V2025

ஐ.தே.கவின் ஊடுருவலை வன்மையாக கண்டிக்கின்றோம்

நெருக்கடி ஏற்படும்போது கூட்டமைப்பின் ஆதரவை கோரும் ஐக்கிய தேசியக் கட்சி சந்தர்ப்பம் கிடைக்கும் போது தம்மை புறந்தள்ளி வடக்கு - கிழக்கில் தமிழ் மக்களின் தலைமையை நேரடியாகக் கைப்பற்ற முனையும் ஊடுருவல் நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாக, யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் விசனம் வெளியிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையானது, தமிழர் தாயகத்தின் எல்லைப் பகுதிகளைச் சிங்கள மயமாக்கும் நயவஞ்சக ஆக்கிரமிப்பு முயற்சியின் ஒரு பகுதியே என்றும் அவர் சாடியுள்ளார்.

வவுனியா நகரசபை ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி நடந்துகொண்ட முறையைக் கண்டித்து வெளியிட்ட அறிக்கையிலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில்,

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின்படி வவுனியா நகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடுதலான ஆசனங்களைக் கைப்பற்றியிருந்த போதிலும், அவை ஆட்சியமைப்பதற்குப் போதுமானதாக இருக்கவில்லை.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் கூட்டமைப்பு ஆட்சியமைக்க ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், வவுனியாவிலும் ஆதரவு வழங்கும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது.

ஐ.தே.கவின் ஆட்டிப்படைக்கும் நோக்கம்

ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி தங்களைவிடக் குறைந்த ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஆதரவு வழங்கி, ஈ.பி.டி.பியின் ஆதரவுடன் ஆட்சி அதிகாரத்தில் அவர்களை அமர்த்தியுள்ளது.

இந்த நடவடிக்கையானது, பெயரளவில் தமிழர் விடுதலைக் கூட்டணியினரை அதிகாரத்தில் கொண்டு அவர்களைத் தங்கள் பெரும்பான்மை மூலம் ஆட்டிப்படைக்கும் உள்நோக்கம் கொண்டதென்றே நாம் நம்புகிறோம்.

கடந்த காலத்தில் வரவு - செலவுத் திட்டம், தலைமை அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் போன்ற விடயங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது ஆதரவை கூட்டு அரசுக்கு உறுதியாக வழங்கியிருந்தது.

இந்த  ஆதரவானது, ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு வழங்கப்பட்டதல்ல. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு புதிதாக உருவாக்கப்படும் அரசமைப்பின் மூலம் சில சாதகமான வாய்ப்புக்களை உருவாக்க முடியுமென்ற அடிப்படையில் கூட்டு அரசின் உறுதித் தன்மையை சீர்குலையாமல் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே வழங்கப்பட்டதாகும்.

அதே நோக்கத்துக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல விடயங்களில் அரசுக்குக் கடும் அழுத்தங்களைக் கொடுக்கவில்லை என்பதை நாம் மறுக்கவில்லை.

பலனை அனுபவிக்கிறோம்

அதன் காரணமாக, கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் பின்னடைவைச் சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.

அதன் காரணமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழர் விடுதலைக் கூட்டணி ஈ.பி.டி.பி. மட்டுமின்றி ஐக்கிய தேசியக் கட்சி சிறிலங்கா சுதந்திரக் கட்சி கூட உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கில் பல ஆசனங்களை வெற்றிகொள்ள முடிந்தது.

அந்த வகையில், வவுனியா நகர சபையில் அதிக ஆசனங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற போதிலும், ஆட்சியமைக்கும் அளவுக்கு அதிகாரத்தைப் பெறமுடியவில்லை.

இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவளிக்க வேண்டிய தார்மீகக் கடமை ஐக்கிய தேசியக் கட்சிக்கு உண்டு. ஆனால் அவர்களோ பலவீனமான தமிழர் விடுதலைக் கூட்டணியை அதிகாரத்தில் அமர்த்தியதன் மூலம் நகரசபையின் ஆதிக்கத்தைத் தங்கள் கைக்குள் கொண்டு வந்துள்ளனர்.

குடியேற்றங்கள்

தமிழர் தாயகத்தின் எல்லைகளில் பல்வேறு சட்டபூர்வமான சட்டபூர்வமற்ற சிங்களக் குடியேற்றங்களை அமைப்பது, அதன் மூலம்  அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது, அந்த அதிகாரத்தைப் பாவித்து மேலும் குடியேற்றங்களை விரிவாக்குவது, இந்த வழிமுறைகள் மூலம் அந்தப் பிரதேசங்களை முழுமையாகச் சிங்களமயப்படுத்துவது என்பது இலங்கையின் ஆட்சியாளர்கள் காலங்காலமாகப் பின்பற்றி வரும் நயவஞ்சகமான தந்திரோபாயமாகும்.

அந்த நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகவே, ஐக்கிய தேசியக் கட்சி வவுனியா நகர சபையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தள்ளது. இதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.டி.பியினர் ஆகியோரும் துணைபோகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பலமாக இருந்தே ஆதரவு பெற்றோம்

அப்படியானால், உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏனையோரின் ஆதரவைப் பெறவில்லையா என்ற கேள்வி எழுப்பப்படலாம்.

நாம் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவைப் பெற்றோம். வேறு கட்சிகளின் ஆதரவையும் பெற்றோம். இதில் ஈ.பி.டி.பியின் ஆதரவைப் பெற்றமை தொடர்பாக எமக்குள் கருத்து முரண்பாடு உண்டு என்பதைச் சகலரும் அறிவார்கள். ஆனால் எவரின் ஆதரவைப் பெற்றபோதும் நாம் பலமான நிலையில் இருந்து கொண்டு எவரும் எம்மை வழி நடத்தமுடியாத நிலையிலேயே இருந்து கொண்டே அதிகாரங்களைக் கைப்பற்றினோம் என்பதே முக்கியமான விடயம்.

கந்தளாய், சேருவில, அம்பாறை, மணலாறு போன்ற பல பகுதிகள் மேற்கண்ட வழிமுறைகள் மூலம் சிங்கள மயப்படுத்தப்பட்டன. மேலும் சிங்களமயம் விரிவாக்கப்படுகின்றது என்பதை நாம் மறந்துவிட முடியாது. வவுனியா வடக்கின் நுழைவாயிலான வவுனியா மாவட்டத்தின் பிரதான நகரமாகும். இது சிங்களமயப்படுத்தப்படுவது எவ்வளவு பேராபத்தானது என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.

வவுனியா மக்கள் சிங்களமயமாக்கலுக்கு எதிராக விழிப்புடன் செயற்பட்டு வரக்கூடிய பேராபத்தைத் தவிர்க்க வேண்டும்.

ஏற்கனவே சிங்கள அரசியல் அதிகாரிகள் சில சிங்களக் குடியேற்றங்கள், எல்லைக் கிராம ஆக்கிரமிப்புக்கள், இராணுவ முகாம்கள், பௌத்த விகாரைகள் என்பன மூலம் சிங்களமயப்படுத்தலுக்கான அத்திவாரம் அமைக்கப்பட்டது. நகரசபை மூலம் அவற்றை மேலும் முன்னெடுக்கும் ஆபத்து உண்டு.

தமிழ் மக்களும் தமிழ் அரசியல்வாதிகளும் பேதங்களை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு இந்த விடயத்தில் விழிப்புடன் செயற்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found