Nilavaram.lk
உலக தமிழர்களின் உண்மை குரல்

வெளிவிவகார அமைச்சின் விசமத்தனமான பதில் – மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கண்டனம்

0 2

இலங்கையின் மனித உரிமை செயற்பாட்டாளர் அம்பிகா சற்குணநாதன் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள கருத்துக்களுக்கு 161 மனித உரிமை செயற்பாட்டாளர்களும் 47 மனித உரிமை சார்ந்து செயற்படும் நிறுவனங்களும் கண்டனம் வெளியிட்டுள்ளன.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் மனித உரிமைகள் தொடர்பான உப குழுவில் கருத்து வெளியிட்ட அம்பிகா சற்குணநாதன், இன ரீதியாக சமூகங்களுக்குப் பாகுபாடு காட்டப்படுகின்றமை தொடர்பில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாகவும் ஒரு காலத்தில் சமூகங்களுக்கிடையில் வெறுப்பைத் தூண்டிய தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரசாரத்தை அவரின் கருத்துக்கள் நினைவூட்டுவதாகவும் வெளிவிவகார அமைச்சு கூறியிருந்தது.

இந்த நிலையில் மனித உரிமை செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் குறித்து வெளிவிவகார அமைச்சானது வெளியிட்ட கருத்தானது ஆழ்ந்த கரிசனையை ஏற்படுத்தியுள்ளதாக குடிசார் சமூக தனிநபர்களும் அமைப்புக்களும் கூறியுள்ளன.

இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை மற்றும் அதன் பிரஜைகள் தொடர்பான சர்வதேச மற்றும் தேசிய கடமைகள் பற்றிய விமர்சன மதிப்பீட்டையும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கு பரிந்துரைகளையுமே அவர் வழங்கியதாக மனித உரிமை செயற்பாட்டாளர்களும் அமைப்புக்களும் சுட்டிக்காட்டியுள்ளன.

விடுதலைப் புலிகளின் கூற்றுகளுடன் ஒரு தமிழ் செயற்பாட்டாளர் மற்றும் ஆய்வாளரின் சுயாதீன வாதத்தை இணைத்து காட்டுவதற்கு வெளியுறவு அமைச்சு மேற்கொண்ட முயற்சியானது, தேவையற்றது எனவும் விஷமத்தனமானது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அத்துடன் வெளிப்படையான குடிசார் உறுப்பினர் ஒருவரின் மாறுபட்ட கருத்துக்கள் மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அரச நிறுவனமான வெளிவிவகார அமைச்சின் அறிக்கை அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சின் இது போன்ற அறிக்கைகள், ஜனநாயகம் மற்றும் உரிமைகள் பிரச்சினைகள், பாதிக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் தனிநபர்களின் உரிமைகளின் பாதுகாப்பிற்காக முன்நிற்கும் குடிசார் சமூகத்தின் ஈடுபாட்டை கட்டுப்படுத்துவதை நோக்கமாக கொண்டது என்றே நம்புகின்றோம் எனவும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் அமைப்புக்களும் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.