Nilavaram.lk
உலக தமிழர்களின் உண்மை குரல்

2022 – ஈழத் தமிழர் அரசியல் ? யதீந்திரா

0 25

நாலடியாரில் ஒரு கூற்றுண்டு. அதாவது, கழிந்து செல்லும் நாட்கள் அனைத்தும் உனது வாழ்நாளாகும். நமது அரசியலுக்கும் இது பொருந்துமா? ஏனெனில் ஒரு அரசியல் போராட்டத்தில் – ஆண்டுகள் கழிகின்ற போது, நத ஆண்டுக்கான அடைவுகளை மக்கள் காணவேண்டும். ஆனால் ஈழத் தமிழ் தேசிய அரசியலை பொறுத்தவரையில், அடைவுகள் எப்போதுமே எட்டாக் கனியாகவே இருக்கின்றது. வரலாம் – நடக்கலாம் – நடக்கூடும் – இப்படியான சொற்களோடு, பன்னிரெண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்படி ஒவ்வொரு ஆண்டும் கழிந்து செல்கின்ற போது, தமிழர் அரசியலில் எவ்வித முன்னேற்றங்களும் பதிவாகவில்லை ஆனால் பல்வேறு விடயங்கள் நடக்கின்றன – நடப்பதாக காண்பிக்கப்படுகின்றன. இந்த அடிப்படையில் சிந்தித்தால், கழிந்து செல்லும் ஒவ்வொரு ஆண்டும், ஈழத் தமிழர் அரசியலின் வீழ்ச்சியை விரைவுபடுத்தும் ஆண்டுகளா?

இலங்கையின் மீதான சர்வதேச அழுத்தங்களுக்கான பிள்ளையார் சுழியிடப்பட்டு, இந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் பத்து வருடங்கள் பூர்த்தியடைகின்றது. 2012இல், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கையின் மீதான முதலாவது பிரேரணை, அமெரிக்க ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இது அப்போது அமெரிக்க பிரேரணை என்றே பரவலாக அழைக்கப்பட்டது. அப்படி பார்த்தால் அமெரிக்கா, இலங்கை விவகாரத்தில் தலையீடு செய்து பத்துவருடங்களாகின்றது.

இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக் கூறல், என்னுமடிப்படையில்தான், இந்த ஆழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. இப்போதும் தொடர்கின்றன. ஆனால் பத்துவருடங்களாகியும் இன்னும் இலங்கை அரசு பொறுப்புக் கூறவில்லை. சர்வதேச அழுத்தங்களின் மூலம் இலங்கை அரசை அடிபணியச் செய்யலாம் என்பது நமது நம்பிக்கையாக இருக்கும் போது, மறுபுறம், பொறுப்புக் கூறலை தொடர்ந்தும் வெற்றிகரமாக தட்டிக்கழிக்கலாம் என்னும் நம்பிக்கையுடன் சிங்கள ஆளும் வர்க்கம் செயற்பட்டுவருகின்றது. இந்த அடிப்படையில் சிந்தித்தால் யுத்தத்தில் விடுதலைப் புலிகளை வெற்றிகொண்ட சிங்கள ஆளும் வர்க்கமானது, யுத்தத்திற்கு பின்னரான கடந்த பன்னிரெண்டு வருடங்களிலும், தமிழர்களின் எதிர்பார்ப்புக்களை தோற்கடிப்பதிலும் வெற்றிகண்டிருக்கின்றது. இந்த அனுபவங்களுக்கு சாட்சியாகவே, 2021ஆம் ஆண்டு, தோல்வியை தந்து, நம்மை சாதாரணமாக கடந்துசெல்கின்றது. முன்னைய ஆண்டுகள் போல்!

2010இல், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறியதிலிருந்து, தமிழ் தேசிய தரப்புகளுக்கிடையிலான ஒற்றுமை தொடர்பில், ஏராளமாகவே பேசப்பட்டிருக்கின்றது. ஒற்றுமைப்படுத்துவதற்கான ஏராளமான முயற்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் எதுவும் வெற்றியளிக்கவில்லை. இந்த அனுபவங்களுக்கும் 2021 விதிவிலக்காக இருக்கவில்லை. ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு ஒரு கடிதத்தை அனுப்புவதில் கூட, தமிழ்-தேசிய கட்சிகளால் ஒற்றுமையுடன் செயற்பட முடியவில்லை. 2021இல் இடம்பெற்ற, ஆக்கபூர்வமான விடயமென்றால் – ஒன்றைத்தான் குறிப்பிட முடியும். அதாவது, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தமிழ் பேசும் கட்சிகளுக்கிடையிலான சந்திப்புக்களைத்தான் குறிப்பிட முடியும். இந்தியாவை நோக்கி செல்லும் நோக்கிலேயே இந்த சந்திப்புக்கள் இடம்பெற்றன. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்தியாவை நோக்கிச் செல்லும் அணுகுமுறை முற்றிலும் சரியானது. இந்தக் கட்டுரை எழுதப்படும் வரையில் குறித்த சந்திப்புக்களின் மூலமான இணக்கப்பாடு, ஒரு ஆவணமாக வெளியில் வந்திருக்கவில்லை. நாடு கடும்போக்கு ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்ற நிலையில் – தமிழ் மக்களுக்கு ஓரளவாவது பாதுகாப்பாக இருக்கும் மாகாண சபை முறைமையும் கூட, இல்லாதொழிக்கப்படலாம் என்னும் ஆபத்தான சூழலில்தான், மேற்படி முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அரசியலில் எதிர்வுகூறல்கள் எப்போதுமே சிக்கலானது ஏனெனில் உலக அரசியலில் மாற்றங்களை எதிர்வு கூறமுடியாது. பேராசிரியர் நோம் சொம்ஸ்கி கூறுவது போன்று, நாளைய காலநிலையை இன்று எதிர்வுகூற முடியாது. நிலைமைகள் எப்படியும் மாற்றமுறலாம் ஆனால் அந்த மாற்றங்களின் தன்மையை ஒரளவு அனுமானிக்கலாம். இந்த அனுமானங்களின் அடிப்படையில்தான் அரசியல் ஆய்வுகள் முன்வைக்கப்படுகின்றன. எனவே எந்தவொரு ஆய்வும் முடிந்த முடிவல்ல.

இந்த அடிப்படையில் சிந்தித்தால் 2022இல் இடம்பெறப் போகும் நிகழ்வுகளில் முக்கியமானதாக இருக்கப் போவது இரண்டு விடயங்கள்தான். ஒன்று, தமிழ் பேசும் கட்சிகள் என்னுமடிப்படையில் இந்தியாவை நோக்கி முன்வைக்கப்படவுள்ள கூட்டுக் கோரிக்கை முக்கியமானதொரு விடயமாக இருக்கும். இது நடந்தால், 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு பின்னரான சூழலில், புதுடில்லியை நோக்கி முன்வைக்கப்பட்ட கோரிக்கையாக இருக்கும். இந்தியா, தொடர்ந்தும் 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் வலியுறுத்திவருகின்ற நிலையில், மேற்படி கோரிக்கைக்கு, ஒரு முதன்மையான அரசியல் முக்கியத்துவமுண்டு.

அடுத்தது, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்கா மீளவும் இணையவுள்ளது. 2024 வரையில் அமெரிக்கா இந்த பொறுப்பில் இருக்கப் போகின்றது. டொனால்ட் ரம் தலைமையிலான குடியரசு கட்சி ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து, 2018இல், அமெரிக்கா மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியேறியது. இதனைத்தான் ஜனவரியில் அமெரிக்கா, இலங்கை தொடர்பில் சில விடயங்களை அறிவிக்கவுள்ளதாக சிலர் கூறிவருகின்றனர். ஒபாமா தலைமையிலான, ஜனநாயக கட்சியின் நிர்வாகம்தான் 2012இல், இலங்கையின் மீதான முதலாவது பிரேரணையை நிறைவேற்றியிருந்தது. இந்த நிலையில் மீளவும் ஜனநாயக கட்சியின் நிர்வாகம், மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து செயற்படவுள்ள நிலையில், இலங்கையின் மனித உரிமை விடயங்கள், மீது சில அழுத்தங்களை பிரயோகிக்க வாய்ப்புண்டு. இந்த இரண்டு விடயங்கள்தான், ஈழத் தமிழர் அரசியலில் செல்வாக்குச் செலுத்தவுள்ள பிரதான விடயங்களாக இருக்கப் போகின்றன. இதற்கப்பால் பலரும் பல விடயங்கள் தொடர்பில் பேசலாம் ஆனால் அவைகள் எவையும் பிரதான விடயங்களாக இருக்க முடியாது. ஏனெனில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வில் இந்தியாவின் உறுதியான தலையீடுகள் இல்லாவிட்டால், இந்த விடயத்தில் முன்னேற்றங்களை காண முடியாது.

நான் மேலே குறிப்பிட்ட இரண்டு பிரதான விடயங்களின் அடிப்படையில்தான் 2022இற்கான தமிழர் அரசியல் நகரப் போகின்றது. ஆனால் இந்த விடயத்திலும் அளவுக்கதிகமான கற்பனைகள் கூடாது. இதனை விளங்கிக் கொள்வதற்கு, இந்துசமுத்திர பிராந்தியத்தில் இடம்பெறும் புவிசார் அரசியல் அதிகாரப் போட்டிகளை உற்றுநோக்க வேண்டும். புவிசார் அரசியலை கையாளுவதன் ஊhடாக, தமிழர்கள் வெற்றிகளை குவிக்க முடியுமென்று கூறுவதில் எப்போதுமே இந்தக் கட்டுரையாளர் உடன்படுவதில்லை. ஏனெனில் புவிசார் அரசியலில் தமிழர்கள் ஒரு தரப்பல்ல. ஒரு தரப்பாக இருப்பதற்கான பலமும் தமிழர்களிடம் இல்லை.

இலங்கையை மையப்படுத்தியிருக்கும் புவிசார் அரசியல் என்பது, அடிப்படையில் இலங்கையின் சிங்கள ஆட்சியாளர்களுடன்தான் தொடர்புறுகின்றது. இந்த அடிப்படையில் சிந்தித்தால், இலங்கைத் தீவின் மீதான வெறுப்பும் காதலும், சிங்கள ஆட்சியாளர்கள் மேற்கொள்ளும் வெளிவிவகார முடிவுகளில்தான் தங்கியிருக்கின்றது. சிங்கள ஆட்சியாளர்கள் இந்திய-அமெரிக்க அதிகார சக்திகளுடன் ஒத்துப் போகும் போது, அது காதலாகவும், முரண்படும் போது – அது வெறுப்பாகவும் வெளிப்படுகின்றது. அன்று, ஜே.ஆர் ஜெயவர்த்தனவின் வெளிவிவகார அணுமுறையினால்தான், இந்திரா காந்தி-இந்தியா, சிங்கள ஆட்சியாளர்கள் மீது வெறுப்புற்றது. அந்த வெறுப்பின் விளைவாக வந்ததுதான், இந்திய-இலங்கை ஒப்பந்தம். எனவே, அதிகார சக்திகளின் காதலுக்கும் வெறுப்புக்கும் இடையில்தான் தமிழர்களின் அரசியல் சிக்கியிருக்கின்றது. இதனை விளங்கிக்கொள்ளாமல் புவிசார் அரசியல் தொடர்பில் சிந்தித்தால், அது ஒரு நல்ல பகல் கனவாகவே இருக்க முடியும்.

இலங்கைத் தீவின் இன்றைய அரசியலை ஒரு ஆட்சி மாற்ற தோல்விக்கு பின்னரான அரசியலாகவே நாம் நோக்க வேண்டும். 2015 ஆட்சி மாற்றத்திற்கு பின்னால் இந்திய – அமெரிக்க பின்னணி இருந்ததாக பரவலாக நம்மப்பட்டது. தனது தோல்விக்கான காரணமாக, இந்திய உளவுத்துறையின் மீதே மகிந்த முதலில் குற்றம் சாட்டியிருந்தார். இதே 2015, இல்தான், நீண்டகாலமாக இராணுவ ஆட்சியின் பிடியிலிருந்த மியன்மாரிலும் ஆட்சிமாற்றமொன்று ஏற்பட்டது. அமெரிக்கா அதனை ஆதரித்திருந்தது. ஆனால் இந்த இரண்டு ஆட்சி மாற்றங்களுமே தோல்வியில் முடிந்திருக்கின்றன. தோற்கடிக்கப்பட்ட ராஜபக்ச கொம்பனி மீளவும் ஆட்சியிலிருக்கின்றது. மியன்மாரில் மீளவும் இராணுவ ஆட்சி ஏற்பட்டிருக்கின்றது. ஆங்சான் சூகி மீண்டும் சிறையிலடைக்கப்பட்டிருக்கின்றார். இவ்வாறானதொரு சூழலில், இலங்கையின் மீது கடுமையான அழுத்தங்களை பிரயோகிப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்குமா?

ஏனெனில் இலங்கையின் மீது கடுமையான அழுத்தங்களை பிரயோகித்தால், கடும்போக்கு ராஜபக்ச தரப்பு, சீனாவை நோக்கி அதிகம் சாய்ந்துவிடுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. இலங்கையின் மீதான சீனாவின் பிடி மேலும் இறுகுவதை தடுக்கும் அதே வேளை, ஆட்சியாளர்களும் அதிகம் சீனாவை நோக்கி சாய்ந்துவிடாத வகையிலும்தான் அமெரிக்க அழுத்தங்கள் பிரயோகிப்படலாம். இந்த அழுத்தங்களின் இறுதி இலக்கு மீண்டுமொரு ஆட்சி மாற்றமாகவும் அல்லது ராஜபக்ச முகாமிற்குள்ளேயே ஒரு அரசியல் சீரமைப்பாகவும் இருக்கலாம். இதற்கிடையில் பிறிதொரு விடயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, 2024இல் இடம்பெறவுள்ள தேர்தலில், மீளவும் அமெரிக்காவில் குடியரசு கட்சி அதிகாரத்தை கைப்பற்றினால், அமெரிக்கா மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியேறிவிடும்.

இந்த விடயங்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டுதான், 2022இல் இடம்பெறப் போகும் அரசியல் நகர்வுகளை நாம் அனுமானிக்க வேண்டும். ஒரு விடயம் வெள்ளிடைமலை. அதாவது, நிலைமைகள் எவ்வேளையிலும் நமக்கு பாதகமாக மாறலாம். எனவே நிலைமைகள் சாதகமாக இருக்கின்ற சூழலை கணித்து, அதற்கேற்ப செயற்படுவதன் மூலம்தான், பெறக் கூடியதை நாம் பெற முடியும். ஒரு தனி பாய்சலில் விடயங்களை தமிழர்களால் ஒரு போதுமே வெற்றிகொள்ள முடியாது. ஏனெனில் அதற்கான பலமோ, வாய்ப்புக்களோ, வெளியாரின் ஆதரவோ ஈழத்-தமிழர்களுக்கில்லை. இந்த பன்னிரெண்டு வருடகால அரசியல் அனுபவங்கள் இதனை தெளிவாக நிரூபித்திருக்கின்றன.

எனவே 2022ம் அண்டு, இதுவரை கற்றுக் கொண்டதைக் கொண்டு செயற்படுவதற்கான முக்கியமான காலமாக இருக்கப் போகின்றது. ஆனால் தொடர்ந்தும் கற்றுக்கொள்ள மறுத்து அல்லது, கற்றுக்கொண்டதாக கற்பனையில் மிதந்து, காலத்தை விரயம் செய்தால் – இந்த ஆண்டும் முன்னைய ஆண்டுகள் போன்றே தோல்வியை தந்து, நம்மை சாதாரணமாக கடந்து செல்லும். கழிந்து செல்லும் ஒவ்வொரு ஆண்டும், நமது அரசியலின் வீழ்ச்சியை மேலும் உறுதிப்படுத்தும். இறுதியில் தமிழர்கள் இருப்பார்கள் ஆனால் தமிழருக்கான தனித்துவமான அரசியல் இருக்காது.

Leave A Reply

Your email address will not be published.