Nilavaram.lk
உலக தமிழர்களின் உண்மை குரல்

ஜனாதிபதியின் கோபமான உரையைவிட அவரது ஆட்சியால் மக்கள் கோபமடைந்திருக்கின்றனர் – முஜிபுர் ரஹ்மான்

0 1

நாட்டில் சகோதரர்களின் ஆட்சியே இடம்பெறுகின்றது. என்றாலும் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லாததால் முறையான தீர்மானம் எடுக்க முடியாத நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் கோபமான உரையைவிட அவரது ஆட்சியால் மக்கள் கோபமடைந்திருக்கின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மீரிகம அதிவேக பாதை நிர்மாண வேலையில் 80 வீதம் எமது ஆட்சிக்காலத்தில் நிறைவடைந்திருந்தது. 

என்றாலும் இந்த வீதியை மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்றும்போது வழமைக்கு மாறாக மிகவும் கோபத்துடனும் ஆவேசமாகவும் உரையாற்றுவதை காணமுடிந்தது. 

அவரது கோபத்துக்கு மக்கள் எதனையும் செய்யவில்லை. ஆனால்  அவரது கடந்த இரண்டு வருட ஆட்சி காரணமாக மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். 

காஸ், மால்மா, எரிபொருள் என அனைத்துக்கும் வரிசையில் இருக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதனால் ஜனாதிபதியின் கோபத்தைவிட மக்கள் அவர்மீது கோபமாக இருக்கின்றனர் என்பதை ஜனாதிபதி உணர்ந்துகொள்ளவேண்டும்.

அத்துடன் ஊழல் மோசடிகளை ஒழிப்பதாகவே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. அதேபோன்று மக்களுக்கு பல வாக்குறுதிகளை அரசாங்கம் அளித்திருந்தது. 

மக்களும் இந்த அரசாங்கம் மீது பாரியளவில் நம்பிக்கை வைத்திருந்ததனர். ஆனால் ஜனாதிபதியின் அமைச்சரவையில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் தொடர்பில் அவர் இதுவரை கண்டுகொள்ளவில்லை. 

நாடு இந்த நிலைக்கு வங்குரோத்து அடைவதற்கு அதுவே காரணம். இந்த ஊழல் மோசடிகளுக்கு எதிராக அப்போது ஜனாதிபதி நடவடிக்கை எடுக்காமல் தற்போது கோபப்பட்டு பயனில்லை. அவரது 2 வருட ஆட்சியின் தோல்வியே அவரது ஆவேசமான பேச்சு காட்டுகிறது.

மேலும் நாட்டை ஆட்சி செய்வது சகோதரர்களாகும். அப்படி இருந்தும் ஒரு தீர்மானத்தை முறையாக அவர்களால் எடுக்கமுடியாமல் இருக்கின்றது. 

குறிப்பாக காஸ் பிரச்சினைக்கு இன்னும் முறையான தீர்வு இல்லை. காஸ் சிலிண்டரின் கலவையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக காஸ் சிலிண்டர் தீ பிடித்து இதுவரை 7மரணங்கள் பதிவாகி இருக்கின்றன. 

சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டிருக்கின்றன. இது தொடர்பான எந்தவித விசாரணைகளும் இல்லை.

சிஐடிக்கு பல முறைப்பாடுகள் வந்தாலும் சிஐடி வாக்கு மூலம் கோர அழைத்தும் லிற்ராே நிறுவன அதிகாரிகள் இது வரை சமுகமளிக்கவில்லை.

எவ்வாறாயினும், கடந்த ஒருவாரத்துக்கு முன்னர் கம்பஹா பிரதேசத்தில் இயந்திர கோளாறு காரணமாக  தனியார் விமானம் விபத்துக்குள்ளானதைக் கண்டோம்.

 விபத்துக்குள்ளான 24 மணி நேரத்திற்குள், தனியார் விமான நிறுவனத்தின் இரண்டு அதிகாரிகளை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர், 

ஆனால் மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்ப்படுத்தும் எரிவாயு நிறுவனமான லிட்ரோ மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்கிறோம். 

அத்துடன் நாட்டில் சகோதரர்களின் ஆட்சியே இடம்பெறுகின்றது. என்றாலும் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லாததால் உறுதியான தீர்மானம் எடுக்கமுடியாமல் இருக்கின்றது.

லிற்ரோ நிறுவனத்தின் தலைவர் நியமனத்தில் ஜனாதிபதிக்கும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ்வுக்கும் பனிப்போர் இடம்பெற்று வருகின்றது. 

ஆரம்பத்தில் இதன் தலைவராக பசில் ராஜபக்ஷ்  ஒருவரை நியமித்து சில மாதங்களில் அவர் நீக்கப்பட்டார். 

அதன் பின்னர் ஜனாதிபதியால் தற்போதுள்ள தலைவர் நியமிக்கப்பட்டார். கடந்த 3 தினங்களுக்கு முன்னர் தற்போதுள்ள தலைவர் நீக்கப்பட்டு புதிய தலைவர் பசில் ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகின.

ஆனால் அன்றைய தினம் ஜனாதிபதி திடீரென லிற்ரோ நிறுவனத்துக்குசென்று திரும்பிய பின்னர் தற்போதுள்ள தலைவர் தொடர்ந்தும் பதவி வகிப்பார் என்ற செய்தி வெளிவந்தது.  

அண்ணன் செய்வது தம்பிக்கு தெரியாது. இதுதான் நாட்டில் இருக்கும் பிரச்சினைக்கு பிரதான காரணம். 

சகோதரர்களுக்கிடையில் தீர்மானம் எடுக்க முடியாதளவுக்கு பிரச்சினை தீவிரமடைந்திருக்கின்றது. ராஜபக்ஷ் ஆட்சி இன்று மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதையே இது காட்டுகிறது என்றார்.

Leave A Reply

Your email address will not be published.