பெற்றுக்கொடுக்காது. ஏனெனில், கூட்டமைப்புக்கு மாற்றாக தமிழ்த் தேசிய அரசியலில் இராஜதந்திர தரப்பு என்று யாரையும் தெற்கோ, சர்வதேசமோ அடையாளம் காணவில்லை. விக்னேஸ்வரன் தொடர்பிலான கடந்த கால அனுபவங்களும் அவ்வாறான ஒன்றைப் புதிதாகத் தோற்றுவிக்காது.

கூட்டமைப்புக்கு எதிராக விக்னேஸ்வரன் தேர்தல் அரசியலில் களமிறங்கத் தயாராக இருந்தாலும், அந்தப் பாதை பூ பாதையாக இருக்காது. அது, மிகுந்த உழைப்பினைக் கோருகின்ற முட்பாதையைாகவே இருக்கும். ஆனாலும், இந்தியாவுக்கான ஆன்மீக அரசியல் பயணம் விக்னேஸ்வரனை கூட்டமைப்புக்குள் மீண்டும் ஐக்கியமாக்கும் காட்சிகளையும் சிலவேளை பதிவு செய்யலாம். அவ்வாறான காட்சிகள் அரங்கேறினால், அதை தமிழரசுக் கட்சியோ, கூட்டமைப்புக்கு எதிரான தரப்புக்களோ அவ்வளவு இலகுவாக ஜீரணித்துக் கொள்ளாது. அது, விக்னேஸ்வரன் மீதான அடையாள அழிப்பை அதிகமாகவே பதிவு செய்யும்.

- புருஜோத்தமன் தங்கமயில்

Comment (0) Hits: 386

வான் மண் பெண் 43: பூமிக்காக எழுதும் பேனா!

இயற்கையான எழுத்தாற்றல் என்பது வேறு. இயற்கையைப் பற்றி எழுதும் எழுத்தாற்றல் வேறு. முன்னது சிலருக்கு மட்டுமே வாய்த்திருக்கும் என்றால், பின்னது வெகு சிலருக்கு மட்டுமே வரமாகக் கிடைக்கின்றது.

காடு, மலை, கடல் என ஊர் ஊராகச் சுற்றி ஒரு கட்டுரை எழுதிவிடுவது சுலபம். ஆனால், நம் வீட்டைச் சுற்றியும் நகரத்தில் இருக்கும் இடத்திலும் நமக்குத் தென்படுகிற சின்னஞ் சிறிய உயிரினங்களை அவதானித்து, அவற்றைப் பற்றி எழுதுவது மிகப் பெரும் சவால். அந்தச் சவாலை மிகச் சிறப்பாக எதிர்கொண்டவர்களில் ஜானகி லெனினும் ஒருவர்.

காட்டுயிர் ஒளிப்படக்காரர், படத் தொகுப்பாளர், ஆவணப்பட இயக்குநர் எனப் பல முகங்கள் இவருக்கு இருந்தாலும், சூழலியல் குறித்து ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் ‘மை ஹஸ்பண்ட் அண்ட் அதர் அனிமல்ஸ்’ என்ற தலைப்பில் இவர் எழுதிய தொடர்தான் இவரது அடையாளம்.

புத்தகங்கள் அறிமுகப்படுத்திய விலங்குகள்

இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். விடுமுறைக் காலத்தில் தாத்தா, பாட்டி வசித்துவந்த கிராமத்துக்குப் போவார். அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் இருந்த மரங்கள், கிராமத்தில் பரந்து கிடந்த வயல்வெளிகள் மட்டுமே அவருக்கு இயற்கையுடனான தொடர்பாக இருந்தன. சிறு வயதிலிருந்தே புத்தகங்கள் படிப்பதில் இவருக்கு ஆர்வம் அதிகம்.

“நான் படித்த நூல்களில் உயிரனங்களைப் பற்றியவையே அதிகம். ஜெரால்ட் டியூரெல், ஜிம் கார்பெட், கென்னத் ஆண்டர்சன் போன்றோரின் புத்தகங்கள் மூலம் உயிரினங்களைப் பற்றி நிறையத் தெரிந்துகொண்டேன்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு விளம்பரப் படங்கள், ஆவணப் படங்கள், தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் ஆகியவற்றின் படத்தொகுப்பாளராகப் பணியாற்றினேன். நாளடைவில் இவை எனக்குச் சலிப்பூட்டின. மனநிறைவைத் தரக்கூடிய வேறு துறைகளைத் தேடினேன்.

அப்போது பாம்பு இன பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் சிலர், தங்கள் கல்வி தொடர்பான ‘புராஜெக்ட்’டுக்குத் தேவையான குறும்படம் ஒன்றைத் தயாரிக்க விரும்பி என்னை அணுகினர். நானும் ஏற்றுக்கொண்டேன்.

அந்த நேரத்தில்தான் இந்தத் துறையில் நீண்டகால அனுபவம் உடையவரும் முன்னோடியயுமான ரோமுலஸ் விட்டேகரை (சுருக்கமாக ராம்) சந்தித்தேன். அப்போது அவரும் காட்டுயிர்கள் பற்றிய ஆவணப் படங்கள் தயாரிப்பில் ஈடுபட விரும்பினார். தொலைக்காட்சி ஊடக நிர்வாகிகள் தன்னுடைய திறமைகளைப் புரிந்துகொள்ளும் வகையில், அவர்களை ஈர்க்கக்கூடிய குறும்படம் ஒன்றை நான் தொகுத்துத் தர வேண்டும் என விரும்பினார். அப்படித்தான், ‘நேஷனல் ஜியாகராஃபிக்’ சேனலில் எலிகளைப் பற்றிய ஆவணப்படம் தயாரிக்கும் பணி எனக்குக் கிடைத்தது” என்கிறார் ஜானகி லெனின்.

சலிப்பை உடைத்த எழுத்து

அந்தப் படம் நிறைவடையும் தருணத்தில் அவர்கள் இருவரும் இணைந்து ‘ட்ராகோ ஃபிலிம்ஸ்’ என்ற ஆவணப் படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினர். அதைத் தொடங்கி மூன்று ஆண்டுகளுக்குப் பின்னரே அடுத்த படம் தயாரிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

இந்த இடைவெளியில் தென்னிந்தியாவின் பல்வேறு காடுகளுக்கும் அவர்கள் சென்றார்கள். “காடுகளில் நாங்கள் தங்கியிருந்த ஒவ்வொரு நாளும் யானைகள், பறவைகள், அட்டைகள், கரடிகள், வண்டுகள், தவளைகள் பற்றி அதிகமாகத் தெரிந்துகொண்டேன்.

பயணம் முடிந்து திரும்பியதும் அவற்றின் அன்றாட வாழ்க்கை பற்றி மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் சென்னை முதலைப் பண்ணை, பெங்களூருவில் உள்ள ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ்’ ஆகியவற்றிலிருந்த நூலகங்களுக்குச் சென்றேன்” என்று சொல்லும் ஜானகி, அடுத்த திரைப்படத் தயாரிப்புக்கான ஒப்பந்தம் கிடைக்கும் முன் தன்னைப் பல வகையிலும் தயார்படுத்திக்கொண்டார்.

நாள் முழுதும் நீண்ட நடைப் பயணம் மேற்கொள்ளவும் பறவைகளின் குரலிருந்து அவற்றின் இனத்தைக் கண்டறியவும் காடுகளில் தங்குவதற்கு முகாம் அமைக்கவும் தேர்ச்சி பெற்றார்.

இப்படிக் காட்டுயிர்கள் பற்றிய ஆவணப் படங்கள் தயாரிப்பில் 10 ஆண்டுகள் ஈடுபட்டிருந்த ஜானகிக்கு அதிலும் சலிப்பு ஏற்பட்டது. “காடுகளில் ஏற்படும் அனுபவங்கள் மகிழ்ச்சியூட்டுபவையாக இருந்தாலும், தொலைக்காட்சி ஊடக நிர்வாகிகள், ஒளிப்பதிவாளர்கள், இதர குழு உறுப்பினர்களோடு ஒப்பந்தங்களைப் பேசி முடிவு செய்வது, எங்களுக்குத் தேவையான சரியான காப்பீட்டைப் பெறுவது போன்ற பல்வேறு பணிகள் எனக்குச் சலிப்பையே உண்டாக்கின.

இதனால், அதிலிருந்து விடுபட நினைத்தேன். படத்தொகுப்பு, தயாரிப்பு தவிர எனக்கிருக்கும் ஒரே திறமை எழுதுவது. எனவே, அதில் முழுமூச்சுடன் ஈடுபடத் தொடங்கினேன்” என்று சொல்லும் ஜானகிக்கு எழுதுவதில் இதுவரை சலிப்பேதும் ஏற்படவில்லை.

வேறுபாட்டைப் புரிந்துகொள்ளுதல்

“இயற்கை, காட்டுயிர் ஆகியவற்றின் பாதுகாப்புப் பற்றி எழுதுகிறேன். அதனால் நான் இயற்கைப் பாதுகாவலர் ஆகிவிட முடியாது. பலருக்கும் இந்த வேறுபாடு புரிவதில்லை. ஒரு ராணுவச் செய்தியாளர் என்றால், போர்வீரராக முடியாது. அரசியல் விமர்சகர் என்றால், அரசியல்வாதி அல்ல. விதிவிலக்காக இரண்டையும் செய்யும் பலர் இங்கு இருக்கலாம். ஆனால், நான் அப்படி அல்ல.

இயற்கை அல்லது காட்டுயிர்ப் பாதுகாவலர் என்ற பெயரைப் பெறுவது எளிது. யார் வேண்டுமானாலும் தன்னைப் பாதுகாவலர் எனச் சொல்லிக்கொள்ளலாம். ஆனால், அவர் அந்தத் துறையில் முனைப்புடன் செயல்பட வேண்டும். அதுதான் முக்கியம்.

அப்படிப் பார்த்தால், என் கணவர் ராம் உண்மையிலேயே காட்டுயிர்ப் பாதுகாவலர். ஊர்வனவற்றின் பாதுகாப்புகாக அவர் தன் சுகங்களைத் தியாகம் செய்கிறார். அவை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற பேரார்வமே உந்து சக்தியாக இருக்கிறது. அதற்கு நானும் ஆதரவாக இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி.

இந்தப் பூமி சிறந்த, ஆரோக்கியமான கோளாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். அதற்கு எழுத்தின் மூலமாக பங்களிக்க விரும்புகிறேன். இயற்கைப் பாதுகாப்புத் துறையில் நான் சிறந்த எழுத்தாளராக வேண்டும் என்பதுதான் என்னுடைய லட்சியம்!” என்று நம்பிக்கையோடு முடிக்கிறார் ஜானகி லெனின்.

The Hindu

Comment (0) Hits: 436

மிதிவெடி: அச்சத்திலிருந்து மீளாத ரகுவேந்தன்

கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெண் மணல் தரை, மணல் மலைகள். பார்ப்பதற்கு அவ்வளவு அழகு. அழகில் ஆபத்து இருக்கும் என்பார்கள். இங்கு அது சரியாக, பொருத்தமாகத்தான் இருக்கிறது.

வெடிபொருள் எச்சமொன்று காலில் தட்டுப்படாமல் நடக்கவே முடியாது. துப்பாக்கி ரவைகள், கோதுகள், பீரங்கிக் குண்டுகளின் பாகங்கள், ஏராளமாக மக்கள் வாழும் பகுதியில் பரவிக்கிடக்கின்றன.

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் அடிக்கடி போர் இடம்பெற்ற முன்னரங்கப் பகுதியான நாகர்கோவிலில்தான் இந்த நிலை.

பிரதான பாதையிலிருந்து கொஞ்சம் கீழிறங்கினால் போரின்போது பயன்படுத்தப்பட்ட அத்தனை ஆயுதங்களையும் முழுசாகவோ அல்லது பகுதியாகவோ பார்த்துவிடலாம். மணலில், மரத்தில் மக்களின் உடம்பில் என்று பல வகை வெடிபொருட்கள், இன்னும் மக்களை விட்ட பாடில்லை.

விமானக் குண்டு வீச்சு மற்றும் ஷெல் வீச்சுகளால் ஏற்பட்டுள்ள பாரிய குழிகள் இன்னும் இருக்கின்றன. இராணுவத்தினர், புலிகள் இருந்த பங்கர்களும் அப்படியே இருக்கின்றன. குடியிருப்புகளுக்கு அருகில் இருக்கும் பங்கர்கள் காணப்படும் பகுதிகளுக்கு போகவேண்டாம் என மக்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.

போரில் பெரிதும் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், வெடிச் சத்தங்களோடு பிறந்தவர்கள் இங்கு அதே வெடிபொருட்களோடு விளையாடி வருகிறார்கள். பல வகையான துப்பாக்கி ரவைக் கோதுகள், பீரங்கிகளை பாதுகாத்து வைத்திருக்கும் பிளாஸ்ரிக் குழாய் போன்றவற்றைக் கொண்டு சிறுவர்கள் விளையாடுகிறார்கள்.

ஒரு சில வீடுகளில் பூக்கன்று பாத்திகளை பாதுகாப்பதற்காக, அலங்காரத்துக்காக பாதுகாப்பு வேலியாக ஆயுத எச்சங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

போர் முடிவடைந்து 7 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இன்னும் வெடிபொருட்களுடனான தொடர்பு இந்த மக்களிடமிருந்து அறுபடவே இல்லை.

 

தொழிலின்மை, குடும்பத்தை நடத்திச் செல்ல வருமானம் போதாமையால் இங்குள்ள மக்கள் விடுதலைப் புலிகளாலும் இலங்கை இராணுவத்தினராலும் விட்டுச் செல்லப்பட்ட வெடிபொருள் எச்சங்களை சேகரித்து இரும்புக் கடைகளுக்கு விற்பனை செய்துவருகிறார்கள். பெரியோர், சிறியோர், பெண்கள் என்ற வித்தியாசமில்லாமல் அனைவரும் இந்த ஆபத்தான தொழிலில் ஈடுபடுகிறார்கள். இந்தத் தொழில் ஈடுபட்டிருந்த ஒருவர் குண்டுவெடித்து உடல்சிதறிப் பலியாகியிருக்கிறார். முழுமையற்ற அவரது சடலத்தை 4 தினங்களுக்குப் பின்னர்தான் கண்டுபிடித்திருக்கிறார்கள். முன்னரை விட இந்தத் தொழிலில் ஈடுபடுகிறவர்கள் குறைந்திருந்தாலும், இன்னும் ஒரு சிலர் பிழைப்புக்காகவும் கூடுதலாக வருமானத்தை ஈட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் வெடிபொருள் எச்சங்களை சேகரித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

பிழைப்புக்காக வெடிபொருள் தேடிச் செல்வதுதான் ஆபத்து என்று பார்த்தால், வீட்டில் இருந்தால் கூட அதே ஆபத்து காத்திருக்கிறது நாகர்கோவில் மக்களுக்கு. திருநாவுக்கரசு விமலாதேவி குப்பைகளையெல்லாம் கூட்டி தீமூட்டியிருக்கிறார். 2 ஷெல்கள் சீறிக்கொண்டு பாய்ந்திருக்கின்றன. அவை இரண்டும் காட்டுப் பக்கம் போனதால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று விமலாதேவி கூறுகிறார்.

"இதுல அன்டைக்கு ஒருக்கா குப்பைய கொழுத்தினம், அந்தா அந்தஇடத்தில... ரெண்டு ஷெல் வெடிச்சது. நாங்க இந்த மரத்துக்கு கீழால ஒழிச்சி இருந்தனாங்கள். பிள்ளைகள் எல்லாம் ஸ்கூல் போயிட்டினம். நெருப்பு வச்சதாலதான் ஷெல் வெடிச்சது. சர்ரென்று காட்டுப் பக்கம்தான் போனது. மூன்டாவதும் வெடிக்கப்போகும்போது இவர் அத எடுத்துட்டார்."

அன்று ஷெல்லை எடுத்தபோது ஏற்பட்ட அதே பயம் என்று நினைக்கிறேன், கண்கள் பெரிதாக, கைகள் இரண்டும் கன்னங்களைச் சேர்ந்துகொண்டன. நீண்ட பெருமூச்சு. நான்கு பிள்ளைகளும் அசைவில்லாமல் அப்படியோ தாயின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

உடனே வழமைக்குத் திரும்பியவர், “பிறகு மிதிவெடி காரர்கள் வந்து எடுத்துக் கொண்டு போயிட்டினம். இப்படி நிறய ரவுன்ட்ஸ் எல்லாம் வெடிச்சிருக்கு. இங்க நிறைய பங்கர்கள் இருக்குது. அந்தப் பக்கமெல்லாம் போகவேணாம் என்டு சொல்லியிருக்கினம்.”

வெயில் வெப்பத்தை தாங்க முடியாமல் ஒரு சிறிய வெண் மணல் மலையில் - அன்று ஒழிந்த அந்த மரத்தின் நிழலில் - நான்கு பிள்ளைகளுடன் உட்கார்ந்திருக்கிறார் விமலாதேவி. அந்த மணல் மலையின் பின்னால் உள்ள சிறிய குடிசை வீட்டில்தான் 6 பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். எந்தவித வீட்டுத்திட்டத்திலும் இன்னும் இவர் உள்வாங்கப்படவில்லை. விமலாதேவியின் கணவர் கூலி வேலை செய்துவருபவர். 2014 ஏப்ரல் மாதம் இங்கு வந்து குடியேறியிருக்கிறார்கள். இறுதிப் போரின் போது விமலாதேவியின் தங்கையும் அவரது கணவரும் மாத்தளன் பகுதியில் வைத்து ஷெல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருக்கிறார்கள். அவர்களது 3 பிள்ளைகளில் ஒருவரையும் விமலாதேவிதான் வளர்த்து வருகிறார்.

 

நாகர்கோவிலில் இன்னும் பல பகுதிகளில் மிதிவெடி அகற்றப்படாமல் இருக்கிறது. இன்னும் பல பொதுமக்கள் தங்களது காணிகளில் குடியேற முடியாமல், விவசாயம் செய்ய முடியாமல் உறவினர் வீடுகளில், வாடகை வீடுகளில் வாழ்ந்து வருகின்றார்கள்.

மிதிவெடி அகற்றும் நிறுவனங்களும் தங்களது பணியை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களும் என்னதான் செய்வார்கள், அந்தளவுக்கு மிதிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கின்றன.

இந்தப் பகுதியில் மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஒருவர் உடல்சிதறி உயிழந்திருக்கிறார், ஒருவர் காயமடைந்துமிருக்கிறார் என்று 8 வருடங்களாக மிதிவெடி அகற்றும் ஹலோ டிரஸ்ட் நிறுவனத்தின் காவலாளியாக பணியாற்றும் பாலசுப்பரமணியம் கூறுகிறார்.

பாலசுப்பரமணியம்

பிரதான பாதையை விட்டு புல் தரையில் கால்பதிக்க பயமாக இருக்கிறது. பாதையோரமெங்கும் 'மிதிவெடி அபாயம்' போர்ட்கள் வரிசையாக நின்றுகொண்டிருக்கின்றன. தூரத்தில் ஒருவர் புதிதாக மண் கிளரப்பட்ட காணியில் வேலை செய்து கொண்டிருக்கிறார். வயல் வரம்பை விட கொஞ்சம் அகலமான பாதை வழியே சென்றால் அவரது காணியை அடையமுடியும். இரண்டு பக்கங்களும் நுனியில் சிவப்பு பூச்சு பூசப்பட்ட மரத் தடிகள் வரிசையாக நாட்டப்பட்டிருக்கின்றன. மிதிவெடி எச்சரிக்கை...

இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் அவரது காணி மிதிவெடி அகற்றப்பட்டு வழங்கப்பட்டிருக்கிறது. காணியின் அருகே மிகப்பெரிய குழியொன்று. ஷெல் வீழ்ந்ததால் ஏற்பட்ட குழி அது. காணியைச் சுற்றி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார் அவர்.

"அச்சுவேலியிலிருந்து வந்துதான் இந்த வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறன். வேலியடிச்சிட்டன், தண்ணீர்விட வேணும்தானே... இல்லையெண்டா இந்தக் காணியும் கைவிட்டு போயிடும்" என்கிறார் 3 பிள்ளைகளின் தந்தையான சண்முகப்பிள்ளை.

சண்முகப்பிள்ளையின் காணி

அண்மையில்தான் மிதிவெடி அகற்றித் தந்திருக்கிறார்கள், இந்தக் காணிக்கு வரும் சிறு வழி தவிர மற்றைய பகுதிகளில் இன்னும் மிதிவெடிகள் அகற்றப்படவில்லை, அப்படியிருக்கும்போது இங்கு வந்து குடியேற உங்களுக்குப் பயமில்லையா? என்று அவரிடம் கேட்டேன்.

அதற்கு அவர் சிரித்துக்கொண்டு, “என்ன தம்பி செய்ய...? எத்தனையோ வருஷங்களுக்குப் பிறகு இந்தக் காணி கிடைச்சிருக்கு. வீடு இருக்கிற காணி அதோ தெரியுது, காடு மாதிரி, அங்கதான் இருக்கு, காடாகிட்டு. அத இன்னும் விடல்ல. அத எப்ப விடுவானென்டு தெரியல்ல. அதுவரைக்கும் இருக்க முடியாது. அதுதான் ஒரு குடிசையாவது போட்டுக் கொண்டு இந்த இடத்தில வந்து இருந்திடலாம் என்டு வேலி அடைச்சிக் கொண்டிருக்கன். எங்கட சொந்தக் காணியில வாழ்ந்து சாகனும் தம்பி” – லேசாக துளிர்விட்டிருக்கும் பூவரசம் இலையை தடவியவாறு தடிக்கு நீர் ஊற்ற ஆரம்பித்தார் சண்முகப்பிள்ளை.

ஒரு சிலருக்கு இவ்வாறு ஒரு பகுதி காணியாவது கிடைக்க இன்னும் பலர் காணியுமின்றி வீடுமின்றி எப்போதாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் வாழ்ந்து வருகிறார்கள்.

கடவுள் தரிசனத்தை முடித்துக்கொண்டு நாகதம்பிரான் கோயில் முன்னால் உள்ள மரமொன்றின் நிழலில் இளைப்பாறிக் கொண்டிருந்த 10, 12 பேர் கொண்ட குழுவில் முக்கால்வாசிப் பேருக்கு இன்னும் காணி கிடைத்திருக்கவில்லை. அவர்கள் ஒவ்வொருவராக தங்களது காணி, வீடு எப்படியிருந்தது என்று கூறினார்கள்.

அதில் ஒருவர், "அன்டைக்கு என்ட காணியையும் வீட்டயும் போய் பார்த்தனான். வீட எடுக்கவே முடியாது. திரும்ப வீடு கிடைச்சாலும் முழுசா உடைச்சிட்டுதான் கட்டவேண்டி வரும். சுவரெல்லாம் உடைஞ்சி கிடக்கு. ஆனா, அப்படி உடைச்சிட்டு கட்டவும் காசு இல்ல..." பேசுவதை நிறுத்திவிட்டு மற்றவர்களின் முகத்தைப் பார்த்து கையை விரித்தவாறு, “காணிய குடுத்தாதானே வீடு கட்டுறத பத்தி யோசிக்கலாம்” என்று தன்னுள் எழுந்த அதீத கற்பனையை இழுத்துப் பிடித்து நிறுத்தினார் அந்த வயதான தாய்.

அங்கிருந்த காணி, வீடுகளை இழந்த அத்தனை பேரும் இதே மாதிரியான கருத்தையே கொண்டிருக்கிறார்கள். ஏனைய பகுதிகளில் மக்களுக்கு காணிகள் மீள கிடைத்தது போல் தங்களுக்கும் கிடைக்கும் என்று அதீத நம்பிக்கையில் அவர்கள் இருப்பதை அத்தனை பேரின் பேச்சின் முடிவிலும் வெளிப்படுகிறது.

போர் நிறைவடைந்து 7 வருடங்களாகியும் நாகர்கோவில் மக்களின் நிலை இருந்ததை விட இன்று மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. இங்கிருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்காமல் நாகர்கோவிலில் உள்ள வளங்களை கொள்ளையடிப்பதிலே அரசியல்வாதிகளும் கொள்ளையர்களும் முண்டியடித்துக் கொண்டிருக்கின்றார்கள். இயற்கை அரண்களாக இருக்கும் வெண்மணல் மேடுகளை அப்படியே அள்ளிக்கொண்டு செல்கிறார்கள். ஆழிப்பேரலை வந்தபோது மக்கள் குடியிருப்புப் பகுதிகளுக்கு கடல்நீரை உட்புகவிடாமல் தடுத்த இந்த மணல் அரண்கள், இன்னொரு சிறிய ஆழிப்பேரலை ஊருக்குள் வருவதை தடுக்க தற்போது அங்கு இல்லை. மீன்பிடித் தொழிலையே பிரதான தொழிலாகக் கொண்டிருக்கும் இங்குள்ளவர்கள் தென்னிலங்கை மற்றும் இந்திய மீனவர்களால் மீன்வளத்தையும் இழந்துள்ளார்கள்.

இலங்கை அரசாங்கம் தங்களை இன்னொரு தேசத்து மக்களாய் நடத்துவதாக நாகர்கோவில் மக்கள் கூறுகிறார்கள்.

நன்றி - maatram.org

Comment (0) Hits: 702

பொய்ச் செய்திகளே எனக்கான சவால்’

“யுத்தத்தின் இறுதி நிமிடங்களை சுமந்த மூல்லைத்தீவு இன்றும் அதன் ஆறாத துயரத்தினை சுமந்து கொண்டுதான் காலத்தினை கழிக்கின்றது. வறுமை, பொருளாதார கட்டமைப்பின்மை, பெண் தலமைத்துவ குடும்பங்கள், விதவைகள், முன்னாள் போராளிகள், மாற்றுவலுவுடையோர், அரசியல்கைதிகள் மற்றும் காணமல் போனோரின் உறவுகள் என அதிகமாக கொண்ட மண் முல்லைத்தீவு. இலங்கை அரசைப் பொறுத்தவரையில் நல்லிணக்கத்தை நாட்டில் ஏற்படுத்த வேண்டும் என்பதற்கான முழு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டமை, துறைசார் குழுக்கள் அமைக்கப்பட்டமை, வழிநடத்தும் குழு என்பன அமைக்கப்பட்டு புரையோடிப்போயிருக்கும் தமிழ் மக்களின் பிரச்னையை தீர்க்க அரசு நடவடிக்கை மேற்கொள்கின்றது. ஆனால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குழுவினரே குழப்பவாதிகளாக உள்ளனர்”; என்கிறார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா தெரிவித்தார்.

‘அரசியல் கைதிகள், காணி விடுவிப்பு, காணமல் போன உறவுகளின் போராட்டம், வறுமை இதற்கு நியாயமான நீதியான ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகளை வழங்காது நல்லிணக்கம் என்பது ஏற்படுத்தப்படுவது சாத்தியமற்ற விடயம் தான்”என்கிறார்.

முல்லைத்தீவின் பிரச்சனைகளும் அதற்காக அரசியல் ரீதியில் முன்னெடுக்கப்படும் படிமுறைகள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசாவை நேர்காணல் செய்த போது,

முல்லைத்தீவில் சிங்கள குடியேற்றம் மற்றும் முஸ்லிம் மக்களின் குடியேற்றங்கள் தொடர்பில் உங்களுடைய கருத்து?

நான் எந்தவொரு மதத்திற்கோ, இனத்திற்கோ எதிரானவர் அல்ல எமது மக்கள் நல்லிணக்கத்தோடு, சுய கௌரவத்தோடு தமக்குரிய இறைமையோடு வாழ்வதற்கு விரும்புகின்றனர் முல்லைத்தீவு மாவட்டத்தை பொறுத்தவரையில் முஸ்லீம், சிங்கள மக்களை விட தமிழ் மக்களே அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் இவ்வாறு அதிகம் பாதிக்கப்பட்ட மக்களை ஓரம் தள்ளிவிட்டு திட்டமிட்டு சிங்களவர், முஸ்லீம்களுக்கான விசேட நிதி ஒதுக்கீடுகளையும் குடியேற்றங்களையும் அனுமதிக்க முடியாது.

சிங்கள முஸ்லிம் மக்களின் குடியேற்றங்கள் முல்லைத்தீவில் ஏற்படுத்துவது அரசின் திட்டமிடப்பட்ட சதி எனும் விமர்சனம் உள்ளதே?

இக் கேள்வியில் இரண்டு பாகம் உள்ளது சிங்கள,முஸ்லீம் மக்களின் குடியேற்றங்கள் முல்லைத்தீவில் ஏற்படுத்துவது அரசின் திட்டமிட்ட சதி என்பது ஏற்றுக்கொள்ள கூடியதாகவே உள்ளது, இதற்கு ஆதாரத்தை கூறமுடியும். நீண்ட காலம் இடம்பெயர்ந்தவர்களுக்கான ஓர் விசேட செயலணியை அரசு உருவாக்கி அதில் தனியே முஸ்லீம், சிங்களவருக்கு மட்டும் நிதியை ஒதுக்கீடு செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் திட்டமிட்ட சதிதான், ஏனெனில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, ஒதியமலை கிராமங்களும் நீண்டகாலம் இடம்பெயர்ந்தவையாகும் இக்கிராமங்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டாலும் இம்மக்களுக்குரிய அடிப்படையில் வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. இவர்களும் இவ் விசேட செயலணித்திட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டும்.

முல்லைத்தீவே இறுதி யுத்தத்தின் இறுதி நிமிடங்களை சுமந்த பகுதி. இதில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த என்ன செய்ய வேண்டும்.?

அரசியல் கைதிகள், காணி விடுவிப்பு, காணமல் போன உறவுகளின் போராட்டம், வறுமை இதற்கு நியாயமான நீதியான ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகளை வழங்காது நல்லிணக்கம் என்பது ஏற்படுத்தப்படுவது சாத்தியமற்ற விடயம் ஒன்றாகவே காணப்படும்.

முல்லைத்தீவில் சிங்கள மீனவர்கள் தடை செய்யப்பட்ட மீன தொழிலை மேற்கொள்ளுகின்றனர். அதற்கு அங்குள்ள கடல்தொழில் நீரியல் வள திணைக்களத்தினர் பக்கச்சார்பாக நடந்து கொள்வதாக கூறப்படுகின்றது. இது தொடர்பில் உங்கள் கருத்து?

முல்லைத்தீவில் மீனவர்களுக்கு செய்யப்படும் அநியாயங்கள் பல. இவை தொடர்பாக அமைச்சு மட்டம் வரை முறைப்பாடுகள் செய்யப்பட்டு மாவட்ட மட்டத்தில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டும் சம்மந்தப்பட்ட அமைச்சரை உரிய கடற்கரை பிரதேசங்களுக்கு கொண்டுசென்று நேரில் காட்டியும் இதுவரை இப்பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

வீடுகளற்ற மக்களுக்கு பொருத்து வீட்டுகளை வழங்க அரசாங்கம் தயாராக இருக்கிறது.அது தொடர்பாக உங்களது நிலைப்பாடு என்ன?

பொருத்து வீடு எமது பிரதேசத்திற்கு பொருத்தமற்றது. அதுவீடு அல்ல இரும்புக் கூடு.மக்களுக்கு அவசரமாக வீடு தேவை. மக்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக பொருத்தமற்ற பெரும் செலவிலான வீட்டை கொடுத்து மக்களை ஏமாற்றக் கூடாது. ஆதனை நாங்கள் எதிர்க்கிறோம்.மக்களுக்கு தேவையான அவர்களுக்கு உகந்த வீட்டையே கொடுக்க வேண்டும்.

பெண் தலமைத்துவ குடும்பங்களை முன்னேற்றுவதற்கு நீங்கள் செய்யும் முயற்சிகள் யாவை?

பொதுவாக மீள்குடியேற்றக் காலத்தில் இருந்து ஒன்பது வருடங்களாக அரசு அரச சார்பற்ற நிறுவனங்கள் பெண் தலைமைத்துவ குடும்பங்களை முன்னிலைப்படுத்தியே வாழ்வாதார செயற்பாடுகளை செய்து வருகின்றன. ஆனால் இன்றுவரை முல்லைத்தீவு மாவட்டமே வறுமையான மாவட்டமாக உள்ளது. இதற்கு பயனாளி தெரிவு சரியாக நடைபெறுவதில்லை. முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நிலை உருவாக வேண்டும்.

முன்னாள் போராளிகளை சமூகமையப்படுத்த நீங்கள் எடுத்த முயற்சிகள் என்ன?
தனியே முன்னாள் போராளிகளை ஒருங்கிணைத்து எந்த முன்னெடுப்புக்களையும் செய்யமுடியாத பாதுகாப்பற்ற சூழ்நிலை தற்போதும் உள்ளது. இதனால் மாற்றுவலுவுள்ளவர்களை ஒன்றிணைத்து பிரதேச செயலகங்கள் ரீதியாக ஒளிரும்வாழ்வு என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டு அவர்களின் கல்வி பொருளாதார மேம்பாடுகளுக்காக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

முன்னாள் பெண் போராளிகளை அரசியலுக்குள் கொண்டுவர முயற்சிக்கின்றீர்களா நீங்கள்? அரசியலில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க என்ன முயற்சி எடுக்கின்றீர்கள்?

ஓர் இலட்சியத்திற்காக தம்மை அர்ப்பணித்தவர்கள் போராளிகள் ஆனால் இன்று அவர்கள் நடைபிணமாக ஆக்கப்பட்டுள்ளமை வேதனைக்குரியது அதிலும் குறிப்பாக பெண் போராளிகள் சமூக ரீதியாக பல அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ளனர். இவர்கள் நிச்சயமாக முன்னுக்கு கொண்டுவர முயற்சிக்கின்றேன். பெண்களை வலுப்படுத்துவதற்காக ஏற்கனவே முயற்சியாண்மை உடைய பெண்களை ஊக்குவிக்கும் பொருட்டு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன, இதனைவிட விழிப்புணர்வு கருத்தரங்குகளில் பெண்கள் அரசியலில் உட்புகுவதற்கும் தங்களைத் தக்க வைத்துக்கொள்வதற்கும் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றேன்.

அரசியலில் பெண்களின் பங்களிப்பு குறைவு இலங்கையில். ஒரு பெண்னாக அரசியலில் நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

இணையத்தளங்களில் வரும் உண்மைக்கு புறம்பான செய்திகள். அரசியலினுள் வந்த ஆரம்ப காலங்களில் இத்தகைய பொய்யான செய்திகள் எனக்கு சவலாக இருந்தாலும் தற்போது இவற்றை எனக்கான ஓர் விளம்பரமாகவே கருதுகின்றேன். உண்மையாகவும் நேர்மையாகவும் மக்களுக்கு சேவை செய்யும் பொழுது இவ்வாறான பொய்யான தகவல்கள் அடிபட்டு போவதை காணக்கூடியதாக உள்ளது.

மக்களுக்கு சேவை செய்ய அதிகமான நேரத்தை ஒதுக்கவேண்டியுள்ளது ஆனால் கணவரும் பிள்ளைகளும் முழு ஒத்துழைப்பை வழங்குவதால் ஒரு குடும்பப்பெண் எதிர்கொள்ளும் சுமைகளில் இருந்து விடுவித்துக்கொள்ள முடிகின்றது.

சிங்கள தமிழ் மொழியாற்றல் இல்லாமை நல்லிணக்கத்திற்கு சவாலாக அமைகின்றது. அடுத்த தலைமுறைகளுக்கு மொழி ஆற்றலை வளர்ப்பதற்கு ஏதாவது திட்டங்கள் உள்ளனவா?

விசேடமாக மொழியை விருத்தி செய்வதற்கு நடவடிக்கை இதுவரை மேற்கொள்ளப்படவில்லை ஆனால் பொதுவாக கல்வியை விருத்தி செய்வதற்கு விசேட நிதி ஒதுக்கீடுகளை புலம்பெயர் உறவுகள் ஊடாக பெற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கின்றேன்.

 பாராளுமன்ற உறுப்பினராக நல்லிணக்கத்திற்கு உங்கள் பணி என்ன?

பாராளுமன்றத்தைப் பொறுத்தவரையில் நல்லிணக்கத்தை நாட்டில் ஏற்படுத்த வேண்டும் என்பதற்கான முழு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டமை, துறைசார் குழுக்கள் அமைக்கப்பட்டமை, வழிநடத்தும் குழு என்பன அமைக்கப்பட்டு புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்னைக்கு தமிழ் மக்களின் பிரச்னையை தீர்க்க அரசு நடவடிக்கை மேற்கொள்கின்றது. ஆதற்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்குகின்றோம். ஆனால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா அவர்களின் குழுவினரேஅதனைக் குழப்புகின்ற குழப்பவாதிகளாக உள்ளனர்.

வடமாகாண ஆளுனர் இனங்களுக்கிடையில் கலப்புத் திருமணங்கள்; நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் என்கிறார்? அதனை நீங்கள் ஏற்கின்றீர்களா?

இல்லை, ஏற்றுக்கொள்ள முடியாதது.

நன்றி - catamaran.org

Comment (0) Hits: 406

ரணிலைக் காப்பாற்றுவதா கூட்டமைப்பின் வேலை?

கடந்த சில நாட்களாக தென்னிலங்கையில் சஜித் பிரேமதாசவின் படங்களைத் தாங்கிய விளம்பரத் தட்டிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றன. சுமார் 72 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி கால்நூற்றாண்டுக்குப் பின்னர், புதிய தலைமைத்துவமொன்றை நோக்கிச் செல்லும் கட்சிகளின் பிரதிபலிப்பாகவே இதனைக் கொள்ள முடியும்.  

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் நாடு பூராவுமே பல்வேறு அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தி விட்டிருக்கின்றன. அதுவே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நிலைப்பாட்டை தேசிய அரசாங்கத்துக்குள்ளும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் எதிர்பார்த்த அளவினையும் தாண்டி அதிகரிக்க வைத்தது. அரசியல் என்பது அடிப்படையில் மக்களின் அதிகாரங்களை முன்னிறுத்துவது. ஆனாலும், நடைமுறை உலகில் (தேர்தல்) அரசியல் என்பது கட்சிகள் மற்றும் ஒரு சில தனிநபர்களின் அதிகார போதை சார்ந்ததாக மாறிவிட்டது. 

மைத்திரி - ரணில் இணைவும், தேசிய அரசாங்கத்தின் உருவாக்கமும் நாட்டின் முன்னேற்றம் சார்ந்தது என்று சொல்லப்பட்டாலும், கடந்த மூன்று ஆண்டுகளில் அதற்கான சாட்சிகளாக எதுவும் பெரிதாகப் பதிவாகியிருக்கவில்லை. மாறாக, தங்களது அதிகார வரம்புகள் சார்ந்த இரகசிய இழுபறியும் குழிபறிப்புக்களுமே அரங்கேறி வந்தன. தேசிய அரசாங்கத்தின் தேன்நிலவு காலமென்பது, எந்தவொரு புதிய அரசாங்கமும் பதவியேற்றதும் நிகழ்த்தும் காட்சி மாற்றங்களை ஒத்ததாகவே இருந்தது.

ஆனாலும், புதிய அரசியலமைப்பு பற்றிய உரையாடலும், தேசியப் பிரச்சினைகளுக்கான தீர்வைக் கண்டடைதல் எனும் விடயமும் பெரிய கவர்ச்சியை உண்டு பண்ணியிருந்தது. குறிப்பாக, கொழும்பு லிபரல்கள் மற்றும் மேற்கு நாடுகளின் பார்வையில் அது நம்பிக்கையான மாற்றம் என்ற சொல்லப்பட்டது. ஆனால், தீர்மானங்களை எடுப்பதற்கான திராணியின்மை மற்றும் காலந்தாழ்த்துதல் எனும் நிலைப்பாடுகள் தேசிய அரசாங்கத்தை மக்கள் மத்தியில் நம்பிக்கையிழக்கச் செய்திருக்கின்றது. மஹிந்த தரப்பின் மீதான தென்னிலங்கையின் நம்பிக்கை என்பது, தேசிய அரசாங்கத்தின் மீதான அதிருப்தியில் உருவான ஒன்றுதான். 

தேசிய அரசாங்கத்தின் மீதான அதிருப்தி தொடர்பில் மைத்திரி உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒதுங்கிக் கொள்ள ரணில் பதில் சொல்ல வேண்டி வந்திருக்கின்றது. அதுதான், பிரதமருக்கு எதிராக கூட்டு எதிரணி நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவரும் நிலையை உருவாக்கியது. அதுதான், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து ரணிலை அகற்றுவதற்கான பெரும் அழுத்தத்தினையும் கொடுக்க வைத்திருக்கின்றது. 

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை நடைபெறவுள்ள பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில், ரணிலுக்கு ஆதரவாக ஐக்கிய தேசிய முன்னணி (ஐக்கிய தேசியக் கட்சி+ பங்காளிக் கட்சிகள்) மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள் என்று தெரிகின்றது. இதனால், நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்படும் வாய்ப்புக்களே அதிகமுண்டு. ஏதாவது மாயங்கள் நிகழ்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு தொகுதியினர் ரணிலுக்கு ஆதரவாக வாக்களிக்காமல் விட்டாலோ, கூட்டமைப்பின் உறுப்பினர்கள் வாக்களிப்பைப் புறக்கணித்தாலோ நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றி பெறலாம். 

நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்து ஐக்கிய தேசியக் கட்சி தலைமைத்துவ மாற்றத்தை செய்ய எத்தணிக்கின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ புதிய அரசாங்கத்தை அமைத்தல் அல்லது, தேசிய அரசாங்கத்திலிருந்து விலகி எதிர்க்கட்சியாக அமருதல் எனும் நிலையை எடுக்க எத்தணிக்கின்றது. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு, எதிர்காலத் திட்டமிடல்கள் என்பன என்னவாக இருக்கப் போகின்றது என்பதுதான் தெளிவின்றி நீள்கின்றது. 

அடுத்த இரண்டு வருடங்களும் தேர்தல்களை முன்னிறுத்தியதாகவே இருக்கப் போகின்றது. மாகாண சபைத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் பின்னராக பொதுத் தேர்தல் என்ற நிகழ்ச்சி நிரலே அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் முன்னாலுள்ளது. புதிய அரசியலமைப்புக்கான எந்த வாய்ப்பும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இல்லை. அதனை, மங்கள சமரவீரவே வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் வெளிப்படையாகக் கூறியிருக்கின்றார். அப்படியான நிலையில், தென்னிலங்கைக் கட்சிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்கி அல்லாடாமல், புதிய பாதையொன்றை கட்டமைப்பது சார்ந்து இரா.சம்பந்தன் சிந்திக்க வேண்டும்.

ஏனெனில், தங்களுக்குத் தேவையைானவற்றை முன்வைத்து ஒவ்வொரு தரப்பும் தங்களது அரசியல் பாதையைத் தெரிவு செய்யும் போது, ஒருங்கிணைவு - நல்லிணக்கம் பற்றிய உரையாடலுக்கே வாய்ப்பில்லை. அவ்வாறான புள்ளியிலும் தனித்து நின்று ஆளுமை செலுத்தும் வல்லமையை கூட்டமைப்பு வளர்த்துக் கொள்ள வேண்டும். அது, தென்னிலங்கையின் அரசாங்கங்களிலிடமிருந்து, ஒவ்வொன்றாகவேனும் எமது அதிகாரங்களை பறித்தெடுக்கும் அளவுக்கானதாக இருக்க வேண்டும். 

தேசிய அரசாங்கமொன்றினூடாக நாட்டின் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்று அதிகமாக நம்பியவர்களில் சம்பந்தன் முதன்மையானவர். அடுத்தவர் எம்.ஏ.சுமந்திரன். அதற்காக அவர்கள் காட்டிய ஈடுபாடும் அளப்பரியது. அதனாலேயே, அவர்கள் இருவரும் அரசியல் - ஊடக வெளியில் அதிகமாக விமர்சிக்கப்பட்டார்கள். தற்போதுள்ள நிலையில், ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கும் நிலைக்கு சம்பந்தனோ, சுமந்திரனோ கூட்டமைப்பினைக் கொண்டு செல்ல மாட்டார்கள் என்பது வெளிப்படையானது.

குறிப்பாக, மேற்கு நாடுகளின் ஆசிபெற்ற ரணிலின் பிரதமர் பதவிக்கு சிக்கல் ஏற்படுத்தி மஹிந்த ஆளுமை செலுத்தும் அரசாங்கமொன்று உருவாவதை அவர்கள் செய்ய மாட்டார்கள். ஆனால், கிடைத்த சந்தர்ப்பத்தை சில விடயங்களையாவது பெறுவதற்கான கட்டமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதே அநேகரின் எதிர்பார்ப்பு. 

தன்னுடைய பதவியைக் காப்பாற்றுவதற்காக ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைக் கொண்ட ஈ.பி.ஆர்.எல்.எப்.போடு நேரடியாகப் பேச்சு நடத்துவதற்கே ரணில் தயாராக இருக்கின்றார். அவ்வாறான நிலையில், 15 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டமைப்பு ரணிலிடம் எவ்வாறான வாக்குறுதிகளைப் பெற்றுக்கொள்ளப் போகின்றது என்பதுவும், அதனை மக்களிடம் எப்படி எடுத்துச் செல்லப் போகின்றது என்கிற விடயமும் முக்கியமானது. ஏனெனில், சந்தர்ப்பங்களைக் கையாள்வது சார்ந்து தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் முதிர்ச்சியற்ற தன்மை காணப்படுகின்றது என்கிற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக உண்டு. அவ்வாறான நிலையில், சம்பந்தனும் சுமந்திரனும் தங்களது அரசியல் முதிர்ச்சியையும், தீர்க்கதரிசனத்தையும் வெளிப்படுத்த வேண்டிய தருணமாக இது இருக்கின்றது. 

ஜனாதிபதியோடும் பிரதமரோடும் சம்பிரதாயத்துக்காக பேச்சுவார்த்தையொன்றை நடத்திவிட்டு கடந்த மூண்டு ஆண்டுகளாக வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவளித்து வந்தது போல, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கையாள்வதை கூட்டமைப்பு தவிர்க்க வேண்டும். ஏனெனில், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கூட்டமைப்பு மீது மக்கள் வெளிப்படுத்திய அதிருப்தி என்பது இவ்வாறான அசண்டையீன அரசியலின் போக்கினாலும் எழுந்தது. அதாவது, புதிய அரசியலமைப்பினூடாக தேசியப் பிரச்சினைகளுக்கான தீர்வினை எட்ட முடியும் என்ற ஒரே குறிக்கோளினால், தென்னிலங்கையின் அனைத்து இழுவைக்கும் இசைந்து கொடுத்த நிலை என்பது, தமிழ் மக்களை குறிப்பிட்டளவு எரிச்சற்படுத்தியது. புதிய அரசியலமைப்புக்கான வாய்ப்புக்கள் தற்போதைக்கு இல்லை என்கிற நிலையில், சில கடிவாளங்களையாவது கூட்டமைப்பு போட வேண்டும். அதன்மூலம், எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியிலிருந்தாலும் நன்மைகளைப் பெறக்கூடியதாக இருக்க வேண்டும். 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை சஜித் பிரேமதாசவிடம் செல்லும் பட்சத்தில், ஆட்சித் தலைமைக்குள் மைத்திரியுடன் ரணில் குழப்பகரமான கட்டத்துக்குள் இன்னும் மோசமாகச் சிக்கிக்கொள்வார். அவ்வாறான நிலையில், எதிர்காலத்திலும் ரணிலை காப்பாற்றுவதற்கான கட்டங்கள் கூட்டமைப்புக்கு ஏற்படலாம். அவ்வாறான நிலையில், இனி வரப்போகும் இரண்டு வருடங்கள் என்பது தேர்தல் அரசியல் ரீதியில் மாத்திரமல்ல, அதிகார அரசியல் சார்ந்தும் ஓய்வெடுக்காமலும், சளைக்காமலும் ஆட வேண்டிய அரங்கொன்று கூட்டமைப்பின் முன்னால் திறந்துவிட்டிருக்கின்றது. 

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் கண்ட பின்னடைவை, ஆட்சியமைக்கும் கட்டங்களில் கூட்டமைப்பு கடந்து விட்டதாகக் கொள்ள முடியும். ஆனால், சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் பேரவை என்பன ஓரணியில் இணையும் பட்சத்தில் பெரும் குடைச்சல் காத்திருக்கின்றது. அந்தக் குடைச்சலில் இருந்து தப்பி, தமிழ்த் தேசிய அரசியலில் தனக்கான முதன்மையிடத்தை தக்க வைத்தல் என்பது இப்போது திறந்துள்ள அரங்கில் ஆடப்போகும் ஆட்டத்தினைப் பொறுத்தே அமையும். 

பூமாதேவியை மீறிய பொறுமையோடு சம்பந்தனும், சுமந்திரனும் காத்திருந்த போதும் அரசியல் தீர்வுக்கான கட்டங்களை தென்னிலங்கை அனுமதிக்கவில்லை. அவ்வாறான நிலையில், பொறுமையைத் துறந்து, எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் துறந்து நின்று ஆக்ரோசமான அரசியலை தென்னிலங்கையோடு ஒவ்வொரு கட்டத்திலும் செய்ய வேண்டும். அதுதான், வீழ்ந்துபோன கூட்டமைப்பின் மீதான நம்பிக்கையை தமிழ் மக்களிடம் வளர்க்கவும் உதவும்.

- புருஜோத்தமன் தங்கமயில்

Comment (0) Hits: 1460

மீண்டும் தோல்வியுற்ற பெண் பிரதிநிதித்துவம்!

 
- என்.சரவணன் -
 
புதிய தேர்தல் சட்டம் பெண்களுக்கு 25% வீத பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்வதில் தோல்வி கண்டிருகிறது. இதனை தேர்தல் ஆணையாளரின் அறிக்கையும், 25% பிரதிநிதித்துவத்திற்காக இதுவரை போராடி வந்தவரும், கொழும்பு மாநகரசபையின் முதலாவது பெண் மேயராக தெரிவு செய்யப்பட்டிருப்பவருமான ரோசி சேனநாயக்கவின் அறிக்கையும் கூட உறுதி செய்திருக்கிறது.
 
நாட்டின் சனத்தொகையில் 52% சதவீதம் பெண்களாக இருந்தும் கூட தற்போதைய பாராளுமன்றத்தில் 5.8% வீதத்தினர் மட்டும் தான் பெண்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். அதாவது 94.2% ஆண்களிடம் கைகளிலேயே அரசியல் அதிகாரம் குவிந்திருக்கிறது. இந்த நிலைமையை மாற்றுவதற்காகாக கிட்டத்தட்ட 20 ஆண்டுகாலமாக போராடி பெற்ற சட்டம் தான் 25% வீத பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிபடுத்தும் புதிய தேர்தல் திருத்தச் சட்டம். சனத்தொகையில் அதிகமாக இருந்தும் குறைந்தபட்சம் சரிபாதி பிரதிநிதித்துவத்தைக் கூட பெண்கள் கோரவில்லை. பல சிவில் அமைப்புகள், பெண்கள், அமைப்புகள், ஜனநாயக சக்திகள் இணைந்து மேற்கொண்ட நெடுங்கால போராட்டத்தின் விளைவாக பெற்ற 25% பிரதிநிதித்துவ ஏற்பாடு இப்போது காணலாக ஆகியிருக்கிறது.
 
சட்டத்தில் ஓட்டை
 
புதிய சட்டத்திற்கு அமைய அரசியற்கட்சி ஒன்றிலிருந்து தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை “தொங்குநிலைக்கு” காரணமாகித் தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமாயின் அதில் பெண் உறுப்பினர்கள் எவரும் உள்ளடங்கவில்லையெனின் ஒதுக்கீட்டை நிறைவேற்றும் பொறுப்போ கட்டாயமோ அரசியற் கட்சிக்கு இல்லை.
 
அதேபோன்று அரசியற்கட்சி ஒன்று அல்லது சுயாதீனக்குழுவொன்று உள்ளூராட்சி சபையில் 20வீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்றிருப்பின் மூன்று உறுப்பினர்களை விடக் குறைவானவர்களுக்குத் தகுதிபெற்றிருப்பின் பெண்களுக்கான 25வீத ஒதுக்கீட்டை நிறைவேற்றுவதில் இருந்து அவர்களும் விலக்குப்பெறுவர்.
 
2017ஆம் ஆண்டு 6ஆம் இலக்க உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தம்) சட்டத்தின் பிரிவு 25இன் படி ஏதேனும் ஒரு அரசியற்கட்சி அல்லது சுயாதீன குழுவில் இருந்து அனைத்து சபைகளுக்கும் தெரிவு செய்யப்பட்ட பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை, 25வீத ஒதுக்கீட்டை விட குறைவாக இருப்பின், உறுப்பினர்களின் எண்ணிக்கையின் குறைநிரப்பை “முதலாவது வேட்புமனுப் பத்திரம் அல்லது மேலதிக வேட்புமனுப் பத்திரத்தில் உள்ள பெண் வேட்பாளர்களில் இருந்து திருப்பி வழங்கப்படல் வேண்டும்…
 
தற்போது பெண்களின் பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு ஏதுவான நியாயங்களை கட்சித்தலைவர்கள் தேர்தல் ஆணையாளரிடம் வேண்டுகோளாக முன்வைத்து குறைக்கும் வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது அப்பட்டமாகத் தெரிகிறது. இதுவோர் அப்பட்டமான ஜனநாயக மீறல் மட்டுமன்றி சட்டமீறலும் கூட. புதிய தேர்தல் சட்டத் திருத்தத்தின் படி (பிரிவு 27 ஊ (1)) ஒவ்வொருஉள்ளூர் அதிகார சபைகளிலும் 25வீதம் பெண்கள் உள்ளடங்கியிருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருப்பதை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும்.
 
சவால்களுக்கு மத்தியில்
 
பல்வேறு சமூக கலாசார தடைகளையும் மீறி இம்முறை வரலாற்றில் முதற்தடவையாக அதிகபட்ச பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டிருக்கிறார்கள்.
 
அவர்களை போட்டியிடவிடாமல் தடுப்பதற்கு பல்வேறு சக்திகள் இயங்கின. குறிப்பாக மத நிறுவனங்கள் கூட கடுமையாக எதிர்த்தன. அவர்கள் அரசியலுக்கு பழக்கப்படவில்லை என்றார்கள். எங்கள் “பெண்களை அவர் பாட்டில் இருக்க விடுங்கள்”, “பொது மகளிர் ஆக்கிவிடாதீர்கள்...” என்று 90 வருடங்களுக்கு முன்னர் இதே கருத்துக்களை 1920களில் சர்வஜன வாக்குரிமைக்கான கோரிக்கைக்காகப் போராடியவேளை அன்றைய ஆணாதிக்கக் கும்பல் கூறியது. வாக்குரிமையைப் போராடி வெல்லவும் செய்தனர் நமது பெண்கள். ஆனால் இன்று; இலங்கையின் பெண்கள் இன்று மிகப் பெரும் ஆளுமை மிகுந்தவர்கள் என்பதை சகல துறைகளிலும் நிரூபித்து வந்திருக்கிறார்கள்.
 
பெண்கள் அரசியலில் ஈடுபட ஆண்களை விட அதிகமான சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டிய நிலை தொடர்ச்சியாக நிலவுகிறது. இரட்டைச்சுமை பழு, அவமானங்கள் என்பவற்றைக் கடந்து துணிந்து களத்தில் இறங்கினால் ஆண்களைப் போல பணச் செல்வாக்கில்லை, சண்டியர்கள் இல்லை, பயணங்கள், பிரச்சாரங்கள் என்பவற்றை செய்வதில் ஆண்களுக்கு இல்லாத கஷ்டங்கள். பெண்கள் மத்தியில் கூட பெண் வேட்பாளரை ஆதரிக்க வேண்டியது ஏன் என்கிற புரிதலின்மையால் பெண்களின் ஆதரவும் நினைத்த அளவு கிடைப்பதில்லை. இத்தனை சவால்களையும் மீறி நம் நாட்டுப் பெண்கள் களத்தில் போராடியிருக்கிறார்கள்.
 
ஏன் எமக்கு பயமா?
 
வேட்பாளர் பட்டியலில் 25% வீத பெண்களை சேர்க்குமளவுக்கு தம்மிடம் சக்திமிக்க பெண்கள் இல்லை என்று பல அரசியல் கட்சிகள் வாதிட்டன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதற்கு பதிலளிக்கும் போது “இனி எந்த ஒரு கட்சியும் தம்மிடம் அந்தளவு அரசியல் ரீதியில் வளர்ந்த பெண்கள் இல்லையென்று மறுத்துவிட முடியாது. இப்போது ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது அதன்படி அவர்கள் குறைந்தபட்சம் 25%வீத பெண்களை இணைத்துத் தான் ஆகவேண்டும். கண்டுபிடியுங்கள்” என்று ஊடகங்களுக்குக் கூறினார்.
 
குறைந்தபட்சமாக 25% பெண்களை வேட்பாளர் பட்டியலில் இணைத்தே ஆகவேண்டும் என்கிற யோசனையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த 2016 பெப்ரவரி மாதம் 09ஆம் திகதி பலத்த சலசலப்புகளின் மத்தியில் பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்தார்.
 
அதுபோல 25% அம்சம் உள்ளடங்கிய சட்ட மூல யோசனையை பாராளுமன்றத்தில் கொண்டுவந்தபோது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியச் சேர்ந்த எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் எதிர்த்து குரல் எழுப்பினர். இதை எதிர்கொள்ளும் விதமாக ஆளுங்கட்சியைச் சேர்ந்த பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கடந்த செப்டம்பர் 20 அன்று “எய் பயத?” (ஏன் பயமா?) என்கிற தலைப்பில் பதாகைகளை சுமந்துகொண்டு வந்து பாராளுமன்றத்தில் உயர்த்திப் பிடித்தபடி அமைதியாக போராடினர்.
 
“பெண்களுக்கு இடமளியுங்கள்”, “பெண்களுக்கு இடமில்லையா”, “ஏன் எங்களுக்கு பயமா?” என்பது போன்ற கோஷங்களை அடங்கிய போஸ்டர்களை அவர்கள் பார்வைக்கு வைத்திருந்தனர். பெண்கள் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார, பிரதி அமைச்சர் விஜகலா மகேஸ்வரன், எண்ணெய்வள பிரதி அமைச்சர் அனோமா கமகே, நகர திட்டமிடம் பிரதி அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே, சுற்றுச்சூழல் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுமேதா ஜயசேன ஆகியோர் இந்த எதிர்ப்பில் கலந்துகொண்டனர்.
 
சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே இந்த வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை பாராளுமன்றத்தில் ஏனைய ஆண்களுக்கும் விநியோகித்தார். அன்றைய தினம் இத்தனை சிக்கல் மத்தியில் அது நிறைவேற்றப்பட்டது. ஆனால் எதிர்ப்பு வாக்குகள் இன்றி 9.10.2017 அன்று பாராளுமன்றத்தில் புதிய உள்ளூராட்சி சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது.
 
ஆசியா, அவுஸ்திரேலியா கண்டங்களை எடுத்துக் கொண்டால் சர்வஜன வாக்குரிமையை பயன்படுத்திய முதல் பெண்கள் இலங்கைப் பெண்களாவர்.
 
அரசியல் ரீதியில் வளர்ச்சியுற்ற பெண்களைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறது என்று காரணம் கற்ப்பித்தார்கள். தேர்தல் காலத்தில் ஆண்களுக்கு நிகராக வன்முறைகளை சமாளிக்க மாட்டார்கள் என்றார்கள். ஆணாதிக்க சூழலை எதிர்கொண்டு தாக்குபிடித்து தலைமை தாங்க மாட்டார்கள் என்றார்கள். ஆண்களைப் போல பகலிலும், இரவிலுமாக பணிபுரியும் இயல்பு அவர்களுக்கு இல்லை என்று காரணங்களை அடுக்கிக் கொண்டு போனார்கள். ஆனால் உலகில் இந்த நிலைமைகளை எதிர்கொண்டு தான் பெண்கள் தமது பிரதிநிதித்துவத்தையும், தலைமையையும் உறுதி செய்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் மறந்து போனார்கள்.
 
இறுதியாக நடந்த 2015 பொதுத்தேர்தலில்  6151 வேட்பாளர்களில் 556 பெண்கள் மாத்திரமே போட்டியிட்டிருந்தனர். அது மொத்த வேட்பாளர்களில் 9 வீதமாகும். 2012 இல் மாகாணசபைகளில் பிரதிநிதித்துவம் வகித்த பெண்களின் வீதம் 4% மட்டுமே.
 
இறுதியாக இருந்த உள்ளூராட்சி மன்றங்களில் 1.9% பிரதிநிதித்துவமே காணப்பட்டது. அந்த நிலையை மாற்றும் முனைப்புடன் புதிய சட்டத்தையும், ஜனநாயக அமைப்பு முறையையும் நம்பி களத்தில் இறங்கிய அவர்களுக்கு இப்போது ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது புதிய நிலைமை.
 
 
ஆணாதிக்க பாராளுமன்றத்தின் அசட்டை
 
கடந்த 15ஆம் திகதியன்று தேர்தல் ஆணையாளர் மகிந்த தேஷப்பிரிய கூட்டிய ஊடக மாநாட்டில் குறிப்பிடும் போது;
 
“உதாரணத்திற்கு அம்பலாங்கொட பிரதேசசபை 20 ஆசனங்களைக் கொண்டது. 5 பெண்கள் தெரிவாக வேண்டும். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நகரசபைக் கைப்பற்றியது. அவர்கள் மொத்தம் 10 ஆசனங்களைப் பெற்றார்கள். ஐ.தே.க. – 7, ஐ.ம.சு.முன்னணி 3, ஜே.வி.பி – 1.
இதில் பொ.ஜ.பெ இரண்டு பெண்களை நியமித்ததாக வேண்டும். ஆனால் ஒருவர் தான் தொகுதியில் வென்றிருப்பதாகவும் மேலதிக பட்டியலில் இருந்து இன்னொரு பெண்ணைத் தெரிவு செய்ய முடியாது இருக்கின்றனர். அதற்குப் பதிலாக ஏனைய கட்சியில் இருந்தேனும் 25% கோட்டாவை நிரப்பியாகவேண்டும். ஐ.தே.க அல்லது ஐ.ம.சு.முன்னணி முன்வந்தால் தான் உண்டு.”
 
இது போன்ற நடைமுறைச் சிக்கல்களை சட்ட உருவாக்கத்தின் போது நுணுக்கமாக கவனிக்கத் தவறியிருக்கிறார்கள் சட்டவுருவாக்கத்தில் ஈடுபட்ட கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும். இது பெண்களின் பிரதிநிதித்துவத்தில் இருக்கும் அசட்டை என்பதைத் தவிர வேறென்ன கூற முடியும்.
 
இனி அடுத்ததாத செப்டம்பரில் மாகாண சபைகள் தேர்தலுக்காக இந் நாடு காத்திருக்கிறது. அதற்கு முன்னராவது இந்த சிக்கல்கள் தீர்க்கப்பட்டு பெண்களுக்கு நீதி கிடைக்குமா என்பது தான் இன்று எஞ்சியிருக்கும் கேள்வி.
Comment (0) Hits: 383