நாட்டில் மக்களுக்கு உணவுப்பஞ்சம் ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள வரிசையில் நின்று போராடிக்கொண்டுள்ள நிலையில் அதற்கான தீர்வுகளை முன்வைக்காது நிலவைப் பிடிக்கும் கதைகளை கூறுவது போன்று ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை அமைந்துள்ளது என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக சபையில் தெரிவித்தார்.
அரசியல் சுய நலன்களுக்காக மக்களை தூண்ட வேண்டாம் என கூற ராஜபக்ஷவினருக்கு எந்தத் தகுதியும் இல்லை எனவும் அவர் கூறினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19), ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் தெரிவித்ததானது,
ஜனாதிபதி ஒருவர் பாராளுமன்ற மூலாசனத்தில் அமர்ந்திருந்து ஆற்றும் உரையை அக்கிராசன உரையென கூறுவோம். ஏனென்றால் அந்த உரை மிகவும் முக்கியமானதாக அமைந்திருக்கும்.
அவ்வாறு ஆற்றும் உரையில் பொறுப்புக்கூறல் மற்றும் பெறுமதி இருக்கும். ஆனால் இதற்கு முன்னரும் இரண்டு தடவைகள் ஜனாதிபதி சபையில் உரையாற்றியுள்ளார்.
ஆனால் இரண்டு ஆண்டுகளில் அவர் கூறிய எதுவுமே உறுதியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. காலை ஒன்றும் பின்னேரம் ஒன்றையும் கூறுவார், வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்படும் பின்னர் அது திருத்தப்படும்.
இவ்வாறு எந்தவித உருப்படியான தீர்மானமும் எடுக்காது இரண்டு ஆண்டுகள் கடத்தப்பட்டுள்ளன.
அடுத்த மூன்று ஆண்டுகளில் சிறப்பாக செய்து காட்டுவேன் என கூறுகின்றார். ஆனால் நேற்று அவரது உரையில் மக்களுக்கு எந்த நன்மையும் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகள் இல்லை என்பது தெட்டத்தெளிவாக வெளிப்பட்டுள்ளது.
மார்ச் மாதத்தில் உணவு தட்டுப்பாடு, மின் தட்டுபாடு, எரிபொருள் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு, வெளிநாட்டு கையிருப்பு தட்டுப்பாடு ஏற்படப்போகின்றது. இதற்கு என்ன தீர்வு என்ற எதனையும் ஜனாதிபதி கூறவில்லை. இந்த நாட்டில் ஒரு வேலை உணவுக்காக கஷ்டப்படும் மக்கள் குறித்து ஒரு வார்த்தையேனும் கூறாது நிலவை பிடிக்கும் கதையாகவே அமைந்திருந்தது.
அரசாங்கத்திற்கு எதிராக பாடல் உருவாக்கியவர்களை, ஈஸ்டர் தாக்குதலுக்கு நியாயம் கேட்ட நபர்களை, ஜனாதிபதிக்கு எதிராக விமர்சனக் கருத்துக்களை முன்வைத்தவர்களை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் எரிவாயு வெடிப்புக்கு காரணமானவர்களை, சீனாவில் இருந்து குப்பை உரத்தை கொண்டுவந்தவர்களை, ஒன்றுக்கு நான்கு மடங்கு வீதத்தில் இந்தியாவில் இருந்து உரம் இறக்குமதி செய்தவர்களை ஏன் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கொண்டுசெல்லவில்லை. இதுதான் ஜனாதிபதியின் வேலைத்திட்டமாக அமைந்துள்ளது.
நாட்டில் ஏற்பட்ட சகல நெருக்கடிக்கும் கொரோனாவே காரணம் என கூற முயற்சிக்கின்றனர், ஆனால் எம்மை விடவும் கீழ்மட்டத்தில் இருந்த நாடுகள் கொவிட் காலத்தில் முன்னேறியுள்ளனர்.
இங்கு தடுப்பூசியிலும் ஊழலே இடம்பெற்றது. அரசியல் சுய நலன்களுக்காக மக்களை தூண்ட வேண்டாம் என அவர் கூறினார், ஆனால் அதனை கூற ராஜபக்ஷவினருக்கு தகுதி இல்லை.
அரசியல் தேவைக்காக இனவாதத்தையும் அடிப்படைவாதத்தையும் தூண்டி மக்களை குழப்பி செயற்பட்டது யார் என்பதை புதிதாக கூற வேண்டியதில்லை. அவர்கள் உருவாக்கிய பாதையில் இன்று அவர்களுக்கே நெருக்கடி ஏற்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.