Nilavaram.lk
உலக தமிழர்களின் உண்மை குரல்

கூட்டு அமைந்துவிட்டது. எதற்காக கூட்டு என்பதே பிரச்சனை?

0 174

இலங்கை தீவில் தமிழ் இனம் பட்ட துன்பங்கள் என்பது ஒன்று இரண்டல்ல. தொடர்ந்து பிரித்தானிய ஆட்சிக்கு பின்னர் சிங்கள பௌத்த ஆட்சியாளர்களால் அழித்து நசுக்கப்பட்டதே வரலாறு.

நாட்டின் இடம்பெற்ற இனக்கலவரங்கள், பல்கலைக்கழக மாணவர் உள்ளீர்க்கும் சட்ட மூலம், தனிச்சிங்கள சட்டம், அவசரகால சட்டம், பயங்கரவாத தடைச்சட்டம் ,தமிழ் தேச இருப்பின் அழிப்பு, கல்வி, பொருளாதாரம், யுத்தம் என இத்தனை அழிவுகளின் எல்லையற்ற பெருவளர்ச்சியே முள்ளிவாய்க்கால்.

முள்ளிவாய்க்காலின் பின்னர் கூட இலங்கை அரசு தமிழ் மக்களை சொந்த நாட்டின் மக்களாக பார்க்கவில்லை. அப்படி பார்த்திருந்தால் கூட தமிழ் மக்கள் இன்று இத்தனை பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய தேவை இல்லை.

இன்றும் தமிழ் தேசத்தின் இருப்பை இல்லாதொழிக்கும் செயற்பாட்டினை தென்னிலங்கை மிக தீவிரமாகவும், பரந்தும் முன்னெடுக்கின்றது.

தமிழ் மக்கள் உறவுகளை இழந்தார்கள், உடல் அவயங்களை இழந்தார்கள், தம் வீட்டினை இழந்தார்கள், காணிகளை இழந்தார்கள், வாழ்க்கை முறையினை இழந்தார்கள், உறவுகளை அரசியல் கைதிகள் ஆக்கினார்கள், காணமற் போன உறவுகளாக்கினார்கள், போராளிகளாக்கினார்கள் எனினும் தம்மக்களின் பெயரால் அரசியல் செய்பர்கள் எவரும் இவ்வளவு இழப்புக்களையும் இழந்தவர்கள் போன்று செயற்படுகின்றார்களா? என்பதே கேள்வி

70 வருடத்திற்கு மேலாக அரசியலில் ஈடுபடுகின்ற தமிழரசுக் கட்சி கூட தமிழ் மக்களின் பிரச்சனைக்கு இதுதான் தீர்வு என்று முன்வைக்க முடியாத சூழலில் இருக்கின்றது. 1949 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து தந்தை செல்வநாயகம் சமஸ்டி கட்சியாக தமிழரசுக் கட்டியை நிறுவினார். எனினும் அதனால் இன்று என்ன பலன்?

இன்று தமிழரசுக் கட்சி சமஸ்டி என்ற பெயர் பலகை எமக்கு தேவையில்லை என்கின்றது.

சர்வதேசம் எமக்கு உதவும். சர்வதேசத்திற்கு இலங்கை பல வாக்குறுதிகளை கொடுத்துள்ளது. அதனை நிறைவேற்றுவது அரசின் கடமை என தொடக்கம் இந்த தீபாவளிக்கு தீர்வு என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பல வேளைகளில் கூறியிருந்தார். எனினும் எதுவும் நடக்கவில்லை.

நல்லாட்சி அரசில் பங்காளிகளாக இருந்தது. அன்று நாடாளுமன்றத்தின் தமிழ் மக்களின் பிரச்சனைகளை பேச மறுத்தமை போன்ற பல்வேறு காரணங்களுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தலில் பின்னடைவை சந்தித்தது. எனினும் கூட்டமைப்புக்குள் ரெலோ கட்சியாக வளர்ச்சியடைந்தது.

இதன் தொடர்ச்சியாக ரெலோ தன்னுடைய வளர்ச்சிக்கு ஏற்ற அரசியலை முன்னெடுக்க ஆரம்பித்தது. அதன் இன்றைய நிலையே 13 ஆவது திருத்தத்தினை நிறைவேற்ற இந்தியாவை கோரும் தமிழ் தேசிய கட்சிகளின் கூட்டு ஆகும்.

இந்த நிலைப்பாடுகள் எடுக்கப்படுவதற்கு முன்னர் தமிழ்நாட்டில் வட்டுக்கோட்டை தீர்மானம் இரண்டு என்ற அடிப்படையில் Zoom ஊடக கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதனுடைய நோக்கம் இந்தியாவை இலங்கை விடயத்தில் தலையீடு செய்ய கோருவதே ஆகும். எனினும் அது பல்வேறு விமர்சனங்களை சந்தித்தது. இன்று அதன் தொடர்ச்சி என்பது என்ன என்று தெரியவில்லை.

ஆனால் வட்டுக்கோட்டை தீர்மானம் இரண்டு கோரும் இந்தியாவை இலங்கை விடயத்தில் தலையீடு செய்யுங்கள் என்பது, இந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஒற்றுமை விடயத்தின் பிரதான கோரிக்கை.

தமிழ் தேசிய கட்சிகளின் ஒற்றுமை என்பது தமிழ் மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்தும் நோக்கதிலானது அல்ல. இந்தியாவை பிரச்சனை தீர்க்க முன்வருமாறு கோரும் கோரிக்கையே!

13ஆவது திருத்தத்தினை ரெலோ, ஈபிஆர்எல்எவ், புளட், தமிழரசுக்கட்சி, தமிழ் தேசிய கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி அனைத்தும் ஏற்றுக்கொண்டிருக்கின்றன. அடுத்த மாகாணசபை தேர்தல் இடம் பெற்றவுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஏற்றுக்கொண்டுவிடும்.

13 ஆவது திருத்தம் அதிகாரங்களை ஜனாதிபதிக்கு வழங்கியிருக்கின்றது. அதனுடன் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு ஒரு தீர்வு அல்ல என்பதை அனைத்து தமிழ் கட்சிகளும் ஏற்றுக்கொள்ளுகின்றன. பின்னர் இவ்வளவு கூட்டங்களை கூட்டி, ஊடக வெளிச்சத்தினை தொடர்ந்தும் பாச்சி முஸ்லீம் மற்றும் மலையக கட்சிகளை உள்ளடக்கி இந்த கூட்டு ஏன் உருவாக்கப்படுகின்றது?

குறிப்பாக இந்த கூட்டு முயற்சிகள் கொழும்பில் முன்னெடுக்கப்படுவதால் ஆங்கில ஊடகங்களிலும் செல்வாக்கு செலுத்தப்படுகின்றது.

இந்த காலப்பகுதியில்தான் இந்தியா கடன் கொடுக்கின்றது. இந்தியாவுக்கு திருகோணமலை எண்ணெய் குதங்கள் கொடுக்கப்படுகின்றது. அதற்கு எந்த பெரும் எதிர்ப்புகளும் உருவாகவில்லை. சீனதூதுவர் வடக்குக்கு விஜயம் மேற்கொள்ளுகின்றார். மன்னாரில் தீவுகளை பார்வையிட்ட பின்னர் இதுதான் ஆரம்பம் என்கின்றார். தமிழ் மக்களுடன் உறவுகளை பேணவிரும்புவதாகவும் தெரிவிக்கின்றாார். தற்போது சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இலங்கை வருகை தருகின்றார். இங்கு இந்த காலப்பகுதியில் நடைபெறும் அரசியல், பொருளாதார, இராஜதந்திர வெளிப்படுத்தல்கள் உருவாக்கும் செய்தியின் ஒரு பக்கம்தான் இந்த கட்சிகளின் ஒற்றுமை கோரிக்கையோ

முஸ்லீம்கள் மற்றும் மலையக தமிழர்கள் தங்களை ஒரு தேசிய இனமாக கருதுவது கிடையாது. அவர்கள் தங்களை சிறுபான்மையினராக கருதுகின்றனர். அதுபோன்று இனி தமிழ் மக்களும் கருதவேண்டும். அதுதான் நடைமுறை யதார்தம் என்பதே இந்த கூட்டணியின் அடிப்படையா என்ற கேள்வியும் எழுகின்றது சில அரசியல் வாதிகளின் கருத்துக்களின் அடிப்படையில்.

முஸ்லீம் மக்களின் அதிகளவானோர் வடகிழக்கு இணைப்புக்கு எதிரானவர்கள். ஆகவே அவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் பெயரால் எவ்வாறு வடகிழக்கினை இணைப்பதனை ஏற்றுக்கொள்ளுவார்கள்?.

மலையக மக்களின் பிரதிநிதி பழனிதிகாம்பரம் கூறுகின்றார் 13 ஆம் திருத்தத்துடன் நிற்கவேண்டும், சுயநிர்ணயம் தனிநாடு என்று எல்லாம் கேட்க கூடாது. நாங்கள் சிங்கள மக்களோடு வாழ்பவர்கள் அவ்வாறு இருப்பதனை எதிர்ப்போம் என்று.

இந்த கட்சிகளின் ஒற்றுமை இந்தியாவை அழைப்பதுடன் நின்றுகொள்ளும். 13 ஆவது திருத்தத்தினை நிறைவேற்ற கோருவது பல்வேறு விமர்சனங்களையும், அரசியல் தாக்கங்களையும் உருவாக்கும். அதன்போது பலர் அதில் அரசியல் இலாபத்தினை பெற்றுக்கொள்ளலாம்.

ஆகவே இந்த கூட்டு எதனை வெளிப்படுத்துவது தொடர்பில் தெளிவு இல்லாமல் இருக்கின்றது. தற்போது கூட்டு சரியாக அமைந்துவிட்டது. எதற்காக கூட்டு என்பதே தற்போது பிரச்சனை

தமிழ் மக்களின் அரசியலையும், முஸ்லீம் மற்றும் மலையக அரசியலையும் தீர்வு விடயத்தின் ஒன்றினைப்பது என்பது தற்போது சாத்தியமற்ற ஓர்விடயம். அதற்காக ஒற்றுமை அடையக்கூடாது என்பதல்ல. சிங்கள அரசியலும் ஒற்றுமை அடையவேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

வடகிழக்கில் முதலில் தமிழ் கட்சிகள், பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் ,சட்ட, பொருளாதார, புவியியல் சார் நிபுணர்கள் ஒன்றினைந்து தமது அரசியல் அபிலாசைகள், அடிப்படைகள், அதற்குள் இனமத ரீதியாக இருப்பவர்களுக்கு வழங்ககூடிய தீர்வுகள் தொடர்பில் ஓர் வெளிப்படுத்தல்களை உருவாக்க வேண்டும். அதேநேரம் முஸ்லீம் மற்றும் மலையக அரசியல் தரப்பினரும் அவ்வாறான ஒரு பொறிமுறையினை உருவாக்கி அடிப்படையினை தீர்மானிக்க வேண்டும்.

வன்னியில் மலையக மக்களின் பிரச்சனைகள், கிழக்கு மற்றும் வடக்கில் முஸ்லீம்களுக்கு எவ்வாறு அதிகாரங்களை கையளிப்பது. அதற்காக எவ்வாறான நடைமுறைகளை பின்பற்றவேண்டும் என்பது.

இது ஒரு மிக நீண்ட கால அடிப்படையில் பலர் இன்று கூடி, விவாதித்து, உண்மைகளை பேசி, முன்னெற்றம் அடைந்து தீர்வாக முன்வைக்க கூடிய கோரிக்கை. இதில் தீர்வுகள் என்பது எல்லோருக்கும் இருக்கும். அதனை விடுத்து ஒரு தீர்வினை பெற்று விட்டு அடுத்த பிரச்சனை பார்ப்போம் என்பது ஏமாற்று வேலையாகவே அமையும்.

இதனை தமிழ் தரப்பினர் செய்திருக்கவேண்டும். செய்யவில்லை. இன்றுகூட செய்ய தயார் இல்லை. அவர்கள் ஒன்று இரண்டு பிரச்சனைகள் பற்றி பேசுவார்கள் அதனையே கோருவார்கள் அதுதான் நடைமுறை.

ஆகவே இந்த பேச்சுக்கள் தீர்வுகளை தராது என்பதில் மாற்றுகருத்துக்கு இடம் இருக்காது என்று எண்ணிகின்றேன்.

தற்போது கூட்டப்படும் தமிழ் கட்சிகளின் ஒற்றுமை என்பது இறுதியில் காணிவிடுவிப்பு, அரசியல்கைதிகளின் பிரச்சனை, மனித உரிமைகள், ஜனநாயக போக்கு போன்ற சில பிரச்சனைகளை உடனடியாக இலங்கை அரசு தீர்க்க இந்திய அரசு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்பதுடன் முடிவடையலாம்.

எடுக்கப்பட்ட முடிவுக்காக பலரை ஒற்றினைக்கும் போக்கு என்பது இல்லாது ஒழிக்கப்படும் வரை தமிழ் கட்சிகளின் ஒற்றுமை என்பது தேவையற்ற ஒற்றுமையே!

தமிழ் மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்தும் போது முஸ்லீம் மற்றும் மலையக அரசியல் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. தமிழ் பேசும் சமூகமாக அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தும் போது மட்டுமே அவர்களுடைய இணக்கம் தேவை.

Leave A Reply

Your email address will not be published.